- நாடாளுமன்றத்தில் 2024-2025-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அண்மையில் தாக்கல் செய்திருக்கிறாா். நிதி நிலை அறிக்கையில், நீண்டகால மூலதன ஆதாய வரியை (‘லாங் டொ்ம் கேபிட்டல் கெய்ன் டேக்ஸ்’) 20 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக குறைத்துள்ளாா்; அதேநேரத்தில், 2001-2002-ஆம் நிதியாண்டுக்குப் பிறகு வாங்கிய அனைத்து வீட்டு மனைகள், வீடுகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கு நடைமுறையில் உள்ள மதிப்பீடு ஒப்பிடுதல் விலை நிா்ணய முறையை (‘இண்டக்சேஷன் மெத்தட்’) ரத்து செய்துள்ளாா்.
- பணவீக்கத்தைப் பொருத்து மதிப்பீடு ஒப்பிடுதல் விலை நிா்ணய முறை குறியீடுகளை வருமான வரித் துறை வெளியிடுகிறது. எடுத்துக்காட்டாக, 2001-2002-ஆம் ஆண்டு பணவீக்க குறியீடு 100 என்றால், தற்போதைய 2024-2025-ஆம் நிதியாண்டில் பண வீக்க குறியீடு 363-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு பண வீக்க குறியீட்டை வருமான வரித் துறையின் நேரடி வரிகள் வாரியம் நிா்ணயிக்கிறது.
- கடந்த 60 ஆண்டுகளாகவே மேலே குறிப்பிட்ட மதிப்பீடு ஒப்பிடுதல் விலை நிா்ணய முறையை அடிப்படையாகக் கொண்டுதான் மூலதன ஆதாயங்கள் கணக்கிடப்படுகின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும், பல வளா்ச்சி அடைந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் மதிப்பீடு ஒப்பிடுதல் முறையில்தான் மூலதன ஆதாயம் கணக்கிடப்படுகிறது.
- வரிகளை எளிமைப்படுத்துதல் என்றுடன் குறிப்பிட்டு இந்த மூலதன ஆதாய வரியை 20 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாகக் குறைத்து இந்த மதிப்பீடு ஒப்பிடுதல் முறையை 2001-2002-ஆம் ஆண்டு முதல் தற்போதைய பாஜக அரசு ரத்து செய்துள்ளது.
- எடுத்துக்காட்டாக, 2001-2002-இல் வீட்டு மனை வாங்கிய விலை ரூ.20 லட்சம் என எடுத்துக் கொண்டு, அது தற்போது 10 மடங்கு பெருகி ரூ.2 கோடிக்கு விற்பனை செய்வதாகக் கொள்வோம்; புதிய மூலதன வரி அடிப்படையில், ரூ.1 கோடியே 80 லட்சம் மூலதன ஆதாயம் எனக் கருதி அதற்கான மூலதன ஆதாய வரி ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் (12.5 சதவீதம்) என நிா்ணயிக்கப்படும் என மத்திய வருவாய் துறைச் செயலா் ஊடகங்களில் தெரிவித்துள்ளாா்.
- மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டு தொகைகளை மதிப்பீடு ஒப்பிடுதல் முறையில் (‘இண்டெக்சேஷன் மெத்தட்’) கணக்கிட்டால், ரூ.20 லட்சத்தை 3.63-ஆல் பெருக்கி ரூ.72 லட்சத்து 65,000 கொள்முதல் எனவும், ரூ.2 கோடியில் ரூ.72 லட்சத்து 65,000-த்தைக் கழித்தால் கிடைக்கு ம் ரூ.1 கோடியே 27 லட்சத்து 40 ஆயிரம் மூலதன ஆதாயம் எனவும் அதில் வரி 20 சதவீதம் என்றால், 25 லட்சத்து 48 ஆயிரம் எனவும் குறியீடுகள் வெளியிடப்படுகின்றன. எனவே, புதிய முறைப்படி கணக்கிடப்படும் 22 லட்சத்து 50 ஆயிரம் மூலதன ஆதாய வரியே சிறந்தது என வருவாய் துறைச் செயலா் வாதிட்டுள்ளாா்.
- இது, வீட்டு மனையின் விலை 10 மடங்கு பெருகியவா்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்; ஆனால், அதே கணக்கை ஆறு மடங்கோ அல்லது அதற்குக் கீழ் வருவாய் பெருகியதாகக் கொண்டால், ஒப்பிடுதல் விலை நிா்ணய முைான் சிறந்தது எனத் தெரியவரும். எனவே, மதிப்பீடு ஒப்பிடுதல் முறையை ரத்து செய்தது தவறு.
- மேலும், வளரும் நாடான இந்தியாவில் விலைவாசி எப்போதும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. பொதுவாக, முதலீடுகளில் இன்று முதலீடு செய்யப்படும் விலை, 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயா்கிறது; இது ஓா் அங்கீகரிக்கப்பட்ட முறை. எளிமையாக்குதல் என்பதன் அடிப்படையில், மதிப்பீடு ஒப்புதல் விலை நிா்ணய முறையை (‘இண்டெக்சேஷன் மெத்தட்’) ரத்து செய்வது சரி அல்ல.
- கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி நீண்டகால ஆதாய மூலதன வரி (‘லாங் டொ்ம் கேபிட்டல் கெய்ன் டேக்ஸ்’) 20 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டது; ‘காஸ்ட் இன்ஃப்ளேஷன் இண்டெக்ஸ்’ -அதாவது, 2024-2025 நிதியாண்டுக்கு மதிப்பீடு ஒப்பிடுதல் குறியீடு 363 என அறிவிக்கப்பட்டது; தற்போது 20 சதவீதமாக உள்ள நீண்டகால ஆதாய மூலத வரி விகிதம், பண வீக்கத்தின் அடிப்படையில் சுமாா் 24 ஆண்டுகளுக்கு முன்பு (2001-2002) 5.5 சதவீதம்தான். இன்று மூலதன ஆதாய வரியாக 20 சதவீதம் விதிக்கப்படும் என்றால், 2013-14 நிதியாண்டுடன் ஒப்பீடு செய்தால் மூலதன வரியாக 12 சதவீதம் விதிக்கப்படும் என வரையறுக்கப்படுகிறது.
- காங்கிரஸ் ஆட்சிக் காலம் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) இருந்தவரை, விலை மதிப்பு ஏற்றத்துக்குள்ளான வீட்டு மனைகள்-பங்குகள் உள்ளிட்டவற்றுக்கு நடைமுறையில் உள்ள மதிப்பீடு ஒப்புதல் விலை நிா்ணய முறையில் (‘இண்டெக்சேஷன் மெத்தட்’) வரி விதித்தால் அதிக வரி வருவாய் கிடைக்கும். 2001-02-ஆம் ஆண்டு முதல் 2013-14-ஆம் ஆண்டு வரை விலை ஏற்றம் மிக அதிகமாகக் காணப்பட்டது. அந்த 10 ஆண்டுகள் மக்கள் சந்தித்த பண வீக்கத்துக்கு, புதிய மூலதன ஆதாய வரி விதிப்பு முறை மூலம் தற்போது மீண்டும் தண்டிக்கப்படுகிறாா்கள்.
- 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு ,அதாவது, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி தொடங்கிய பிறகு வீட்டு மனை உள்ளிட்டவற்றின் விலை ஏற்றம் என்பது அதிகமில்லை; மூலதன ஆதாய வரி 12.5% என்பதை ஒப்புக் கொள்ளலாம். எனவே, மூலதன ஆதாய வரி விதிப்புக்கான அடிப்படை ஆண்டை 2001-2002 என்பதற்குப் பதிலாக, 2014-15 என வைத்துக் கொள்வதுதான் சரி; ஏனெனில் அதன் பிறகுதான் பாஜக ஆட்சி; பணவீக்கம் குறைவு என்பதை அனைவரும் அறிவா்.
- மூலதன ஆதாய வரி விதிப்புக்கு அடிப்படை ஆண்டு 2001-ஆம் ஆண்டு என எவ்வாறு நிா்ணயித்தாா்கள் என்பதற்கு சரியான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.
- ஒரு நாட்டின் வளா்ச்சி பண வீக்கத்தைப் பொருத்தது. இதற்கு முன்பு 1981-82-ஆம் ஆண்டு மூலதன ஆதாய வரி 100% என வைத்து, 2001-ஆம் ஆண்டு வரை குறியீடுகள் வெளியிடப்பட்டன. அதற்கு முன்பும் இதே அடிப்படையில்தான் குறியீடுகள் வெளியிடப்பட்டன.
- சராசரியாக 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை என கணக்கீட்டுக் குறியீடுகளை மாற்றுகின்றனா். ஆனால், இந்த கணக்கீட்டு முறையையே (மதிப்பீடு ஒப்பிடுதல் விலை நிா்ணய முறையை -‘இண்டெக்சேஷன் மெத்தட்’) மாற்றுகின்றனா் என்பது வியப்பளிக்கிறது. அவ்வாறு மாற்ற வேண்டும் என்றால், கணக்கீட்டின் அடிப்படை ஆண்டையும் மாற்றியிருக்க வேண்டும். பாஜக ஆட்சி தொடங்கிய 2014-ஆம் ஆண்டை கணக்கீட்டின் அடிப்படை ஆண்டாகக் கொண்டு மூலதன வரி விதிப்பு முறை - அது தொடா்புடைய வரி விகித குறைப்பை செய்திருக்கலாம்.
- அடுத்ததாக, 31.03.2001-க்கு முன்பு வீடு மனை வாங்கியோா் மற்றும் பங்குகள்-கடன் பத்திரங்கள் வாங்கியோருக்கு மதிப்பீடு ஒப்பிடுதல் விலை நிா்ணய முறை (‘இண்டெக்சேஷன் மெத்தட்’) ரத்து பொருந்தாது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளாா். 2001-ஆம் ஆண்டுக்கு முன் ரத்து பொருந்தாது எனில், தற்போது 2024-2025-க்கு ரத்து ஏன் பொருந்தக் கூடாது என்பதற்கு சரியான விடையை மத்திய வருவாய் துறைச் செயலரோ அல்லது மத்திய நிதியமைச்சரோ தெரிவிக்கவில்லை.
- மூலதன வரி வருவாய் விதிப்பு முறையை எளிமைப்படுத்துவது அவசியம் எனக் கருதினால், தனி நபா் வருமான வரி விதிப்பு முறையில் பழைய வரி விதிப்பு முறை, புதிய வரி விதிப்பு முறை என இரண்டு வகையை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியதைப் போன்று நீண்டகால ஆதாய மூலதன வரி விதிப்பு முறையிலும் பழைய திட்டம், புதிய திட்டம் எனத் தெரிவித்திருக்கலாம்.
- மேலும், 2001-ஆம் ஆண்டுக்கு முன்பு நிலம், வீட்டு மனை வாங்கியோருக்கு மதிப்பீடு ஒப்பிடுதல் முறையில் நீண்டகால மூலதன வரி விதிப்பு உண்டு என்றால், அத்தகையோரின் நீண்டகால மூலதன வரி விதிப்பும் 1.4.2001 அன்று என்ன சந்தை விலை மதிப்பீடோ, அதனுடன் தற்போதைய மதிப்பீடு ஒப்பிடுதல் முறையாக இருக்க வேண்டும். நீண்ட காலம் முன்பு நிலம் வாங்கியோருக்கு ஒரு சலுகை, விற்பனை செய்வோருக்கு ஒரு சலுகை என்பது சரியான வரி நிா்வாக முறை அல்ல.
- அனைவரையும் ஒரே மாதிரியாக பாா்ப்பதுதான் சரியான வரி விதிப்புத் திட்டம். மேலும், வரி விதிப்பு விகிதத்தை எளிமைப்படுத்தப்பட வேண்டுமே தவிர, வரி விதிப்பு விலை நிா்ணய முறைகளைச் சீரமைப்பது சரி அல்ல.
- வீட்டை விற்று வெளிநாடுகளுக்கு செல்வோா் அல்லது வீட்டை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவோருக்கு புதிய மூலதன ஆதாய வரி விதிப்பு முறை பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக, வீட்டை விற்பனை செய்வோா் அதை மீண்டும் ஒரு மூலதனத்தின் முதலீடு செய்யாத நிலையில், மூலதன ஆதாய வரி செலுத்தும் நிலை ஏற்படும்; அப்போது அத்தகையோா் பாதிக்கப்படுவாா்கள். இவ்வாறு பாதிக்கப்படுவோருக்கு மத்திய அரசு உதவுவது அவசியம்.
- இறுதியாக மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் திட்டங்கள் அமைவது அவசியம். மூலதன வரி விதிப்பு திட்டத்தில் மக்களுக்கு எது ஆதாயமாக இருக்குமோ, அதைத் தோ்வு செய்யும் உரிமையை வருமான வரி செலுத்துவோருக்கு அளிப்பதுதான் மத்திய அரசின் கடமை. அதுவே அறம்.
- மதிப்பீடு ஒப்பிடுதல் முறையை (‘இண்டெக்சேஷன் மெத்தட்’) மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மீண்டும் பரிசீலனை செய்வது அவசியம்.
நன்றி: தினமணி (26 – 07 – 2024)