- இன்னும் இரண்டு நாள்களில் பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நிறைவடைய உள்ளது. இந்த ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்றோர் ஒருபுறம் இருக்க, நூலிழையில் பதக்க வாய்ப்புகளைத் தவறவிட்டவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இவர்களும் பதக்கங்களை வென்றிருந்தால், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும். பதக்கங்களை இவர்கள் வெல்லாவிட்டாலும் மனங்களை வென்றனர்.
துப்பாக்கிச் சுடுதல்:
- மனு பாகர்: துப்பாக்கிச் சுடுதல் ஒற்றையர் மகளிர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம், 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் வெண்கலம் என இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாகர், இன்னொரு பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். 25 மீ. பிஸ்டல் பிரிவிலும் களமிறங்கிய மனு பாகர், தகுதிச் சுற்றில் 590 புள்ளிகளைக் குவித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
- இறுதிச் சுற்றில் மனு பாகரும், ஹங்கேரியின் வெரோனிகாவும் தலா 28 புள்ளிகளைச் சேர்த்து 3ஆவது இடத்தில் இருந்தனர். வெண்கலப் பதக்கம் யாருக்கு என்பதை உறுதி செய்ய ஷுட் ஆஃப் சுற்று நடத்தப்பட்டது. இதில் வெரோனிகா 3 புள்ளிகளைச் சேர்த்தார். ஆனால், மனு பாகர் சிறப்பாகச் செயல்படத் தவறினார். இதனால் வெரோனிகா 3ஆம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். மனு பாகர் நான்காம் இடத்துக்குச் சென்று பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
அர்ஜுன் பபுதா:
- நூலிழையில் பதக்கத்தைத் தவறவிடுவது ஒலிம்பிக்கில் சர்வ சாதாரணம். ஆனால், பதக்கத்தைத் தவறவிடுபவருக்கு அது ஆறாத ரணமாக இருக்கும். பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் அர்ஜுன் பபுதா நூலிழையில் பதக்க வாய்ப்பைத் தவறவிட்டார்.
- தகுதிச் சுற்றில் 630.1 புள்ளிகள் குவித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அர்ஜுன், 208.4 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். 7ஆவது ரவுண்டின்போது குரோஷியாவின் மீரான் மரிசிச் 209.8 புள்ளிகள் பெற்ற நிலையில், அதைவிட 1.4 புள்ளிகள் குறைவாக எடுத்து வெண்கலம் பெறும் வாய்ப்பை அர்ஜுன் இழந்தார். என்றாலும் ஒலிம்பிக்கில் இந்த அளவுக்கு அர்ஜுன் முன்னேறியது பாராட்டுக்குரியதுதான்.
மகேஸ்வரி சவுகான் - அனந்ஜித் சிங் நருகா:
- ஒலிம்பிக்கில் இதற்கு முன்பு துப்பாக்கிச் சுடுதல் ஸ்கீட் பிரிவில் எல்லாம் இந்தியர்கள் தடம் பதித்ததே இல்லை. இந்த முறை கலப்பு ஸ்கீட் அணியில் இடம்பிடித்த மகேஸ்வரி சவுகான், அனந்த்ஜித் சிங் இணை தகுதிச் சுற்றில் 146 புள்ளிகளை எடுத்தது. சீனக் கலப்பு அணியும் 146 புள்ளிகளையே எடுத்தது. இதனால், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவுடன் இந்திய இணை பலப் பரீட்சை நடத்தியது.
- இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மகேஸ்வரி சவுகான் - அனந்த்ஜித் சிங் இணை கடைசி கட்டத்தில் சற்றுத் தடுமாறியது. இதைப் பயன்படுத்திக் கொண்ட சீன இணை, புள்ளிகளை அதிகப்படுத்திக் கொண்டது. கடைசியில் 43-44 என்கிற புள்ளிகள் கணக்கில் சீன இணை வெண்கலத்தைத் தட்டிச் சென்றது. ஒரே ஒரு புள்ளியில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை இழந்தது.
வில்வித்தை:
- வில்வித்தையில் கலப்புப் பிரிவில் சீனியர்களான தருண்தீப் ராய் - தீபிகா குமாரி ஆகியோர் ஏமாற்றிய நிலையில், ஜூனியர்களான தீரஜ் பொம்மதேவரா - அங்கிதா பகத் ஆகியோர் பதக்கப் போட்டி வரை முன்னேறி ஆறுதல் அளித்தனர்.
- ஒலிம்பிக் வரலாற்றில் வில்வித்தை விளையாட்டில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர்கள் என்கிற பெருமையைப் பெற்ற இவர்கள், 2-6 என்கிற கணக்கில் தென் கொரியாவிடம் வீழ்ந்தனர். இதனால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டன்ர். சவாலான இப்போட்டியில் கடைசி வரை போராடி 6-2 என்கிற கணக்கில் வெண்கலப் பதக்கத்தையும் இந்த இணை நழுவவிட்டது.
பாட்மிண்டன்:
- ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற பி.வி சிந்து, பதக்க நம்பிக்கை அளித்த சாத்விக் - சிராக் இணை ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், 22 வயதான லக் ஷயா சென் நம்பிக்கை அளித்தார். காலிறுதியில் சீன தைபேவின் செள டியன் சென்னை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறி ஆச்சரியம் தந்தார்.
- டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரும், உலகத் தரவரிசையில் இரண்டாமிடம் வகிப்பவருமான டென்மார்க்கின் விக்டர் அக்செல்சென்னை அரையிறுதியில் எதிர்த்து விளையாடி லக் ஷயா சென் போராடித் தோல்வியடைந்தார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மலேசியாவின் லீ சி ஜியாவிடம் வீழ்ந்த லக் ஷயா, நான்காமிடமே பிடித்தார். பதக்கம் வெல்லவில்லை என்றாலும் லக் ஷயாவின் போராட்டக் குணம் எல்லாரையும் கவர்ந்தது.
பளு தூக்குதல்:
- டோக்கியோ ஒலிம்பிக்கில், மகளிர் 49 கிலோ எடைப் பிரிவு பளு தூக்குதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்றவர், மீராபாய் சானு. காயங்களிலிருந்து மீண்டு வந்து பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம்பிடித்த அவர் மீது இந்த முறையும் எதிர்பார்ப்பு இருந்தது. ‘ஸ்னாட்ச்’, ‘கிளீன் & ஜெர்க்’ என இரண்டு பிரிவுகளில் நடைபெறும் பளுதூக்குதலில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு போட்டியாளருக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் அதிக எடையைத் தூக்குபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
- ‘ஸ்னாட்ச்’ பிரிவின் முடிவில் மீராவும் தாய்லாந்தின் சுரோத்சனா கம்போவும் மூன்றாவது இடத்தில் இருந்தனர். ‘கிளீன் & ஜெர்க்’ பிரிவில் இருவருக்கும் இடையே மூன்றாமிடத்தைப் பிடிக்கக் கடும் போட்டி நிலவியது. இறுதியில் சானு ஒட்டுமொத்தமாக 199 கிலோ எடையைத் தூக்கியிருந்தார். சுரோத்சனா 200 கிலோ தூக்கியிருந்ததால், அவர் மூன்றாமிடத்தைப் பிடித்து வெண்கலத்தை உறுதி செய்து கொண்டார். 1 கிலோ வித்தியாசத்தில் சானு வெண்கலத்தைத் தவறவிட்டார்.
மல்யுத்தம்:
- மல்யுத்தத்தில் பெண்களுக்கான 68 கிலோ எடைப் பிரிவில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பங்கேற்ற நிஷா தாஹியா, உக்ரைன் வீராங்கனை சோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் வடகொரிய வீராங்கனை சோல் கம் பக்குக்கு எதிராக விளையாடினார். தொடக்கம் முதல் 8-1 என்கிற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்த நிஷாவுக்குப் போட்டியின் நடுவே தோள்பட்டையிலும், கை விரல்களிலும் காயம் ஏற்பட்டது.
- அப்போது போட்டி முடிய ஒரு நிமிடம் இருந்ததால், தொடர்ந்து விளையாடினார். நிஷா வலியுடன் போராடியதைப் பயன்படுத்திக்கொண்ட வடகொரிய வீராங்கனை, வேகமாகப் புள்ளிகள் குவித்து 8-10 என்கிற புள்ளி கணக்கில் தோற்கடித்தார். எதிர்பாராமல் நிகழ்ந்த இந்தப் பின்னடைவால் நிஷாவின் கனவு தவிடுபொடியானது.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 08 – 2024)