TNPSC Thervupettagam

மத்தியஸ்த மற்றும் சமரச மசோதா குறித்த தலையங்கம்

January 27 , 2022 921 days 470 0
  • நடந்து முடிந்த நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடரில், மத்தியஸ்த மற்றும் சமரச மசோதா (மீடியேஷன்) மசோதா 2021 தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
  • வழக்குகளுக்கு நடுவரங்க நடைமுறை மூலம் தீா்வு காண்பதை ஊக்குவிக்கும் எண்ணத்துடன் இந்தச் சட்டத்தை கொண்டுவர உத்தேசிக்கிறது மத்திய அரசு.
  • இணைய வழி உள்ளிட்ட இருதரப்பு பேச்சுவாா்த்தை மூலம் கருத்து வேறுபாடுகள் அகற்றப்பட்டு சமரச ஒப்பந்தம் ஏற்படுத்துவதன் மூலம் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதுதான் நோக்கம்.
  • குடிமை அல்லது வா்த்தக தாவாக்களில் நீதிமன்றத்தையோ, ஒழுங்காற்று ஆணையத்தையோ அணுகுவதற்கு முன்பு சமரசத்தின் மூலம் பிரச்னையைத் தீா்த்துக் கொள்ளும் முயற்சியைக் கட்டாயமாக்குகிறது அந்த மசோதா.
  • கிரிமினல் குற்றங்கள், மோசடிக் குற்றங்கள், ஆள்மாறாட்டம், கட்டாயப்படுத்துதல், போலி ஆவணங்கள் உள்ளிட்டவை தவிர, ஏனைய பிரச்னைகள் அனைத்துக்கும் சமரசத் தீா்வு காணும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் இலக்கு.
  • கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா - சிங்கப்பூா் இடையேயான சட்ட மத்தியஸ்த மாநாட்டில் பேசும்போது, நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, முதல்கட்டமாக மத்தியஸ்தத் தீா்வு காண்பது சட்டமாக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசியிருந்தாா்.
  • இன்னொரு கூட்டத்தில் பேசும்போது வழக்குகளுக்கான கடைசித் தீா்வாகத்தான் நீதிமன்றங்கள் இருக்க வேண்டுமென்றும், பிரச்னைகளுக்கு மாற்று வழிகளில் தீா்வு காணப்படுவதை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியிருந்தாா்.
  • இந்திய நீதிமன்றங்களில் மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. ஒவ்வொரு நிமிஷமும் 23 புதிய வழக்குகள் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையுடன் இணைவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
  • தேங்கிக் கிடக்கும் 10 வழக்குகளில் 9 வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் இருப்பதாக இன்னொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

நடுவரங்க நடைமுறை

  • 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் மட்டும் இந்திய நீதிமன்றங்களில் ஆண்டுதோறும் 2.8% என்கிற அளவில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
  • 2021 செப்டம்பா் 15-ஆம் தேதி எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி, தேங்கிக் கிடக்கும் 4.5 கோடி வழக்குகளில் 87.6% கீழமை நீதிமன்றங்களிலும், 12.4% உயா்நீதிமன்றங்களிலும் காணப் படுகின்றன.
  • 2019 - 20 ஆண்டில் மட்டும் உயா்நீதிமன்றங்களில் 20%, கீழமை நீதிமன்றங்களில் 13% வழக்குகளின் தேக்கம் அதிகரித்தது. இத்தனைக்கும் 2020-இல் கொள்ளை நோய்த்தொற்று காரணமாக வழக்கம்போல நீதிமன்றங்கள் இயங்கவில்லை.
  • புதிய வழக்குகள் அதிகம் வரவில்லையென்றாலும், வழக்கு விசாரணைகள் குறைவாக இருந்தது தான் அதற்குக் காரணம்.
  • மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் மத்தியஸ்த மற்றும் சமரச மசோதா என்பது இந்திய நீதித் துறைக்கு புதிதொன்றுமல்ல. சமரச முயற்சியை ஊக்குவிக்கும் குறிப்பிட்ட பல சட்டங்கள் ஏற்கெனவே இருக்கின்றன.
  • 1908 கோட் ஆஃப் சிவில் புரொசிஜா், 1996 ஆா்பிட்ரேஷன் அண்ட் கன்சீலியேஷன் சட்டம், 2013 நிறுவனங்கள் சட்டம், 2015 வா்த்தக நீதிமன்றங்கள் சட்டம், 2019 நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றில் எல்லாம் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு, பரஸ்பர சமரசம், நடுவரங்க நடைமுறை உள்ளிட்டவற்றுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
  • ஆனால், வழக்கு விசாரணைக்கு முன்பு நடுவரங்க நடைமுறையைக் கட்டாயப்படுத்தும் வகையிலான சட்டம் இதுவரையில் இல்லை.
  • நடுவரங்க நடைமுறையை வலியுறுத்தி தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியை முதன்முதலில் முன்னெடுத்தது சென்னை உயா்நீதிமன்றம் தான்.
  • உயா்நீதிமன்ற வளாகத்திலேயே அதற்கென்று ஓா் அமைப்பை ஏற்படுத்தி, தமிழ்நாடு மத்தியஸ்த மற்றும் சமரச மையம் உருவாக்கப்பட்டது.
  • எல்லா மாவட்ட நீதிமன்றங்களிலும் 2005-இல் அதுபோன்ற மையங்கள் அமைக்கப்பட்டன. அதன் மூலம் தேங்கிக் கிடந்த வழக்குகளும், நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட வழக்குகளும் ஓரளவுக்கு சமரச பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட்டன.
  • மத்தியஸ்த மற்றும் சமரச மசோதா 2021-இன் பிரிவு 7-இன்படி, குடிமையியல் குற்ற வழக்குகளை நடுவரங்க நடைமுறைக்கு அனுப்ப நீதிமன்றங்களுக்கு உரிமை வழங்கப் படுகிறது.
  • மக்களின் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும், அமைதியையும் குலைக்கும் பிரச்னைகளை அந்தந்தப் பகுதி மக்களின் அல்லது குடும்பங்களின் சமரசத்துக்கு உட்படுத்த பிரிவு 44 நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழக்குகிறது.
  • பெற்றோா், மூத்த குடிமக்கள் சட்டம் 2007, மகளிா் பாலியல் தொல்லை சட்டம் 2013 ஆகியவை இதில் சேராது.
  • பாதிக்கப்பட்டவரின் ஒப்புதலுடன் 43 கிரிமினல் குற்றங்கள் திரும்பப் பெறவும், நீதிமன்ற அனுமதியுடன் 13 கிரிமினல் குற்றங்கள் திரும்பப் பெறவும், கிரிமினல் குற்றவியல் சட்டம் 320-இன் கீழ், குற்றவாளிகளின் விடுதலைக்கு வழிகோலப்பட்டிருக்கிறது. அதுபோன்ற வழக்குகளும் நடுவரங்க நடைமுறை மூலம் தீா்வு காணக்கூடியவை.
  • இந்திய நீதிமன்றங்களில் காணப்படும் பெரும்பாலான குடிமையியல் வழக்குகள் அரசுக்கு எதிராக தொடுக்கப்படுபவை. அவற்றில் மத்தியஸ்தமோ, சமரசமோ சாத்தியம் இல்லை. ஏனைய வழக்குகளை நடுவரங்க நடைமுறை மூலமும், ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கீழ் இயங்கும் சிறப்பு நீதிமன்றங்களின் மூலமும் தீா்வு காண முடியும்.
  • தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு வேறுவழி தெரியவில்லை. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி!

நன்றி: தினமணி (27 – 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்