TNPSC Thervupettagam

மண்புழு உழுத நிலம்

November 21 , 2024 3 days 14 0

மண்புழு உழுத நிலம்

  • என் தாத்தா அதாவது அப்பாவின் அப்பா பல நூல்களை எழுதியுள்ளார். எல்லாமே சைவ சித்தாந்தம் சார்ந்த நூல்கள். அவற்றில், `புண்ணியராற்றுப் படை'என்று ஒரு நூல். அதன் முகப்பில் ஆக்கியோன் –`ஆர்.எஸ்.சுப்பிரமணியன் என்கிற குஹதாஸன்,’- பத்திரப் பதிவில் `விடுகாசு’ பெற்றவர் என்று குறிப்பிட்டிருப்பார். அதாவது பத்திரப் பதிவுத் துறையில் பதிவாளராக இருந்து பணி ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுகிறவர் என்று அர்த்தம். ஓய்வூதியம் பெறுவதை அப்படி `விடுகாசு’ பெற்றவர் என்று வேறு யாரும் குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை.
  • அவரைப் பற்றியும் அந்த நூல் பற்றியும் இப்போது நினைவுக்கு வரக் காரணம், பணி ஓய்வுபெற்றுவிட்ட நான், கடந்த வாரம் பணிபுரிந்த அலுவலகம் சென்று உயிருடன் இருக்கிறேன் என்று `உயிர்ச் சான்றிதழ்’ கொடுத்து வரச் சென்றதுதான். பொதுவாகவே நவம்பர், டிசம்பர் வந்தால் ஓய்வூதியம் வாங்குபவர்கள் தாங்கள் நலமுடன், உயிருடன் இருக்கிறோம் என்று சான்றிதழ் தர வேண்டும்.
  • முன்பெல்லாம் இதற்காகச் சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் சென்று, அதற்கான அதிகாரி முன் ஆஜராகிக் கையெழுத்திட்டு வர வேண்டும். இல்லையென்றால் மறு மாதம் ஓய்வூதியம் வராது. இதற்கென வயதான காலத்தில் முதியவர்கள் குறிப்பிட்ட அலுவலகத்துக்கு வரவும் காத்து நிற்கவும் படும் சிரமங்கள் துயரமாக இருக்கும்.

சிக்கனமும் தாராளமும்:

  • இப்போது ‘ஜீவன் பிரமான்’ போன்ற வசதிகள் வந்துவிட்டன. ஆதாரைப் பயன்படுத்தி வீட்டிலி ருந்தே வாழ்வுச் சான்றிதழ் சமர்ப்பித்து விடலாம். அதற்கு எளிய கட்டணம் செலுத்தினால் போதும். ஆனால், பெரும்பாலானவர்கள் அது எதற்கு எழுபது, எண்பது ரூபாய் செலவு, பொடி நடையாகப் போய் ஒரு கையெழுத்துப் போட்டுவிட்டு வந்துவிடலாமே என்று நினைக்கிறார்கள்.
  • ஒரு பெண் சத்துணவு அமைப்பாளர், ``சார், இங்கே பஸ் ஏறினா அங்கே போய் ஆபீஸ் முன்னால இறங்கப் போறோம், கையெழுத்துப் போடப் போறோம், திரும்பப் போறோம். அதுவும் மகளிருக்கு பஸ் கட்டணம் கிடையாது. அதுக்கு எதுக்கு எண்பது ரூபாய் செலவு, வருவதே ஆயிரம் ரூபாய்தான்” என்றார். இதுவும் நியாயம்தான். பழைய தலைமுறை களின் அடையாளங்களில் ஒன்று சிக்கனம்.
  • இப்போதெல்லாம் கடவுள் ஆயுள் விஷயத்தில் சிக்கனமாக இருப்ப தில்லை. சமீபத்தில் ஒரு பெரியவரைப் பார்க்க வாய்த்தது. நூறு வயதை நெருங்கிக் கொண்டிருப்பார். உறவினர்கள், ``அவ்வளவு ஞாபக சக்தி இல்லை என்றாலும் சில விஷயங்கள் நினைவிருக்கிறது. உங்க அப்பாதான் இவர் படிப்புக்கு வீட்டு மாடியில் இடம் தந்து உதவியதாகச் சொல்லிக்கொண்டே இருப்பார், நீ பேசிப் பார்” என்றார்கள்.
  • அவரிடம் சொல்லவும் செய்தார்கள், `இன்னார் மக’னென்று. தயக்கத்துக்குப் பிறகு என் கைகளைப் பற்றிக்கொண்டு சிரித்தார். முதலில் இருந்தே முகத்தில் ஒரு சிரிப்பு இருந்தது. எனக்குத் தோன்றும் மறதி நோய் உள்ளவர்களுக்கென்று ஒரு சிரிப்பு இருப்பதாக. அப்படி ஒரு சிரிப்புதான் அது. விழித்திறன் சவால் உள்ளவர்களுக்கும், பேசுகிறபோது அவர்கள் முகத்தில் ஓர் அழகான சிரிப்பு ஒட்டிக்கொண்டிருக்கும்.

வழிச்சு ஊத்தின தோசை:

  • என் கைகளைப் பற்றிக்கொண்ட பெரியவர், நெடு நேரம் பேசவில்லை. எனக்கு அவர் தொடுகையே அவ்வளவு பாந்தமாக இருந்தது. அவர் கைகள் இரண்டும் அப்படி ஒரு மென்மையாக மண்புழு உழுத நிலம் போல இருந்தன. "நீதானே கடைசிப் பிள்ளை, உன்னோட உன் அப்பா நிப்பாட்டிக் கொண்டார், நீ வழிச்சு ஊத்தின தோசை” என்று சொல்லிச் சிரித்தார்.
  • வழிச்சு ஊத்தின தோசை என்று புதுமைப்பித்தன்கூடச் சொல்வார். சட்டென்று நினைவு வந்தது, பெரியவர் நிறையப் படிப்பவர் என்பது. அவருக் கும் அது புதுமைப்பித்தனிடமிருந்து நினைவு வந்திருக்கலாம். அப்புறம் அவர் முகத்தில் எதையோ வெட்ட வெளியில் தேடுகிறவர்போல ஓர் அமைதியும் வெறுமையும் வந்து விட்டது.
  • எல்லாருக்கும் ஆச்சரியம். சமீப மாக இவ்வளவு ஞாபக சக்தியோடு அவர் பேசியதே இல்லை என்று. என்னை ஒருவித நன்றியோடு பார்த் தார். உறவினர்கள் முகத்திலும் மகிழ்ச்சி. அதில் வயதான இன்னொரு பாட்டியம்மா, ``ஆதி காலத்தில் சாவே கிடையாத காலமென்று இருந்ததாம், உருவம் மட்டும் சுருங்கிக்கொண்டே போய் ஒரு சாண் உயரத்துக்கு வந்துவிடுமாம். அப்படியே, அகல் விளக்கு வைக்கிற மாடக் குழியில் வைத்து, சாப்பிடா விட்டாலும் ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரும் நாலைந்து சோற்றுப் பருக்கைகளும் தினமும் வைத்துவிடுவார்களாம், கண்ணை மட்டும் உருட்டிக்கொண்டே இருக்குமாம்” என்றார். எனக்குத் திகிலாக இருந்தது.

பழம் உதிர...

  • திகில் குறையாமல் இன்னொரு கதையை ஆரம்பித்தார். ``சாவே இல்லாம இருந்தா சரிப்பட்டு வருமா? பூமிப் பாரம் கூடிக்கிட்டே போய், தாங்க முடியாமல் பரமசிவன்கிட்ட போயி நின்னாளாம் பூமாதேவி. `என்னால மனுசங்க பாரம் தாங்க முடியலையே’ன்னு சொன்னாளாம். ‘சரி பார்த்துக்கறேன்’னு சொன்ன பரமசிவன், சொர்க்கத்தில பறையடிக் கிறவரைக் கூப்பிட்டு, நீ போய் என்னான்னு கவனின்னு அனுப்பி வச்சாராம். அவர் வந்து ஊர் ஊரா, `பழம் உதிர, பழம் உதிர…’ன்னு பறை யடிச்சுக் கிட்டே வரவும், மாடக்குழி மனுசங் களும் வயசானவங் களும் பழுத்த பழம் உதிர்வதுபோல உதிர்ந்து விழ ஆரம்பித்தார்களாம். அன்றிலிருந்துதான் சாவுன்னு ஒண்ணு உண்டாச்சாம்.”
  • “அப்போ பழம் மட்டும்தானே உதிரணும்?” என்று கேட்கவும், கதை சொன்ன பாட்டிக்கு உற்சாகம் வந்து விட்டது. ``மிச்சமும் கேளு. அப்புறம் கொஞ்ச நாளைக்கு யாருமே சாகலை. மறுபடி பூமாதேவிக்குப் பாரம் கூடிக்கொண்டே போய் மறுபடி பரமசிவன்கிட்ட போயி நின்னாளாம். ஆக்கல், காத்தல், அழித்தல்ங்கிறதுல அழிக்கிறதுக்கு அவருதானே உடமைக்காரரு. அவரு மறுபடி பறையடிக்கச் சொல்லி அனுப்பினாராம்.
  • அவரும் ஊர் ஊரா தெருத் தெருவா, `பழமுதிர பழமுதிர’ன்னு அடிக்க ஆரம்பிச்சாராம். முன்னால அவரு அடிச்சப்ப நடந்ததைப் பத்திக் கேள்விப்பட்டிருந்த பெரியவங்கள்லாம் சின்ன புள்ளைகளைக் கூப்பிட்டு இந்த ஆளை விரட்டுங்க, இல்லைன்னா உங்க தாத்தா, ஆச்சி எல்லாம் செத்துப் போயிருவாங்கடான்னு தூண்டி விடவும், அவங்கள்லாம் பறையடிக்கிற ஆள் மேல, கல்லை எறிய ஆரம்பிக்க, அவருக்குக் கோபம் வந்து, ‘பழம் உதிர, காய் உதிர, பிஞ்சுதிர, எல்லாம் உதிர’ன்னு அடிச்சிக் கிட்டே போய்ட்டாராம்.
  • “அன்னைலிருந்து தான் எல்லாரும் எல்லா வயசிலும் சாக ஆரம்பிச் சாங்களாம். இல்லைன்னா நாங்கள்லாம் சாகாம கிடந்து உங்களைப்படுத்திக்கிட்டே இருப்போம்” என்று சொல்லிச் சிரித்தார் அந்தப் பாட்டியம்மா. ``அதெல்லாம் இல்லை. நீ ஆயு சோட இரு பாட்டி, அப்புறம் யாரு எங்களுக்கு இப்படிக் கதையெல்லாம் சொல்லுவாங்க” என்றார்கள். ஆனால் நான் மட்டும், அப்படிப் பழங்கள் உதிராத காலமென்றால், யாருமே சாக மாட்டார்கள், இப்படி நாங்க ‘உயிர்ச் சான்றிதழ்’ எல்லாம் கொடுக்க வேண்டியிருக்காது என்று நினைத்துக் கொண்டேன்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்