TNPSC Thervupettagam

மனிதக் கழிவு அகற்றுதலின் அவல வரலாறு

July 24 , 2024 172 days 174 0
  • ‘மனிதக் கழிவை மனிதர் அகற்​றும் இழிவை ‘அடிமைத்​தனத்​தின் மிச்​சம்’ என்கின்றன ஐக்கிய நாடுகள் அவையின் ஆவணங்​கள். இத்தகைய இழிவில் பன்னெடுங்​காலமாக ஈடுபடுத்​தப்​பட்டுள்ள மக்களை மீட்க மகத்தான போராட்டங்களை வேறு யாரை​யும்விட அதிகமாக முன்னோடி கம்யூனிஸ்ட்டுகள் 1950களில் நடத்தி​யிருக்​கின்​றனர்.
  • தமிழகத்தைப் பொறுத்தவரை, மனிதக் கழிவு அகற்றும் மனிதர்கள் மத்தியிலிருந்து எஸ்.ஏ.தங்கராஜன் திண்டுக்கல்லில் உருவானார். அவர் ஏ.பாலசுப்​ரமணியன் என்னும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் அரவணைப்​போடு வீரமிக்க போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.
  • மனிதக் கழிவு அகற்​றுதல் உள்ளிட்ட பணிகளைச் செய்த துப்​புரவுப் பணியாளர்​களைக் காவல் துறை அதிகாரி சாட்டை​யால் அடிக்கிற பழக்கம் அப்போது இருந்துள்​ளது. கம்யூனிஸ்ட்டுகள் அளித்த தைரியத்​தால் நிமிர்ந்து நின்ற துப்​புரவுப் பணியாளர்​கள், அடித்த சாட்டையைப் பிடுங்​கித் திருப்பி அடித்​துள்ளனர்.
  • மனிதக் கழிவு அகற்​றும் பெற்​றோருக்​குப் பிறந்த பெசவாடா வில்சன் சுமார் 30 ஆண்டு காலப் போராட்டங்​களுக்​குப் பிறகு தேசியத் தலைமையாக உருவாகித் தற்போது போராடிக்​கொண்​டிருக்​கிறார். ஐரோப்​பாவில் அடிமை​களுக்கு எஜமானர் இருப்​பார். அவர்கள் அவர் சொல்​வதற்கு அடிபணிந்து நடப்​பார்​கள்.
  • ஆனால், மனிதக் கழிவு அகற்​று​வோருக்கு யாரும் எஜமானர்கள் கிடை​யாது. அடிமைத்​தனத்​தின் மிச்​சமாக இருக்கிற மனிதக் கழிவு அகற்​று​வோர் மனதில் “மனிதக் கழிவு அகற்​றுதல் என்பது நாம் செய்ய வேண்டிய வேலை என்று பதிந்து​விட்டிருக்​கிறது” என்கிறார் பெசவாடா வில்​சன்.
  • அதிலிருந்து தப்பிப்​ப​தற்காக அவர்கள் எதையும் செய்ய முடி​யாதவகை​யில் அவர்கள் ‘கண்​களால் காண முடியாத ஒரு பொருளாதாரச் சிறைக்​குள்’ அடைக்​கப்​பட்டுள்​ளனர். பொருளாதார வகையிலும் பண்பாட்டு வகையிலும் அவர்கள் இரட்டை அடிமைச் சங்கிலிகளால் பிணைக்​கப்​பட்டுள்​ளனர்.

சட்டத்​தா​லும் அகலாத இழிவு:

  • தமிழில் சில பத்தாண்​டுகளுக்கு முன்பாக ‘எடுப்புக் கக்கூஸ்’ என்ற வார்த்தை பரவலாக இருந்​தது. மதுரையில் சிறு​வயதில் நேரில் பார்த்​திருக்​கிறேன். சுவரில் ஓட்டை இருக்​கும். அந்த ஓட்டையை மறைத்து ஒரு தகரம் தொங்​கும். அதனை விலக்கி மனிதக் கழிவை அகற்​று​வார்​கள். 1993இல் இத்தகைய கழிப்​பறைகளைக் கட்டுவது சட்டப்படி குற்றம் என்று சட்டம் வந்து​விட்டது. எனினும், அந்த அவலம் நீங்​கிவிட​வில்லை.
  • 2011 கணக்​கெடுப்​பின்​படி, இந்தி​யாவில் 7 லட்சத்து 94 ஆயிரத்து 360 எடுப்​புக் கக்கூஸ்கள் இன்னமும் உள்ளன. மேலே சொன்ன எடுப்புக் கக்கூஸ்கள் மட்டுமல்​லாமல், 13 லட்சத்து 14 ஆயிரத்து 652 கழிப்​பறைகள் மனிதக் கழிவு​களைத் திறந்​தவெளி​யில் கொட்டும்​வகை​யில் அமைக்​கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 21 லட்சத்து 9 ஆயிரத்து 42 கழிப்​பறைகள் மனிதக் கழிவுகளை மனிதர்களே கையாளும் வகையில் உள்ளன. உலர் கழிப்​பறைகளில் கழிவு அகற்​று​வோரில் பெரும்​பாலோர் பெண்​கள்.
  • மனிதக் கழிவு அகற்​றுதலில் தலித் சாதி​களின் அடுக்​கில் அடிமட்டத்​தில் உள்ள சாதிகள் பொதுவாக ஈடுபடு​கின்றன. மத்தியப் பிரதேசத்​தில் இஸ்லாம் மதத்​துக்கு 200 வருடங்​களுக்கு முன்னால் மாறிய தலித்​துகள் ‘ஹலால்​ஹோர்’ என்னும் பெயரில் உள்ளனர். அவர்கள் சான்றிதழின்படி இதர பிற்படுத்​தப்​பட்ட சமூகத்​தினராக இருந்​தா​லும் மனிதக் கழிவு அகற்றுதலில் ஈடுபட்டுள்​ளனர்.

வரலாற்றில்...

  • மனிதக் கழிவை மனிதரே அகற்​றும் இழிவு என்பது மனித இனத்​தின் வரலாற்றின் ஒரு கட்டத்​தில் உலகின் பல்வேறு நாடுகளில் நடைமுறை​யில் இருந்துள்​ளது. ஐரோப்​பாவில் முதலாவது பொதுக் கழிப்​பிடம் பொ.ஆ.1214இல் கட்டப்பட்டது. அதன் பிறகுதான் அங்கே மனிதக் கழிவை மனிதர் அகற்றும் இழிவான தொழில் ஆரம்​பமானது.
  • இங்கிலாந்​தின் அரசி முதலாம் எலிசபெத் (1533-1603) இன் அரண்​மனை​யில் இன்றைய நவீனக் கழிப்​பறை​யின் முன்னோடி வடிவம் ஒன்று 1596இல் நிறு​வப்​பட்டது. மனிதக் கழிவை மனிதர் அகற்றத் தேவை இல்லாத வகையில் தண்ணீரால் தன்னைத் தூய்​மைப்​படுத்​திக்​கொள்கிற கழிப்​பறை​யின் மாதிரி வடிவம் அது.
  • மனிதக் கழிவை மனிதர் அகற்ற வேண்டிய இழி நிலை​யைத் தொழில்​நுட்​பத்​தின் வளர்ச்சி மாற்றியமைத்த காலக்கட்டம் அப்போதிலிருந்துதான் ஆரம்​பமாகியிருக்​கிறது. 1775இல் இத்தகைய ஒரு கழிப்​பறைக்கான கண்டு​பிடிப்பு உரிமை வழங்​கப்​பட்டது. இதன் தொடர்ச்​சியாக இன்று மேலை நாடுகளில் மனிதக் கழிவை மனிதர் அகற்​றும் இழிவு முன்னதாகவே ஒழிக்​கப்​பட்டுள்​ளது.

இந்திய நிலவரம்:

  • இந்தி​யாவில் மனிதக் கழிவை மனிதர் அகற்​றும் இழிவு இன்னமும் ஒழிக்​கப்​படாமல் இருப்​ப​தற்கான முதலாவது முக்​கியமான காரணம், அது சாதி சமூக அமைப்​புமுறையோடு பின்னிப் பிணைந்​திருப்​பது. இரண்​டாவது காரணம், தொழில்​நுட்​பத்​தின் வளர்ச்சி இன்னமும் இந்தி​யாவின் அனைத்​துப் பிரிவு​களி​லும் பரவாமல் இருப்​பது.
  • கிறிஸ்து பிறப்​புக்கு முந்தைய நூற்​றாண்​டுகளில் இந்தி​யாவில் உருவான மெளரியப் பேரரசு (பொ.ஆ.மு. (கி.மு.) 322-184) காலக்​கட்டத்​திலும் மனிதக் கழிவை மனிதர் அகற்​றும் இழிவு நடைமுறை​யில் இருந்தது என்கிறது, மகாராஷ்டிர மாநில அரசின் கீழ் தன்னாட்சி அமைப்பாக புணேவில் செயல்​படும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆய்வு - பயிற்சி நிலை​யம், மனிதக் கழிவை மனிதர் அகற்​றும் இழிவு தொடர்​பாகத் தயாரித்​துள்ள ஆய்வு அறிக்கை. அன்று பாடலிபுத்​திரம் என அழைக்​கப்​பட்ட இன்றைய பாட்​னாவில் மனிதக் கழிவு அகற்​று​வோர் இருந்​தனர் என்றும் நகரத்​தின் தலைவர் இத்தகைய பணிகள் நடைபெறுவதை மேற்​பார்​வை​யிட்டார் என்றும் இந்த அறிக்கை தெரி​விக்​கிறது.
  • இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டனிலிருந்து கொண்​டுவரப்​பட்டதல்ல மனிதக் கழிவு அகற்​றுதல் என்னும் இழிவு. ஆனால், அவர்கள் இந்தி​யாவின் உள்ளாட்சி நிர்​வாகத்தை நவீனப்​படுத்​தி​யபோது, மனிதக் கழிவு அகற்​றுதலை​யும் ஓர் அமைப்​புரீதியான மாற்​றத்​துக்கு ஆட்படுத்​தினர். அவர்கள் இந்தி​யாவின் நெசவு மீதும் விவசாயத்​தின் மீதும் தாக்​குதல் நடத்தி அவற்​றைச் சீர்​குலைத்​த​போது, ஒடுக்​கப்​பட்ட மக்கள் வேறு வழியில்​லாமல் மனிதக் கழிவு அகற்​று​வோராக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்கிறது ஓர் ஆய்வு.
  • பெசவாடா வில்​சனின் இயக்கம் வேகமெடுத்த காலம் முதலாக, மறைந்த சமூக நீதிப் போராளி பி.எஸ்.கிருஷ்ணன் (ஐஏஎஸ்), அவரது நண்பர் மறைந்த எஸ்.ஆர்​.சங்​கரன் (ஐஏஎஸ்) உள்ளிட்ட ஜனநாயக சக்தி​களும், ஆங்காங்கே இடதுசாரி இயக்​கங்​களும் இந்த இயக்கம் மேலும் வலிமை அடைவதற்​குத் தங்களது பங்களிப்பைச் செலுத்​தி​யுள்ளனர்.
  • 11ஆவது ஐந்தாண்​டுத் திட்ட காலக்​கட்டத்​தில் மத்திய திட்ட கமிஷனில் ‘மனிதக் கழிவை மனிதர் அகற்​றுதலை ஒழிப்​ப​தற்கான ஒரு முனைப்​புக் குழு’ அமைக்​கப்​பட்டது. அதன் ஒருங்​கிணைப்​பாளராக பெசவாடா வில்​சனுக்​குப் பொறுப்​பளிக்​கப்​பட்டது.
  • மற்றவர்​களின் ஒத்துழைப்​போடு, உச்ச நீதி​மன்​றத்​தில் அவர் தாக்கல் செய்த பொதுநல மனுதான் மத்திய அரசையும் மாநில அரசுகளை​யும் கொஞ்சம் அசைத்​துப் பார்த்​தது. “அரசமைப்​புச் சட்டத்​தில் இந்தி​யர்​களுக்கு உத்தர​வாதம் செய்​யப்​பட்டுள்ள கண்ணியத்​துடன் வாழ்வதற்கான உரிமையை, எப்போது மனிதக் கழிவு அகற்​று​வோருக்கு வழங்​கு​வீர்​கள்?” என்று மத்திய அரசுக்கு 15 தடவைக்​கும் மேலாகக் காலக்​கெடுக்களை விதித்தது உச்ச நீதி​மன்​றம்.
  • தற்போது இந்தியா முழு​வதும் ‘மனிதக் கழிவு அகற்​றுகிற இழிவில்’ சிக்​கியிருக்​கிறவர்களைக் கணக்​கெடுக்​கும் பணியை பெசவாடா வில்​சனின் சஃபாய் கர்மசாரி ஆந்தோலன் அமைப்​புக்கு மத்திய அரசு அளித்​துள்​ளது. அதன் இணையதளத்​தில் இந்தக் கணக்​கெடுப்​பின் விவரங்கள் இந்திய மாநிலங்​களைக் குறிக்​கும் தேசப்​படத்​தோடு இணைக்​கப்​பட்டுள்ளன.

தமிழ்​நாட்டின் நிலை என்ன?

  • தமிழ்​நாட்டில் மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல் என்னும் இழிவில் சிக்கிய ஒரு மனிதர்கூட இல்லை என்று 2003இல் தமிழ்​நாடு அறிவித்​து​விட்டது. 2004இல் தாக்கிய சுனாமிப் பேரழிவுக் காலக்​கட்டத்​தில் பிணங்களை அகற்​றும் பணி செய்து​ கொண்​டிருந்​தவர்களில் மனிதக் கழிவு அகற்​று​வோரும் இருந்ததை சஃபாய் கர்மசாரி ஆந்தோலனின் தமிழ்​நாடு பொறுப்​பாளர்​களில் ஒருவரான சாமுவேல் நேரில் கண்டார்.
  • அவர்கள் பணியாற்றிய எடுப்​புக் கக்கூஸ்களை​யும் கண்டறிந்​தார். 1993இல் தடைசெய்​யப்​பட்டு, 20 ஆண்டு காலத்​துக்​குப் பிறகும் தமிழ்​நாட்டில் எடுப்​புக் கக்கூஸ்களும் மனிதக் கழிவு அகற்​று​வோரும் இருக்​கிறார்கள் என்ப​தையும் சஃபாய் கர்மசாரி ஆந்தோலன் அரசு நிர்​வாகத்​திடம் கொண்​டுசென்​றது.
  • 2008 வாக்​கில் மனிதக் கழிவு அகற்​று​வோர் உள்ளனர் என்ப​தற்கான ஒப்புதல் சான்​றுகளைத் தமிழக அரசு வழங்க வேண்டிய கட்டாயத்​துக்கு ஆளானது. இப்போதும் மனிதக் கழிவு அகற்​றுதலில் மனிதர்கள் இருக்​கிறார்கள் என்பதை மறுத்​து​விடுகிற போக்​கில்​தான் தமிழக அரசின் போக்கு இருக்​கிறது என்கிறார் சாமுவேல். தமிழகம் மட்டுமல்ல, இந்திய மாநிலங்​களில் பெரும்​பாலானவற்றில் இதுதான் நிலை. இதற்​கெல்​லாம் முற்​று​ப்​புள்ளி எப்போது?

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்