TNPSC Thervupettagam

மத்திய அரசின் தங்க பத்திரம் ஏன் வெளியாகவில்லை?

December 9 , 2024 32 days 53 0

மத்திய அரசின் தங்க பத்திரம் ஏன் வெளியாகவில்லை?

  • தங்க பத்திரங்கள் (SGB) விற்பனையை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. மத்திய அரசின் ஆலோசனைப்படி இந்த பத்திரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்படுவது வழக்கம். பொதுவாக, சில நாட்கள் மட்டுமே இந்த தங்க பத்திரங்களில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படும். முதலீட்டாளர்களுக்கு தங்க பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு அதனை அவர்கள் பங்குச் சந்தையில் விற்கவும் வாங்கவும் முடியும்.
  • இந்த தங்க பத்திரங்களில், தனி நபர்கள் குறைந்தது 1 கிராம் தங்கம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை முதலீடு செய்ய முடியும். அவ்வப்போது வெளியிடப்படும் பத்திரங்களுக்கான விலை சந்தை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறான பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 2.5% சதவீதம் வட்டி உண்டு, இதற்கு வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால் மூலதன ஆதாய வரி விலக்கு உண்டு. இந்த பத்திரங்களின் முதிர்வு காலம் 8 ஆண்டுகளாக உள்ளது. ஆனால் முதலீடு செய்யும் நபர் ஐந்து வருடங்களுக்கு பிறகு விற்பனை செய்யலாம்.
  • வேறுவகை கடன்கள் வாங்கும்போது இந்த தங்கப் பத்திரங்களை பிணையாக பயன்படுத்த முடியும். பத்திரங்களின் முதிர்வு காலத்தில், தங்கத்தின் சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு தொகையை திரும்பப் பெறலாம். இந்த பலன்களுக்காக, தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வது பொதுவாக பாதுகாப்பான, நன்மை தரக்கூடிய வழிமுறையாக கருதப்படுகிறது.
  • இந்திய ரிசர்வ் வங்கி, தொடக்கத்தில் ஆண்டுதோறும் 10 முதல் 14 தவணைகள் வரை தங்க பத்திரங்களை வெளியிட்டது. ஆனால், கடந்த ஆண்டில் 4 முறை மட்டுமே வெளியிடப்பட்டது, அதேநேரம் நடப்பு 2024-25-ம் ஆண்டுக்கான தங்கப் பத்திர வெளியீட்டை ரிசர்வ் வங்கி இதுவரை அறிவிக்கவில்லை. நடப்பு நிதியாண்டில் 4 மாதங்களே உள்ள நிலையில் தங்கப் பத்திரங்கள் வெளியிடப்படுவதை நிதி அமைச்சகமும் இன்னும் உறுதி செய்யவில்லை. இதனால், தங்கப் பத்திரங்கள் இனி வெளியிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசுக்கு கூடுதல் செலவு:

  • தங்கத்தின் விலை கடந்த 2 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துவிட்டது. இதனால், முதலீட்டாளர்களுக்கு அதிகலாபம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, 2016-17-ம் ஆண்டின் 3-வது தொடர் (SGB 2016-17 III) பத்திரம் 159% அபரிமிதமான லாபத்தை முதலீட்டாளர்களுக்கு அளித்தது. அதேநேரம், தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வுத் தொகையைத் திருப்பிக் கொடுப்பதால் அரசுக்கு கூடுதல் செலவாகும் என கூறப்படுகிறது.
  • ஏனெனில், இதுவரை 67 முறை தங்க பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் ரூ.72 ஆயிரம் கோடி திரட்டப்பட்டுள்ளது. இந்த முதலீட்டைக் கொண்டு சுமார் 146 டன் தங்கத்தை வாங்கி இருக்க வேண்டும். ஆனால் இதன் மூலம் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு தங்கம் வாங்கப்பட்டதாக தகவல் இல்லை. ஆனால் குறிப்பிட்ட அளவில் ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி வருகிறது.
  • இந்த சூழலில் தங்கம் விலை உயர்வு ஒரு புறம் இருக்க, முதலீட்டாளர்களுக்கு முதிர்வின்போது 2.5 சதவீத வட்டியும் கொடுக்க வேண்டும். இந்நிலையில் மேலும் பத்திரங்களை வெளியிட்டால் அரசுக்கு நிதி சுமை ஏற்படும் என அரசு கருதுகிறது. எனவேதான் தங்க பத்திரங்கள் வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது.

பொதுமக்களிடம் 27 ஆயிரம் டன்:

  • இந்திய குடும்பங்கள் சுமார் 27,000 டன் தங்கத்தை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது நாட்டின் அதிகாரப்பூர்வ இருப்பைவிட அதிகம். இந்தியாவின் தங்க இருப்பு செப்டம்பர் 2022 இறுதியில் 785 மெட்ரிக் டன்னிலிருந்து 2024 மார்ச்இறுதியில் 822 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. மக்கள் தங்கத்தை நேரடியாக வாங்குவதை தவிர்க்கவும், அதே சமயம் தங்க முதலீட்டுக்கான அனைத்து நன்மைகளை பெறவும், தங்கப் பத்திரங்களை தொடர்ந்து வெளியிடுவது நல்லது.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்