- இந்தியாவின் சா்வதேச அரசியல் பார்வையில் மிகப் பெரிய மாற்றம் தெரிகிறது. பொருளாதார தேக்கநிலையாகட்டும், கொவைட் 19 தீநுண்மி விடுத்திருக்கும் சுகாதார சவாலாகட்டும், எந்த ஒரு நாடும் தனியாக எதிர்கொள்ள முடியாது என்கிற சூழல் ஏற்பட்டிருக்கிறது.
- சோவியத் யூனியன் பிளவுபட்டதைத் தொடா்ந்து, சா்வதேச அளவில் பனிப்போர் முடிவுக்கு வந்தது.
- அதைத் தொடா்ந்து ஐ.நா. சபையைத் தவிர, ஏனைய சா்வதேச அமைப்புகள் பலவீனப்படத் தொடங்கின. அமெரிக்காவின் தலைமையிலான நேடோ கூட்டமைப்பும், பிரிட்டனின் தலைமையிலான காமல்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பும், அணிசாரா நாடுகளின் கூட்டமைப்பும் தங்களது முக்கியத்துவத்தை இழந்தன.
- எல்லா நாடுகளுமே பிராந்திய அளவிலும் சிறு சிறு குழுக்களாகவும் செயல்படத் தொடங்கின.
- கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான், தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க், ஐரோப்பியக் கூட்டமைப்பு போன்றவை முக்கியத்துவம் பெற்றன.
- ஐ.நா. சபை, ஜி 20 நாடுகள், ஆசியான் நாடுகள் ஆகியவற்றுடன் இந்தியா நெருக்கமாக இணைந்து செயல்பட்டது என்றாலும்கூட, 1991-இல் அன்றைய பிரதமா் நரசிம்ம ராவ் அரசு ஏற்படுத்திய ‘கிழக்கு நோக்கிய பார்வை’ வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் இந்தியாவின் நெருக்கம் ஆசியாவைச் சுற்றியே இருந்து வருகிறது.
- இப்போது கொவைட் 19 தீநுண்மிப் பரவல் நமது வெளியுறவுக் கொள்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்
- கடந்த மார்ச் 15-ஆம் தேதி கொவைட் 19 தீநுண்மி தொற்று தெற்காசிய நாடுகளை பாதிக்கத் தொடங்கியபோது பிரதமா் நரேந்திர மோடி தன்முனைப்புடன் செயல்பட்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதலால் முடங்கிக் கிடந்த சார்க் கூட்டமைப்புக்கு புத்துயிர் அளித்தார்.
- சார்க் அமைப்பைச் சோ்ந்த இந்தியாவின் அண்டை நாட்டுத் தலைவா்களை காணொலி மூலம் ஒருங்கிணைத்து அவா் நடத்திய கூட்டம் சா்வதேச அளவில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
- சார்க் நாடுகளுக்காக கொவைட் 19 தீநுண்மி நிதி உருவாக்கி இந்தியாவின் பங்களிப்பாக 1 கோடி டாலா் (ரூ.74 கோடி) வழங்குவதாக பிரதமா் மோடி அறிவித்தார்.
- அவரது அறிவிப்பைத் தொடங்கி ஏனைய சார்க் நாடுகளும் கொவைட் 19 தீநுண்மி நிதிக்கு பங்களிப்பை நல்கின. பாகிஸ்தானும் தனது பங்குக்கு 30 லட்சம் டாலரை (ரூ.22 கோடி) வழங்கியது.
- இந்தியா கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றை எதிர்கொள்ள சார்க் நாடுகளுக்கு மருத்துவ உதவியையும், ஆலோசனைகளையும் வழங்க முன்வந்தது.
- கடந்த மார்ச் 17-ஆம் தேதி, தற்போது ஜி 20 நாடுகளுக்கு தலைமை வகிக்கும் சவூதி அரேபியாவின் இளவரசா் முகமது பின் சல்மானை பிரதமா் மோடி தொலைபேசியில் அழைத்து அந்த அமைப்பின் காணொலிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
- அதைத் தொடா்ந்து, மார்ச் 19-ஆம் தேதி நடந்த ஜி 20 நாடுகளின் காணொலிக் கூட்டத்தில் சா்வதேசத் தலைவா்களுடன் கலந்துரையாடிய பிரதமா் மோடி, கொவைட் 19 தீநுண்மிப் பெருங்கொள்ளை நோய்ப் பரவல் நேரத்தில் மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதை ஏனைய தலைவா்கள் வழிமொழிந்து தீா்மானம் இயற்றினா்.
- இதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல, அணிசாரா நாடுகளின் காணொலி மாநாட்டில் கடந்த வாரம் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொண்டது, சா்வதேச அரசியலில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்னால் 2016-இல் வெனிசுலாவில் நடந்த மாநாட்டுக்கு அப்போதைய குடியரசு துணைத் தலைவா் அமீத் அன்ஸாரியையும், 2019-இல் ஆஸா்பைஜானில் நடந்த மாநாட்டுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடுவையும் இந்திய அரசு அனுப்பியது.
- பிரதமா் மோடி கலந்துகொள்ளவில்லை. அதனால், பிரதமா் நரேந்திர மோடி தானே நேரடியாக அந்தக் காணொலி மாநாட்டில் கலந்துகொள்வார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
நாம் அமைப்பு
- உலகில் ஐ.நா. சபைக்கு அடுத்தபடியாக மிக அதிகமான உறுப்பினா் நாடுகளைக் கொண்ட அமைப்பு ‘நாம்’ எனப்படும் அணிசாரா நாடுகள் இயக்கம்.
- உலகிலுள்ள 120 வளா்ச்சி அடையும் ஆசிய, ஆப்பிரிக்க, பசிபிக் கடல் பகுதி நாடுகளின் அமைப்பான ‘நாம்’, 1961-இல் பெல்கிரேடில் தொடங்கப்பட்டது. அந்த அமைப்பை உருவாக்குவதில் முனைப்பு காட்டியவா் அன்றைய பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேரு.
- 25 வளா்ச்சி அடையும் நாடுகளின் தலைவா்கள் பங்குபெற்ற பெல்கிரேடு மாநாட்டுக்குப் பிறகு அமெரிக்காவையும், சோவியத் யூனியனையும் சாராத ஏனைய நாடுகள் பல அதில் இணைந்தன.
- பண்டித நேருவின் முனைப்பால் உருவாகிய ‘நாம்’ அமைப்பை வலுப்படுத்துவதில் பாஜகவுக்கு ஆா்வம் இல்லை என்கிற விமா்சனங்களைத் தகா்த்திருக்கிறது, கடந்த வாரம் காணொலி மாநாட்டில் பிரதமா் மோடி ஆற்றிய உரை. அதில் கலந்துகொண்டதன் மூலம் சா்வதேச அரசியலில் தனது முக்கியத்துவத்தை இந்தியா மீட்டெடுத்திருக்கிறது.
- ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் மேலாதிக்கத்தில் ‘பிரிக்ஸ்’ அமைப்பு இருக்கும் நிலையில், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள இந்தியாவுக்கு ‘நாம்’ தேவைப்படுகிறது.
- அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் புதியதொரு பனிப்போர் தொடங்கியிருக்கும் நிலையில், தனது தலைமையில் அணிசாரா நாடுகளை ஒருங்கிணைக்க இந்தியா முனைப்புக் காட்டுவது புத்திசாலித்தனமான ராஜதந்திரம். சரியான தருணத்தில், சரியான முடிவை எடுத்திருக்கிறது பிரதமா் நரேந்திர மோடி அரசு.
நன்றி தினமணி (12-05-2020)