TNPSC Thervupettagam

மதிப்பெண் கூட்டும் தேர்வு

June 29 , 2021 1129 days 680 0
  • பிளஸ்-2 மதிப்பெண் கணக்கீட்டு முறையாக, மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை 50 சதவீதமாகவும், பிளஸ்-1 தேர்வுகளில் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை 20 சதவீதமாகவும், பிளஸ்-2 வகுப்பில் செய்முறைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை 20 சதவீதமாகவும், அகமதிப்பீட்டு மதிப்பெண்களை 10 சதவீதமாகவும் கணக்கிட்டு, மதிப்பெண்களை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஜூலை 31-க்குள் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்.
  • பத்தாம் வகுப்பு தேர்வை மாணவர்கள் நேரில் சென்று எழுதி பெற்ற மதிப்பெண்கள் என்பதால் அதற்கு அதிக மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
  • மேலும் இந்த மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் திருப்தியடையாத மாணவர்கள், அவர்கள் விரும்பினால் பிளஸ்-2 தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும்.
  • அந்தத் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்கள் ஆகும். இது தொடர்பான கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர அவசியம்

  • மத்திய இடைநிலைக் கல்விவாரியம் எனப்படும் சிபிஎஸ்இ மதிப்பெண் மதிப்பீட்டு முறையைப் பொருத்தவரையில், பத்தாம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை 30 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் பெற்ற மதிப்பெண்களை 30 சதவீதமும் மற்றும் பிளஸ்2 வகுப்புகளில் இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளில் மதிப்பெண்களை 40 சதவீதமும் என எடுத்துக்கொண்டு மதிப்பெண் மதிப்பீட்டை இறுதி செய்வதாக அறிவித்துள்ளது.
  • இந்த மதிப்பீட்டு மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்களுக்கு கரோனா சூழலை ஆய்வு செய்து ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 15-க்குள் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
  • இவ்விரண்டையும் உற்று நோக்கும்போது, மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் கூட்டும் தேர்வுக் காலம் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
  • கரோனா சூழலில் மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்துவிட்டு மதிப்பெண் மதிப்பீட்டு முறையை அறிவித்திருப்பதும் தவிர்க்க முடியாதது. ஆனால், அவை முழுமை பெறுவது என்பது மாணவர்களின் திருப்தியில்தான் உள்ளது.
  • மத்திய அரசின் இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் திருப்தியடையாத மாணவர்களுக்கு மதிப்பெண் கூட்டும் தேர்வு என்பதை கரோனா சூழலை ஆராய்ந்து நடத்த முன்வந்துள்ளது.
  • மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு மதிப்பெண் கூட்டும் தேர்வு என்பது காலவரையறை ஏதுமின்றி அறிவிப்பு செய்திருப்பது சரியாக இருக்காது என்று தோன்றுகிறது.
  • மத்திய அரசு மாணவர்கள் நலன் கருதி பிளஸ்-2 தேர்வை ரத்து செய்ததை உச்சநீதிமன்றமும் வரவேற்றது.
  • மதிப்பெண் மதிப்பீட்டு முறை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் திருப்தியடையாத மாணவர்களுக்கு மதிப்பெண் கூட்டும் தேர்வு வைப்பது என்றும், குறிப்பிட்ட காலத்தை அறிவித்திருப்பதும் மாணவர் நலனில் அக்கறை செலுத்துவதை உணர்த்துவதாகத் தோன்றுகிறது.
  • சமூக நீதியை உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் தமிழக அரசு, பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் கூட்டும் தேர்வை நடத்துவது தொடர்பாகவோ, காலவரையறை செய்யாமலோ இருப்பது தகுமா? இதுதொடர்பாக அறிவிப்பு ஏதும் செய்யாமலோ, தாமதமாக அறிவிப்பு செய்தாலோ குறைவான நாள்களே உள்ள நிலையில், பெரும்பாலான மாணவர்கள் மதிப்பெண் கூட்டும் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாட்டார்கள்.
  • இவ்வாறு நடக்கும்பட்சத்தில், மதிப்பெண் கூட்டும் தேர்வு என்ற வாய்ப்பு வழங்கப்படாமல், பிளஸ்-2 மதிப்பெண்களை மாணவர்கள் மீது திணித்தது போல் ஆகும்.
  • ஜூலை, ஆகஸ்ட் என அதிகபட்சமாக இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், மதிப்பெண் கூட்டும் தேர்வு நடத்தப்பட்டால், மாணவர்களையும் திருப்திபடுத்தியது மட்டுமன்றி, சமூக நீதியை உயர்த்திப் பிடித்தது போலும் ஆகும்.
  • வழக்கமான கல்வியாண்டுகளில், பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள், தங்கள் மதிப்பெண் தொடர்பாக சந்தேகம் எழும்போது, தங்கள் விடைத்தாள்களை மறு மதிப்பீடு, மறு கூட்டல் செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • கரோனா தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் தமிழக அரசுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் மதிப்பெண் கூட்டும் தேர்வுக்கு ஏற்பாடு செய்வது ஒன்றும் பெரிதல்லவே.
  • ஆன்லைன் தேர்வாக இருந்தாலும் பரவாயில்லை. மற்ற கல்விவாரியங்களைப் போல், தமிழக அரசும் மாணவர்களுக்கு மதிப்பெண் கூட்டும் தேர்வை நடத்திய பெருமை வந்து சேரும்.
  • மற்ற கல்வி வாரியங்கள் போல் (சிபிஎஸ்இ, சிஐசிஎஸ்இ) பிளஸ்-2 மதிப்பெண் கூட்டும் தேர்வுக் காலத்தை தமிழக அரசு விரைந்து அறிவிக்க வேண்டும். அதிகபட்சம் ஒன்றரை மாதம் மட்டுமே தேர்வுக்குத் தயாராகும் அவகாசம் இருப்பதால் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்தல் அவசர அவசியமாகும்.

நன்றி: தினமணி  (29 - 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்