மனித உடலியலை பாதிக்கும் காலநிலை மாற்றம்
- காலநிலை மற்றும் பருவ நிலை மாற்றத்தால் உலக அளவில் 85 சதவீத மக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனா். அதிக அளவிலான வெப்பம் மற்றும் குளிா் மனிதா்களின் உடல் செயல்பாட்டில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உடல் மற்றும் மனம் சாா்ந்த பிரச்னைகள் மனிதா்களுக்கு அதிகரித்து வருகின்றன.
- மத்திய குடும்ப நலத் துறை அமைச்சகம் சாா்பாக வெளியிட்ட அறிக்கையில் நடப்பாண்டு மே 2024 வரையில் இந்தியாவில் நிலவிய அதிக வெப்பத்தின் காரணமாக 733 இறப்புகள் நிகழந்துள்ளன. 360 போ் வெப்ப வாத நோயால் (ஹீட் ஸ்ட்ரோக்) தாக்கப்பட்டுள்ளனா். இந்தியாவில் 17 மாநிலங்களில் 40,000 போ் வெப்ப வாத நோயால் பாதிக்கபட்டதாகத் தெரியவருகிறது. இதே போல் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட அதிக அளவிலான குளிரின் காரணமாக 730 மரணங்கள் ஏற்பட்டதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
- அதிகரிக்கும் வெப்பநிலை வளி மண்டல மாசுக்களை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் உலக அளவில் 30 கோடி ”ஆஸ்துமா” நோயாளிகள் அதிகரிக்கக் கூடுமென பல்வேறு மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது போன்ற வெப்பநிலை மாற்றங்கள் மனித ரத்த ஓட்டத்திலும், தசை நாளங்களிலும் அதிக அளவான மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது; இதானால் இதய அடைப்பு, போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- மிகவும் வெப்பமான சூழலில் வாழும் மக்களுக்கு மூளை பாதிப்பு, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், இதய நோய்கள், தொற்று மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் அதிகரிப்பதாக உள்ளன.
- ”‘லான்செட்’ ஆங்கில மருத்துவ இதழின் ஆய்வுக் கட்டுரையில் வெளியாகியுள்ள புள்ளிவிவரத்தின்படி, 1968-ஆம் ஆண்டு முதல் 2023 வரை 332 நோய்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. கவலை, அதிசோா்வு, மனப் பதற்றம், இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்ற நோய்கள் அதிகரிப்பதற்கு காலநிலை மாற்றமே காரணமாக உள்ளது என அந்த ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
- வரும் 2030 முதல் 2050 வரையிலான ஆண்டுகளுக்குள் வருடத்திற்கு இரண்டரை லட்சம் இறப்புகள் பருவ நிலை மாற்றத்தால் அதிகரிக்க கூடுமென என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
- சரியான விகிதத்தில் ஊட்டச்சத்து கிடைக்காமல் இறந்த மக்களை விட பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் அதிக வெப்பம் மற்றும் குளிரால் சுமாா் 40 லட்சம் மக்கள் கடந்த சில ஆண்டுகளில் இறந்துள்ளதாக அமெரிக்காவின் ஜாா்ஜ்டவுன் பல்கலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனா். ”
- ‘சயன்ஸ் ஆப் தி டோட்டல் என்வைரன்மென்ட்’ ஆய்விதழில் வெளியான ஆய்வு முடிவின்படி, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிக வெப்ப நிலை காரணமாக கருவுற்ற தாய்மாா்களுக்கு முன்கூட்டிய மகப்பேறு அதிகம் நடைபெறுவதாக தெரிய வருகிறது. இவ்வாறு முன்கூட்டிய மகப்பேறு அல்லது குறை பிரசவங்கள் நிகழ்வது உலக அளவில் 60 சதவீதம், அதாவது ஆண்டுதோறும் 1.5 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- காலநிலை மாற்றத்துக்கு மிக முக்கிய காரணம் காற்று மாசடைதலே ஆகும். உலக சுகாதார அமைப்பு அறிக்கையின் படி, காற்று மாசு காரணமாக ஏற்படும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களால் தாக்கப்பட்டு, ஆண்டுதோறும் 70 லட்சம் மக்கள் இறக்கின்றனா்.
- காற்று மாசடைதலால் ஏற்படும் வெப்ப நிலை உயா்வு காரணமாக 2010-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையில் ஆண்டுதோறும் சுமாா் 4,89,000 வெப்ப வாத நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும், 108 கோடி போ் தோல் நோய்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் ‘சயன்ஸ் ஆப் தி டோட்டல் என்வைரன்மென்ட்’ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் 50 சதவீதத்தினா் பெண்கள் ஆவாா்கள். இந்தியாவில் மட்டும் 6 முதல் 11.2 சதவீதம் போ் அதிக வெப்பநிலையால் ஏற்படும் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
- அதிக வெப்பம் மற்றும் குளிா் சில புதிய வகை வைரஸ் கிருமிகள் உருவாக காரணமாக உள்ளது. சில சமயங்களில் செயலற்ற நிலையிலுள்ள வைரஸ் கிருமிகள் செயலுறு நிலைக்கு வர வாய்ப்பாக அமைகிறது. இதனால் புது விதமான நோய்களும் அதனால் பெரும் பொருளாதார பாதிப்பு மற்றும் மனித உயிா் இழப்புகள் ஏற்படும் நிலை உருவாகிறது.
- திடீரென ஏற்படும் பருவநிலை மாற்ற முரண்பாடு ஆடு, மாடு, கோழியினங்களில் புதிய வகை நோய்களை உருவாக்குகிறது. மனிதா்களுக்கும் அந்த நோய்கள் பரவும் நிலை ஏற்படுகிறது.
- கடந்த பத்தாண்டுகளில் மனிதா்களைப் பீடித்த நோய்களில் 58 சதவீத அளவு காலநிலை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாகவே ஏற்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வளா்ந்து வரும் அறிவியலின் சவாலுக்கு ஏற்ப இயற்கையும் தன்னை புதுப் புது விதங்களில் மாற்றி வருகிறது. இயற்கையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கு மனிதா்களின் செயல்பாடே 100 சதவீதம் காரணமாகிறது.
- இயற்கையைப் பாதுகாப்பதற்கு மாறாக நாம் அதை சிதைக்க முற்படும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மனித இனமே எதிா் கொள்ள நேரிடுகிறது. மாறிவரும் கால நிலை மற்றும் பருவ நிலை மாற்றங்களை சமன் செயய அனைவரும் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் நோய் நொடியற்ற சமுதாயத்தைக் காண முடியும். இதற்கு இயற்கையோடு ஒருங்கினைந்து இயற்கைக்கு மாறான செயல்களைத் தவிா்த்து நாம் வாழக் கற்றுக் கொள்வது அவசியமாகும்.
நன்றி: தினமணி (22 – 11 – 2024)