- கர்நாடகத்தின் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் கன்னடர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் சட்டத்தைக் கொண்டுவர முயன்று சர்ச்சையில் சிக்கியிருக்கிறது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு.
- மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தச் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படவிருந்த நிலையில், கடும் எதிர்ப்புக் காரணமாக அரசு ஒருவழியாக அதைக் கைவிட்டிருக்கிறது. எனினும், இவ்விவகாரத்தில் பல அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டியிருக்கின்றன.
- கர்நாடகத்தின் தனியார் தொழிற்சாலைகளிலும் பிற நிறுவனங்களிலும் நிர்வாகப் பதவிகளில் 50 சதவீத வேலைவாய்ப்பையும் மற்ற வேலைகளில் 70 சதவீத வேலைவாய்ப்பையும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும் என்கிறது இந்த மசோதா. இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 16 (4), மாநிலங்களுக்கு வழங்கும் இடஒதுக்கீட்டுக்கான அதிகாரத்தை முன்வைத்தே இந்த மசோதா முன்மொழியப்பட்டது.
- ஆனால், அந்தச் சட்டக்கூறில் பிற்படுத்தப்பட்டோருக்கு எனத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. தொழிலதிபர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த மசோதாவை ஏற்க மறுத்துப் போர்க்கொடி தூக்கியதாலேயே சித்தராமையா அரசு பின்வாங்கியிருக்கிறது.
- தனியார் நிறுவனங்களில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்யும் மசோதாக்களைச் சில மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ளன. தங்கள் மாநிலத்தவர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தும் சட்ட மசோதாக்கள் 2019இல் ஆந்திரப் பிரதேசத்திலும், 2020இல் ஹரியாணாவிலும், 2023இல் ஜார்க்கண்டிலும் சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்டன.
- ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா, அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என அம்மாநில உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஹரியாணா அரசு கொண்டுவந்த மசோதா, அரசமைப்புக் கூறு 14 உத்தரவாதம் அளிக்கும் சமத்துவத்தையும், கூறு 19 வலியுறுத்தும் சுதந்திரத்தையும் மீறுவதாகக் கூறி பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது. அதேபோல், சமத்துவத்துக்கு எதிராக உள்ளதாகக் கூறி ஜார்க்கண்ட் ஆளுநர் அம்மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவைத் திருப்பி அனுப்பிவிட்டார்.
- ஆக, இதுபோன்ற மசோதாக்கள், நமது அரசமைப்பு வலியுறுத்தும் கூறுகளுக்கு எதிரானவை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. பெங்களூரு நகரத்தின் வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவர்களும் பெறுவதைச் சகித்துக்கொள்ளாமல்கூட, இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவரும் எண்ணம் கர்நாடகத்தை ஆளும் அரசுக்கு வந்திருக்கலாம். இப்படியான முயற்சிகள் நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்பதை காங்கிரஸ் அரசு உணர்ந்துகொள்ளாதது ஆச்சரியமளிக்கிறது.
- தேர்தலில் கிடைக்கும் வாக்குகளைக் கணக்கில் கொண்டு ஆளும் அரசியல் கட்சியும் இம்மாதிரி பிற்போக்குத்தனமான மசோதாக்களை நிறைவேற்ற முயல்வது கண்டனத்துக்கு உரியது. மறுபுறம், இதன் பின்னணியில் புலம்பெயர் தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்துக்குப் பணியில் அமர்த்தப்படுவதையும் கணக்கில் கொள்ள வேண்டும். உள்ளூர் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் எந்தச் சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் சிரமத்துக்கு உள்ளாகும் புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் மாநில அரசுகள் அக்கறைகொள்ள வேண்டும்.
- உண்மையில் கர்நாடக அரசின் இந்த முன்மொழிவே ஆபத்தானது; நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. கர்நாடகத்தின் இந்த முன்னெடுப்பால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு 80% இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கியுள்ளார்.
- இந்த மாதிரியான ‘மண்ணின் மைந்தன்’ அணுகுமுறைகள் இந்தியா முழுவதும் பணிபுரியும் தமிழர்களைப் பாதிக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதுபோன்ற எண்ணங்கள் மக்கள் மத்தியில் வேற்றுமையை உருவாக்கும். இந்தப் பரப்புரை நிறுத்தப்பட வேண்டியது அவசியம். அரசுகள் சட்ட மசோதாக்களை உருவாக்கும்போது மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 07 – 2024)