- அமெரிக்காவின் ஐயோவா மாகாணம் தேஸ்மொயின்ஸ் நகரைச் சேர்ந்த வில்லியம் மோரிசன், 1890-ல் உலகின் முதல் மின்சார காரை உருவாக்கினார். 6 பேர் அமரக்கூடிய இது, மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியதாக இருந்தது. எனினும், அதிக விலை, குறைவான வேகம் உள்ளிட்ட பல காரணங்களால்மின்சார கார் பிரபலமாகவில்லை.
- எனினும்,மின்சார வாகனங்களை மேம்படுத்தும் முயற்சியில் பல்வேறு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதன் பலனாக தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மின்சார வாகனங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
- இதனிடையே, பெட்ரோல், டீசல் வாகனங்கள் கரியமில வாயு வெளியேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சுற்றுச்சூழல் மாசடைய முக்கிய காரணமாக இருந்து வருகிறது. அத்துடன் புதைபடிவ எரிபொருளான கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளில் அந்நியச் செலாவணியின் பெரும் பகுதி இதற்காகவே செல்கிறது.
- இந்த சூழ்நிலையில், 2000-வது ஆண்டுகளில் சர்வதேச அளவில் மின்சார மற்றும் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் பரவலாக பயன்பாட்டுக்கு வந்தன. விலை சற்று கூடுதலாக இருந்தாலும் இவற்றை வாங்குவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
- காரணம் பெட்ரோல், டீசலுடன் ஒப்பிடும்போது எரிபொருள் செலவு பல மடங்கு மிச்சமாகிறது. அதேநேரம், அந்நியச் செலாவணி மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, பல்வேறு நாடுகளின்அரசுகளும் மின்சார வாகனங்களை வாங்க மானியம் வழங்கி ஊக்குவித்து வருகிறது.
- இந்தியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இதைக் குறைப்பதற்காகவும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்காகவும் மின்சார வாகன விற்பனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- இதன் ஒரு பகுதியாக ‘மின்சார வாகனங்களுக்கு வேகமாக மாறுதல் மற்றும் உற்பத்தி செய்தல்' (எப்ஏஎம்இ) என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-ல் அமல்படுத்தியது. இதை 'பேம்'என சுருக்கமாகக் கூறலாம். இதன்படி மின்சாரவாகனங்களை வாங்குவோருக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. இது 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம்தேதி வரை அமலில் இருந்தது. பேம் முதல் திட்டத்தின் கீழ் 2.8 லட்சம் மின்சார வாகனங்களுக்கு ரூ.359 கோடி மானியம் வழங்கப்பட்டது.
திட்டத்தின் நோக்கம்
- மின்சார வாகனங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பது மற்றும் வாடிக்கையாளர்களும் இத்தகைய வாகனங்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவதுதான் இதன் முக்கிய நோக்கம். அடுத்தபடியாக, கரியமில வாயு வெளியேற்றம் மற்றும் காற்று மாசை குறைக்கவே இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 2030-ம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த வாகனங்களில் மின்சார வாகனங்களின் பங்கை 30 சதவீதமாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் பேம் திட்டத்தின் 2-வது பகுதியைமத்திய அரசு அமல்படுத்தியது. இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு இது அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 7 ஆயிரம் பஸ்கள், 5 லட்சம் 3 சக்கர வாகனங்கள், 55 ஆயிரம் கார்கள் மற்றும் 10 லட்சம் இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்க திட்டமிடப்பட்டது.
மானியம் அதிகரிப்பு
- இதன்படி, பஸ், கார், 3 மற்றும் 2 சக்கர மின்சாரவாகனங்களின் பேட்டரி திறன் கிலோவாட் ஹவருக்கு (கேடபிள்யுஎச்) ரூ.10 ஆயிரம் அல்லதுஅதன் விலையில் அதிகபட்சமாக 20% வரை மானியம் வழங்கப்பட்டது. இந்த மானியம் வாகனஉற்பத்தியாளர்களுக்கு நேரடியாக வழங்கப் படுகிறது.
- இதனால் வாகனங்களின் விலையை உற்பத்தி நிறுவனங்கள் குறைத்தன. ஆனாலும் வாகன விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. இதையடுத்து, 2021-ல் மானியம் ரூ.15 ஆயிரம் அல்லது அதிகபட்ச மானியம் ரூ.40 ஆயிரம் என அதிகரிக்கப்பட்டது.
விற்பனை 154% அதிகம்
- இதையடுத்து மின்சார வாகனங்கள் விற்பனை கணிசமாக அதிகரித்தது. இந்த திட்டம் கடந்த 2022 மார்ச் மாதத்துடன் முடிய இருந்த நிலையில் மார்ச் 2024 வரை நீட்டிக்கப்பட்டது.
- கடந்த 2022-23 நிதியாண்டில் இந்தியாவில் 12,43,258 மின்சார வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன. இது முந்தை நிதியாண்டைவிட 154% அதிகம். இதில் 7,79,158 இருசக்கர வாகனங்கள் ஆகும்.இது முந்தைய ஆண்டைவிட 179% அதிகம்.
- பேம் 2 திட்டத்தின் கீழ் 10 லட்சம் இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி நிலவரப்படி 7,92,529 வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய கனரக தொழில் துறை அமைச்சகத்தின் புள்ளி விவரம் கூறுகிறது.
- பேம் 2 திட்டம் 2024 மார்ச் மாதத்துடன் முடிய உள்ள நிலையில், மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம், பேம்-2 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை ஒரு கேடபிள்யுஏச்-க்கு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக திடீரென குறைத்துள்ளது. இதுபோல அதிகபட்ச மானியம் 40-லிருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- இது ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால், உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரவாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன. உதாரணமாக மின்சார இருசக்கர வாகனத்தின் விலை ரூ.1 லட்சம் என வைத்துக்கொண்டால் முன்பு ரூ.40 ஆயிரம் மானியம் கிடைத்தது. இனி ரூ.15 ஆயிரம் மட்டுமே கிடைக்கும். இதனால் வாகனத்தின் விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
- பேம் 2 திட்டம் நடப்பு நிதியாண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் வாடிக்கையாளர்களுக்கு மானியம் கிடைக்க வேண்டும்என்பதற்காக, மானியத்தை குறைத்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. மேலும் தேவை அதிகரித்துள்ளதால் மானியம் இல்லாமலேயே மின்சார வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்களை தயார்படுத்தும் வகையிலும் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
- இந்நிலையில் ஜூன் மாத விற்பனை தொடர்பான புள்ளிவிவரம் சமீபத்தில் வெளியானது. கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜூன் மாதத்தில் நாட்டின் 4 முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. ஓலா நிறுவனத்தின் மின் வாகன விற்பனை 38.62%, டிவிஎஸ் மோட்டார் விற்பனை 61.80 சதவீதம், ஏத்தர் எனர்ஜி விற்பனை 70.51சதவீதம் சரிவடைந்துள்ளது. பஜாஜ் ஆட்டோ விற்பனை 70.24 சதவீதம் சரிந்துள்ளது.
2030-ல் 1 கோடியாக உயரும்
- இந்தியாவில் கடந்த ஆண்டில் சுமார் 12 லட்சம்மின்வாகனங்கள் விற்பனையானதாக புள்ளி விவரம் கூறுகிறது. 2022 முதல் 2030-க்குள் மின் வாகன விற்பனையின் ஆண்டு வளர்ச்சி விகிதம்49 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- இதன்படி வரும் 2030-ம் ஆண்டில் மின்வாகன விற்பனை 1 கோடியாக (ஓராண்டு விற்பனை) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 2030-ல் இத்துறையில் 5 கோடி பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
- கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்து சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கவும் புதைபடிவ எரிபொருளை நம்பி இருப்பதை தவிர்க்கவும் மின்சார வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வர வேண்டியது அவசியம். எனவே, மின்சார வாகனங்களுக்கான மானியத்தை முன்பு இருந்த நிலைக்கே அதிகரிக்க வேண்டும் என பொதுமக்களும், துறை சார்ந்தவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- பொதுமக்களும் பெட்ரோல் வாகனங்களைவிட விலை சற்று கூடுதலாக இருந்தாலும் மின் வாகனங்களை வாங்குவதுதான் நல்லது. இதன்மூலம் எரிபொருள் செலவை கணிசமாகக் குறைக்கலாம். உதாரணமாக பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவிட வேண்டியிருக்கும்.
- ஆனால், மின் வாகனங்களுக்கு சில ஆயிரம் மட்டுமே செலவாகும். இதனால் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எரிபொருள் செலவு மிச்சமாகும். இதுபோல மின் வாகன உற்பத்தி நிறுவனங்களும் லாபப் பாதைக்கு திரும்பி உள்ளதால், விலையை சற்று குறைத்து விற்பனை செய்ய முன்வர வேண்டும்.
நன்றி: தி இந்து (17 – 07 – 2023)