TNPSC Thervupettagam

மதுவிலக்குப் பிரச்சார வரலாற்றில் தலித்துகளும் காந்தியர்களும்

October 8 , 2024 49 days 62 0
  • மதுவிலக்கு குறித்த விவாதம் தமிழகத்தில் மீண்டும் எழுந்​துள்ளது. கள்ளக்​குறிச்சி விஷச்​சாராய மரணத்தைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்​தைகள் கட்சி நடத்தி​யிருக்கும் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு, இந்த விவாதத்​துக்கு முக்கியப் பங்காற்றி​யிருக்​கிறது. குறிப்பாக, மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2இல் இந்த மாநாட்டை நடத்தி​யிருப்பது, மதுவிலக்கில் காந்தி​யர்கள், தலித்து​களின் பங்களிப்பைக் கோரி நிற்கிறது. ஓர் அரசின் வருவாய்க்கான ஆதாரமாக மதுக்​கொள்கை இருக்கக் கூடாது என்பதே காந்தியின் எச்சரிக்கை. அதேபோல எளிய மக்களின் வருமானத்தைச் சுரண்​டக்​கூடிய மதுவை ஒழிக்க வேண்டும் என்பதே தலித்து​களின் கோரிக்கையாக இருந்​துள்ளது.
  • மதுவிலக்குச் சாத்தியமா இல்லையா என்பது ஒருபுறம் இருந்​தா​லும், மதுவிலக்குக் குறித்த விவாதத்​துக்குக் குடிமைச் சமூகம் தன்னை உள்படுத்​திக்​கொள்வது அவசியம். இந்திய மதுவிலக்கு வரலாறு என்பது காந்திய நோக்கி​லிருந்து கோரப்​பட்டதே அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்​கிறது. ஆனால், தமிழகத்தில் காந்தி​யர்​களுக்கு முன்பே தலித்துகள் மதுவிலக்​குக்கான இயக்கம், பத்திரிகை, வெளியீடுகள் என்று செயல்​பட்டு வந்துள்ளனர்.

மதுவிலக்குச் சங்கம்:

  • ‘மதுவிலக்குச் சங்கம்’ 1902ஆம் ஆண்டு பி.ஒய்​.தெய்​வசி​காமணி மற்றும் சிலரால் சென்னையில் தோற்று​விக்​கப்​பட்டது. மதுவிலக்குப் பிரச்​சா​ரத்​துக்​காகவே இச்சங்கம் தொடங்​கப்​பட்டது. 1850களில் அமெரிக்​காவில் தொடங்​கப்பட்ட டெம்பரன்ஸ் இயக்கம் (Temperance movement), கிறிஸ்துவ மிஷனரிகள் மூலம் இந்தியாவில் மதுவிலக்குப் பிரச்​சா​ரத்தைத் தொடங்கியது. அமெரிக்கக் கிறிஸ்துவ மிஷனரியைச் சேர்ந்​தவர்கள், சென்னை மற்றும் அதைச் சுற்றி​யுள்ள பகுதி​களில் தலித்துகள் மத்தியில் வேலை செய்து​வந்​தனர்.
  • இவர்கள் தலித்து​களின் முன்னேற்​றத்​துக்கு மதுவிலக்கு அவசியம் என்பதை வலியுறுத்​தினர். அடுத்​ததாக, தலித்துகள் மத்தியில் பண்டிதர் அயோத்​தி​தாசர், பூஞ்சோலை முத்து​வீரன் நாவலர் போன்றோரின் முயற்​சியில் பௌத்த மறுமலர்ச்சி இயக்கங்கள் தீவிர​மாகச் செயல்​பட்டு வந்தன.
  • கள்ளுண்ணா​மையைப் பஞ்சசீலங்​களில் ஒன்றாக வலியுறுத்தும் பௌத்த மார்க்கப் பரவலும் இந்த மதுவிலக்குச் சங்கத் தோற்றத்​துக்கு முக்கியக் காரணமாகும். மக்களிடம் சென்று குடியின் தீமை குறித்​தும், மதுவிலக்கின் அவசியம் குறித்தும் பிரச்​சாரம் செய்வது இந்தச் சங்கத்தின் அடிப்படை நோக்கம். இச்சங்​கத்தார் தங்களது சொந்தப் பணத்தைச் செலவிட்டு, நகரங்கள் மட்டுமல்​லாமல் தூரத்​தி​லுள்ள கிராமங்​களுக்கும் சென்று, குடியால் சீரழிந்த குடும்​பங்​களின் கதைகள், பாடல்கள், பழமொழிகள் போன்ற​வற்றின் மூலம் பிரச்​சாரம் செய்து​வந்​தனர். மேலும், பண்டிதர் அயோத்​தி​தாசர் போன்றோரை அழைத்து​வந்து குடியின் தீமை குறித்துப் பிரசங்கம் நிகழ்த்​தி​யுள்​ளனர்.

மதுவிலக்குத் தூதன்:

  • மதுவிலக்குச் சங்கத்தின் சார்பில் மதுவிலக்குப் பிரச்​சா​ரத்​துக்​கெனத் தமிழும் ஆங்கிலமும் கலந்த இருமொழி இதழ் வெளிவந்த மதுவிலக்கு ‘தூதன்’ அல்லது ‘டெம்​பரன்ஸ் ஹெரால்டு’ என்னும் இதழ் 1900இல் தொடங்​கப்​பட்டது. வழக்க​மாகச் சங்கத்தை முதலில் தொடங்கி, அதன் குரலாகப் பத்திரி​கையைத் தொடங்​குவர். ஆனால், இங்கு பத்திரிகையை முதலில் (1900இல்) தொடங்கி, பின்பு சங்கத்தை 1902இல் தொடங்​கி​யுள்​ளனர்.
  • இந்த இதழில் குடியினால் விளையும் தீமைகளைச் சிறு சிறு கதைகளாக, பழமொழிகளாக விவரித்​தனர். டி.மனுவேல் பிள்ளை (இவர் இதற்கு முன்பு ‘திரா​விடக் கோகிலம்’ என்னும் பத்திரிகையை நடத்தி​யவர்) என்பவர்தான் இந்தப் பத்திரி​கை​யையும் நடத்தினார். சென்னை மற்றும் அதைச் சுற்றி​யுள்ள பகுதி​களில் 300 பிரதிகள் விற்பனை​யாயின. ஆதிதிரா​விடக் கிறிஸ்​துவரான மனுவேல் பிள்ளை, பிரிட்டிஷ் பாரிஸ்டர் அதிகாரி நார்டன் என்பவரிடம் பட்லராக வேலை பார்த்து வந்தார்.
  • பூஞ்சோலை முத்துவீர நாவலரின் ஆசிரி​யத்து​வத்தில் வெளியான ‘பூலோக​வி​யாஸன்’ இதழ் மதுவிலக்குக் குறித்துத் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வந்தது. இந்தக் கட்டுரைகள் குடியை ஒழுக்கம் சார்ந்த பிரச்​சினை​யாகப் பார்க்​காமல், ஒடுக்​கப்​பட்​டோரின் முன்னேற்​றத்​துக்கு எவ்வாறு குடி பெரும் தடையாக உள்ளது என்பதை விவாதிக்​கின்றன. குடிப்​பவர்​களில் நல்ல குடியர்கள் கெட்ட குடியர்கள் எல்லாம் கிடையாது. குடிப்​பழக்கம் உள்ள எல்லோருமே குடியர்​கள்தான் என்கிறது அந்தப் பத்திரிகை.

அர்ச் அன்னம்மாள் மதுவிலக்குச் சபை:

  • ‘அர்ச் அன்னம்மாள் மதுவிலக்குச் சபை’ (St.Anne’s Temperance Society) பிரான்ஸிஸ் சி.தம்​புசாமிப் பிள்ளை, ஜே.பி.சர்​வாந்த்தோன் குருஸ்​வாமிகள், சா.செ.துரைசாமிப் பிள்ளை ஆகியோரால் கோலார் தங்கவயல் சாம்பியன் ரீப்ஸில் தொடங்​கப்​பட்டது. மதுவிலக்கை ‘வெறி​விலக்கு’ என்றும் அந்த அமைப்​பினர் குறிப்​பிட்டு​வந்​தனர். கோலார் தங்கவயலில் பெரும் எண்ணிக்கையில் வேலைபார்த்த தொழிலா​ளர்கள் மத்தி​யில், மதுவின் தீமை குறித்தும் மதுவிலக்கின் அவசியம் குறித்தும் பிரச்​சாரம் செய்து​வந்​தனர்.
  • மதுவிலக்குச் சங்கத்தில் செயல்​பட்​ட​வர்கள், இந்தச் சங்கத்​திலும் செயல்​பட்டனர். இச்சங்​கத்​தினர் மதுவின் தீமைகள் குறித்து சிறு நூல்களையும் வெளியிட்​டனர். அதில் முக்கியமாக ‘மதுவிலக்கு கும்மி’ என்னும் நூல் கவனிக்​கத்தக்க ஒன்றாகும். கோலார் தங்கவயல் சாம்பியன் ரீப்ஸ் செயின்ட் மேரீஸ் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய சி.எஸ்​.ஞானப்​பிர​காஸம் பிள்ளை 1916ஆம் ஆண்டில் இந்நூலை எழுதினார்.
  • ராஜாஜியின் ‘விமோசனம்’ - காந்தியரான ராஜாஜி, மதுவிலக்​குக்​காகவே ‘விமோசனம்’ என்னும் மாதப் பத்திரி​கையை கல்கியை ஆசிரியராகக் கொண்டு 1929இல் தொடங்​கினார். திருச்​செங்கோடு காந்தி ஆசிரமத்​திலிருந்து வெளியான இப்பத்​திரி​கை​யில், மதுவின் தீமைகள் குறித்த கட்டுரைகள், கருத்​துச்​ சித்திரங்கள் இடம்பெற்றன.
  • காந்தி ஆசிரமம் சார்பில் மதுவிலக்கை வலியுறுத்தும் குடிகெடுக்கும் ‘கள்’, ‘திக்கற்ற பார்வதி’ போன்ற நூல்களும் வெளியிடப்​பட்டன. ‘விமோசனம்’ பத்திரிகை மொத்தம் பத்து இதழ்கள் வெளியானது. அதன் பிறகு, ராஜாஜியின் கைதைத் தொடர்ந்து பத்திரிகை நின்று​போனது. இப்பத்​திரி​கையின் கட்டுரைகளும் கருத்துப் படங்களும் இன்றளவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
  • கல்வியறிவு அதிகம் இல்லாத நாட்டில் பிரச்​சாரம் செய்வது மிகவும் கடினம். நூல்களும், துண்டுப் பிரசுரங்​களும் ஓரளவே பயன்படும். இந்தச் சூழலில், சித்திரப் படங்களைக் காட்டிப் பிரச்​சாரம் செய்வது நல்ல பலனளிப்பதாக காந்தி​யர்கள் கருதினர். ஆகவேதான் விளக்கப் படங்கள் காட்டிப் பிரச்​சாரம் செய்தனர். இந்தப் பிரச்​சா​ரத்​துக்​காகவே தெளிவான படங்களை அச்சிட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்​பட்டன. படங்களை மாட்டித் தொங்க​விடு​வதற்கான துணி, சட்டம், கம்பி முதலிய​வற்​றையும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து பிரச்​சா​ரத்தை முடுக்​கி​விட்​டனர்.

காந்தியர்களின் மது ஒழிப்புப் பிரச்சார நடைப்பயணம்:

  • காங்கிரஸார் 1930களில் தீவிர தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு ஆகியவற்றை வலியுறுத்தி நடைப்​பயணம் மேற்கொண்​டனர். ராஜாஜி தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் நடைப்​பயணம் அதில் மிகவும் முக்கிய​மானது. இந்த நடைப்​பயணத்தில் மதுவின் தீமையை விளக்கும் படங்களைத் தங்களுடன் தொண்டர்கள் எடுத்​துச்​சென்​றனர்.
  • ஒவ்வொரு கிராமத்​துக்கும் சென்று, மதுவிலக்குப் படங்களை வரிசை​யாகக் கட்டித் தொங்க​விடுவது வழக்கமாக இருந்தது. இந்தப் படங்களைப் பார்க்க மக்கள் கூட்ட​மாகக் கூடிய​வுடன் அவர்களிடம் மதுவின் தீமை குறித்துத் தொண்டர்கள் விளக்கு​வார்கள். ஆதிதிரா​விடர்​களின் குடியிருப்புப் பகுதி​களுக்குச் சென்று, அவர்களின் வீதிகளைப் பெருக்கிச் சுத்தம் செய்து​விட்டு, மதுவிலக்குப் படங்களைத் தொங்க​விட்டு, அவற்றின் தீமைகளை விளக்கிப் பேசுவார்கள்.
  • ஒருமுறை காந்தி சென்னை வந்திருந்த​போது, அவரை நேரில் சந்தித்து மனு கொடுத்த இரட்டைமலை சீனிவாசன், “மகாத்​மாஜீ, கள் குடியின் கேட்டைப் பற்றி நீங்கள் பேசலாம். அது ஒன்றும் தவறில்லை. ஆனால், மதுபானம் குடிக்கும் வழக்கம் அனைத்துச் சமூகத்​தினர் மத்தி​யிலும் இருக்​கும்​போது, தாழ்த்​தப்​பட்டோரை மட்டும் கூறுவது அவமானப்​படுத்து​வதுபோல் உள்ளது” என்றார். இதற்குப் பதிலளித்த காந்தி, “மற்ற சாதியினரிடமும் குடிப்​பழக்கம் இருக்கிறதென்பது எனக்குத் தெரியும்.
  • ஆனால், எவ்வளவோ சிரமப்​பட்டு முன்னேற வேண்டிய பிற்போக்கான நிலையிலுள்ள ஹரிஜனங்​களுக்கு இது கட்டுப்​படி​யா​காது. ஆகையால், குடிப்​பழக்​கத்​துக்கு விலகி ஒதுங்க வேண்டிய பொறுப்பு இவர்களுக்கே அதிகம். நான் அவர்களுடைய குடிப்​பழக்​கத்தை அகற்ற எத்தனையோ ஆண்டுகள், எவ்வளவோ பாடுபட்​டிருக்​கிறேன். ஆகையால், தயவுசெய்து என்னுடைய சுதந்​திரத்​துக்கு வேலிகட்டி விடாதீர்கள்.
  • யாருடைய மனதையும் புண்படுத்​தக்​கூடிய எந்தச் சொல்லையும் நான் சொல்ல மாட்டேன்” என்றார். மதுவிலக்குப் பிரச்​சாரம் தொடங்கி 100 ஆண்டுகள் கடந்த பின்பு, இன்று ஒட்டுமொத்த தேசத்​துக்கான ஒரு பிரச்​சினையாக மது உருவாகி நிற்கிறது. காந்தியின் அந்தக் கனவு நிறைவேறு​மா?

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்