TNPSC Thervupettagam

மனநலத் துறையிலும் தமிழ்நாட்டு மாடல்

April 5 , 2022 854 days 477 0
  • மார்ச் 18 அன்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. பெண் கல்வி உட்பட ஏழை, எளிய மாணவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகளையும், அதற்கான பொருளாதாரப் பலன்களையும் அறிவித்தது பெரிதும் கொண்டாடப்பட்டது.
  • பெரும்பாலான அறிவிப்புகள் இப்படிக் கொண்டாடப்படும் வேளையில், ‘கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் மையமாக மேம்படுத்தப்படும்’ என்கிற அறிவிப்பு மட்டும் கேலிசெய்யப்பட்டது.
  • தமக்குப் பிடிக்காதவர்களையும், மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் கேலி செய்யும்பொருட்டு, ‘இந்தத் திட்டம் அவர்களுக்காகக் கொண்டுவரப்பட்டது’ என்று இந்த நிதிநிலை அறிக்கையின் மிக முக்கியமான அறிவிப்பு பலராலும் நகைப்புக்குள்ளாக்கப் பட்டது.
  • உலகம் முழுக்கச் சமீப காலங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கும் மனநலப் பிரச்சினைகளின் தீவிரத்தை நாம் உணராததன் விளைவே இப்படிப்பட்ட கேலிக்குக் காரணம்.
  • சமீப காலங்களில், இளைய வயதினரின் மரணத்துக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக மனநலப் பிரச்சினைகள் இருக்கின்றன. நம் வாழ்நாளில் நம்மைச் செயல்படாமல் முடக்கும் நோய்களில் மனநோய்கள் முக்கியமானவை என்கின்றன ஆய்வுகள்.
  • மனநலப் பிரச்சினைகளால் ஏற்படும் பொருளாதார இழப்புகள், வேறெந்த உடல் நோய்களை விடவும் அதிகம். அதனால்தான் சர்வதேச மருத்துவச் சமூகம் சமீப காலமாக மனநலத்துக்கும், மனநோய் சிகிச்சைகளுக்கும் அதிக முக்கியத்துவத்தைத் தருகின்றன.
  •  மருத்துவ அறிவியலில் தற்போது பெரும்பாலான ஆராய்ச்சிகள் நரம்பியல் மற்றும் மனநலத் துறையில்தான் நடக்கின்றன.
  • ஆனால், இதன் தீவிரம் தெரியாமல் நாம் இன்னமும் மனநலத் துறையை அலட்சியத்துடனே அணுகிக்கொண்டிருக்கிறோம். நம்மைப் பொறுத்தவரை மனநோய் என்றால், யாரோ பிறழ்வடைந்தவர்களுக்கு வரக்கூடிய தீவிரமான நோய் என நினைக்கிறோம்.
  • ஆனால் தீவிர மனநோய்களைவிட, அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகளால் உருவாகக் கூடிய மனநலப் பிரச்சினைகள்தான் இன்று பெரும் சுமையாக இருக்கின்றன.
  • அவையே நமது ஆரோக்கியமின்மைக்கு முக்கியக் காரணமாகவும் இருக்கின்றன என்பதை நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

தமிழ்நாடு மாடல்

  • ஊரடங்கு காலத்துக்குப் பிறகு, உலகம் முழுக்க மனநலப் பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றன.
  • குழந்தைகளுக்குக்கூட புதிய மனநலப் பிரச்சினைகள் வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
  • மேலும், இளைஞர்களிடம் புதிதாக அதீத மனச்சோர்வும் மனப்பதற்றமும், கணவன்-மனைவி உறவில் உருவாகியிருக்கும் சிக்கல்களும், முதியவர்களின் புதிய மனநலப் பிரச்சினைகளும் இந்தக் காலத்தில் அதிகரித்திருக்கின்றன.
  • ஊரடங்கின் விளைவாக உருவான பொருளாதாரச் சுமைகள், வேலையிழப்பு, உறவுச் சிக்கல்கள், எதிர்காலத்தின் மீதான நிச்சயமின்மை, இணையவழிக் கல்வி, வீட்டிலிருந்து வேலை பார்க்கக்கூடிய புதிய சூழல், அதிகரிக்கும் போட்டித் தேர்வுகள், மாணவர்களின் மனநிலைக்கு எதிரான புதிய கல்விக் கொள்கைகள், பொருளாதாரத் திட்டங்கள் என அத்தனையும் சேர்ந்து பொதுச் சமூகத்தின் மனநிலையைப் பெரிய அளவுக்குப் பாதித்திருக்கின்றன.
  • சமீபத்தில் அதிகரித்திருக்கும் தற்கொலைகள், போதைப் பொருள் பழக்கம், விவாகரத்துகள், குற்றச் சம்பவங்கள் போன்றவையெல்லாம் ஆரோக்கியமற்ற மனநிலையின் வெளிப்பாடே!
  • “மனதைத் தைரியமாக வைத்துக்கொண்டால் எதுவும் வராது, பலவீனமாக இருப்பதால்தான் இப்படிப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் வருகின்றன” என்று சமூகத்தில் எழும் அனைத்து மனநலப் பிரச்சினைகளுக்கும் தனிநபரின் மீதே பழியைப் போட்டு விட்டுக் கைகளைக் கழுவிக்கொள்கிறோம்.
  • தனிநபர் என்பவர் ஒரு சமூகத்தின் அங்கமே, சமூகத்தின் இடர்கள், சமநிலையின்மைகள் தனிநபரைப் பாதிக்கக்கூடியவை என்பதை நாம் உணருவதில்லை. ஏனென்றால், அதற்கான எந்த அறிவியல்பூர்வமான சான்றுகளும் நம்மிடம் இல்லை.
  • இன்னும் சொல்லப்போனால், மனநலத்தின் மீதான எந்தவித அறிவியல்பூர்வமான ஆராய்ச்சியையும் இன்னும் நாம் தொடங்கவே இல்லை. “தனிநபரின் மனரீதியான பிரச்சினைகளை யோகா எப்படிக் குணப்படுத்துகிறது?” என்ற வகையில்தான் நமது ஆராய்ச்சிகள் இருக்கின்றன.
  • ஏன் வேறெப்போதும் இல்லாத வகையில் மனநலப் பிரச்சினைகள் சமீபத்தில் குழந்தைகளிடம் அதிகரித்திருக்கின்றன? தொழில்நுட்பச் சாதனங்கள் மூளையின் வளர்ச்சியில் எந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன?
  • மாறிவரும் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல், சமூகச் சீர்கேடுகள், பொருளாதாரச் சீர்திருத்தங்கள், வாழ்க்கை முறை போன்றவையெல்லாம் நமது மூளையின் மீதும் அதன் நுட்பமான செயல்பாடுகளின் மீதும், மரபணுக்களின் மீதும் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, நவீன காலத்தில் முக்கியத்துவம் பெறும் குழந்தையின்மை போன்ற மருத்துவச் சிக்கல்களுக்கு, மனநலம் எந்த வகையில் காரணமாக இருக்கிறது என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் அறிவியல்பூர்வமான தரவுகளின் வழியாகப் பதில்களைப் பெறும்போது ‘மனம்’ என்பது நாம் நினைப்பதுபோல் அல்லாமல், முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமான ஒன்றாக அது நமக்குக் காட்சியளிக்கும்.
  • மனநலத் துறையின் அடுத்த நகர்வுகள் அனைத்தையுமே அதை அறிவியல்பூர்வமாக அணுகுவதன் வழியாகவே செய்ய முடியும்.
  • மனநலப் பிரச்சினைகளின் தோற்றம், அவற்றின் மரபணுப் பண்புகள், பல்வேறு காரணங்கள், நோய்மைக் குணங்கள், உயிரியல் விளைவுகள், சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் நாம் உலகத்தரமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • அதற்கெல்லாம் தேவை நமக்கென்று அதிசிறந்த மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம். மனநல மருத்துவமனை என்பதே மனநோயாளர்களை அடைத்து வைக்கக்கூடிய இடம் என்ற கற்பிதங்களிலிருந்து மாறி, மனநலம் தொடர்பாகவும், மூளையின் நுட்பமான இயக்கம் தொடர்பாகவும், நரம்பியல் செயல்பாடுகள் தொடர்பாகவும் அதிநவீன ஆராய்ச்சிகளை முன்னெடுக்கிற, ஒருங்கிணைக்கிற அறிவியல் நிறுவனம் என்பதாக ஒரு நிறுவனத்தை நாம் கட்டமைக்க வேண்டும்.
  • அதன் வழியாக அதிநவீன மனநல சிகிச்சைகள், மரபணு முதலான ஆராய்ச்சிகள், தரவுகளை உருவாக்க வேண்டும்.
  • மனநலத் துறையில் உலகத்தரமான சிகிச்சைகள் அத்தனையும் கிடைக்கக்கூடிய, அதன் தொடர்பான ஆராய்ச்சிகள் நடக்கும் இடமாகவும் அதன் பலன்களை ஒட்டுமொத்த மக்களுக்கும் அளிக்கும் வகையிலும் திட்டங்களை உருவாக்கக்கூடிய இடமாகவும் அந்த நிறுவனம் இருக்க வேண்டும்.
  • மனம் மீதும் அதன் நோய்மைகளின் மீதும் பொதுச் சமூகத்துக்கு இருக்கும் இந்தக் களங்கப் பார்வையை மாற்றுவதற்கு இதுவே தீர்வாக இருக்கும்.
  • இதற்காக இந்தியாவில் இருக்கும் வேறு எந்த தேசிய நிறுவனத்தையும் முன்மாதிரியாகக் கொள்ளத் தேவையில்லை. நவீன அறிவியலின் பலனைக் கடைசி மனிதர்கள் வரை கொண்டு சேர்க்கும் திராவிட முன்மாதிரியையே நாம் மனநலத் துறைக்கும் அடிப்படையாக எடுத்துக் கொள்ளலாம்.
  • உலகத்தர மனநல நரம்பியல் ஆராய்ச்சி மையத்தைத் தமிழ்நாட்டில் கட்டமைப்பதன் வழியாக, அதை முழுக்க முழுக்க நவீன அறிவியல் நிறுவனமாக, ஆராய்ச்சி மையமாக, அதி சிறந்த கல்வி நிறுவனமாக உருவாக்கி, அதன் வழியாகக் கிடைக்கும் புரிதல்களை, சாதனைகளை, தரவுகளை சர்வதேச மருத்துவ அறிவியலுக்குப் பரிந்துரை செய்யலாம். அந்த வகையில், மனநலத் துறையிலும் தமிழ்நாடு மாடலை உருவாக்க முடியும்.

நன்றி: தி இந்து (05 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்