மனிதநேயக் குரலான இலங்கை மன்னாரமுது!
- உலகெங்கும் உயிர்த்தெழுந்த ஞாயிறு விடிந்தது, அந்த நாளில் (21 ஏப்ரல் 2019). ஆனால், எப்புறமும் கடல் சூழ நமக்கருகே மிதக்கும் தீவுநாட்டில், அந்நாளின் அமைதியை அடியோடு குலைத்து அதிரச்செய்தன அக்கிரமக்காரர்களின் அசுரத்தனமான தற்கொலைப்படைத் தாக்குதல்கள். கொழும்பு, பட்டிக்கோலா, நெகம்பு ஆகிய ஊர்களிலுள்ள கிறிஸ்துப் பேராலயங்களுக்கு ஈஸ்டர் திருநாள் வழிபாட்டிற்கு வந்திருந்த அப்பாவிச் சிறுகுழந்தைகள், பலவயதுப் பெண்கள் - ஆண்கள் மற்றும் தலைநகர் கொழும்பில் மூன்று உயர்தர ஆடம்பர ஹோட்டல்களில் தங்கியிருந்த உள்நாட்டினர், வெளிநாட்டினர் உள்ளிட்டு மொத்தம் (சுமார்) 270 மானுட உயிர்கள் மண்விட்டுப் பறந்தன; காயம்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் (சுமார் 500 பேர்) சிந்திய இரத்தம் வழிந்தோடியது; உறவினர், நட்பினர், நாட்டினர் அனைவரது கண்ணீரும் நிறைந்து ஆறாத்துயர் நதி பெருக்கெடுத்த நாளாகியது அந்த ஈஸ்டர் ஞாயிறு இலங்கை (ஶ்ரீலங்கா) நாட்டரசின் கூற்றுப்படி, தேசிய தௌஹீத் ஜமாத் (National Thowheeth Jama'ath -NTJ) என்ற இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த எட்டுத் தீவிரவாதிகள்தான் அந்நாளில் மனிதநேயமற்ற அழிவை நிகழ்த்தியவர்கள். அன்றைய நிழ்வுகளால் நாடுகள், மதங்கள், மொழிகள், பண்பாடு என்பன போன்ற அற்பப் பேதங்கள் யாவுங் கடந்து - அடங்கா அதிர்ச்சியிலும் ஆற்றொணாக் கவலையிலும் கலங்கி மூழ்கின மானுடநேய மனங்கொண்டார் இதயங்கள் உலகெங்கும்.
- அவ்வாறு மனங் கலங்கி மருகியவர்களில் ஒருவன், இலங்கை, மன்னாரில் (சிலாவத்துறை, பண்டாரவெளியில்) விவசாயக் குடும்பமாக வாழ்ந்து வரும் ஜெசீம் அப்துல் கபூர் (தந்தை), அனீஸா ஜெசீம் (தாயார்) ஆகியோரின் ஐந்து குழந்தைகளில் ஒருவன். அப்போதுதான் (மார்ச்,2019) தனது கல்லூரிப்படிப்பை முடித்திருந்த இருபத்து நான்கு வயது இளைஞன் - ‘கவிஞர் ‘மன்னாரமுது’ என அப்பகுதியில் ஓரளவு அறியப்பட்டிருக்கும் - அஹ்னாப் ஜெசீம். இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள், அஹ்னாப்பின் உடன்பிறப்புகள்.
- மாணவப் பருவத்திலேயே மதங்கடந்த மனித நேயத்தைத் தன் இதயப்பரப்பில் வளர்த்துக்கொண்டிருந்த இளைஞன் மன்னாரமுது. தன் நாட்டில், தனது மதத்தினரைப்போன்ற மற்றொரு சிறுபான்மை மதத்தினரான கிறிஸ்தவர்களது திருநாளில் (21 ஏப்ரல் 2019), தன் மதத்தைச் சேர்ந்த வழிதவறியவர்கள் சிலரது வெறியாட்டத்தால் நிகழ்த்தப்பட்ட பேரவலம் பெரிதும் வாட்டியது. தனது கல்லூரிப்படிப்பை முடித்து துடிப்போடு வெளிவந்திருந்த அந்த இளைஞனின் ஆதங்கமும் அறச்சீற்றமும், அச்சோக நிகழ்வு நடந்த அடுத்த நாளே (22 ஏப்ரல் 2019) ‘உயிர்த்த ஞாயிறு அல்ல உயிர் நீத்த ஞாயிறு’ என்றொரு தமிழ்க் கவிதையாக அவனது வலைப் பக்கத்தில் வெடித்துப் பூத்தது. [ https://mannaaramudhu.blogspot.com 22 April 2019]
- இதோ அக்கவிதை;
- உயிர்த்த ஞாயிறு அல்ல உயிர் நீத்த ஞாயிறு
- நீயும் இறந்து பிறரையும் இறக்கச்
- செய்த உனக்கு இறைவன் பெயர் எதற்கு?
- நீயும் சிதறி பிறரையும் சிதறடித்த
- உனக்கு இஸ்லாத்தின் பெயர் எதற்கு?
- நீயும் செத்து பிறரையும் சாகடித்த
- உனக்கு நபிகளார் பெயர் எதற்கு?
- உன்னையும் கொன்று பிறரையும் கொன்ற
- உனக்கு திருமறை எதற்கு?
- ஏதும் அறியா ஓரப்பாவி உயிரை
- கொல்வது ஒட்டு மொத்த மனிதத்தையும்
- கொல்வதென்று திருமறை சொன்னதை
- நீ கற்கவில்லையோ?
- பத்தாண்டாய் நிம்மதிப் பெருமுச்சு விட்டோம்
- புத்தாண்டையும் பயந்து சாகாமல்
- கொண்டாடி மகிழ்ந்தோம் - நீ வந்து
- நிமிடத்தில் உருக்குலைத்தாயே!
- இலங்கைத் தாய் மீண்டும் விம்மி
- அழுகிறாள் - நீயோ நிலையான
- சுவனம் கிடைக்கும் என்று உன்னுயிரை
- மாய்த்து எம்மனைவரையும் உயிரோடு
- நெருப்பிலேற்றிநாயே!
- உனக்கு சாவதில்தான் சந்தோசம்
- என்றால் எங்கேயாவது மூலையில்
- விழுந்து செத்திருக்கலாமே
- ஏன் எம்மை இனி தினம் தினம்
- செத்துப் பிழைக்க வைத்தாயே!
- தற்கொலையே தவறென்று
- சொன்ன இஸ்லாத்தின் பெயரால்
- நீ தற்கொலையும் செய்து கொலையும்
- செய்த உனக்கும் இஸ்லாத்திற்கும்
- தொடர்பு ஏதடா? தொடர்பு ஏனடா?
- குருதி வெள்ளத்தில் துவண்டு
- கிடக்கும் உடற் சிதிலங்களில்
- நீ என்ன வெற்றி கண்டாய்?
- மூத்தோரையும், சிறாரையும்
- யுத்தமென்றாலும் வதைப்பது
- தவறாகும் எனும் அண்ணல்
- வாக்கை தூக்கி வீசினாயே!
- பிறமதக் கடவுளரை தூற்றாதே
- தூற்றினால் அவர்கள் உன்னிறைவனை
- தூற்றுவர் எனச்சொன்ன வேளை நீ
- தேவாலயங்களின் உள்ளே வெடித்தாயே!
- யாவரும் ஆனந்தமாய் கொண்டாடும்
- அந்தப் பொழுதிலா இந்தக் காரியம்
- செய்தாய் - நீ நிச்சயம் அனுபவிப்பாய்
- அன்று நான் உனக்கெதிராய் சாட்சியளிப்பேன்.
- அன்னையும் மகளும்,
- தாத்தாவும் பேரனும்
- ஆள் அடையாளம்
- தெரியாமல் செய்து - நீயும்
- அடையாளம் இழந்து
- இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும்
- குற்றவாளி என அடையாளப் படுத்திநாயே!
- இனி தினம் இங்கு சாவே!
- எம்மை சாகாமல் சாகடித்த
- என் தோழர்களை சிதறடித்த
- உமக்கு என் சாபங்கள்
- கோடி கொடு நெருப்பாய்வரும்
- ஏசு உயிர்த்த ஞாயிறு என்றே
- உலகம் போற்றும் - புண்ணிய
- விழாக் கோலம் பூணும் நாளில்
- எனக்கதும் நம்பிக்கை இல்லை
- ஆனால் அருமந்த உயிர்கள்
- இருநூறுபேர் உயிர் நீத்த நாள்
- என்று நான் நம்புவேன் - காரணம்
- நம் இனத்தின் சில நரிகள்
- இழைத்த இழி செயலால்
- உயிர் நீத்த உறவுகளுக்கு
- என் கண்ணீர் திவலைகள்.
- மிகச் சிறப்பானதொரு கவிதையென இதனை நாம் அடையாளப்படுத்தப் போவதில்லை என்றாலும், இவ்வரிகளின் மூலம், 24 வயதுப் பருவத்தில், நக்கீரத் துணிச்சலோடு தன்மதத்தைச் சார்ந்தவர்களே ஆனாலும் அவர்கள் செய்த செயல் ‘இழி செயல்’ என்று வெடித்த இளைஞனை இவ்வரிகள் அடையாளங் காட்டுகின்றன. ‘நீயும் சிதறி பிறரையும் சிதறடித்த உனக்கு இஸ்லாத்தின் பெயர் எதற்கு?’ என்று அணையா வினாக் கனல்களை வீசியிருப்பதைக் காண்கிறோம். ‘’அன்னையும் மகளும், தாத்தாவும் பேரனும் ஆள் அடையாளம் தெரியாமல் செய்து – நீயும் அடையாளம் இழந்து, இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் குற்றவாளி என அடையாளப்படுத்திநாயே!’’ எனக் குமுறிச் சினந்து சீறியுள்ளான் (கவனிக்க: இறுதியில், ‘னா’, நா, ஆகி நிற்பது அச்சுப்பிழையல்ல.) தன்னுள் மூண்ட தமிழ்க் கனலால் வெகுண்ட அஹ்னாப் என்ற இளங்கவிஞனின் அடங்கா ஆதங்கமும் மானுட நேயமும் இக்கவிதை வரிகளாக வெடித்திருப்பது குறிப்பிடஉரியது. இஸ்லாத்தைச் சார்ந்தவர்களே ஆனாலும் அவர்கள் இழைத்தது எந்த மத நியாயத்திற்குள்ளும் வர இயலாத ‘’இழிசெயல்’’ ; அச்செயலுக்கு இறுதித் தீர்ப்பு வரும்போது நின்று - ‘’அன்று நான் உனக்கெதிராய் சாட்சியளிப்பேன்’’ என்று ஆண்மையோடு அதிர முழங்கிய இளைஞன், கவிஞன் அஹ்னாப் ஜெசீம் என்பது அங்கீகரிக்கப்படத்தக்கது.
- எதற்காக இவ்வளவு விவரணை எனக் கேட்கிறீர்களா?
- வாங்க... விவரங்களை அறிவோம்.
- அஹ்னாப்பின் குடும்பம் அந்நாட்டில் 1990களில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர் காரணமாகக், கற்பிட்டி புத்தளம் பகுதிக்கு முதலில் இடம் பெயர்ந்தது. அவ்வூரில்தான், அஹ்னாப் ஜெசீம் 1995ல் பிறந்து, அங்குள்ள பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தவரை அக்குடும்பம் வாழ்ந்தது. பின்னர், மேற்படிப்புக்காக பருவலாவிலுள்ள ஜாமிஆ நளீமியா இஸ்லாமிய கலாபீடத்தில் (Jamiah Naleemiah Islamic Institute, Beruwala) ஜெசீம் சேருங் காலத்தில்- 2012ல்- மன்னார், சிலாவத்துறை பகுதியில் மீண்டும் குடியேறியது. அக்கல்வி நிலையத்தில் அஹ்னாப் ஆர்வமுடன் கல்வி கற்ற காலம் ஏழாண்டுகள் (2019 மார்ச் 30 வரை).
- அஹ்னாப் மாணவனாக இருக்கும்போதே, உருக்கொண்ட தமிழார்வத்தால், அவ்வப்போது கவிதை,சிறுகதை,கட்டுரை எழுதுவது வழமையாகக் கொண்டிருந்தாலும், அச்சேறிய தனது முதல் படைப்பைக் கவிதைத் தொகுப்பு நூலாக- ‘நவரசம்’ எனத் தலைப்பூச்சூட்டிக் 2017ல் வெளியிட்டான். மன்னாரில் நடைபெற்ற ‘நவரசம்’ வெளியீட்டு விழாவில், “கலையில் சிறந்தது இலக்கியம், இலக்கியத்திற் சிறந்தது கவிதை; அதனால்தான் நான் அதைத் தேர்ந்தெடுத்தேன்” என்று தன் கவிதை ஆர்வத்தை வெளிப்படுத்தினான். தனக்கு இலக்கிய ஈர்ப்பினை வளரச்செய்த தமிழ் முன்னவர்களுக்கு நன்றி கூறும் விதமாகப் பின்னாட்களில் ஒரு பேட்டியில், (ரோர் மீடியா, செப்டம்பர் 2, 2022), ‘கம்பர், திருவள்ளுவர், ஒளவையார், பாரதி, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோர் தனது கவித்துவத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளான். அஹ்னாப்பின் மாணவப் பருவத்து ‘நவரசக் கவிதைகள்’ - செம்மொழித் தமிழ்க் கவிதைப் பாணியையும் அதன் கட்டமைப்பையும் பின்பற்றி, அதே தளத்தில் – புதுயுகக் கவிஞனின் உள்ளூறும் சமூக அக்கறையை, மதங்கள் கடந்த மானுட நேயத்தை வலியுறுத்துவதாகவும் வெளிப் போந்துள்ளன.
- பெருஞ்சோகம் யாதனில், பருவத்துடிப்போடும் வளர்ந்து கொண்டிருந்த தமிழார்வத்தாலும் உந்தப்பட்டு, ‘நவரசம்’ கவிதைத் தொகுதியை அஹ்னாப் வெளியிட்டு ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சற்றும் எதிர்பாராத தொடர் நிகழ்வுகளாக விளைந்தவைகள் அனைத்தும், அஹ்னாப்பின் வாழ்க்கையை, எளிய அவரது குடும்பத்தாரனைவரின் மன அமைதியை ஒரு சுனாமி புரட்டிப் எடுத்துப் போட்டதுபோலப் புரட்டிவிட்டன.
- இஸ்லாமிய கலாபீடத்தில் அஹ்னாப் தனது உயர் கல்வியை முடித்த கையோடு மூன்று மாதத்திற்குள் (ஜூலை 01, 2019) புத்தளம் மாவட்டம் மதுரங்குளியில் அமைந்துள்ள ஆங்கில மொழிமூல “ஸ்கூல் ஒஃப் எக்ஸலன்ஸ்” ( School of Excellence) இல் தமிழ் ஆசிரியராகப் பணி கிடைத்தது. சில வாரங்கள் உறவினர் ஒருவர் வீட்டிலிருந்து பள்ளிப் பணிக்குச் சென்றுவந்து கொண்டிருந்த அஹ்னாப்புக்கு, அப்பள்ளி நிர்வாகத்தார் ஏற்பாட்டில் அப்பாடசாலை வளாகத்திலேயே, வேறொரு தனிக் கட்டிடத்திலிருந்த அறையில் தங்குவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அஹ்னாப் தமிழாசிரியர் பணியை மேற்கொண்ட சிறிது காலத்திற்குள்ளாகவே - 2020 மார்ச் மாத அளவில் - அந்நாட்டில் கரோனாப் பெருந்தொற்றுப் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட (ஊரடங்கு, தனிமைப்படுத்தல் போன்ற) கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பள்ளியும் மூடப்பட்டது. மீண்டும் அங்குதானே வரப்போகிறோம் என்ற இயல்பான நம்பிக்கையில், தமது உடைகள், ஆவணங்கள், கல்விச் சான்றிதழ்கள் “நவரசம்” நூலின் 100 க்கு மேற்பட்ட பிரதிகள், எழுதிவைத்திருந்த பல கவிதைகள் என அனைத்தையும் தான் தங்கியிருந்த அந்த அறையிலேயே விட்டுவிட்டு அஹ்னாப் வீட்டிற்கு வந்ததாக அவரின் சகோதரர் மூலம் அறியப்பட்டுள்ளது.
- பேரவலம் விளைவித்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்குப்பின், இலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளைத் தடைசெய்வதாக (ஏப்ரல் 13, 2021 புதன்கிழமை நள்ளிரவில்) அறிவித்தல் செய்தது. ஆனால், எந்த இனவாத சிங்கள அமைப்புகளுக்கும் அவ்வறிவிப்பின்படி தடை இல்லை' என்ற பாரபட்சம் அப்பட்டமானது. அரசின் தடை அறிவிப்பைத் தொடர்ந்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (TID), தடையான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தொடர்புடையவர்கள் எனப் பலர் சேகரிக்கப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டனர். பேரதிர்ச்சி தரும் விதமாக அஹ்னாப்பும் அவர்களில் ஒருவனானான்.
- காரணம் என்ன?
- அது உண்மையிலேயே அதிவிநோதமானது.
- அதாவது, ஆசிரியப்பணியில் இருந்தபோது, பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அஹ்னாப் தங்கியிருந்த அறையுள்ள கட்டிடமானது தடைசெய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றாகிய சேவ் த பேர்ள்ஸ் அமைப்புக்குச் சொந்தமானதாம். அதனால் அக்கட்டிடம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (TID), சோதனை செய்யப்பட்டது. சோதனையில் அஹ்னாப் தனது அறையில் விட்டுச்சென்ற பொருள்கள் யாவும் நவரசம் நூல் பிரதிகள் உட்படக் கைப்பற்றப்பட்டன. மின்னல் வேகத்தில் புலனாய்வுத்துறையின் யூகம் - அதாவது அஹ்னாப்புக்கும் தடைசெய்யப்பட்ட சேவ் த பேர்ள்ஸ் அமைப்புக்கும் நீண்டகாலத் தொடர்பு என்ற யூகம் - உருவாகிப் பலமானது. அந்தப் பள்ளியிலோ, விவரமறிந்த பிற யாரிடமோ, ஏன் அஹ்னாப்பிடமும் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், மே 16, 2020 இரவு 8:30 மணிக்கு மன்னாரில் உள்ள அஹ்னாப் வீட்டில் புகுந்து சோதனை செய்தனர். அஹ்னாப் பயன்படுத்திய செல்போன், தொலைபேசி, மடிக்கணினி மற்றும் புத்தக அலுமாரிகளில் இருந்த, சுமார் ஐம்பது பல்வேறு புத்தகங்கள், அஹ்னாப்பின் கவிதைத் தொகுப்பு, நவரசத்தின் நூறு பிரதிகளையும் பறிமுதல் செய்தது புலனாய்வுத்துறை. அஹ்னாப்பை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகவும் மூன்று நாட்களில் திரும்பிவிடலாம் எனக்கூறிக் கூட்டிச் செல்லப்பட்ட ஜெஸீம் 19 மாதங்களாக வீடு திரும்பவில்லை.
- அதிர்ச்சியாக உள்ளதா?
- அடுத்த அதிர்ச்சி யாதெனில், கைதுக்குப்பின் முதலில் அறியப்பட்டதகவல்.
- என்ன அந்தத் தகவல்?
- எந்த இளைஞன் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளைத் (21 ஏப்ரல் 2019) தனது மதத்தினரே நிகழ்த்தியிருந்தபோதிலும் ‘இழிசெயல்’ அது என்று குமுறி, ‘நாயே’ என - கவிதை மரபுகளையும் மீறி வெறுப்புமிழ்ந்து - நெருப்புக் கவிதையொன்றை ( உயிர்த்த ஞாயிறு அல்ல உயிர் நீத்த ஞாயிறு) நிகழ்வு நடந்த அடுத்த நாளே கொளுத்தி உயர்த்திக் காட்டினானோ, அதே இளைஞன் அஹ்னாப்பின் கவிதைகள் மதத் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக உள்ளன என்ற குற்றச்சாட்டு காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
- அஹ்னாப் பணியாற்றிய பள்ளி வளாகத்தில், ஒரு மூன்று மாத அளவு காலம் தங்கியிருந்த கட்டிடத்தில் நடைபெற்ற சோதனையின்போது அஹ்னாப் அறையும் சோதனைக்குள்ளாகி, அந்த அறையில் கைப்பற்றப்பட்ட பொருள்களோடு கிடைத்த கவிதைநூலான ‘நவரசம்’ நூலே குற்றச்சாட்டுக்கான மூலகாரணம்; ஆதாரம்! அந்நூலிலுள்ள ‘உருவாக்கு’ என்ற ஒரு கவிதைதான் குற்றச்சாட்டின் மையப்பொருள் என்றுரைக்கப்பட்டது.
- இது எப்டியிருக்கு?
- அஹ்னாப் தங்கியிருந்த அறை பள்ளி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். கட்டட உரிமையாளர் குறித்து அந்த இளைஞனுக்கு எதுவுமே தெரியாது. அந்த அறையில் அஹ்னாப் தங்கியிருந்த காலமோ வெகு குறுகிய காலம். அடுத்து, அஹ்னாப் மதத்தீவிரவாதத்தை ஆதரிப்பவனல்ல, அச்செயலை அறவே வெறுப்பவன், எதிர்ப்பவன் என்பதற்கு முன்னர் குறிப்பிட்டுள்ள (உயிர்த்த ஞாயிறு அல்ல உயிர் நீத்த ஞாயிறு) கவிதையே சான்று நிற்கும். தொடர்ந்து காணுவதென்றால், கைப்பற்றப்பட்ட நூலெனச் சொல்லப்படும் கவிதை நூல் ‘நவரசம்’ வெளியிடப்பட்டது மூன்றாண்டுகள் முன் (2017-ல்). இக்காலத்திற்குள் அந்நூல், அந்நாட்டில் பொதுநூலகத் துறையால் அங்கீகரிக்கப்பட்டு நூலகங்களுக்கும், கல்வித் துறையால் பள்ளிகளுக்கும் வாங்கிச் சேர்க்கப்பட்டுள்ளது. இப்படியிருக்கத் திடீரென எப்போது அந்த நூல் மதவாதத்தை ஆதரிப்பதானது? அதிலும் ‘உருவாக்கு’ என்ற 2016ல் எழுதப்பட்ட கவிதையில் மதத்தீவிரவாதம் எங்கே உள்ளது? ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம்!
- இதோ அக்கவிதை முழுதாக.
- உருவாக்கு
- மது எதற்கு-கேடு
- அது நமக்கு
- மாது எதற்கு-கேடு
- அது நமக்கு
- சூது எதற்கு-கேடு
- அது நமக்கு
- எது நமக்கு-நலவை
- நாடுவது நமக்கு
- எது நமக்கு-கனவை
- ஆக்குவது நமக்கு
- எது நமக்கு-வீண்கனவை
- நீக்குவது நமக்கு
- இது எமக்கு
- அது உமக்கு
- எனும் பிணக்கு
- இனி விலக்கு
- யாவும் நமக்கு-எனில்
- எமக்குள்ளேன் பிணக்கு
- பொய் வழக்கு
- போலிக்கணக்கு
- திருட்டுத்துணுக்கு
- அத்தனையும் விலக்கு
- உண்மையை விளக்கு
- உன் புலன் அடக்கு
- உன் செருக்கு அடக்கு
- உன் புகழ் அடக்கு
- நீளும் நாவடக்கு
- நீளும் கரம் மடக்கு
- நாளும் நலதோடு தொடக்கு
- நாளைய உலகு நமக்கு
- நலவாய் உதிக்கும் கிழக்கும்
- நயமாய் இருக்கும் நமக்கு
- பிணக்கு வரின் நேரஞ்சுணக்கு
- சிக்கல் யாவும் விலக்கு
- தூக்கும் துவக்கு
- தாக்கும் நமக்கு
- தீய்க்கும் நமக்கு
- துவக்கிலா போர்
- துவக்கு-அது
- எழுத்திலே இருக்கு(து)
- காலம் சுருக்கு
- வினை பெருக்கு
- கல் மனத்தை உருக்கு
- கல்லா மனத்தை கருக்கு
- பொல்லா மனத்தை நறுக்கு
- சொல்லா வினை
- செய்பவனை புறமொதுக்கு
- குருதிப்பெருக்கு
- நீர்ப்பெருக்கு
- வெள்ளப்பெருக்கு-என
- அவதியுறும் மனிதனுக்கு
- அள்ளிக்கொடுத்து அயலாருடன்
- வாழப்பழக்கு
- இத்தனையும் திருமறை
- அருமந்த வாக்கு
- இதன் பிரகாரம் நல்லதொரு
- தேசம் உருவாக்கு
- இக்கவிதையை அணுகிய பிறகு குற்றச்சாட்டே எவ்வளவு குறையுள்ளதாக நிற்கிறது எனத் தெரிகிறதா?
- விசாரணைக்கென, வீட்டிலிருந்து ‘அழைத்து வரப்பட்டு’ (இந்தச் சொற்கூட்டே ஒரு முரண்தான்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடங்குவதற்குமுன் இளைஞன், கவிஞன் மன்னாரமுது எனும் அஹ்னாப் ஜெஸீம் அனுபவிக்க நேர்ந்ததெல்லாம் சொல்லி மாளாது இங்கே. சுருக்கமாகக் காண்போம்.
- வீட்டிலிருந்து முதலில் வவுனியாவிலுள்ள ஒரு விசாரணை மையத்திற்கு கூட்டிச் சென்றார்கள். இரவு முழுவதும் (ஆம், முழுவதும்) தொடர் விசாரணை நடத்தப்பட்டது, எல்லாமே நவரசம் பற்றித்தான். அப்போதுதான் முதன் முதலாக அந்த இளைஞன் அறிகிறான் தன்மீதேற்றப்பட்டுள்ள அபாண்டமான குற்றச்சாட்டை. நவரசம் நூல் மதத்தீவிரவாதத்தை ஆதரி்ப்பதுடன், பயங்கரவாதத்திற்குத் துணை நிற்கிறது என்பதே திரும்பத் திரும்ப அப்போது சொல்லப்பட்ட முதன்மைக் குற்றச்சாட்டு.
- ‘தான் மதத்தீவிரவாதத்தையும் பயங்கரவாதச் செயல்களையும் வேரோடு களைய விரும்புவன் எனப் பலமுறை, பலவாறு நூலிலுள்ள கவிதைகளைப் படித்துக்காட்டி விளக்கிச் சொன்னதை அவர்கள் சிறிதும் செவியேற்கவேயில்லை. ‘இவனைக் கொழும்பு இருட்டுச் சிறையில் பல வருடங்கள் போட்டு அடைக்க வேண்டியதுதான்’ என்று தாடியுள்ள அலுவலர் ஒருவர் மிரட்டியிருக்கிறார் அப்போது. குற்றத்தை ஒப்புக் கொண்டால் குறைந்த தண்டனையோடு வெளிவரலாம் என வற்புறுத்தலோடு ஆசையும் காட்டப்பட்டது. சிறைப்படுத்துவதற்கு முன்பு தனக்குத் திருமணத்திற்காக வீட்டினர் பெண் பாரத்துக் கொண்டிருந்த செய்தியையும் விசாரித்து அறிந்து கொண்டிருந்த புலனாய்வு அதிகாரிகள் அந்தப் பெண் வீட்டாரையும் வழக்கில் சேர்த்துத் துன்புறுத்தப் போகிறோம் என்று மிரட்டினார்கள்.
- இரண்டு நாட்கள் இப்படியே மீண்டும் மீண்டும் அவர்கள் சொல்வதை அப்படியே ஒத்துக்கொள்ளுமாறு, பயமுறுத்தல், ஆசைகாட்டல் என்று மாற்றி மாற்றி மன ரீதியாக விசாரணை அதிகாரிகள் வதைத்தனர். அவர்கள் சொன்னதற்குத் தான் உடன்படாததால், அதற்குப் பிறகு கொழும்பு கொண்டு செல்லப்பட்டதாக’ வழக்கு விசாரணையின்போது அஹ்னாப் பதிவு செய்துள்ளது நாம் அறிய உரியது.
- கொழும்பில் நடத்தப்பட்ட கடுங்கொடுமைகள் சுடும் நினைக்கும்போதே.
- புலனாய்வுத்துறையின் பலமாடிக்கட்டிட அலுவலகம் ஒன்றின் இரண்டாவது மாடியில் தனிமையில் வைத்து பதினான்கு நாட்கள் தொடர்ந்து விசாரணையென்ற பெயரில் நடைபெற்ற உளரீதிச் சித்ரவதைகள் பல. அஹ்னாப் தினமும் குர்-ஆன் படிக்கும் வழக்கம் கொண்டிருந்ததை அறிந்து, அதற்கு ஊறு செய்யும் நோக்கில் அவன் கையிலிருந்த பிரதியைச் சிறை அலுவலரிடம் ஒப்படைக்கச் செய்து, அவரது அனுமதி கிடைத்தால் மட்டுமே அவரிடமிருந்து பெற்றுக் குர்-ஆன் படிக்கமுடியும் என்ற நிலையை உருவாக்கினார்கள்.
- உடல்ரீதியான துன்புறுத்தல்களில் கொடுமையானது நாள்முழுதும் இருகைகளையும் பின்னால் இணைத்து விலங்கிட்டுத் தனியாக அவ்வலுவலகத்தின் நடைபாதையொன்றில் தீவிரவாதியைப் பிடித்துவைத்திருப்பதுபோலப் போவோர் வருவோருக்குக் காட்சிப்படுத்தி இருக்க வைத்திருந்தது; இரவில் ஒரு நீண்ட சங்கிலியைக் கை விலங்கோடு இணைத்து அதன் மறுமுனையை அலுவலகத்து மேஜை, அலமாரி முதலிய ஏதாவதொன்றுடன் பிணைத்து வைத்துத்தான் தூங்க விடுவது; அந்நாட்களில் ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே - காலை, மாலை- சிறுநீர் கழிக்க அனுமதிப்பது என்ற பலவகையான சித்ரவதைகளை அரங்கேற்றுவது என நீளும் வதைகள். (இத்தனை வதையிலும், உண்ணவே முடியாத உணவுப் பொட்டலங்கள் சுற்றப்பட்டு வரும் தாள்களில் உள்ள அச்சில்லாக் காலியிடங்களில் (White Spaces) அவ்வப்போது கவிதைகளும் எழுதினான் இந்த இளைஞன். அக்கொடுமைசூழ் நாட்களில் சிறுநீர் கழிப்பதில் கூட விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட அன்றாட அவஸ்தைகள் குறித்து ‘சிறுநீர்’ என்ற தலைப்பில் கவிதை ஒன்றும் - நாளும் நேரமும் குறித்து (2020.07.15, 6.30 பி.ப) - எழுதி வைத்துள்ளான்.)
- இரண்டாவது மாடியில் தனிமையில் வதைக்கப்பட்ட பதினான்கு நாட்களுக்குப் பிறகு அக்கட்டிடத்தின் ஆறாவது மாடியில் ஒரு அறைக்கு மாற்றப்பட்டான். ஐந்து பேர்தான் அந்த அறையில் இருக்கலாம். ஆனால் அங்கு ஏற்கனவே பத்துப்பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவனோடு பதினொன்று. கைவிலங்கோடு முட்டி போட்டுத்தான் அந்த அறையில் இருக்கவேண்டும். இயற்கைக் கடன்கள் கழிப்பதென்றால் குறுகலான பல படிகளிறங்கி இரண்டாவது மாடி அறைக்குத்தான் ஓடிவரவேண்டும், கைவிலங்கோடு, காவலர்கள் அனுமதிக்கும்போது. அதுவும் தனியாக வரமுடியாது; நான்கைந்து பேர்களுக்குமேல் அவஸ்தையுற்றால் மட்டுமே அனுமதி. இத்தகைய சூழலில், தினமும் மிகவிரும்பித் தமிழருந்திவந்த கவிஞன், தினமும் தண்ணீர் அருந்துவதையும் உணவருந்துவதையும் மிகவும் குறைத்துக் கொண்டான்.
- திரும்பத் திரும்ப ஹிஸ்புல்லா (Hizbullah) அமைப்புடன் தனக்குத் தொடர்புள்ளது என்று ஒத்துக்கொள்ள வற்புறுத்தப்பட்டான். அதற்கிசையாவிட்டால் இருபதாண்டுச் சிறை உறுதி என எச்சரிக்கப்பட்டான். இளம் வயதிலேயே படிப்பதற்குக் கண்ணாடி அணிந்து கொள்ளும் நிலையேற்ட்டதால், கண்ணாடியில்லாமல் அவனால் படிக்க முடியாது. பலமுறை கண்ணாடியைக் கழற்றி எடுத்துவிட்டுக் கட்டாயப்படுத்தி ஏதேதோ பேப்பர்களை நீட்டிக் கையெழுத்திடுமாறு அவன் வற்புறுத்தப்பட்டான். ஆனால் அவன் உறுதியாக மறுத்து நின்றான். நடந்தவைகளை இன்னும் விவரித்தால், கொடுமை விவரங்கள் மிக நீளும்.
- இதற்கிடையே அஹ்னாப்புக்கு நேர்ந்துள்ள கொடுமைகள் உலகளாவிய அமைப்புகளான – ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், PEN இன்டர்நேஷனல், மற்றும் உள்நாட்டு அமைப்புகளான இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (Journalists for Democracy of Srilanka JDS), மனித உரிமை கண்காணிப்பகம் ஆகிய உயர்மட்ட அமைப்புகளின் கவனத்திற்கு வந்ததால், ஜசீமின் உடனடி விடுதலையை வலியுறுத்தி அவ்வமைப்புகள் ஒரு கூட்டு அறிக்கையை மே 2021 இல், 13 வெளியிட்டன. அதனை தொடர்ந்துதான் ஒருவழியாகச் சுமார் 579 நாட்கள் கடந்த பின்னர் ஜெஸீமுக்கு பிணையில் (15 டிசம்பர் 2021) விடுதலை அளிக்கப்பட்டது. இலங்கை ரூ.5 லட்சம் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் அஹ்னாப் விடுவிக்கப்பட்டது குடும்பத்தாருக்கும் மனித உரிமைக்களம் நிற்பார் அனைவருக்கும் ஆறுதலானது.
- கொழும்பு உயர் நீதிமன்றில், 8 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றத்தில் பீ. 44230/20 எனும் இலக்கத்தின் கீழ் விசாரணைத் தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டு உயர் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன் வழக்கு நடைபெற்றது. வழக்கில் அஹ்னாப்பின் மாணவர்கள் எட்டுப்பேர் உட்பட பதினான்கு பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். ஆனால் அதி விநோதமாக இவவழக்கில் எந்த சான்றுப் பொருட்களையும், சான்றாவணங்களையும் முன் வைக்கப் போவதில்லை என வழக்குத் தொடுநர், சட்ட மா அதிபர் (Prosecuting Attorney General) தரப்பு கூறியது.
- அஹ்னாபுக்காக ஆஜராகிய மூத்த வழக்குரைஞர் (சிரேஷ்ட சட்டத்தரணி) ருஷ்தி ஹபீப் அவர்கள், அஹ்னாப் எழுதிய, நவரசம் கவிதை தொகுப்பு புத்தகத்தை மன்றில் ( Court) காட்டி, இப்புத்தகம் தொடர்பாகவே தனது சேவை பெறுநர் (Client) கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதிசயமாக அப்புத்தகம் கூட ஏன் வழக்குத் தொடுநர் சார்பில் சான்றாவணமாக முன் வைக்கப்படவில்லை என்று ஆணித்தரமாக வினவினார். மேலும், வழக்கில் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ள 14 பேரில் 8 பேர் அஹ்னாப் பள்ளியில் நடத்திய வகுப்பு மாணவர்கள். அதே வகுப்பிலுள்ள பிற 22 மாணவர்களையும் சாட்சியாக அழைக்காமல், குறிப்பிட்ட 8 பேரை மட்டும் ஏன் அழைக்க வேண்டும் என கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பினார். இரண்டுக்குமே அரசுத் தரப்பில் எந்தப் பதிலுமே இல்லை.
- “நவரசம் கவிதைத் தொகுப்பே உண்மையான பிரச்னையாக இருந்திருந்தால், இலங்கையின் தேசிய நூலகம் அதை அங்கீகரித்திருக்காது, அல்லது அரசாங்கம் அதை அப்போதே தடைசெய்திருக்கும். நவரசத்திற்கும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை; அந்நூலிலுள்ள கவிதைகள் வறுமை அகற்றம், பாகுபாடுகள் நீக்கம், மதங்கடந்த மனிதநேயம் மற்றும் உலக அமைதிக்கு அழைப்பு விடுக்கின்றன, போருக்கு அல்ல.” என்று ஜெஸீம் தரப்பில் வலுவான வாதங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
- இதனிடையே 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 1ல், அரசாங்கத்தின் ‘Designated persons’ (குறிப்பிடப்பட்ட நபர்கள்) பட்டியல் பாதுகாப்பு அமைச்சகத்தால் புதுப்பிக்கப்படும்போது அதில் ஜசீமின் பெயரும் சேர்க்கப்பட்டது. ஒருவரது பெயர் ‘Designated persons’ பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தால், அது நீக்கப்படும் வரை அவர் கடவுச்சீட்டைப் பெறவோ, எந்த அரசாங்க சேவைகளையும் அணுகவோ அல்லது வேலை தேடவோ முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு பட்டியலில் பெயர் சேர்க்ப்பட்ட போது, “நான் இந்த நாட்டின் குடிமகன் இல்லை என்பது போல உணர்கிறேன்” என்று ஜெஸீன் குறிப்பிட்டது மனதைப் பிசைவதாகும்.’சொந்த நாட்டிலேயே நாடுகடத்தப்பட்ட அந்நியன் போல் உணர்கிறேன்’ என்ற கவிஞர் மீரா அவர்களின் கவிக்குரலே அஹ்னாப்பின் குரலில் எதிரொலிக்கிறது எனலாம். (நல்வாய்ப்பாக அஹ்னாப்பின் பெயர் மேற்சொல்லப்பட்ட பட்டியலில் இருந்து 2023ல் நீக்கப்பட்டதாக அறிகிறோம்.)
- “எனது எதிர்காலத்தைப் பற்றி நான் பயப்படுகிறேன்-எனக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. என் வாழ்நாள் முழுவதும் நான் மறைந்திருக்க வேண்டியது தானோ? மக்கள் எழுச்சி அகற்றப்பட்டது மற்றும் போராட்டம் நசுக்கப்பட்டது போல், இது நாட்டில் எழுத்தாளர்களை வாயடைக்க வைக்கும் முன்னுதாரணமாக அமையும் என அஞ்சுவதாக அஹ்னாப் ஒரு பேட்டியில் குறிப்பிட்டதோடு “ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரை ஒடுக்கப்பட்டவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் என்பதே இல்லை” என்றும் தெரிவித்துள்ளது உண்மைதானே உலகெங்குமே.
- முன்பு இலங்கையின் மன்னார் பகுதியில் மட்டும் ஓரளவு அறியப்பட்டிருந்த மன்னாரமுது எனும் அஹ்னாப் ஜெஸீன் தற்போது உலகெங்கும் மனித உரிமைக் களத்திலுள்ள உரிமை காப்பாளர்களுக்கு உறவாகி நிற்கிறான். இக்கவிஞனின் தமிழ்க் கவிதைகள் தற்போது Free Ahnaf Jazeem என்ற தளத்தில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் வெகுவாகப் பரவியுள்ளன.
- மூன்று நாட்களுக்கு முன்புதான்- (16 அக்டோபர் 2024) - முப்பது வயதை எட்டியிருக்கும் ஒரு முன்னாள் தமிழாசிரியரான இளங்கவிஞன் அஹ்னாப், ஓரு கவிதை நூலால், அதிலுள்ள ஒரு குற்றமற்ற கவிதையால் தனக்கு நேர்ந்துவிட்ட மிக அசாதாரணமான, அசுரத்தனமான தாக்குதல்களை எண்ணித் துவண்டு நின்றுவிடப்போவதில்லை என்றும் ‘அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து எழுதுவேன்’ என்றும் நெஞ்சு நிமிர்த்தியே நிற்கிறான்.
- இதையும் படிக்க: கவிதைதான் குற்றம் - டாரின் டட்டூர் என்ற பாலஸ்தீன கவிதைக்குரல்!
- அதிகாரங்களைக் கரங்களில் வைத்திருப்போர் ஆதாரம் ஏதும் இல்லாமலே, ஒருவரைக் குற்றவாளியாகச் சித்தரித்துச் சிறைப்படுத்திக் கொடுமைகளுக்கு உள்ளாக்கி நீதிமன்றத்தில் நிறுத்தவுங்கூடும் என்பதற்கு இந்தத் தொடரின் முதலில் நாம் சந்தித்த பாலஸ்தீனப் பெண் கவிஞர் டாரின் டட்டூர் (Daren Tatour) போல, இலங்கைக் கவிஞர் அஹ்னாப் ஜெஸீமும் அண்மைக்கால எடுத்துக்காட்டுகளாவர். இதுபோல நிரூபணமாகாத, நிரூபணமாமவியலாத காரணங்கள் போர்த்திச் சிறைப்படுத்தப்பட்டுச் சித்ரவதைகளை எதிர்கொண்டு நீதிமன்றத்தில் நியாயம் பெற்றாரும், பெறாது சிறைவாசமே தொடர்ந்தாரும் எண்ணற்றாருளர் இவ்வுலக நாடுகள் அனைத்திலும். சந்திக்கலாம்.
நன்றி: தினமணி (19 – 10 – 2024)