TNPSC Thervupettagam

மத்தியப் பிரதேச மகா யுத்தம் மக்கள் மனதில் நிற்பது யார்

November 17 , 2023 421 days 266 0
  • நிலப்பரப்பில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் இன்று (நவம்பர் 17), சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 2003ஆம் ஆண்டு முதல் (கமல் நாத் தலைமையிலான ஒன்றரை ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி நீங்கலாக) இதுவரை பாஜகதான் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கிறது. 2018 தேர்தலைப் போலவே இந்த முறையும் பாஜக ஆட்சிமீது நிறையவே அதிருப்தி நிலவுவதாகக் கள நிலவரங்கள் சொல்கின்றன. அதேவேளையில், அது காங்கிரஸ் ஆதரவு அலையாகவும் மாறிவிடவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் ஆரூடம் சொல்கிறார்கள். எனில், இந்தத் தேர்தலின் முடிவு எப்படி இருக்கும்?

கணக்குத் தீர்க்கத் துடிக்கும் காங்கிரஸ்

  • 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில், ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை. 2018 தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வென்றதுடன், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்துவிட்டது. பாஜகவுக்கு 109 இடங்கள் கிடைத்தன. எனினும், ‘காங்கிரஸ் இல்லா பாரதம்அமைக்கத் துடித்துக் கொண்டிருந்த பாஜக, சரியான தருணத்துக்காகக் காத்திருந்தது. காங்கிரஸ் இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா முதலமைச்சர் பதவி தனக்குக் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார்.
  • உடனடியாக பாஜக அவரை வளைத்தது. 22 எம்எல்ஏ-க்களுடன் பாஜகவில் சிந்தியா ஐக்கியமானதைத் தொடர்ந்து, கமல் நாத் அரசு கவிழ்ந்தது. கர்நாடகத்திலும் இதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடனான கூட்டணி ஆட்சியைப்பாஜகவிடம் பறிகொடுத்த காங்கிரஸ், 2023 தேர்தலில் அந்தக் கணக்கை நேர்செய்துவிட்டது. இப்போது, மத்தியப் பிரதேசத்திலும் கணக்குத் தீர்க்க அக்கட்சி காத்திருக்கிறது.

அரசுக்கு எதிரான மனநிலை

  • 18 ஆண்டுகாலமாக முதலமைச்சராக இருந்துவரும் சிவராஜ் சிங் செளஹானின் அரசுக்கு எதிரான மனநிலை (Anti-incumbency), வாக்காளர்கள் மத்தியில் மட்டுமல்ல, பாஜகவினர் மத்தியிலேயே நிலவுகிறது. விலைவாசி உயர்வு, வினாத் தாள்கள் கசிந்த விவகாரம், வேலைவாய்ப்பின்மை, அரசு அலுவலகங்களில் அதிகரித்திருக்கும் லஞ்சம், உள்ளூர் பாஜக தலைவர்களின் அடாவடிப் போக்கு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் பாஜகவின் வெற்றிக் கனவைப் பதம் பார்க்கின்றன. வேறு கட்சியிலிருந்து வந்த தலைவர்களின் செயல்பாடுகளால் தேர்தல் களப் பணியாற்றும் ஆர்எஸ்எஸ் - பாஜக தொண்டர்களிடம்கூட கசப்புணர்வு காணப்படுகிறது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் மத்தியில் வழக்கமாக எழும் அதிருப்தியையும் தாண்டிய கசப்பு அது.
  • 2020இல் 28 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றபோது, காங்கிரஸிலிருந்து வந்தவர்களை, அவர்கள் முன்பு போட்டியிட்டு வென்ற அதே தொகுதிகளிலேயே களமிறக்கியது பாஜக. அது கட்சிக்குள்ளும் வாக்காளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 19 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொண்டாலும் பாஜகவுக்கு எதிரான தார்மிகரீதியிலான விமர்சனங்களுக்கு அவை காரணமாகின. இத்தேர்தலில் அதை ஒரு உணர்வுபூர்வ ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறது காங்கிரஸ். சென்ற முறை நீங்கள் காங்கிரஸுக்குத்தான் வாக்களித்தீர்கள். ஆனால், உங்கள் வாக்குகள் பாஜகவால் திருடப்பட்டுவிட்டனஎன்று வாக்காளர்களிடம் ஆவேசத்துடன் முறையிட்டிருக்கிறார் ராகுல் காந்தி.

முதலமைச்சர் முகமில்லா பாஜக

  • செளஹான் மீது பாஜகவினர் மத்தியில் நிலவும் அதிருப்தியை உணர்ந்துகொண்ட அமித் ஷா, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளிடம் நீண்ட நேரம் பேசியிருக்கிறார். அதிருப்தியாளர்களைச் சமாளிப்பதற்காகவே, அவர் தனது பயணத் திட்டத்தில் மாறுதல்களைச் செய்ய நேரிட்டது. மொத்தத்தில், இந்த முறை சிவராஜ் சிங் செளஹான் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை. மோடியின் செல்வாக்கையே துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துகிறது பாஜக. ஆரம்பத்தில் முதலமைச்சர் போட்டியில் தான் இருப்பதாகப் பேசிவந்த செளஹான், “பாஜகவை வெற்றி பெறவைப்பதுதான் என் வேலை.
  • முதலமைச்சர் யார் எனக் கட்சியே முடிவுசெய்யும்என்று விளக்கமளித்துவிட்டார். மோடி-அமித் ஷாவுக்கும் சிவராஜ் சிங் செளஹானுக்கும் இடையிலான உறவில் பிணக்குகள் உண்டு என்பது தனிக்கதை. இத்தேர்தலில் பாஜக வென்றால், நரேந்திர சிங் தோமர்தான் முதலமைச்சர் என்றே பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இச்சூழலில், அவரது மகன் தேவேந்திர சிங் தோமரைச் சுற்றிச் சுழன்றடிக்கும் ஊழல் காணொளி சர்ச்சை (சுமார் ரூ.1,000 கோடி முறைகேடு தொடர்பானது) பாஜகவுக்குக் கடைசி நேரப் பதற்றத்தைக் கொடுத்திருக்கிறது. இது போலியான காணொளி என தோமர்கள்விளக்கமளித்தாலும், காங்கிரஸ் எளிதில் விடுவதாக இல்லை.
  • உறுதியான சான்றுகள் பொதுவெளிக்கு வந்த பின்னரும் அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் காங்கிரஸ்காரர்கள் கொந்தளிக்கிறார்கள். பாஜகவுக்குத் தாவிய ஜோதிராதித்ய சிந்தியா, தனது ஆதரவாளர்கள் பலருக்கு அமைச்சரவையில் இடம் பெற்றுத்தந்ததுடன், மத்திய அமைச்சராகவும் ஆகிவிட்டார். எனினும், இந்த முறை பாஜக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்படுவார் என்ற ஆரூடங்கள் எழுந்தபோது, “நான் பாஜகவின் சேவகன்மட்டுமேஎன்று அடக்கிவாசித்துவிட்டார்.

விட்டுக் கொடுக்க மறுக்கும் பாஜக

  • மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் மூன்று பொதுக் கூட்டங்கள், ஒரு பேரணி எனப் பிரதமர் மோடி தன்னளவில் பெரும் பிரயத்தனம் செய்திருக்கிறார். 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில், மத்தியப் பிரதேச மக்கள் பாஜகவுக்கே பெருமளவு ஆதரவு தெரிவித்ததை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார். அதேபோல, 2024 மக்களவைத் தேர்தலில் மோடி வெல்வதற்கு, இத்தேர்தல் அச்சாரமாக இருக்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிடுகிறார் அமித் ஷா. 21 வயது நிரம்பிய மகளிருக்கு மாதம் ரூ.1,250 வழங்கும் லாட்லி பெஹனா திட்டம்கைகொடுக்கும் என பாஜக நம்புகிறது. புதிய வேலைவாய்ப்புகள், விவசாயிகள்-சுரங்கத் தொழிலாளர்களுக்கான புதிய திட்டங்கள், சிந்த்வாரா-நாக்பூர் இடையே அதிவேக மெட்ரோ ரயில் சேவை என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளும் வாக்குகளைப் பெற்றுத்தரும் என பாஜகவினர் எதிர்பார்க்கிறார்கள்.
  • சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து எந்த உத்தரவாதத்தையும் அளிக்க மறுக்கும் அமித் ஷா, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான நிலைப்பாட்டைக் காங்கிரஸ் எடுத்ததாக வரலாற்றிலிருந்து பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுகிறார். காகா காலேல்கர் பரிந்துரை, மண்டல் ஆணையப் பரிந்துரைகளைக் காங்கிரஸ் எதிர்த்ததைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். இத்தேர்தலில் ஏழு பாஜக எம்.பிக்கள் களமிறக்கப்படுகிறார்கள். இவர்களில் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல், ஃபகன் சிங் குலஸ்தே ஆகியோர் மத்திய அமைச்சர்கள். ஒருவர் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் (கைலாஷ் விஜய்வர்கியா). தோல்வி பயம்தான் இப்படியெல்லாம் பாஜக கீழே இறங்கக் காரணம் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இந்திரா காந்தியின் மூன்றாவது மகன்

  • எனது மூன்றாவது மகன் என்று இந்திரா காந்தியாலேயே அழைக்கப்பட்டவர் கமல் நாத். இன்றும் தனது செல்வாக்கைத் தக்கவைத்திருக்கும் கமல் நாத் தான், காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் முகமாக முன்னிறுத்தப்படுகிறார். 2018 தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் கமல் நாத்துக்கு மத்தியப் பிரதேசத் தேர்தல் பொறுப்பைக் கட்சித் தலைமை வழங்கியது. குறுகிய கால இடைவெளியில் காங்கிரஸுக்கான ஆதரவைத் திரட்டி வெற்றிபெற்றதைச் சுட்டிக்காட்டும் கமல் நாத், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலக் காங்கிரஸ் மேலும் வலுப்பெற்றுவிட்டதாக நம்பிக்கையுடன் கூறுகிறார். அதேவேளையில், கட்சிக் கட்டமைப்பு எனும் அளவில் பாஜக அளவுக்கு இன்னமும் பலமடையவில்லை என்பதே கள நிலவரம்.
  • மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்னர் சாதிவாரிக் கணக்கெடுப்பு நிச்சயம் நடத்தப்படும் என்று கூறும் கமல் நாத், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை, ரூ.500-க்குச் சமையல் எரிவாயு சிலிண்டர், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற வாக்குறுதிகளை அளித்திருக்கிறார். 100 யூனிட் வரை இலவச மின்சாரம், 200 யூனிட் வரை பாதிக் கட்டணம், விவசாயக் கடன் தள்ளுபடி எனப் பட்டியல் நீள்கிறது. சாதி, மதம், விவசாயப் பிரச்சினைகள் எனப் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடும் பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில், தேர்தல் முடிவுகளை அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாதுதான். ஆனால், ‘பத்லாவ்’ (மாற்றம்) எனும் பதம் பரவலாக ஒலிப்பதைப் பார்க்கும்போது மத்தியப் பிரதேச வாக்காளர்கள் எதையோதீர்மானித்துவிட்டதாகவே தெரிகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 11 - 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்