TNPSC Thervupettagam

மனித உரிமை நாள்: நினைக்கப்பட வேண்டிய இந்தியர்கள்!

December 10 , 2024 36 days 64 0

மனித உரிமை நாள்: நினைக்கப்பட வேண்டிய இந்தியர்கள்!

  • ‘மனித உரிமைகள்’ (Human Rights) என்ற இரு எளிய சொற்கள்தான் பூமிப்பரப்பெங்கும் நம்காலத்தில் வாழும் மனித இனத்தின் “பொது மொழி”யாகியுள்ளது ( lingua franca of humanity).
  • மனித உரிமைகள் என்ற இரு சொற்கூட்டுதான் புதிய உலகை இயக்கிவரும் ‘மந்திர விசை’. ‘மனித உரிமைகள்’ எனும் இரு சொற்களே- அவற்றின் கூட்டுச் சக்தியே- தற்போது ‘மனித குலத்தின் உயிர் மூச்சு. ‘’மானுடராக இருப்பதாலேயே ஒவ்வொரு தனி மனிதர்க்கும் உரித்தாக உள்ள உரிமைகள்’’ (Jack Donnely & Rhoda Howard,1987) என்பது மனித உரிமைகளின் மிக எளிதான ஆரம்ப நிலை விளக்கம்.
  • மனித உரிமைகள் அனைத்துமே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் - இனம், நிறம், பாலினம், மொழி, மதம், நாடு, அரசியல் சார்பு போன்ற எந்த வகையான வேறுபாடுகளுமின்றி -  பிறப்பாலேயே உரித்தானவை; யாவர்க்கும் பொதுவானவை; அனைவராலும் சமமாக அனுபவிக்க உரியவை; எப்போதும் எவராலும் மனிதனிடமிருந்து பிரிக்க இயலாதவை என்பது விளக்கத்தின் விரிவு.மனித உரிமைகளே தனி மனித வாழ்வின் ‘முழுமைக்கு மூலம்’, மனித இனம் ‘அமைதி தவழும் உலகடையப் பாலம்’ என்பது தெளிவு.
  • ‘மனித உரிமைகள்’ என்பவை நேற்றுப் பெய்த மழையில்  இன்று முளைத்தெழுந்து நிற்கும் காளான்களல்ல. உரக்கச் சொல்வதாயின், அது பல்லாயிரங்காலத்துப் பயிர். மனித குல வரலாற்றின் வைகறைக்காலம் முதல், ‘சுதந்திரம்’, ‘மானுட சமத்துவம்’, ‘நீதிமுறை’ உள்ளிட்டவைகளை எய்திடவிளைந்த உயர் வேட்கைகளாக, தனிமனித மாண்புகள் போற்றப்பட உருக்கொண்ட பெருவிழைவுகளாகக் காலந்தோறும் கரையாது உருவாகிவந்துள்ளன.
  • இவற்றால் எழுந்த முனைப்புகள், இயக்கங்கள், போராட்டங்கள், புரட்சிகள் ஆகிய அனைத்தின் திரண்ட வாரிசாகக் கருதப்பட உரியவையே மனித உரிமைகள் எனும் கோட்பாடு. அடிப்படையில், மனித உரிமைகள் என்பவை ஒவ்வொரு தனிமனிதருக்கும் உரித்தானவை என்பதால், அவ்வுரிமைகள் யாவும், எப்போதும் மறுக்கப்படாமல், தடைகள் எதுவும் இல்லாமல், வாழும் மனிதர்கள் யாவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டியது தம்மைத் தாமே நிர்வகிக்க மனிதர்கள் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ‘அரசுகள்’ (State) அவற்றின் அதிகார அமைப்புகளின் (Agencies of States) கடமையாகிறது.
  • முற்றிலும் பிழையாகப் பலரும் கருதிப் பேசியும், எழுதியும் வருவதுபோல, மனித உரிமைகள் என்பவை மேற்கத்திய சிந்தனையின் விளைச்சலல்ல; அல்லவே அல்ல. மேற்கில், கிழக்கில் என்று திசை சுட்டி, மனித உரிமைகள் குறித்த சிந்தனைகள், செயல்பாடுகள் வளர்ந்ந நிலங்களாகக் குறிப்பிட்ட சில நாடுகளையும், களங்களாகக் குறிப்பிட்ட  சில நாடுகளின் நிகழ்வுகள், சாசனங்கள், பிரகடனங்கள் போன்றவற்றை மட்டும் நாம் அடையாளப்படுத்த முற்படுவது முற்றிலும் உண்மைக்கு எதிரான செயல்பாடாகும்.
  • அவ்வாறு முன்னெடுத்துவைத்துக் காட்டப்படுவனயாவும், மடியாது எழும்பும் ஒட்டுமொத்த மனிதகுலவேட்கைகளை எய்திட ஆங்காங்கு நிகழும்வற்றாத முயற்சிகளின் வெளிப்பாடுகள் என்ற வகையில் மதிப்பீடு பெறஉரியவைதான்; அவைகளின்மேல் அதற்குமேற்பட்ட முதன்மைகளை ஏற்றிவைப்பது சரியாக இருக்காது. நீராவி என்ஜின், எலெக்ட்ரிக் பல்பு போன்றவை எப்போது? யாரால்? கண்டுபிடிக்கப்பட்டது என்ற கேள்விக்கு விடையளிப்பது எளிது. மற்றபடி, மனித உரிமைகளின் நெடும்பயணத் தொடக்கம் எங்கு? எப்போது? யாரால்? என்றெல்லாம் எளிதில் வரைப்படுத்தி கருத்து மையங்கொண்டுவிட வரலாறு நமக்கு வாய்ப்பளிக்கவில்லை.
  • எடுத்துக்காட்டாக, பண்டைய ஈரானிய நகரமான சூசாவை அகழ்வாராய்ச்சி செய்யும்போது,1901 ஆம் ஆண்டில்தான் பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளரால் (Jean-Vincent Scheil ) உலகின் முதல் சட்டத்தொகுப்பு என்று கருதப்படும் ஹமுராபி சட்டத் தொகுப்பு’ (Hammurabicode) பலகைகள் (tablets/Slabs) கண்டுபிடிக்கப்பட்டன. இத்தொகுப்பு, பாபிலோனிய சாம்ராஜ்யத்தை ஆண்ட, மெசபடோமிய மன்னர்களில் நன்கு அறியப்பட்ட மன்னரான ஹமுராபி (கி.மு.1792-50) தொகுத்ததாகும். ஆனால்,1901 வரை அதுபற்றி உலகம் அறிந்திருக்கவில்லை. அதுவரையிலும்  வேறு சட்டத்தொகுப்புகள், சாசனங்கள்தாம் மனித உரிமைகள் தொடர்பான சிந்தனைத் தொன்மைக்குச் சான்றென முன்வைக்கப்பட்டுவந்தன என்பதறிவோம்.
  • மேலும் குறிப்பிட உரிய செய்தி யாதெனில், ‘ஹமுராபி சட்டத் தொகுப்பு’ என்பது அம்மன்னர் தன் ஆட்சிக்காலத்தில் தான்வெற்றிகொண்ட நாடுகளைத் தனது பரந்த இராஜ்ஜியத்தின் பகுதிகளாக்கிக்கொண்டதால், பேரரசின் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டம் தேவை என்ற பெருநோக்கில் கருதித் தொகுத்ததாகும். தான் வெற்றிகொண்ட நாடுகளில் நடைமுறையில் இருந்த சட்டங்களை அறிய, ஹமுராபி தனது ராஜ்யத்தின் புதிய பகுதிகளாகியுள்ள அந்தப் பிரதேசங்களுக்குத் தனது சட்டவல்லுநர்களை அனுப்பிச் சட்டங்களைச் சேகரித்து, மதிப்பாய்வுசெய்து, களைய வேண்டுவன களைந்து, தொகுத்ததுதான் ‘ஹமுராபி சட்டத் தொகுப்பு’ என ஆராய்ச்சியாளர்களால் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. இதன்படி பார்க்கும்போது, ஹமுராபிக்குமுன்(கி.மு.பழங்காலத்திலேயே) பிற நாடுகளில் சட்டங்கள் வரையறுக்கப்பட்டிருந்தன என்பதை யூகிக்க முடிகிறதல்லவா? தற்போது -இன்னும் ஒருபடி மேல்செல்வதுபோல-‘ஹமுராபி காலத்திற்கும் 600 ஆண்டுகள் முந்தியதெனக் கருதப்படும் சட்டத்தொகுப்பு, டெல்மார்டிக்பலகைகள் (Tell Mardikhtablets/Slabs) நவீனகால சிரியாவில்அகழ்வாய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன என்ற செய்தி, ஹமுராபித் தொகுப்பின் தொன்மையைச் சவாலுக்குள்ளாக்கியுள்ளன.
  • ‘முன்தோன்றிய மொழி’ என்ற சிறப்பு‘ப் பெற்றிருக்கும் தமிழ், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவ முழக்கத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு வழங்கியிருக்கிறது. ‘உலகம் ஒன்றே, உயிர் வாழும் மானுடம் ஒன்றே’ எனும் உலகப் பொதுமைக் கோட்பாடு (Universal Brotherhood),‘யாதும் ஊரே, யாவருங்கேளிர்’ என்ற தமிழ்க் கோட்பாடாகத் தரணியில் பரவச் செய்துள்ளார் கணியன் பூங்குன்றன். ‘மன்னுயிரெல்லாம் தன்னுயிர்’ எனப் போற்றவேண்டும்; ‘பிறவும் தமபோல்’ கரிசனமுடன் கருதி செயல்பட-மனித சமத்துவப் பண்பாட்டுக்கான - அறிவுரைகள் பழங்காலத்திலேயே தமிழ்ச் சமூகத்தில் பதியினிடப்பட்டுள்ளது. மனிதருள் ‘’வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றது’’ எனக் கம்பரது அறிவிப்பும் காலத்தே முன்நிற்கிறது. எடுத்துக்காட்டாக முன்வைக்கப்பட்டிருக்கும் இப்பழங்கூற்றுகள் வலியுறுத்துவது மனித உரிமைகளின் அடிப்படைக் கூறுகளைத்தானே?
  • முன்குறிப்பிடப்பட்ட எடுத்துக்காட்டுகள் காட்டுவதென்ன?மேற்கில் மனித உரிமைச் சிந்தனைகள் வெளிப்பட்ட மிகப் பழமையானகளங்களாக முன்நிறுத்தப்பட்டிருந்த மாக்ன கார்ட்டா(1215). அமெரிக்க(1776) ,பிரெஞ்சு(1789), விடுதலைப் பிரகடனங்கள், இங்கிலாந்தின் உரிமைச் சட்டம் (Bill of Rights) போன்றவற்றின் முதன்மை, அகழாய்வுகளின் மூலம் வரலாற்றின்மீது பாயும் மீள்வெளிச்சத்தில் - புதிது புதிதாய்த் தெரியவரும் உண்மைகளால் -மெலிந்து வருகின்றன என்பதாகும். சுட்டிக்காட்டப்படும் சாசனங்கள், பிரகடனங்கள் தோன்றிய காலத்திற்குப் பலநூறாண்டுகள் முன்பே உலகநாடுகள் பலவற்றில், பலவேறு காலச்சூழல்களில் - விடாது கரைமோதும் அலைகளைப்போல - மனித உரிமைகளின் அடிப்படைக் கூறுகள் சிலவற்றை ஆங்காங்குள்ள சூழல்களின் அப்போதைய தேவைகளுக்கேற்ப அடைய, வென்றடுத்து மக்கள் அனுபவிக்க உதவிடத் தொடர் முனைப்புகள் அணையாது கிளர்ந்துகொண்டேயிருந்துள்ளன என்பது தெரிய வருகின்றது. ஆக, மேற்கிலோ கிழக்கிலோ அல்ல, பூவுலகில் மனிதன் தோன்றியதுமுதல் பல்கிப்பெருகி உலகப்பரப்புகளில்பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவந்திருக்கும் மனித இன முழுமையின் கூட்டுக் கருத்துருவாக்கமே மனித உரிமைகளாக விரிந்து, விகசித்து வளர்ந்து வருகின்றன தற்போது என்பதே ஏற்க உரிய நிலைப்பாடு.
  • மனித உரிமைகள் என்பவை மனிதருள் உயிரும் உடம்பும் போன்ற உறவின. மானுடப்பிறப்போடு உடன் வந்த வரங்கள். (கர்ண கவச குண்டலங்கள்!) உணர்வுப்பூர்வமாகச் சொல்வதெனில், ‘மனித உரிமைகள்’ அஃறிணையே அல்ல; அவை மானுட வாழ்வை முழுமையாக்கி மேம்படுத்த அவசியமான ‘உயிர்ப்பொருள்’, ‘கருப்பொருள்’. ஆதலால் உயர் (திணைப்)பொருள்!
  • உரிமை உணர்வும் உரிமை வேட்கையும் மாந்தரொடு இணைந்தே வளர்ந்து வந்திருக்கின்றன என்பது ஒளியா உண்மையாக இருப்பினும், கடந்த நூற்றாண்டுகளில் இரண்டு உலகப்போர்களின் உக்கிரங்களால், வாழும் மனித இனத்திற்கு ஏற்பட்ட அளவிலா அழிவுகள், இழப்புகள், உலகப் பொது அமைதிக்கு ஏற்பட்ட ஊறுகள், அண்மைக்காலம் வரை தொடரும் பின்விளைவுகள் முதலியவற்றால் கவலையுற்ற நாடுகள், தலைவர்களிடயே உலகநாடுகள் இணைந்த அமைப்பொன்றை உருவாக்கி உலக அமைதியை உறுதிப்படுத்தக் கருத்து வலுப்பெற்றது. அதன்படி, தொடரப்பட்ட முயற்சிகளின் விளைவாக, 1945இல் ஐக்கிய நாடுகள் சபைச் சாசனத்தின் (United Nations Charter) மூலம் ஐ.நா. பிறப்பெடுத்தது.
  • ஐ.நாவின் அமைப்புச் சாசனத்தில் விழைந்துள்ளவாறு, ஆரம்பகால முதன்மைப் பணிகளில் ஒன்றாக, அனைத்துத் தரப்பினரும் மிகப்பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்க பன்னாட்டு உரிமைச்சட்டம் (International Bill of Rights) ஒன்று வடிவாக்கப்படவேண்டும் எனுங் கருத்து எழுந்தது. இக்கருத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு ஐ.நா.வின் ஆறு முக்கிய அங்கங்களில் ஒன்றான பொருளாதார சமூக கவுன்ஸில் (Economic and Social Council, ECOSOC)வசம் அளிக்கப்பட்டது. பொருளாதார சமூகக் கவுன்ஸில், தனது உள்ளமைப்பாக மனித உரிமை ஆணையத்தை (Human Rights Commission) அமைத்துக்கொண்டு, அதன்மூலம் பன்னாட்டு உரிமைச்சட்டவரைவு முயற்சிகளை மேற்கொள்ளக் கருதியது. அம்முயற்சியின் முதற்பகுதியாக -1946 முதல் 1948வரை மேற்கொள்ளப்பட்ட கருத்துருவாக்க, வரைவுப் பணிகளால் -விளைந்ததே உலக மனித உரிமைப் பிரகடனம். (Universal Declarations of Human Rights, UDHR). உலக அமைதிக்கும், மனித குல வளர்ச்சிக்கும் வரலாறுகள் தந்த வரமாக நமக்குக் கிடைத்திருக்கிற - பல்லாயிரம் ஆண்டுப் பயிரான- மனித உரிமைக் கோட்பாடு இப்பிரகடனத்தின் வழியாக ஒளிர்கிறது எனலாம்.
  • ஐ.நா. சபையின் பொதுப்பேரவையில் உலக மனித உரிமைப் பிரகடனம்(பொதுப் பேரவை தீர்மான எண் 217 (III)) அப்போதிருந்த 56 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளால், எதிர்ப்பு எதுவும் பதிவாகாமல், இந்தியா உள்பட, 48 ஆதரவு வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பைலோரஷ்ய எஸ்.எஸ்.ஆர், செக்கோஸ்லோவாக்கியா, போலந்து, செளதி அரேபியா, உக்ரேனிய எஸ்.எஸ்.ஆர், தென்னாப்பிரிக்க ஒன்றியம், சோவியத் ஒன்றியம், யூகோஸ்லாவியா ஆகிய 8 நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களிக்கவில்லை.
  • 1948இல் இப்பிரகடனம் நிறைவேற்றப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 4, 1950இல் ஐ.நா. பொதுச்சபை [தீர்மான எண் GA Res. 423(V).], ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஐ "மனித உரிமைகள் நாளாக" கொண்டாட வேண்டும் என்று முடிவுசெய்து அறிவித்தது. அதன்படி, உலகெங்கும் மனித உரிமைகள் தினம் இன்று (டிசம்பர் 10) அனுசரிக்கப்படுகிறது. சீரெல்லாம் சேர்ந்தொளிரும் மனித உரிமைப் பிரகடன உருவாக்கத்தில், நம்நாடு அச்சாணிபோல் அதிகம் வெளித்தெரியாமல் அரும்பெரும் பங்கு ஆற்றியுள்ளது. அதிகம் அறியப்படாத, பேசப்படாத, எழுதி ஆவணப்படுத்தப்படாத நம் நாட்டின் பங்களிப்பு குறித்தும் அவ்வாறான பங்களிப்பைத் திறம்பட வடித்தளித்த நம்நாட்டவர் சிலர் குறித்தும் ஒரு பறவைப் பார்வையாய் இந்நாளில்  இங்கு அறிந்து, பின்னர் விரிவாக்க முற்படுவோம். வாங்க.

உலக மனித உரிமைப் பிரகடனம் உருவாக்கத்தில் இந்தியப் பங்களிப்பு

  • ஆரம்பத்திலிருந்து பார்த்தோமானால், ஐ.நா. அமைப்பிற்குமுன் பன்னாட்டுச் சங்கம்(League of Nations) 1942ல் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர்  1945இல் ஐ.நா. அமைப்பு உருவாக்கப்பட்டது அறிவோம். இந்த இரு நிகழ்வுகளின்போதும் உறுப்பினராகும் தகுதி கொண்ட சுதந்திர நாடாக இந்தியா இருக்கவில்லை. இருப்பினும் உலகப் போர்களின்போது பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளோடு ஏற்படுத்திக்கொண்ட கூட்டணிகளின் வலுவில் - சுதந்திர நாடாக இல்லாவிடினும்-தனது காலனி நாடான இந்தியாவைப் பிரிட்டன் தந்திரமாக இந்த அமைப்புகளுக்குள் நுழைத்துவிட்டது.

கிர்ஜாசங்கர் பாஜ்பாய்

  • கிர்ஜாசங்கர் பாஜ்பாய் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) மிகவும் வசதியான சூழ்நிலையில் பிறந்தவர். இவரது தந்தை, ராய்பகதூர் பண்டிட் சீட்லாபிரசாத் பாஜ்பாய் (1939 இல் நைட் பட்டம் பெற்றவர்) ஜெய்ப்பூர் மாநிலத்தில் தலைமைநீதிபதி மற்றும் நீதித்துறை உறுப்பினராக இருந்தவர். கிர்ஜாசங்கர் பாஜ்பாய் ஐசிஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதல் இடத்தில் தேர்வு பெற்றவர். ஐசிஎஸ் தேர்வில் இவருடைய முதல் இடம் குறிப்பிடத்தக்கதாகச் சொல்லப்படுவதுண்டு. அது, இவருக்கும் இவருக்கு அடுத்த இரண்டாவது இடம் பெற்றவருக்குமுள்ள மதிப்பெண் வித்தியாசம் 100 என்பதாகும்!
  • ஜனவரி 1, 1942இல், பன்னாட்டுச் சங்க அமைப்பு ஆவணத்தில், அத்தருணத்தில் அமெரிக்காவில் பிரிட்டன் தூதரகத்தோடு இணைக்கப்பட்டிருந்த இந்திய ஏஜண்ட் ஜெனரலாகப் பணியாற்றிவந்த ஐ.சி.எஸ். அலுவலர் கிர்ஜாசங்கர் பாஜ்பாய்(1891-1954) இந்தியாவின் பிரதிநிதியாகக் கையெழுத்திட்டார். விடுதலையடையாத நாடாக இருந்த இந்தியாவை ஒரு பன்னாட்டு அமைப்பில் உறுப்பினராகச் சேர்க்கும் முக்கிய ஆவணத்தில் இட்ட கையெழுத்து ஒரு இந்தியருடையதாக இருந்தது! (பிரிட்டிஷ் அதிகாரி எவரையாவது அப்போதைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அனுப்பியிருக்க முடியும்.)
  • ஆங்கில ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷ் விசுவாசியாகவே அறியப்பட்டிருந்த கிர்ஜாசங்கர் பாஜ்பாய் திறமையை பிரதமர் நேரு பயன்படுத்த விரும்பினார், ஆதலால், இந்திய விடுதலைக்குப் பின் நாட்டின் முதல் வெளியுறவுத் துறைத் தலைமைச் செயலராகப் பிரதமர் நேருவால்- அமைச்சர் அந்தஸ்தில்-பாஜ்பாய் நியமிக்கப்பட்டார். திறம்படச் செயலாற்றி பிரதமர் நேருவின் வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றினார். சில காலம், மகாராஷ்டிர மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
  • இந்தியாவிற்கு விடுதலை வழங்கவிருக்கும் காலகட்டத்தில் ஆங்கிலேய அரசு, 1947ஆம் ஆண்டில் கிர்ஜாசங்கர் பாஜ்பாய் தலைமையில் ஆறு பேர் கொண்ட தலைமைச் செயலக மறுசீரமைப்புக் குழுவைஅமைத்தது. தில்லி மத்தியச் செயலகத்தில் பணியாளர் பற்றாக்குறை, கிடைக்கக்கூடிய மனித சக்தியை சிறந்த முறையில் பயன்படுத்துதல் மற்றும் பணிமுறைகளை மேம்படுத்துதல் போன்ற விஷயங்களை இக்குழு ஆராய்ந்து அளித்த பரிந்துரைகள், விடுதலை பெற்ற இந்தியாவில் தலைமைச் செயலகப் பணிகள், ஆட்சிமாற்றத்தால் தொய்வில்லாமல் தொடரப் பெரிதும் உதவியது.
  • 1914 இல் ஐசிஎஸ் பணியிற்சேர்ந்து நாட்டில் மிக இளம் வயதில் அரசுச் செயலராக உயர்ந்து, வெகு விரைவில் வைஸ்ராயின் செயலகத்தின் பொறுப்புக்கு வந்த திறமைமிக்க ஐசிஎஸ் அதிகாரியான இவரது மகனும் (சங்கர் பாஜ்பாய்) பின்னாட்களில் தனது தந்தைபோலவே வெளியுறவுத் துறைச் செயலராகவும் தந்தை பணியாற்றிய பொறுப்பான அமெரிக்கத்தூதராகவும் பணியாற்றியவர்.

சர் ஆற்காடு ராமசாமி முதலியார்

  • 1945 ஜூன் 26ஆம் நாளில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச அமைப்புக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் இந்தியாவின் சார்பாக சர் ஆற்காடு ராமசாமி முதலியார் தலைமையிலான இந்தியக் குழுவினர் கலந்து கொண்டு, தமிழர், சர் ஆற்காடு ராமசாமி முதலியார் ஐக்கிய நாடுகள் சாசனத்தில் கையெழுத்திட்டார்.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட 1945 சாசனத்தின் படி, ஐ.நா.வின் ஆறு முதன்மை அங்கங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டது பொருளாதார சமூக கவுன்ஸில் (Economic and Social Council - ECOSOC) என்று கண்டோமல்லவா? அந்த கவுன்ஸிலுக்குச் சர்வதேசப் பொருளாதார, சமூக ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான பொறுப்புடன், ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பை வழங்குவதற்கான சட்ட உரிமைக் கட்டளைக் கடப்பாடும்(Mandate) ECOSOCக்கு உண்டு.
  • முக்கியமாக, உலக மக்கள் அனைவருக்கும் இனம், பால், மொழி, மதம் என்ற வகை வேறுபாடுகள் ஏதுமின்றி, மனித உரிமைகள் தடைகளின்றி கிடைக்கச் செய்யவும், அடிப்படைச் சுதந்திரங்களுக்கு உலகளாவிய மரியாதை எப்போதும் நிலவச் செய்து அந்தச் சுதந்திரங்களை அனைவரும் நடைமுறையில் கடைப்பிடித்து ஒழுகுவதை உறுதிசெய்யத் தோதானவற்றை மேற்கொள்ளவும் பெரும் பொறுப்பு கொண்டதாகும் ECOSOC. இத்தகு பெரும் பொறுப்புக் கொண்டிருக்கும் கவுன்ஸிலின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றவர் இந்தியர், தமிழர் சர்.ஏ. இராமசாமி முதலியார்(1887–1976).

சர்.ஏ. இராமசாமி முதலியார்

  • இவரும் இவரது சகோதரர் சர். ஏ. இலட்சுமணசாமி முதலியாரும் இரட்டையர்கள். இருவரும் 1887ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி அப்போது மெட்ராஸ் ராஜதானியிலிருந்த கர்னூலில் பிறந்தவர்கள். சென்னை கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றனர். பின்னர் இராமசாமி சட்டமும் லட்சுமணசாமி மருத்துவமும் பயின்று இருவரும் பெரும் சிறப்பான நிலைகளை அடைந்தனர். ஏ.எல்.முதலியார், தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கிய சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒன்பது முறை தொடர்ந்து துணை வேந்தராக(27 ஆண்டுகள்) இருந்தவர். மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் அவர் பணியாற்றினார். 1948 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் நடந்த முதல் உலக சுகாதார சபைக்கான (WHO) இந்திய தூதுக்குழுவின் துணைத் தலைவராக இருந்தார். 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்வாகக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், 1955 இல் எட்டாவது உலக சுகாதார சபையின் துணைத் தலைவராகவும், 1961 இல் பதினான்காவது உலக சுகாதார சபையின் தலைவராகவும் இருந்தார்.
  • இராமசாமி முதலியார் தனது இரட்டை சகோதரருடன் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். 1911 முதல் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகச் சேர்ந்து, குறுகிய காலத்திலேயே சென்னையின் பிரபல வழக்கறிஞர்களில் ஒருவரானார். ஒரு வழக்கறிஞராக அவரது வாதத் திறமையும் பிரபலமும் அவருக்கு பல அரசியல் வாய்ப்புகளை வழங்கியது. 1917இல் நீதிக்கட்சியில் சேர்ந்து அதன்குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.
  • சென்னை சட்டமன்ற மேலவையில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார், அக்காலத்தில் மதராஸ் கல்விச் சட்டம், 1920 மற்றும் சென்னைப் பல்கலைக்கழக சட்டம், 1923 உள்ளிட்ட கல்விச் சட்டங்களை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்த முதலியார், இந்தியாவில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான கூட்டு நாடாளுமன்றக் குழுவில் நீதிக்கட்சியின் தூதுக்குழுத் தலைவராகச் செயல்பட்டார்.
  • வட்டமேசை மாநாடுகளில் தீவிரமாகப் பங்கேற்றார். முதலியார் மைசூர் மாநிலத்திலிருந்து அரசியலமைப்பு சபைக்குச் சென்றார். இந்தியாவில் வலுவான கூட்டாட்சி அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்று விரும்பியவர். ஐ.நா.வுக்கான பல இந்திய பிரதிநிதிகள் குழுக்களுக்கு அவர் தலைமைதாங்கினார். 1946 ஆம் ஆண்டில் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் முதல்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனெஸ்கோவின் நிர்வாகக் குழுக்களின் தலைவராகவும் பணியாற்றினார். முதலியார் சர்வதேச தொழிலாளர் அமைப்பில் (ILO) நன்குமதிக்கப்படும் பிரதிநிதியாகவும் இருந்தார், 1962 முதல் 1969 வரை ஏழு ஆண்டுகளுக்கு குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலியாருக்கு 1954-ம் ஆண்டு பத்மபூஷண் விருதும், 1970-ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது.
  • சர்.ஏ.இராமசாமி தலைமையில் 1946இல் செயல்படத் தொடங்கிய பொருளாதார சமூகக் கவுன்ஸில் (இனி ECOSOC), தனது முதற் கூட்டத்திலேயே, ‘அனைவருக்கும் மனித உரிமைகள் கிடைத்து, அடிப்படைச் சுதந்திரங்களுக்கான சர்வகுல மரியாதையை, கடைப்பிடித்தலை உறுதி செய்து மேம்படுத்துவதற்குமான பொறுப்பாற்றுவதற்கு உரிய ஆலோசனையையும் உதவியையும் வேண்டி மனித உரிமைகள் ஆணையம் ஒன்றைநிறுவுகிறது’ (தீர்மானம் 5(I)] பிரிவு A 1.) எனத் தீர்மானித்தது. இதன்படி, ஐ.நா.வில் மனித உரிமை ஆணையம் அமைவதற்கான முதற்காரணகர்த்தாகவும் சர்.இராமசாமி விளங்குகிறார் என்பதைப் பெருமையோடு குறிப்பிடலாம்.
  • முதன்முதலாக அமைக்கப்பட்ட ஆணையம் 1947 மார்ச் 31இல் காலாவதியாகும் என பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்டு ஒன்பது உறுப்பினர்கள் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆரம்ப உறுப்பினர்களாக 9 பேர்-திருவாளர்கள் எம். பால் பெர்க், நார்வே, பேராசிரியர் ரெனேகாசின், பிரான்ஸ், அலெக்சாண்டர் போரிசோவ், யு.எஸ்.எஸ்.ஆர், எம்.பெர்னாண்ட்டெஹவுஸ், பெல்ஜியம், விக்டர் ரவுல்ஹயாடிலா டோரே, பெரு, ட்யூ சன் பிர்கிஷ், யூகோஸ்லாவியா திருமதி பிராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட், அமெரிக்கா, டாக்டர்சி.எல்.சியாவூ, சீனா, கே.சி.நியோகி, இந்தியா நியமிக்கப்பட்டனர்.
  • உறுப்பினர்கள் அவர்களது நாடுகளின் பிரதிநிதியாகக் கருதப்படாமல் அவர்களது தனிப்பட்ட தகுதியால் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாடுகளின் பிரதிநிதி என்றால் ஒவ்வொரு கருத்துக்கும் அந்தந்த நாட்டு அரசுகளின் ஒப்புதல் பெற வேண்டிய தாகிக் கால தாமதங்கள் ஏற்பட்டுவிடும் எனக்கருதியே, இந்த ஏற்பாட்டை தலைவர் சர்.ஏ. இராமசாமி, இந்தியாவில் அவர் பெற்றிருந்த நிர்வாக அனுபவத்தின்மூலம் பரிந்துரைத்ததாக அறியப்படுகிறது. ஐ.நா.வில் கவுன்ஸில் தலைவராகப் பொறுப்படையும் முன் அவர் இந்தியாவின் வைஸ்ராய் லார்டு மவுண்ட்பேட்டனின் செயலாளராக இருந்துள்ளார்.

டாக்டர் கே.சி.நியோகி

  • அடுத்தாக, ஐ.நா.வின் முதல் மனித உரிமை ஆணைக் குழுவில், முதல் ஒன்பது பேர்களில் ஒரு உறுப்பினராகச் சேர்க்கப்பட்ட கே.சி.நியோகி பற்றி பலர் அதிகம் அறிந்துள்ளார்களா என்பது ஐயமே. இந்தியாவின் மக்களவை வெளியிட்டுள்ள யார், எவர் (Who is Who) என்ற விவரக் குறிப்பில்கூட, கே.சி. நியோகி (1888-1970) ஐ.நா.வில் முதல் மனித உரிமை ஆணைக் குழுவில் பணியாற்றிய விவரம் விடுபட்டிருக்கிறது. 1946ஆம் ஆண்டில், ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் முதல் அமர்வின்போது உருவாக்கப்பட்ட குறுங்குழு(NucleusCommittee) ஒரு ஆயத்தக் குழுவாகச் செயல்பட்டது.
  • அதில் நியோகி, மற்ற சக உறுப்பினர்களுடன் ஈடுபாட்டோடு இணைந்து மனித உரிமைகள் குறித்த உலகளாவிய பிரகடனத்தை வரைவதற்கான சரியான கொள்கை அடித்தளத்தை நிறுவினார். இக்குழுவில் அவரது பதவிக்காலத்தில் நேருவுடன் இருந்த நெருக்கத்தால் ஐக்கிய நாடுகள் சபைக்கும், இந்திய அரசுக்கும் இடையே பாலமாகக் கருதப்பட்டார் நியோகி. 1947ல் அமைந்த முதல் ஒன்றிய அமைச்சரவையில் சேர பிரதமர் நேரு இவரை அழைத்ததால், மனித உரிமைக் குழுப் பணியிலிருந்து விலகி அவர் டெல்லி திரும்ப நேர்ந்தது.
  • வங்காளத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் டாக்டர் கே.சி.நியோகி இந்திய விடுதலைக்குப்பின் பண்டித நேரு தலைமையில் அமைந்த மத்திய அரசின் முதல் அமைச்சரவையில் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக 6.9.1947 முதல் 6.4.1948 வரையிலும், மத்திய வணிக அமைச்சராக 6.4.1948 முதல் 26.1.1950 வரையும் பணியாற்றியுள்ளார். மேலும் இந்தியாவில் மிகக் குறுகியகாலம் மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் (35 நாட்கள் மட்டும்); பட்ஜெட் எதுவும் சமர்ப்பிக்காத ஒரு நிதியமைச்சர் என்ற பிறிதொரு அறிமுகமும் இவருக்குண்டு. (மத்திய முதல் நிதியமைச்சராக -ஆகஸ்ட் 15, 1947 முதல் ஆகஸ்ட் 17, 1948 வரை-இருந்த ஆர்.கே. சண்முகம்செட்டி சில குற்றச்சாட்டுகள் காரணமாகப் பதவி விலக நேர்ந்தது. உடனே நேரு, நிதியமைச்சர் பொறுப்பை டாக்டர் நியோகிக்கு அளித்தார். பிறகு ஜான்மத்தாய் செப்டம்பர் 22, 1948இல் நிதியமைச்சர் பொறுப்பேற்கும்வரை, 35 நாட்கள் நியோகி நிதியமைச்சராக இருந்தார்.)
  • கே.சி.நியோகி இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தவர். வங்காளத்திலிருந்து இந்திய அரசியலமைப்பு சபைக்கு (1946) தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதற்குமுன் பிரிட்டிஷ் காலத்தில் இருந்த மத்திய சட்டமன்றத்திற்கும் வங்காளத்தின் பிரதிநிதியாக அவர் 1920, 1923, 1926 மற்றும் 1930 ஆம்ஆண்டுகளில்தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
  • மத்திய (இம்பீரியல்)சட்டமன்ற உறுப்பினராக இருந்த நியோகி,1927இல் நிறுவப்பட்ட இந்திய ஒளிப்பதிவு குழுவில் (Indian Cinematograph Committee) நியமனம் பெற்றிருந்ததும், அக்குழுவின் தலைவர் பி.டி.ரங்காச்சாரியாவுடன் இணைந்து இந்தியத் திரைப்படத் துறையில் தணிக்கையின்(Censor) அவசியத்தை வலியுறுத்தியவர் என்பதும் குறிப்பிட உரியது.
  • 1944 ஆம்ஆண்டில், பிரிட்டிஷ் அரசாங்கத்தின்கீழ் உணவு விநியோகத்தின் அவலநிலை குறித்து மத்திய சட்டமன்றத்தில் அவர் ஆற்றியது ஒரு உணர்ச்சிகரமானபேருரை. உணவுப்பொருட்கள் சேமிப்பு, விநியோகம் ஆகிய துறைகளில் ஆங்கிலேய அரசு கவனம் செலுத்தாததை அவர் புள்ளி விவர ஆதாரங்களோடு எடுத்துரைத்து, 1943 வங்காளப் பஞ்சத்தின்போது இழந்த பல்லாயிரம் உயிர்கள் பற்றியும் விரிவாகத், துணிவாக, உருக்கமாக உரைத்தது ஆங்கிலேயேர்களையே வியக்க வைத்திருக்கிறது.
  • மாநிலக் கல்லூரி (கொல்கத்தா) மற்றும் தாக்கா கல்லூரியில் சட்டக் கல்வி கற்ற நியோகி, லீலாதேவி என்பவரைத் திருமணம் செய்து-1935 முதல் 1940 வரை-மயூர் பஞ்ச் மாநிலத்தின் திவானாகவும் பணியாற்றினார். இவையும் அவரைப் பற்றிப் பொதுவாக அறியப்படாத செய்திகளே.
  • நேருவின் நம்பிக்கைக்குரியவராக நியோகி இருந்தாலும் சில முக்கியப் பொது விசயங்களில் (குறிப்பாகக் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கியிருந்த அரசியல் சட்டப்பிரிவு 370) நேருவிடமிருந்து மாறுபடும் நிலைப்பாடு கொண்டிருந்தார். இதே நிலைப்பாடு கொண்டிருந்த ஷ்யாம பிரசாத் முகர்ஜி (நேருவின் காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து விலகிப் பாரதிய ஜனசங்கம் கட்சியைத் தோற்றுவித்தவர்) 1950 நேரு-லியாகத் ஒப்பந்தத்தை எதிர்த்து ஏப்ரல் 8, 1950இல் நேருவின் அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்தார். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதேநாளில் ஷ்யாம பிரசாத் முகர்ஜியுடன் உடன்பட்டு, நியோகியும் ராஜிநாமா செய்தார் என்பது எல்லோருக்கும் தெரிவதில்லை. (முகர்ஜி ஆரம்பித்த ஜன சங்கத்தின் வாரிசாக தற்போது உள்ள கட்சியினருக்கும்!).
  • இந்தியாவில் திட்டக்குழு என்ற அமைப்பு உருவாகக் காரணமாகவும் நியோகி இருந்துள்ளார். முதலில் 1946ஆம் ஆண்டில் கே.சி.நியோகி தலைமையில் ஆலோசனை திட்டவாரியம் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரையின் பேரில் இந்திய அரசின் (அதாவது மத்திய அமைச்சரவை) நிர்வாக தீர்மானத்தின் மூலம் 1950 ஆம் ஆண்டில் திட்டக்குழு அமைக்கப்பட்டது. தனது அமைச்சரவையிலிருந்து நியோகி 1950இல் விலகினாலும், அவரது சேவைகளைப் பெற எண்ணிய நேரு நவம்பர் 1951 இல், நியோகியை இந்தியாவின் முதல் நிதி ஆணையத்தின் தலைவராக இந்தியக் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் நியமிக்கச் செய்தார்.
  • இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கிய முதல் திட்டக்குழுத் தலைவராக நியோகியை 1952 இல் நியமித்தார்.

திருமதி ஹன்ஸா ஜீவராஜ் மேத்தா

  • சுதந்திரப் போராட்ட வீரரும், பெண்கள் உரிமைகளின் வலுவான இந்திய ஆதரவாளராகவும் விளங்கியவர் திருமதி ஹன்சா ஜீவராஜ் மேத்தா. உலக மனித உரிமைப் பிரகடனத்தில் ஒருமுக்கியமான அம்சத்தைத் திருத்தி, அதை அனைவரையும் ஏற்றுக்கொள்ளச் செய்த பெருமை இவருடையது. அவர் விழைந்த மாற்றம் அளவில் சிறியதாக இருக்கலாம்; ஆனால் அது வாமன விஸ்வரூபம் போலப் பிரம்மாண்டமானதாகிவிட்டது. அச்சிறிய மாற்றமே மனித உரிமைப் பிரகடனத்தின் ‘மங்கலப்பொட்டு’, ‘பூரணச்சிலையின் கண்திறப்பு’! பிரகடனத்தின் பாலினப் பொதுமையை நிலைநிறுத்தி உலகிற்கு வெளிப்படுத்தும் உன்னத வாக்கியமாக்கிவிட்டது.
  • மனித உரிமைப் பிரகடத்தின் முதல் பிரிவு (Article 1.All men are born free and equal in dignity and rights. They are endowed with reason and conscience and should act towards one another in a spirit of brotherhood.) என்றிருப்பதைவிடப், பாலினச் சமத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வண்ணம் All men என்பதற்குப் பதில் All human beings என்று இருப்பதே பொருத்தமாக இருக்கும் என்று உணர்ச்சிகரமாக வாதாடினார். அடிப்படையில் ஆண்-பெண் சமத்துவத்திற்காகவும், பெண்களது மேம்பாட்டிற்கு உழைப்பவராகவுமிருந்த திருமதி ஹன்ஸா மேத்தாவின் வாதத்திற்கு மறுப்பு எதுவும் எழவாய்ப்பில்லாமல், அவரது திருத்தம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்படியே பிரகடனமானது. சிறு திருத்தம்தான் என்றாலும் அந்தத் திருத்தம் உலகமனித உரிமைப்பிரகடனத்தின் முகத்தையும், அகத்தையும் நிறைவுடையதாக்கி இருப்பதை மனித உரிமை ஆய்வாளர்கள் பெரிதும் போற்றிவருகிறார்கள்.
  • ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்திற்கு இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவால், டாக்டர் நியோகியின் இடத்தில் நியமிக்கப்பட்டவர் ஹன்சா மேத்தா. உலகெங்கிலும் உள்ள ஜனநாயகங்களுக்கு ஒரு முன்மாதிரியாக, முக்கியமானதொரு ஆவணத்தில் பாலின சமத்துவம் என்ற கருத்தை கொண்டுவருவது பாராட்டுக்குரிய செயலல்லவா?இந்தியாவின் மகள் டாக்டர் ஹன்ஸா மேத்தாவுக்கு இன்றளவும் உலகப் பெண்கள் நன்றி தெரிவிக்கிறார்கள் என்கிறது ஆய்வாளர் ஒருவரின் மதிப்பீடு. 'ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான்கிமூன்(2015 இல்), திருமதி மேத்தாவின் திருத்தம். ‘’எவ்வளவு பொருத்தமானது, எவ்வளவு பொருத்தமானது" என்று வியந்து கூறியுள்ளார்.
  • ஹன்ஸா ஜூலை 3, 1897இல் பிறந்தவர். அவரது தந்தை மனுபாய் நந்தசங்கர் மேத்தா பரோடாவின் அப்போதைய திவானாக இருந்தார். சிறுகுழந்தையாக இங்கிலாந்து சென்ற இவர், சமூகவியல் மற்றும் இதழியல் படிப்பு படித்தார் 1918 ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்டத்தின் மற்றொரு முன்னணிப் பெண் தலைவர் சரோஜினி நாயுடு மூலம், குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியைச் சந்தித்தது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் சேருவதற்கான பொறியை அவருள்ளத்தில் மூட்டியது.
  • ஒத்துழையாமை மற்றும் சுதேசி இயக்கங்களில் ஈடுபட்டார், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தார், சிறைப்பட்டார். 1924 ஆம் ஆண்டில், அவர் காந்தியின் தனிப்பட்ட மருத்துவரான ஜீவராஜ் நாராயண் மேத்தாவை மணந்தார். "வைசியமேத்தா" குலத்தவரான அவரைத் திருமணம் செய்து கொள்ளும் ஹன்ஸாவின் முடிவை அவர்கள் இனத்தவர்கள் கடுமையாக எதிர்த்தனர். (பிற்காலத்தில் குஜராத் தனிமாநிலமானபோது ஜீவராஜ் நாராயண் மேத்தா அம்மாநிலத்தின் முதல் முதல்வரானார்.) இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய 15 பெண்களில் ஹன்ஸா மேத்தாவும் ஒருவர். காங்கிரஸ் கட்சி சார்பில் பம்பாயில் இருந்துஅரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ஒருமுறை,1932 இல், டாக்டர் ஜீவ்ராஜ் மேத்தா தம்பதியரை  ஆங்கில ஆட்சியாளர்கள் கைது செய்தபோது, கோபாலகிருஷ்ண கோகலேவின் வாராந்திர வெளியீடான "இந்தியாவின் சேவகன் "டாக்டர்ஜிவ். ' என்.மேத்தா மற்றும் அவரது மனைவி திருமதி ஹன்சாமேத்தா இருவரும்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். டாக்டர் மேத்தா ஒரு தீவிர அரசியல்வாதியாக அறியப்பட்டவரில்லை, அவர் சிறையில் வைக்கப்பட்டதற்குக் காரணம், அவர் ஒரு காங்கிரஸ் தொண்டருக்கு (திருமதி ஹன்ஸா) அடைக்கலம் கொடுத்தார் என்பது மட்டுமே’’ என்று எழுதியது குறிப்பிடஉரியது.
  • இந்திய அரசியலின் எதிர்காலத்தை வரையறுக்கும் அரசியல் செயல்முறைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டார். மாகாண சுயாட்சிக்கு அழைப்பு விடுத்த இந்திய அரசுச் சட்டம், 1935 அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் தேர்தல் அரசியலை நோக்கி ஹன்ஸாவை அது இழுத்தது. 1937 இல் பம்பாய் சட்டமன்ற மேலவை தொகுதியில் இருந்து முதல்மாகாணத் தேர்தலில்போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் கவுன்சிலில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார், பின்னர் அரசியலமைப்புசபை உறுப்பினரானார். அந்த சபையில், அடிப்படை உரிமைகள் துணைக்குழுவில் அவர் சேர்க்கப்பட்டது அவரளவில் முக்கியமானது, ஏனெனில் அப்பணியின்போது பாலின சமத்துவம், பொது சிவில் கோட் ஆகியவற்றிற்கான தனது கருத்துக்களை அவர் முன்வைக்க வாய்ப்பானது.
  • அரசியலமைப்பு சபை உறுப்பினராவதற்கு முன்பே ஹன்ஸா பெண்களின் உரிமைகளுக்காக போராடியவராவார். அகில இந்திய பெண்கள்மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றுப் பணி செய்துள்ளார். இத்தகைய பணி அனுபவங்கள் ஐ.நாவின் மனித உரிமைக்குழுவில் அவர் பணியாற்றுங்காலத்தில் சிறப்பாக வெளிப்பட்டன. சிறந்த கல்வியாளராகப் புதுதில்லியில் லேடி இர்வின் கல்லூரி, மனையியல், கல்வி ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கான பெண்கள் கல்லூரி" தொடங்கும் பணிகளில் முன்நின்று ஈடுபட்டார்.
  • வரலாற்றுச் சிறப்புக்குரிய 1947, ஆகஸ்ட் 14-15 நள்ளிரவு அரசியல் நிர்ணயசபைக் கூட்டத்தில் புதிய அரசின் உதயத்தைக்குறிக்க, இந்தியப் பெண்கள் சார்பில் இந்திய தேசியக் கொடியைப் பிரதமரிடம் வழங்கியவர் திருமதி ஹன்ஸா மேத்தா. அவரளித்த அந்தக் கொடிதான் அந்நாளில் –அதுவரை பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ்கொடி இறக்கப்பட்டு- இந்திய தேசியக்கொடியாக ஏற்றிவைக்கப்பட்டது.
  • இதுவரையில் ஐநா அமைப்பு உருவாக்கத்தில், அதன் அமைப்புகளில் பங்களிப்பு செய்த, குறிப்பாக உலக மனித உரிமைப்பிரகடனம் உருவாக்கத்தில் பங்கேற்ற இந்தியர்களைக்குறித்த விவரங்களைக் கண்டோம். இவற்றுடன் கூடுதலாகக் குறிப்பிட உரித்தான செய்தியுடன் இக்கட்டுரையை நிறைவு செய்யலாம்.
  • மனித உரிமைப் பிரகடன வரைவுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே காலத்தில், யுனெஸ்கோ அமைப்பின் தலைமைப் பொறுப்பிலிருந்த ஜூலியன் ஹக்ஸ்லி (ஆல்டஸ் ஹக்ஸ்லியின் சகோதரர்) உலகநாடுகளின் தலைவர்கள், தத்துவஞானிகள் பலரைத்தொடர்பு கொண்டு மனித உரிமைகள் குறித்த கருத்துக்களை சேகரிக்க முற்பட்டார். அந்த வகையில் இந்தியாவில், மகாத்மா காந்தியடிகள், பேராசிரியர் ஹுமாயூன் கபீர், பேராசிரியர் எஸ்,வி. பன்டாம்பேகர் (S.V.Puntambekar) ஆகிய மூவரிடமிருந்து கருத்துக் கேட்கப்பட்டனஎன்ற தகவல் அதிகம் வெளிப்படுவதில்லை. இவர்கள் மூவரும் மனித உரிமைகள் குறித்து யுனெஸ்கோவுக்கு அளித்த கருத்துகள் விரிவாக எழுதப்பட உரியன. காந்தியடிகள் மட்டும் 25 மே 1947ல் யுனெஸ்கோ செயலருக்கு, இரத்தினச் சுருக்கமாக (இரயில் பயணத்தின்போது) எழுதிய கடிதத்தில்” படிப்பறிவில்லாத, ஆனால் அறிவான என் தாயிடம் இருந்து,எல்லா உரிமைகளுமே நன்கு நிறைவேற்றப்பட்ட கடமைகளில் இருந்துதான் பெறமுடியும் என்பதைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
  • சுருக்கமாக, ‘உரிமையும் கடமையும் நாணயத்தின் இரு முகங்கள்’ என்பது காந்தியடிகளின் கருத்து.உடன்படஉரியதே.
  • (இன்று (டிசம்பர் 10) - மனித உரிமைகள் நாள்)

நன்றி: தினமணி (10 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்