TNPSC Thervupettagam

மதச்சார்பின்மையும் சமநிலைச் சமுதாயமும் என்றென்றும் இந்தியாவுக்கு அவசியம்!

December 2 , 2024 47 days 72 0

மதச்சார்பின்மையும் சமநிலைச் சமுதாயமும் என்றென்றும் இந்தியாவுக்கு அவசியம்!

  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றிருக்கும் ‘மதச்சார்பின்மை’, ‘சமநிலைச் சமுதாயம்’ (சோஷலிஸ்ட்) ஆகிய வார்த்தைகளை நீக்க உத்தரவிடுமாறு தொடரப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அரசமைப்புச் சட்டத்தின் 75ஆவது ஆண்டுக் கொண்டாட்டத் தருணத்தில், இந்தத் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும்கூட.
  • ‘மதச்சார்பின்மை’, ‘சமநிலைச் சமுதாயம்’ ஆகிய இரண்டு வார்த்தைகளும் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில், 42ஆவது சட்டத் திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டதை எதிர்த்து, பாஜக முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, சமூகச் செயல்பாட்டாளர் பல்ராம் சிங், வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
  • அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள், இந்த வார்த்தைகளைச் சேர்க்க வேண்டாம் என உறுதியாக இருந்தார்கள் என்று இவர்கள் வாதிட்டனர். 1976இல் நெருக்கடிநிலை அமலில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட வார்த்தைகள் என்பதாலும், மக்களவையின் பதவிக் காலம் முடிவுற்று - நெருக்கடிநிலையின் காரணமாக நீட்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் அமல்படுத்தப்பட்டது என்பதாலும், அரசமைப்புச் சட்டரீதியாக அது செல்லாதது என்ற வாதத்தை இவர்கள் முன்வைத்தனர்.
  • வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி பி.வி.சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு, அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான 368ஆவது பிரிவின் கீழ் நாடாளுமன்றத்தின் அதிகாரம் முகவுரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்த 10 ஆண்டுகளில் விரிவான நீதித் துறை ஆய்வு நடத்தப்பட்டதாகவும், இது நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
  • ‘மதச்சார்பின்மை’ அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சம் என 1994இல் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்திருந்தது. மதச்சார்பின்மை என்பது வெவ்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட அனைவரையும் பாரபட்சமின்றிச் சமமாக நடத்துவதில் இந்தியாவின் கடப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என அந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டியது. எனினும், இது தொடர்பாக பொதுத் தளத்தில் அவ்வப்போது விவாதங்கள் எழுவது தொடர்கதையானது.
  • அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உள்ள ‘மதச்சார்பின்மை’, ‘சமநிலைச் சமுதாயம்’ ஆகிய வார்த்தைகள் இனியும் தொடர வேண்டுமா என்று விவாதம் நடத்த வேண்டும் என்று 2015இல் அப்போதைய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியது சர்ச்சையானது. இந்த வார்த்தைகள் ஒருபோதும் நீக்கப்படாது என பாஜகவின் அப்போதைய தலைவர் அமித் ஷா உறுதியளித்திருந்தார். எனினும், இத்தகைய விவாதங்கள் முடிவுக்கு வரவில்லை.
  • 2023 செப்டம்பரில், புதிய நாடாளுமன்ற வளாகத் திறப்பை ஒட்டி எம்.பி-க்களுக்கு வழங்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரதியின் முகவுரையில் ‘மதச்சார்பின்மை’, ‘சமநிலைச் சமுதாயம்’ ஆகிய சொற்கள் இடம்பெறவில்லை. இதுகுறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், 1949இல் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தபோது அதில் அந்த வார்த்தைகள் இல்லை என்று கூறினார். இத்தகைய பின்னணியில், இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.
  • தங்கள் அரசமைப்புச் சட்டத்திலிருந்து ‘மதச்சார்பின்மை’, ‘சமநிலைச் சமுதாயம்’ ஆகிய வார்த்தைகளை நீக்குவது குறித்த பரிசீலனையில் வங்கதேசம் இருக்கிறது. இதையடுத்து, அங்குள்ள மதச்சிறுபான்மையினர் - குறிப்பாக இந்துக்கள் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
  • ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்து, முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்த பின்னர், அங்கு இந்துக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் நிலையில், இந்த நகர்வு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியமில்லை. அதேபோல், மசூதிகள் தொடர்பாக இந்தியாவில் விரும்பத்தகாத நிகழ்வுகள் தொடர்கதையாகி இருக்கும் நிலையில், இந்தத் தீர்ப்பு மிக அவசியமானது என்பதில் சந்தேகமில்லை!

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்