- அரசியலில் பெண்களுக்கான இடம் மிகக் குறைவாகவே இன்றைக்கும் இருக்கிறது. ஆனால், அரை நூற்றாண்டுக்கு முன் ஓர் இயக்கத்தையே தலைமையேற்று வழிநடத்தியவர் அன்னை மணியம்மையார். இவருடைய பெற்றோர் (பத்மாவதி – கனகசபை) இவருக்கு வைத்த பெயர் காந்திமதி. இவருடைய தந்தையின் நண்பரான அண்ணல் தங்கோ தமிழார்வலராக இருந்த காரணத்தால், இவரது பெயரை ‘அரசியல்மணி’ என்று மாற்றினார்.
- 1943ஆம் ஆண்டு முதல் பெரியாரின் அணுக்கத் தொண்டராகவும் செயலாளராகவும் இருக்கத் தொடங்கினார். ‘குடிஅரசு’, ‘விடுதலை’ இதழ்களில் சாதி, மத மூட வழக்கங்களைக் கண்டித்தும் பகுத்தறிவு சார்ந்தும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘விடுதலை’ இதழின் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். பெரியாருடனான இவரது திருமணம் 1949ஆம் ஆண்டு நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பாகவே இருமுறை சிறை சென்ற மணியம்மையார், திருமணத்திற்குப் பிறகும் பலமுறை சிறை சென்றுள்ளார்.
- 1973ஆம் ஆண்டு பெரியார் மறைந்தபோது, ‘திராவிடர் கழக’த்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். பெரியார் விட்டுச் சென்ற பணியை அவர் போட்டுத் தந்திருக்கிற பாதையின் வழியில் முடிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு வலியுறுத்தி ‘விடுதலை’ இதழில் தலையங்கம் எழுதினார் மணியம்மையார் (விடுதலை, 27.12.1973).
- 1974ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெறவிருந்த ராம லீலா நிகழ்வில் அப்போதைய பிரதமரான இந்திராகாந்தி கலந்துகொள்வதாக இருந்தது. இது இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு எதிரானது என்றும் இந்நிகழ்வில் பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோர் கலந்துகொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதியதோடு தந்தியும் அனுப்பினார் மணியம்மையார்.
- திராவிட இனத்தைச் சேர்ந்தவனாகக் கருதப்படும் ராவணன் உருவத்தை எரிப்பது லட்சக்கணக்கான திராவிடர்களை அவமானப்படுத்தும் செயல்; அவ்வாறான ஒரு நிகழ்வில் பிரதமர் கலந்துகொண்டால் அதற்கு எதிர்வினையாக ராமன் உருவத்தை எரிக்கும் ராவண லீலாவைத் தமிழ்நாட்டில் நடத்தவேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி மணியம்மையாருக்குப் பதில் அனுப்பிய கடிதத்தில், ராமாயணம் மதம் சார்ந்த காவியம் என்பதை ஒப்புக்கொண்டாலும், ராம லீலாவை மதச்சார்பின்மைக் கொள்கைக்கு முரணானது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டார். இதையடுத்து நடைபெற்ற ராமலீலா நிகழ்ச்சியில் பிரதமரும் குடியரசுத் தலைவரும் பங்கேற்றனர்.
- எனவே மணியம்மையாரும் தான் அறிவித்தபடி ராவண லீலா நிகழ்வு நடைபெறும் என்று அறிவித்தார். 1974ஆம் ஆண்டு, டிசம்பர் 25 அன்று நாட்டையே அதிர்வுக்கு உள்ளாக்கிய ராவண லீலா நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டில் நடத்திக் காட்டினார் மணியம்மையார். காவல்துறையால் கைது செய்யப்பட்டு இவர்மீது வழக்கும் தொடரப்பட்டது.
- நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது, பல்வேறு நெருக்கடிகள் வந்தபோதிலும் உறுதியுடன் செயல்பட்டு பெரியாரின் இயக்கத்தையும் இதழ்களையும் திறம்படநடத்தினார். அரசியல் இயக்கங்களில் பயணிக்க விரும்பும் அனைவரும், குறிப்பாகப் பெண்கள் அறிய வேண்டிய வரலாறு, மணியம்மை யாருடைய வரலாறே.
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 03 – 2024)