- பொருளாதார விளக்கப் படத்தில் கீழ் நோக்கிச் சரியும் ஓர் அம்புக்குறி, தம்பதிகளுக்கு இடையே கோடு கிழிக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது. இதை மிகைப்படுத்தப்பட்ட ஒரு கூற்றாகப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. குடும்பம், தனிநபர்களின் இணைப்பு மட்டுமல்ல; அடிப்படையில் சொத்து, வருவாய், உறவின் இயல்பு ஆகியவற்றுடன் ஆழமாகத் தொடர்புடையது. சொத்து, வருவாய் இரண்டையும் நாம் பொருளாதாரத்தின் அடைப்புக்குறிகளில் அடைக்கிறோம்.
செப்டம்பரின் தனித்துவம்
- நவீன உலக வரலாற்றில் செப்டம்பர் மாதம் சில தனித்துவமான நிகழ்வுகளுக்காக நினைவு கூரத்தக்கதாக உள்ளது.1973 செப்டம்பர் 11 அன்று, சீலேயில் லத்தீன் அமெரிக்க இடதுசாரி நட்சத்திரங்களில் ஒருவரான சால்வதோர் அய்யந்தேயின் சோஷலிச அரசு, அமெரிக்க அரசின் உதவியோடு கவிழ்க்கப்பட்டது. 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தகர்ப்பு,மத்தியக் கிழக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா நிகழ்த்திய போர்களுக்குக் காரணமானது. 2008இல் லீமன் சகோதரர்கள் நிதி நிறுவனம் திவாலாகி விட்டது என்று அறிவிக்கப்பட்ட அன்று, மீண்டும் ஒரு முறைசெப்டம்பர் மாதம் எதிர்மறைக் காரணங்களுக்காக நினைக்கப்படும் ஒன்றாக மாறிப்போனது.
- உலகம் மாபெரும் பொருளாதார மந்த நிலைக்குத் தள்ளப்பட்டது. பங்குச்சந்தையில் பங்கு விலைகள் சரிந்தன, பல நாடுகளில் உள்நாட்டு மொத்த உற்பத்தி சரிந்தது. இரண்டு ஆண்டுகளில் பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்டுவிட்டதாகச் சொல்லப்பட்டபோதும், அதன் தாக்கம் குறைந்தது பத்தாண்டுகள் நீடித்ததாகச் சொல்லும் பொருளியலாளர்களும் இருக்கிறார்கள்.
தாராளமயத்தின் உண்மை முகம்
- அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாட்டின் ஒரு நிதி நிறுவனத்தின் கடனளிப்புக் கொள்கை (Credit Policy), சங்கிலித் தொடர் விளைவின் வழியாக உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்க முடியும் என்பதை உலக நாடுகள் உணர்ந்தன. உலக மயமாக்கலின் வலைக்கு வெளியே எந்த நாடுகளும் இருந்திராத அந்தக் காலகட்டத்தில், ஏறக்குறைய அனைத்து நாடுகளின் அரசுகளும் உடனடியாக ஒரு புதிய யதார்த்தத்துக்கு எதிர்வினை ஆற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டன. தாராளமயமாக்கலின் விளைவுகளை ஆராய்வது, மூலதனச் சுழற்சியின்மீது கட்டுப்பாடுகள் விதிப்பது, வரிவிதிப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் எனப் பொருளாதாரத் துறையைக் கையாள்வதைக் குறித்துப் பல கருத்துகள் விவாதிக்கப்பட்டன.
- பிரான்ஸின் அப்போதைய அதிபர் நிகோலஸ் சர்கோஸி, உலகளாவிய நிதி நெருக்கடியை, எந்த நாடும் அது எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் தீர்த்துவிட முடியாது என்றார். அவரோடு இணைந்து இங்கிலாந்தின் அப்போதைய பிரதமர் கார்டான் பிரௌனும் ஒரு புதிய பிரெட்டன் வுட் மாநாட்டுக்கு (Bretton Woods Conference) அழைப்பு விடுத்தார். தாராளச் சந்தைக் கொள்கையில் மாற்றம் செய்வதைக் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நம்ப முடியாத வகையில் தாராளச் சந்தைக் கொள்கைக்கு ஆதரவாகவும், அதைக் கைவிட்டுவிடக் கூடாது என்றும் சீனா வாதிட்டது. முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், உலகத் தலைவர்கள் மாநாட்டில் பொருளாதார மேதை ஜான் மெய்னார்ட் கேயின்ஸை மேற்கோள் காட்டினார். பலரும் கார்ல் மார்க்ஸை மறுவாசிப்பு செய்யத் தொடங்கினார்கள்.
- தாராளமயப் பொருளாதாரத்தின் இரண்டு முக்கியமான பண்புகள் மறுபரிசீலனை செய்யப்பட்டன. தாராளமயப் பொருளாதாரம் எதைக் காட்டிலும் சுதந்திரமாக இயங்குவதையே தன் உள்ளார்ந்த வேட்கையாகக் கொண்டிருக்கிறது. அரசு, சமூக நிறுவனங்கள், அரசியல் நோக்கங்கள், அறவுணர்வு - இவை எவையும் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று வாதிடுகிறது. செவ்வியல் பொருளியலாளர்கள் அரசியல்-பொருளாதாரம் என்றே வழங்கி வந்ததைத் தாராளமயமாக்கல் தனித்தனியாகப் பிரித்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அனைத்து மக்களையும் இணைத்துப் பார்ப்பதற்குப் பதிலாகத் தேவையின் அடிப்படையிலான தனித் தனிக் குழுக்களாக அந்தச் சமூகத்தை இது அணுகுகிறது.
அரசு என்ன செய்கிறது?
- பொருளாதார மந்தநிலை - அதைப் போன்ற உலகளாவிய நெருக்கடிக் காலங்களில் - அரசின் பங்கு என்ன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது. அதுவரையிலும் அரசின் தலையீட்டை விரும்பாததாராளவாதத்தில் செவ்வியல், புதிய தாராளவாதம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. இருசாராரும் அரசின்பங்களிப்பு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை இல்லாதவர்கள். எனினும் மந்தநிலைக் காலத்தில் இந்த வேற்றுமை சட்டென மறைந்து அனைத்துத் தரப்பினரும்அரசின் முகத்தைத் தலைதூக்கிப் பார்ப்பவர்களாக ஆனார்கள். அரசுகள் நம்மால் எளிமையாகக் கணக்கிட்டு விட முடியாத அளவிலான பணத்தைச் சந்தையில் கொட்டின. திவாலான நிதி நிறுவனங்கள் மீண்டன. இதன் மூலம் பொருளாதாரத்துக்கு ஆற்ற வேண்டிய முக்கியமான பங்களிப்பில் இருந்து அரசு அகற்ற முடியாத ஒன்று என்பது நிறுவப்பட்டது.
- கேள்விக்கு உள்ளான மற்றொரு பண்பு, மந்தநிலைக் காலத்தில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் பலன்களை அனுபவிப்பது யார் என்பதில் நிகழ்ந்தது. பெரு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிகிதம் உயரும்போது அது தாராளமயப் பொருளாதாரத்தின் பண்புகளுக்கு முரணானது என வாதிடுபவர்களைப் பார்க்கலாம்.அதே சமயத்தில், நெருக்கடிக் காலத்தில் தங்களைக் காத்துக்கொள்ள முனையும்போது அரசிடமிருந்து பேரளவிலான உதவிகளை எதிர்பார்க்கக் கூடியவையாக அவை மாறி விடுவதைக் கண்டு, அவர்கள் அமைதிஅடைவார்கள். இந்த இரட்டை நிலை, லாபம் தனிப்பட்ட நபர்களுக்கு எனவும், இழப்பு சமூகம் முழுமைக்குமான பொறுப்பாகவும் மாற்றப்படுவதை, அரசின் நடவடிக்கைகளை விமர்சனபூர்வமாக அணுகியவர்கள் சுட்டிக் காட்டினர். செவ்வியல் தாராளவாதப் பொருளியலாளர்கள் பலரும் மந்தநிலைக் காலங்களில் அரசு தாராளமாகப் பணத்தைச் செலவழிக்க வேண்டும் என்று சொன்னார்கள்; கேயின்ஸுக்குப் புதிய வாரிசுகள் உருவாயினர்.
இந்தியாவின் நிலை
- பொருளாதார மந்தநிலையின் அதிர்வுகள் இந்தியாவில் உணரப்பட்ட போதும், நமது பொருளாதாரம் முற்றிலும் குலைந்துவிட்டிருக்கவில்லை. இங்கே நிதித் துறையில் பொதுத் துறை வங்கிகளின் பங்களிப்பே பெரிதாக இருந்தது என்பதே அதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது. எனினும், பல நகரங்களில் நிறுவனங்கள் வீழ்ந்ததையும் குடும்பங்கள் சரிந்ததையும் காண முடிந்தது.
- எதிர்காலச் சிக்கல்களுக்கான தற்காப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள உலக நாடுகளின் மத்திய வங்கிகள் முனைந்தன. மந்தநிலையை முன்னுணர்ந்து எச்சரித்த ரகுராம் ராஜன், இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட வங்கிச் சீர்திருத்தங்களின் பலன்கள், பாதிப்புகள், தற்போதைய நிலைமைகள் நாம் தனியாக விவாதிக்க வேண்டியவை.
- இந்தியப் பொதுச் சமூகத்திடம், பொருளாதாரத் துறையின் மீது ஆர்வம் இல்லாததைப் பார்க்க முடிகிறது. உலகளாவிய பொருளாதாரச் சூழலின் முக்கியக் கண்ணியாக நாம் மாறியிருப்பினும், அதனை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதிலும், யார் அதற்கான கல்வியை மக்களுக்கு அளிப்பது என்பதிலும் நாம் அக்கறை அற்றவர்களாகவே தொடர்கிறோம். சுதந்திரம் எப்போதும் இடர் வரவுகளோடு (risk) இணைந்தது. ஒன்றை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தனிநபர்களான நாமும், நமது கூட்டு அமைப்பான நாடும் உலகமயமான பிரம்மாண்ட அமைப்பில் ஓர் அங்கம். ஒருநாளும் இந்த எல்லையற்ற தொடர்புகளின் விளைவுகளில் இருந்து தப்ப முடியாது. 2008 பொருளாதார மந்தநிலையின் பின்விளைவுகளை ஆழமாகக் கவனிப்பதன் மூலம், நாம் அப்படியொரு நிலைமையில் இருந்து எவ்வளவு தொலைவுக்கு விலகியிருக்கிறோம் அல்லது எவ்வளவு நெருக்கமாக உள்ளோம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 09 – 2023)