TNPSC Thervupettagam

மனிதக் கடத்தலைத் தடுப்போம்

February 5 , 2024 340 days 200 0
  • மனிதக் கடத்தல் எனும் சமூகக் குற்றம் இன்று உலகளாவிய பிரச்னையாக உருவாகியுள்ளது. வளரும் நாடுகளில் நிலவும் வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை, உள்நாட்டுப்போர், அரசியல் குழப்பங்கள், இன, மதக் கலவரங்கள் ஆகியவைற்றைப் பயன்படுத்தி உலகெங்கும் உள்ள சமூக விரோத கும்பல்கள், மனித கடத்தலில் ஈடுபடுகின்றன.
  • பெரும்பாலும் ஆசிய நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் மனிதா்கள் அதிக அளவில் கடத்தப்படுகின்றனா். போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மனித கடத்தலில் அதிக அளவில் பணம் புரளுவதால், இக்குற்றச் செயலில் ஈடுபாடுவோர் உலக அளவில் தங்களுக்குள் தொடா்பு வைத்து மிகத்தீவிரமாக இயங்குகின்றனா்.
  • உலகில் மாற்று உடல் உறுப்பு சிகிச்சைக்காக காத்திருப்பவா்கள் அதிக அளவில் உள்ள நிலையில், உறுப்பு தானம் செய்வோர் மிக குறைந்த அளவி உள்ளதால் மனித கடத்தல் அதிகரித்து வருகிறது. மேலும், பிள்ளைப்பேறு இல்லாதோர் தேவைகளுக்காகவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தவும் குழந்தைகள் பெருமளவு கடத்தப்படுகின்றனா். இவ்வாறு கடத்தப்படும் குழந்தைகளில் சுமார் 80 சதவீதத்தினா் பெண்குழந்தைகள் என்பதுதான் வேதனையின் உச்சம்.
  • குடும்பங்களில் ஏற்படும் சச்சரவுகள் காரணமாக விரத்தியுற்றவா்கள், உறவுகளால் புறக்கணிக்கப்படுவா்கள், மன அழுத்தத்தம் போன்ற காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறுபவா்களே மனித கடத்தலில் ஈடுபடும் சமூக விரோத கும்பல்கள் விரிக்கும் வேலையில் சுலபமாக வீழ்ந்து விடுகின்றனா்.
  • நம் நாட்டில் நடைபெறும் மனித கடத்தல் தொடா்பாக சமீபத்தில் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சகம், 2018 முதல் 2022 வரை 10,659 மனித கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன எனவும், இக்கடத்தல்கள் தொடா்பாக 26,840 நபா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு இவா்களில் 19,821 நபா்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
  • மனிதக் கடத்தல் தொடா்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக கடந்த ஐந்தாண்டுகளில் 1,392 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தெலங்கானா, ஆந்திர பிரதேசத்தில் முறையே 1301 மற்றும் 987 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
  • நம் தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் சுமார் 6,000 போ் காணாமல் போயுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இவா்களில் பலா் கடத்தப்பட்டு இருப்பதற்கான சாத்திய கூறு உள்ளதை மறுக்க முடியாது. மனித கடத்தலில் ஈடுபடுவோர் மீது பதியப்படும் வழக்குகளில், தகுந்த முறையில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்படுபவா்களில் ஒரு சிறு பிரிவினா் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனா்.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் மனித கடத்தல் தொடா்பாக வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப் பட்டவா்களில் தண்டிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை1,031மட்டுமே. அதாவது 4.8 சதவீதம். மனித கடத்தலில் ஈடுபடுவோர் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தண்டிக்கப்படுவதும், பெரும்பான்மையோர் தப்பித்து விடுவதும் அக்குற்றத்தில் ஈடுபடு வோருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்து விடுகிறது.
  • நம் நாட்டின் மேற்குவங்கம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலிருந்து மனிதா்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு, நாட்டின் பிற பகுதிகளுக்கு குறிப்பாக மகாராஷ்டிரம், கா்நாடகம் மாநிலங்களுக்கு கொண்டு செல்லப் படுகின்றனா்.
  • நம் நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,75,125 குழந்தைகள் காணாமல் போயுள்ளனா். இவா்களில் 2,40,502 குழந்தைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனா். மீட்கப்பட்ட குழந்தைகளில் பலா் தங்கள் ஊா், பெற்றோர் பற்றிய விபரங்களைக் கூட சொல்ல இயலாத சிறு வயதினா். இவா்களை அவா்களின் பெற்றோர் மற்றும் உறவினா்களிடம் சோ்ப்பதற்கு வழியில்லாததால், இவா்கள் அரசின் சமூக நல இல்லங்களில் சோ்க்கப்படுகின்றனா்.
  • வீட்டை விட்டு வெளியேறும் பதின்பருவத்து சிறுவா்கள் துரதிஷ்டவடமாக, தீவிரவாதிகள் கைகளில் சிக்கும் பட்சத்தில் அவா்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் வகையில் வளரும்போதே மூளைச்சலவை செய்யப் படுகின்றனா்.சமூக விரோதிகளால் கடத்தப்படும் ஆண் குழந்தைகள் திருட்டு, போதை பொருட்கள் கடத்தல், போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுத்தப்படுவதோடு, பிச்சை எடுக்கவும் நிர்பந்திக்கப்படுகின்றனா்.
  • நம் நாட்டில் சட்டவிரோத மனித கடத்தல் தடுப்புச் சட்டம் 1956-இல் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தை கடுமையாக்கும் வகையில் 2006-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தங்களின்படி, முதல் முறையாக மனித கடத்தலில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மீண்டும் இக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனையும் வழங்க முடியும். நம் நாட்டின் அரசியல் சாசனமும் பிரிவு 23 மூலம் மனித கடத்தல் மற்றும் அதன் தொடா்பான கட்டாய உடலுழைப்பு மற்றும் பிச்சை எடுத்தலை தடை செய்கிறது.
  • மனித கடத்தலால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வு மற்றும் நிவாரணத்திற்காக கடந்த 2012-2019 ஆண்டுகளில் ரூபாய் 544.53 கோடி ஒதுக்கப்பட்டது.இதில் ரூபாய் 128.27கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டுகளில் மனித கடத்தலால் பாதிக்கப்பட்டவா்கள் ஆயிரக்கணக்கானோர். எனினும், நிவாரணம் கோரிப் பெற்றோர் மிகச் சிலரே. இதற்கு காரணம் மனித கடத்தலால் பாதிக்கப்பட்ட வா்களுக்கே தாங்கள் இழப்பீடு, நிவாரணம் பெறத்தகுதியானவா்கள் என்ற விழிப்புணா்வு இல்லாமையே.
  • மத்திய அரசு, கடத்தப்படும், காணாமல் போகும் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகசைல்ட் ட்ராக் போர்டல்என்ற செயலியை உருவாக்கி
  • யுள்ளதென பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிதி இராணி சமீபத்தில் தெரிவித்துள்ளார். இதனால் கடத்தப்படும் குழந்தைகள் மீட்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • மனிதக் கடத்தல் தொடா்பான விழிப்புணா்வு மக்களிடையே ஏற்படுத்தப் படுவதோடு, காவல்துறையின் மேம்பட்ட செயல்பாடும் இருப்பின் மனித கடத்தல் எனும் சமூக குற்றம் நடைபெறாமல் தடுக்கப்படுவது சாத்தியமே.

நன்றி: தினமணி (05 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்