TNPSC Thervupettagam

மனிதத் தலையீட்டால் இடம்பெயரும் மீனவர்கள்

August 24 , 2024 96 days 78 0

மனிதத் தலையீட்டால் இடம்பெயரும் மீனவர்கள்

  • “இயற்கையின் மீதான மனித வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாமே அளவு கடந்து தற்புகழ்ச்சி அடைந்துகொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மை பழிவாங்குகின்றது.
  • ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்கின்ற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையாயினும், இரண்டாவது, மூன்றாவது நிலைகளாக நாம் முற்றிலும் எதிர்பாராத வேறுபட்ட பலன்களை அளிக்கிறது. இவை பல தடவைகளில் முதலில் கிடைத்த விளைவுகளையும் ரத்துசெய்து விடுகின்றன” என்கிறார் மார்க்சிய ஆசான் பிரெட்ரிக் ஏங்கல்ஸ்.

இடம்பெயரும் கடற்கரை:

  • திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் கடலுக்குள் அமைக்கப்படும் தடுப்புச்சுவர்களால் இடிந்தகரை மீனவ கிராமத்தில் பெருமளவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது பத்திரிகைச் செய்தி (12.7.24, தி இந்து பக். 3). இதனால் அப்பகுதி மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்த இடம் இல்லாமல், மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள்.
  • கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டு அணுஉலைகளில் மின் உற்பத்தி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், கூடுதலாக நான்கு அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • ஏற்கெனவே உற்பத்தியில் உள்ள இரண்டு அணுஉலைகளிலிருந்து வெப்பநீர் வெளியேற்றுவதற்கு வசதியாக கடலுக்குள் இரண்டு இடங்களில் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிலிருந்து கனரக உதிரிப் பாகங்களைக் கடல் மார்க்கமாகக் கொண்டுவருவதற்கான சிறிய துறைமுகம் ஒன்று இங்கு செயல்பட்டு வருகிறது.
  • ரஷ்யாவிலிருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு 7.9.2023 அன்று கொண்டுவரப்பட்ட நீராவி உற்பத்திக்கலன் தரைதட்டி, பாறையில் மோதி கடுமையாகச் சேதமடைந்தது. இந்தச் செய்தி முழுமையாக வெளிவரவில்லை.
  • இதுபோன்ற நீராவி உற்பத்திக் கலன்கள் வருவதற்கு வசதியாக கடற்பகுதியை ஆழப்படுத்தி, புதிய இடத்தில் சிறிய துறைமுகம் அமைப்பதற்காக இடிந்தகரை கடலுக்குள் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு கற்கள் போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் அருகில் உள்ள இடிந்தகரை கிராமம் கடலரிப்பு-இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படுகிறது.
  • அணுஉலையில் இருந்து வெளியேற்றப்படும் வெப்பநீரால் கடல் பகுதியில் 500 மீட்டர் சுற்றளவில் வெள்ளை நிறத்தில் நுரை தள்ளிய நிலையில் கடல் காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் பல சூழலியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடற்கரை மணல் காற்றின் மூலம் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும்.
  • ஒரே இடத்தில் நிலையாக இருக்காது. கடலில் அமைக்கப்படும் தடுப்புச் சுவர் மூலமாகக் கடற்கரை மணலின் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மண் சமநிலை மாற்றம், காற்றின் திசை, அலையின் வேகத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. எனவே, பாரம்பரிய மீனவர்கள் அலையின் வேகத்தைக் கணித்து மீன்பிடிக்கச்செல்வது கடினமாக உள்ளது.
  • கூடங்குளம் அணுஉலையில் அமைக்கப் பட்டுள்ள தடுப்புச் சுவர் காற்றின் திசையையும் கடலின் நீரோட்டத்தையும் மாற்றி உள்ளது. இதனால் கடற்கரையில் மண்ணரிப்பு ஏற்பட்டு இன்னும் சில ஆண்டுகளில் ஒரு மீனவ கிராமமே அழியலாம். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 100 மீட்டர் அகலத்திற்கு இடிந்தகரை கடற்கரை அரிக்கப்பட்டுள்ளது.
  • இடிந்தகரை கடற்கரைப் பகுதியில் வீசும் காற்றையும், கடல் நீரோட்டத்தையும் பற்றிய மரபுசார் அனுபவமும், அதனையொட்டிய இயற்கைசார் அறிவியல் முறையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அங்கு வாழும் மீனவர்களின் அறிவைக் ஆய்விலெடுக்க வேண்டும்.

மணல் சேர்வதில் மாற்றம்:

  • காற்றின் உதவியோடு மணல் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயரும், கடல் அலைகள் கரைக்கு வந்து மீண்டும் கடலுக்குச் செல்லும் நேரத்தில், காற்றின் திசை எந்தப்பக்கம் வீசுகிறதோ அந்தப் பக்கம் மணல் திட்டுகள் சேரும். இத்தனை நாள்கள் மேற்குத் திசை நோக்கி வீசிய காற்றினால் கிழக்குப் பகுதி மணல் மேற்குப் பகுதியில் வந்துசேர்ந்துள்ளது. அதாவது அவை அணுஉலைக்கு அருகில் சேர்ந்துள்ளன.
  • அந்த மணல் மீண்டும் கிழக்குப் பகுதிக்கு வர வேண்டும். இதுதான் கடற்கரை மணலின் சமநிலைச் சுழற்சி. ஆனால், அந்த மணல் மீண்டும் காற்றின் உதவியுடன் கிழக்குப் பக்கம் வராதவகையில் அணுஉலையின் கிழ‌க்குப் பக்கம் கற்களால் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது என்கிறார் இடிந்தகரையைச் சேர்ந்த ரிவால்டோ.
  • இப்போது கச்சான் காற்று அடிக்கிற நேரம் என்பதால் வழக்கமாக மேற்குத் திசையில் சென்ற மண் திரும்பிக் கிழக்குப் பக்கம் வரவேண்டும். அங்கு தடுப்புச் சுவர் போட்டு அடைத்ததால், கிழக்குப் பகுதியில் மண்ணரிப்பு நிகழ்கிறது. இது தொடருமென்றால் இடிந்தகரை கிராமமே இன்னும் சில ஆண்டுகளில் கடலரிப்பால் மிக மோசமாகப் பாதிக்கப்படலாம்.
  • ஒரு கடலோர கிராமத்தின் அழிவை தி இந்து நாளிதழின் 12.7.24 செய்திக்குப் பின் ஆராய்ந்து புரிந்துகொள்ள முடிகிறது என்றால், இதைப் போன்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கடலோர கிராமங்களிலும் இந்தப் பாதிப்பு தொடர்கிறதா என ஆராய வேண்டும்.
  • இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 2,500 குடும்பங்கள் வாழும் இடிந்தகரை கிராமம் இன்னும் எத்தனை ஆண்டுகளில் கடலரிப்பால் அழியும் என்பது குறித்து யோசிக்கும் அதே நேரத்தில், அங்கு வாழும் மீனவர்கள் ஏற்கெனவே இடம்பெயரத் தொடங்கிவிட்டார்கள். இவர்கள் இயற்கையினால் அகதிகளாக இடம்பெயர்கிறார்களா, அல்லது வளர்ச்சித் திட்டங்களால் இடம்பெயர்கிறார்களா என்று சிந்திப்பதற்குள் கடல் ஒவ்வொரு நாளும் கரையை அரித்துக்கொண்டே இருக்கிறது.

தடைபடும் மீன்வளம்:

  • கடல் அரிப்பைத் தடுக்கத் தடுப்புச் சுவர்கள், தூண்டில் வளைவுகள் என்று பொத்தாம் பொதுவாக அறிவித்து அரசு செயல்படுத்துகிறது. கடலில் திட்டங்களைச் செயல்படுத்தும் பொறியாளர்கள் கடல்சார் அறிவு இல்லாததால், பல இயற்கைச் சீரழிவுகளை ஏற்படுத்துகிறார்கள்.
  • கடலில் அமைக்கப்படும் தடுப்புச் சுவர்களால், தூண்டில் வளைவுப் பாலங்களால் காற்றும் கடலும் இணைந்து உருவாக்கும் மணல் திட்டுகள் தடுக்கப்படுகின்றன. இன்று கடலில் இயல்பாக உருவாகும் அலைகள் கரையைத் தொடுவதில்லை, காரணம் கரையில் கற்கள் மட்டுமே காணப்படுகின்றன. கடலோரங்களில் காணப்படும் மணல் திட்டுகளும் கடற்கரை மணலும் கடலின் பாதுகாப்பு அரண்கள்.
  • 2004ஆம் ஆண்டு சுனாமி தாக்கியபோது, பெரும் பாதிப்பைச் சந்திக்காத கிராமங்களுக்கு அருகில் பாதுகாப்பாக இருந்தது மணல் திட்டுகள் என்பது அனுபவப் பாடம். கடற்கரைச் சுழலை நாம் பாதிப்புக்குள்ளாக்குவது பெரும் ஆபத்தை உண்டாக்கும் என்பதை அறியாமல் நாம் சீரழித்துவருகிறோம். கடற்பகுதிகளை மணற்பாங்கான பகுதி, பாறைகள் நிறைந்த பகுதி, சதுப்புநிலப் பகுதி என்றெல்லாம் வகைப்படுத்துவார்கள். ஆனால், இன்று அனைத்தும் கற்கள் மட்டுமே காணப்படும் கல்காடுகள்போல் காட்சியளிக்கின்றன.

மறைந்த மணல்திட்டுகள்:

  • கடற்கரையோரங்களில் காணப்படும் மணல்மேடு அல்லது மணல்தேரி என்பது கடல் நீரின் அலையேற்றம் அல்லது அலைகளின் வேகத்தினால் கடற்கரையில் குவிக்கப்படுகின்ற மணல் குன்றுகளே. அறிவியல்ரீதியாக இம்மணல் துகள்கள் 0.06 மி.மீ முதல் 2.1 மி.மீ அளவிலானதாக அமையும். இவ்வகையான மணல் துகள்கள் மலை மீதுள்ள பாறைகள், கல், கூழாங்கற்கள் ஆற்று வெள்ளத்தோடு ஓடி வருகின்றபோது உராய்வினால் ஏற்படும் மணல், ஆற்று வெள்ளத்தோடு கடலினைச் சென்று அடைகின்றன.
  • இவ்வாறு கடலுக்கு வந்து சேர்கின்ற மணல் நாள்கள் பல செல்லுகின்றபோது, கடலின் நீரோட்டம், அலைகளின் வேகம் போன்ற இயற்பியல் நிகழ்வுகளால், கடலின் அடியில் உள்ள மணல் அனைத்தும் கரையில் சேர்க்கப்படுவதும், மீண்டும் கரையிலிருந்து அரிக்கப்படுவதும் இயற்கையான நிகழ்வு.
  • கடற்கரையில் சேர்க்கப்படுகின்ற மணல் கரையினை புவியியல் அமைப்பினால் சில பகுதிகளில் அதிக அளவிற்குச் சேர்க்கப்பட்டு மணல்தேரிகளாகவும், மணல் திட்டுகளாகவும் அமைவது இயற்கையின் கொடை. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் புதிதாக மணல் திட்டுகள் எந்தக் கிராமங்களிலும் உருவாகவில்லை. மணல் அரிப்பைத் தடுக்கத் தடுப்புச்சுவர், தூண்டில் வளைவு என்கிற மனிதர்களின் தவறான செயல்பாட்டினால், கடலும் கடற்கரையும் இயல்பு நிலையை இழந்துவிட்டன. மணல் இல்லாத கடற்கரை, உயிரில்லாத உடலுக்கு சமம்.
  • கடல் நீரோட்டங்களின் தன்மையை அறிந்து மீனவர்கள் மீன்பிடிப்பதற்குக் கடற்கரையோர மணல் மிக முக்கியம். நீரோட்டத்திற்கு ஏற்ப மீன்கள் கூட்டமாக இடம்பெயர்தல் இயல்பு. கடல் நீரோட்டத்தினைக் கடலில் சென்று அறிதல் சற்று கடினம் என்பதால், தங்கள் பாரம்பரிய அறிவினால் நீரோட்டத்திற்கு ஏற்பக் கரையினில் சேருகின்ற மணலின் தன்மை, மணலின் இறுக்கம் அல்லது இளக்கம் போன்றவற்றிலிருந்து மீன்வளத்தைக்குறித்து மீனவர்கள் அறிந்து கொள்வார்கள்.
  • கடற்கரையோர மணலின் தன்மை கடலின் நீரோட்டத் தன்மையைப் பாரம்பரிய மீனவர்களுக்கு உறுதிப்படுத்தும். மணற்பாங்கான கடற்கரை யோரத்தில்தான் நண்டு, கடல் ஆமை, புதைந்து வாழும் மெல்லுடலிகள், பல்வேறான கணுக்காலி உயிரினங்கள், குழி உடலிகள் என எண்ணற்ற உயிரினங்களின் வாழ்விடமாகவும், இனப்பெருக்க மையமாகவும் அமைகின்றன.
  • வேறு நோக்கில் மணற்பகுதியினை அழிக்கவும் அல்லது கற்களைப் போட்டுக் காற்றின் திசையையும், நீரோட்டத்தையும் தடுக்கவோ செய்கிறபொழுது அது மீனவர்களின் இடம்பெயர்தலுக்கு வழிவகுக்கும். கடலரிப்பைக் கற்கள் கொண்டு தடுத்தோம் கடலில் மீன்களின் இடம்பெயர்வை எதைக் கொண்டு தடுக்கப் போகிறோம்?

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்