TNPSC Thervupettagam

மன நோய்கள்: சிகிச்சை மட்டுமே மீட்டெடுக்கும்

August 19 , 2023 512 days 367 0
  • மனநலம் எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. அவ்வப்போது மனநலத்தில் சில தடுமாற்றங்களை நாம் சந்திக்க நேரிடும். இது இயல்பானதுதான். ஆனால், இந்தத் தடுமாற்றங்களைத் தொடர்ந்து வரும் சில அறிகுறிகள் அடிக்கடி மன அழுத்தத்தை ஏற்படுத்தி, நமது செயல்திறனைப் பாதிக்கும்போது அது மனநோயாக மாறுகிறது. மன அழுத்தத்துக்கும் மனநோய்க்கும் இடையிலான உறவு சிக்கலானது. அடிக்கடி ஏற்படும் மன அழுத்தம் மனநோய்க்குக் காரணமாக அமைவதுடன், அதன் தாக்கத்தையும் தீவிரமடையச் செய்கிறது.
  • மனநோய்கள் அல்லது மனநலக் கோளாறுகள் என்பவை பரந்த அளவில் மனத்தின் பல்வேறு நிலைமைகளைக் குறிக்கின்றன. இது பாதிக்கப்பட்ட நபரின் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மனச்சோர்வு, அதீத பயம், பதற்றம், கவலை, மனச் சிதைவு உள்ளிட்டவை மனநலக் கோளாறுகளில் அடங்கும்.

பாதிப்புகள்

  • உடலைப் பாதிக்கும் நோயைவிட அதிகமான சிக்கல்களை மனநோய் ஏற்படுத்துகிறது. இது நமது அன்றாட வாழ்வை வெகுவாகப் பாதிக்கும். வீடு, பள்ளி, வேலை செய்யும் இடங்களில் மிகுந்த சிக்கலை ஏற்படுத்தும். உறவு சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். சமூகச் செயல்பாடுகளையும் முடக்கலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மருந்துகள், மனநல ஆலோசனையை உள்ளடக்கிய உளவியல் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் மனநோய்க்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது.

மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்

  • மனநோய்க்கான அறிகுறிகள் பாதிப்பின் வகையைப் பொறுத்தும், சூழ்நிலைகள் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்தும் மாறுபடும். இந்த அறிகுறிகள் உணர்வுகள், எண்ணங்கள், நடத்தைகளைப் பாதிக்கலாம். சில நேரம் மனநலக் கோளாறின் அறிகுறிகளாக வயிற்று வலி, முதுகுவலி, தலைவலி அல்லது விவரிக்க முடியாத வேறு வலிகள் உள்ளிட்ட உடல்ரீதியான பிரச்சினைகளும் இருக்கலாம்.
  • மனநோய்க்கான அறிகுறிகள் அல்லது பாதிப்புகள் இருந்தால், மனநல மருத்துவரைச் சந்திப்பது அவசியம். பெரும்பாலான மனநோய்களுக்குச் சிகிச்சையே அதிலிருந்து மீளும் வழி. மேலும், சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மனநோயானது காலப்போக்கில் மோசமாகி கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். சில மனநோய்களுடன் தற்கொலை எண்ணங்கள் உருவாகலாம். காயப்படுத்திக்கொள்ளவோ தற்கொலை எண்ணமோ தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவி பெறுவது மிகவும் அவசியம்.

பொதுவான வகைகள்

  • மனப்பதற்ற கோளாறுகள்.
  • மனச்சோர்வு, பைபோலார் டிஸ்ஆர்டர் உள்ளிட்ட மனநிலைக் கோளாறுகள்.
  • மனச்சிதைவு நோய் உள்ளிட்ட பிற மனநலக் கோளாறுகள்.
  • கவனப் பற்றாக்குறை / கவனக்குறைவு மிகை செயல்பாடு சார்ந்த பிரச்சினை (ADHD).
  • ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு.
  • நடத்தைச் சீர்குலைவு கோளாறுகள்.
  • உணவுப் பழக்கக் கோளாறுகள்.
  • எண்ணச் சுழற்சி நோய் (OCD).
  • ஆளுமைக் கோளாறுகள்.
  • இழப்பு அல்லது பெருந்துயர் அல்லது அதிர்ச்சிக்குப் பிந்தைய மன உளைச்சல் சீர்கேடு (PTSD).
  • போதைப் பொருள் பயன்பாட்டுக் கோளாறுகள்.

காரணிகள்

  • மனநோய்கள் பொதுவாக மரபணு, சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. மனநோயால் பாதிக்கப்பட்ட ரத்த உறவினர்களைக் கொண்டிருப்பவர்களுக்கு மனநோய் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம். சில மரபணுக்கள் மனநோயை உருவாக்கும் அபாயத்தை ஒருவருக்கு அதிகரிக்கலாம். நமது வாழ்க்கைச் சூழ்நிலையும் அதைத் தூண்டலாம்.
  • கருப்பையில் இருக்கும்போது பெற்றோருக்கு ஏற்படும் சூழல் சார்ந்த அழுத்தங்கள், அழற்சி நிலைமைகள், நச்சுகள், குடிப்பழக்கம் அல்லது போதைப்பொருள் பயன்பாடு போன்றவை சில நேரம் மனநோய்க்குக் காரணமாக அமையலாம்.
  • இயற்கையாகவே மூளையில் உள்ள வேதிப்பொருள்கள் நமது மூளை, உடலின் மற்ற பகுதிகளுக்குச் சமிக்ஞைகளைக் கொண்டு செல்கின்றன. இந்த வேதிப்பொருள்கள் சம்பந்தப்பட்ட நரம்பியல் பிணைப்புகள் பலவீனமடையும்போது, நரம்பு மண்டலங்களின் செயல்பாடு பாதிப்படைகிறது. இந்தப் பாதிப்பு மனச்சோர்வு உள்ளிட்ட பிற உணர்வு சார்ந்த கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது.

பொதுவான அறிகுறிகள்

  • அதிக சோகம், சோர்வு
  • தன்னம்பிக்கை குறைதல்
  • சிந்தனையில் குழப்பம்
  • கவனம் செலுத்தும் திறன் குறைதல்
  • அதிக பயம் அல்லது கவலை
  • குற்ற உணர்வின் தீவிர நிலை
  • மனநிலை மாற்றங்கள்
  • நண்பர்கள், உறவுகள், வழக்கமான செயல்பாடுகளிலிருந்து விலகுதல்
  • தூங்குவதில் சிக்கல்கள்
  • வெறுமை நிலை
  • சித்தபிரமை அல்லது மாயத்தோற்றம்
  • அன்றாடப் பிரச்சினைகள் அல்லது மன அழுத்தத்தைச் சமாளிக்க இயலாமை
  • சூழ்நிலைகள், மக்களைப் புரிந்துகொள்வதிலும் தொடர்புகொள்வதிலும் தடுமாற்றம்
  • குடிப்பழக்கம் அல்லது போதைப்பொருளைப் பயன்படுத்துதல்
  • உணவுப் பழக்கத்தில் திடீர் மாற்றங்கள்
  • தாம்பத்ய உறவு சார்ந்த விருப்பத்தில் மாற்றங்கள்
  • அதிகப்படியான கோபம், விரோதம் அல்லது வன்முறை
  • தற்கொலை எண்ணங்கள்

ஆபத்துக் காரணிகள்

  • பொருளாதாரச் சிக்கல்கள்
  • நெருக்கமானவரின் மரணம் அல்லது விவாகரத்து போன்ற மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைச் சூழ்நிலைகள்
  • நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட பாதிப்பு
  • தலையில் ஏற்படும் கடுமையான காயம், அதிர்ச்சிகரமான மூளை காயம், மூளை சேதம்
  • போர் / தாக்குதல் போன்ற அதிர்ச்சிகரமான அனுபவங்கள்
  • குடிப்பழக்கம் / போதைப் பொருள்களின் பயன்பாடு
  • குழந்தைப் பருவத்தில் சந்தித்த மோசமான அனுபவங்கள்
  • குறைந்த நண்பர்கள் அல்லது உறவினர்கள்
  • முந்தைய மனநோய் பாதிப்புகள்

என்ன செய்ய வேண்டும்

  • மனநோய் பொதுவானது. குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை மனநோய் எந்த வயதிலும் ஏற்படலாம். மனநோயின் பாதிப்புகள் தற்காலிகமானதாகவோ நீண்ட காலம் நீடிப்பதாகவோ இருக்கலாம். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனநலக் கோளாறுகளும் நமக்கு ஏற்படலாம். உதாரணமாக, மனச்சோர்வுடன் போதைப்பொருள் பயன்பாடு சார்ந்த கோளாறும் சேர்ந்து இருக்கலாம்.
  • மனநோய் இருந்தால், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், குறைந்துபோன சுயமரியாதையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பது மனநோயின் அறிகுறிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அறிகுறிகளை உணர்ந்தவுடன் தயங்காமல் மனநல மருத்துவரைச் சந்திப்பது மிகவும் முக்கியம்.

நன்றி: தி இந்து (19 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்