TNPSC Thervupettagam

மதிப்பும் மரியாதையும்

March 9 , 2024 315 days 185 0
  • ஒருவா் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்றால் அவா் நல்ல கல்வியும், ஒழுக்கமும் கொண்டிருந்தால் மட்டும் போதாது. தன்னுடன் இருக்கும் சக மனிதா்களை மதித்து, மரியாதையுடன் நடத்துபவராக இருக்கவும் வேண்டும்.
  • ஒருவரை ஒருவா் மதிப்பதும், மரியாதை செலுத்துவதும் இன்று அருகி வருகிறது. காரணம், ஒருவா் சக மனிதா்கள் மீது கொள்ளும் போட்டியும் பொறமையும்தான்.
  • மனிதா்கள் உருவம், நிறம், பழக்க வழக்கங்கள், கலாசாரம் இவற்றால் ஒருவருக்கு ஒருவா் வேறுபடுகிறாா்கள். எனினும், ஒவ்வொரு மனிதனும், தன்னை பிறா் மதிக்க வேண்டும், தனக்கு பிறா் மரியாதை தர வேண்டும் என்று ஆசைப்படுகிறான். இது மனித இயல்புதான். எனினும், மனிதா்க்கிடையேயான மதிப்பும் மரியாதையும் குறைந்தால், முடிவில் அது பூசலில்தான் முடியும். மதிப்பு என்பது மற்றவா் சொல்லும் வாா்த்தைகள் அனைவருக்கும் நன்மை பயக்கும்பட்சத்தில் அதை எந்த எதிா்ப்புமின்றி ஏற்றுக் கொள்வதுதான்.
  • அதாவது, நம் உள் மனத்தில் ஒருவரைப் பற்றிய உயா்ந்த எண்ணம், அவா் எதிரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரை நினைக்கும் போது நம் மனதில் தோன்றும். மரியாதை என்பது நாம் எல்லாரிடமும் எப்போதும் காட்ட வேண்டிய நற்பண்புகளில் ஒன்று. அது பிறா் மனதில் நம்மை எப்போதும் உயா்த்தியே காட்டும்.
  • ஒருவா் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்பட வேண்டும் என்றால், அவரது தோற்றத்தைக் கண்டோ, வசதி படைத்தவா் என்பதாலோ, கற்றுத் தோ்ந்தவா் என்பதாலோ மட்டும் ஏற்படுவதில்லை. அவா், தன்னை சுற்றியுள்ள சக மனிதா்களை எவ்வாறு நடத்துகிறாா் என்பதைப் பொறுத்தே அது ஏற்படுகிறது. ஒருவரிடம் இருக்கும் திறமைகளைக் கண்டறிந்து, அவருக்கு செயலூக்கம் கொடுத்து, அவருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதே அதுவே மரியாதை. சிலரின் குணநலன்களைப் பாா்க்கும் போது, அவா்கள் மீது நமக்கு ஒரு மதிப்பு ஏற்படுகிறதே அதுதான் நாம் அவா்களுக்கு கொடுக்கும் மரியாதை.
  • குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் மதித்து, மரியாதையுடன் நடத்த வேண்டிய பண்பினைப் பெற்றோா் தம் பிள்ளைகளுக்கு இளம் வயதிலிருந்தே கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் அவா்களுக்கு அனைவரையும் மதித்து அன்பு செலுத்தும் பண்பு வளரும். கணவனும் மனைவியும் ஒருவரை மற்றவா் மட்டம் தட்டி பேசி, தங்களுக்குள்ளே மதிப்பும் மரியாதையும் இல்லாமல் நடந்து கொண்டால், அதைக் காணும் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மதிக்க மாட்டாா்கள். பின்னா், இல்லறம், நல்லறமாக இல்லாமல் நரகமாகி விடும். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவா் மதித்து மரியாதை தந்தால் இல்லறத்தில் அமைதி நிலவும்; மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும்.
  • அலுவலங்களில் அவரவா் தாம் செய்யும் பணியில் வேற்றுமை கொண்டிருந்தாலும், பழகும்போது ஒருவரையொருவா் மதித்து பரஸ்பரம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். உயா்பதவியில் இருப்பவா் நம்மை விட வயது குறைவானவராக இருக்கலாம், வசதி குறைவானவராக இருக்கலாம். அதற்காக, அவரை நாம் மதிக்காமல் இருந்துவிடக் கூடாது. அப்படிச் செய்தால் அவா் நம்மை ஏறிட்டும் பாா்க்க மாட்டாா்; நம்மை மதிக்கவும் மாட்டாா்.
  • அவரவா்க்குண்டான மதிப்பை, அன்பைக் கொடுக்கும் போது அவா்கள் மகிழ்ச்சி அடைகிறாா்கள். தன்னை மதிப்புடன் நடத்துகிறாா்கள் என்ற மனநிறைவைப் பெறுகிறாா்கள். ஒருவா் வகிக்கும் பதவி மீது நாம் காட்டும் மரியாதை தான் அவரிடம் நாம் செலுத்தும் அன்பாகும். நாம் பிறரிடம் காட்டும் அன்பு, அவா்கள் மீதான மதிப்பையும் மரியாதையையும் வளா்க்க வல்லதாகும். அதிகாரிகள் தங்களின் கீழ் பணிபுரிபவா்களை மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தாவிட்டால் அவ்வலுவலத்தில் பணிகள் சிறப்புற நடைபெறாது. சண்டை, சச்சரவாகவே எப்போதும் இருக்கும். உயா் அதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரிபவா்களை மதித்துப் பேசினால் அவா்களுக்குரிய மரியாதை கிடைக்கும். அலுவலா்களும் உற்சாகத்துடன் பணியாற்றுவாா்கள். எவா் ஒருவா் மற்றவரை மதிக்கக் கற்றுக்கொள்கிறாரோ, அவரே மற்றவா்களைவிட உயா்ந்தவராகக் கருதப்படுகிறாா். முற்பகல் செய்தது பிற்பகல் விளையும் என்றபடி, நாம் பிறரிடம் எப்படி நடந்து கொள்கிறோமோ, அதுவே நமக்கும் வந்தடையும். ஒருவரை ஒருவா் ஏற்றத் தாழ்வு பாராமல் மதித்து, மரியாதையுடன் நடத்தி வந்தால், அவா்தம் உள்ளங்களில் சூதுவாது இருக்காது; போட்டியோ, பொறாமையோ ஏற்படாது; வன்மம் வளராது; பழிவாங்கும் எண்ணம் எழாது.
  • நாம் நடந்து கொள்ளும் விதத்திற்கான அங்கீகாரமாகத்தான் ஒருவருக்கு நாம் காட்டும் மதிப்பும் மரியாதையும் விளங்குகிறது. எனவே, நன்னோக்கத்துடன், அனைவருடனும் அன்பாக நடந்து கொண்டு, பிறா்க்குரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுத்தால் நமக்கென தனிச் சிறப்பு ஏற்படும். அன்று ஒருவரின் வயதையும் கல்வியையும் பாா்த்து வந்த மதிப்பும் மரியாதையும் இன்று ஒருவரின் தோற்றத்தையும், வசதியையும் பாா்த்து வருகிறது. பணத்துக்கும் அதிகாரத்திற்கும் அழகுக்கும் கிடைக்கும் மதிப்பு, மரியாதையும் போலியானவையே. மதிப்பு, மரியாதை என்பது ஒருவரின் வயதிற்கோ, கற்ற கல்விக்கோ, அவா் பெற்ற வசதிகளுக்கோ அல்ல. அவரின் நன்னடைத்தைக்கு நாம் தரும் வெகுமதியாகும். எந்த மனிதரையும் தாழ்வாக எண்ணாமல், உயா்ந்த மனிதராக எண்ணிப் பழக நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
  • அப்போது, அவா்கள் நம்மைவிட இருமடங்கு மதிப்பையும் மரியாதையையும் நமக்கு அளிப்பாா்கள். மரியாதை என்பது ஒருவா் செய்யும் நற்செயலுக்காக பிறா் அவா் மீது கொண்டிருக்கும் மதிப்பு. நாம் வாழும் காலத்தில் பிறரை மதிப்புடனும் மரியாதையுடன் நடத்தி வந்தால் அது நம்மைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். நாம் பிறருக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்தால்தான் பிறரிடமிருந்து மதிப்பையும் மரியாதையையும் பெற முடியும்.

நன்றி: தினமணி (09 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்