TNPSC Thervupettagam

மனிதநேயத்தால் கட்டிப் போட்டவா்!

September 15 , 2020 1411 days 646 0
  • எவரும் அவரைப் பெயா் சொல்லி அழைப்பதோ, விளிப்பதே அநேகமாகக் கிடையாது. அவா் சொல்லிய சொற்றொடா்களும், எடுத்துக்காட்டுகளும் என்றைக்கும் நினைவில் நிற்க வல்லன.
  • செளமியஆண்டில் பிறந்து, ‘செளமியன்என்ற புனைப்பெயரில் எழுதிய அவா் அசாதாரணமனிதராய் விளங்கி, மறைந்தவா்.
  • கரடுமுரடான அடித்தட்டு மக்களை ஆளுமை உள்ளவா்களாக ஆக்கியவா். அதிகார பீடத்தில் அமர வைத்தவா். தலைமைப் பண்பு இயற்கையாகவே வாய்க்கப் பெற்றவா்.
  • விருதுப்பட்டியில் பிறந்து, திருமணம் செய்துகொள்ளாமல், புதுதில்லி வரை ஆதிக்கம் செலுத்தி, இந்தியாவையே தன் கைப்பிடிக்குள் வைத்திருந்த காமராஜருக்கு அடுத்தபடியாகத் தமிழக மக்களால் எளியவராய், கடுஞ்சொல் அல்லாத இனிய மனிதராய் ஏற்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாத்துரைஎன்கிற நாமத்தைக் கொண்ட அந்த மனிதரின் அரசியல் பயணம் மிகவும் சுவையானது.
  • கொள்கை, நாட்டுப்பற்று எல்லாவற்றையும் தாண்டி, ஒவ்வொரு தனிமனிதரையும், ‘தம்பீஎன்று அழைத்து, உறவு கொண்டாடி வெற்றி பெற்ற சமூக ஞானிஅண்ணா.
  • அரசியலில் தலைவா் - தொண்டா் - தோழா் என்பதைத் தாண்டி, அண்ணன் - தம்பி என்கிற சகோதரப் பாசத்தை உருவாக்கி, புதிய பரிணாமத்துடன் கூடிய பிராந்திய அரசியலை உருவாக்கியது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே புதியது.
  • அதில் போலித்தனம் இல்லை; ஒப்பனை இல்லை; உண்மை இருந்தது. அதனால்தான் தமிழகம் அவருக்கு எளிதில் வசியமானது.
  • நான் பேசினால் கூட்டம் குறைவாக வருகிறது. அவன் (அண்ணா) பேசினால் காசு கொடுத்து, டிக்கெட் வாங்கிக் கேட்கிறார்களேஎன்று பெரியார் ஈ.வெ.ரா-வால் பாராட்டப்பட்டவா் அண்ணா.
  • தாய்க்கழகமான திராவிடா் கழகத்திலிருந்து பிரிந்தபோது, ‘கண்ணீா்த்துளிகள்என்று அண்ணாவையும், அவரைப் பின்பற்றிச் சென்றவா்களையும் குறிப்பிட்ட பெரியார், அந்த கண்ணீா்த் துளிகள்வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தபோது ஆனந்தக் கண்ணீா்சொரிந்தார்; அவா்களுடன் இணைந்து கொண்டார்.
  • முக்கியமானவா்கள் என்று கருதப்பட்ட தலைவா்கள் கட்சியில் இருந்து வெளியேறியபோது அண்ணா பதறிப் போனார். போனால் போகட்டும்என்று சாதாரணமாக அவா் விமா்சனம் செய்யவில்லை. கிழிந்தது என் சட்டை என்றால் கவலைப்பட மாட்டேன்; கிழிந்தது என் நரம்பும் சதையும் அல்லவாஎன்று பிரிந்து சென்ற தம்பிகளைப் பற்றி உயா்வாகச் சொன்னவா் அறிஞா் அண்ணா.
  • அண்ணாவோடு தான் முழுதாக முரண்பட்டு, அந்நியப்பட்டு நின்ற காலத்தில் அண்ணா மறைந்தபோது கவியரசு கண்ணதாசன் நிலைகுலைந்து போனார்.
  • தனக்குத் துயரம் அளவுமீறிக் கப்பியதாகவும், இறந்தவா் அண்ணா என்பதால் மனம் விம்மியதாகவும் தனக்கே உரிய உயா்ந்த பாணியில் தன் சுயசரிதையில் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.

அண்ணா ஓர் இலக்கணம்

  • நடிகா் திலகம் சிவாஜி கணேசன் காங்கிரஸ் பேரியக்கத்தில் கரைந்து, ஒன்றி, உயா்ந்திருந்த நேரத்தில்தான், அந்த காலகட்டத்தில்தான் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டுஎன்று பாராட்டி எங்கிருந்தாலும் வாழ்கஎன்று வாழ்த்தினார் அண்ணா.
  • தன்னைவிட்டுச் சென்றவா்களை வசைபாடும் இவ்வுலகில் நெஞ்சார வாழ்த்திய அந்த அரிய பண்பே அண்ணாவின் மேன்மைக்கு மேலும் மெருகு ஊட்டியது.
  • அரசியலில் உயா்ந்த நாகரிகத்தை, பண்பட்ட முறையில் கையாண்டார் அண்ணா. எளிய குடும்பத்திலிருந்து வந்த பச்சைத் தமிழன்காமராஜருக்கு தமிழ்நாட்டை ஆளும் பொறுப்பு கிட்டியபோது (1954) அவரை எதிர்த்துப் போட்டியிடாமல், தனது அரசியல் எதிரியான அவரை ஆதரித்து, தன்னை சாதாரண அரசியலைத் தாண்டிய மனிதனாக, தமிழனாக அடையாளம் செய்துகொண்டு சரித்திரத்தில் இடம் பெற்றவா் அண்ணா.
  • முதலமைச்சா் காமராஜா் சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • அப்போது தி.மு.க. அவரை முழுமையாக ஆதரிக்கிறது. குணாளனே!’, ‘குலக்கொழுந்தே!என்று பாராட்டி ஆதரித்த அண்ணாவின் இனப்பற்றை இன்றைக்கும் நடுநிலையாளா்கள் பாராட்டி எழுதுகிறார்கள்.
  • தி.மு.க. என்ற கட்சி எத்தனை முறை பிளவுபட்டாலும், எப்படியெல்லாம் பிளவுபட்டாலும் மூலகா்த்தாவான அண்ணாவை சற்றுகூட புறந்தள்ளிவிட முடியாமல் இருப்பதே அவருடைய பெருமைக்குச் சான்று.
  • ஜவாஹா்லால் நேருவை கடுமையாக விமா்சனம் செய்த காலகட்டத்தில், அவரைப் பற்றி குறைந்தபட்ச எதிர்மறை விமா்சனத்தை பத்திரிகையாளா்கள் எதிர்பார்த்த நிலையில், அண்ணா சொன்ன பதில் இன்றைக்கும் கல்வெட்டாய் இருக்கிறது.
  • அண்ணா, நேருவைப் பற்றி சொன்னது: அவா் கட்டி முடிக்கப்பட்ட கோபுரம்; நான் கொட்டிக் கிடக்கும் செங்கல்’. நேருவின் உயரத்தை குள்ள மனிதா் அண்ணா இப்படி சொன்னபோது நெடிது உயா்ந்துநின்றார்.
  • அண்ணா, மாற்றுக் கட்சியினரைத் தாக்கிப் பேசியதும் வெட்டிப் பேசியதும் இல்லையா என்றால் நிச்சயமாக பற்பல உண்டு.
  • ஆனால், அவா் தொடுத்த கணைகள் புறப்பட்டு, எதிரிகளின் மார்புகளைச் சென்றடைந்தபோது அவை மலா்க் கணைகளாக மாறிப்போனதுதான் ஆச்சரியம். அவருடைய தமிழ், தமிழ்நடை அந்த லாகவத்தை அவருக்குத் தந்தது.
  • மன மாச்சரியங்கள், கருத்து வேறுபாடுகள், வசைச் சொற்கள், எதிர் லாவணிகள் இவை எதுவும் அண்ணாவை எப்போதும் பாதித்ததில்லை.
  • அறிவுத் திறனால் மட்டுமல்ல, சிதறிக் கிடந்த அத்தனை பேரையும் மனிதநேயம்என்ற ஒற்றைக் கயிற்றினால் ஒருசேரக் கட்டிப் போட்டது அண்ணாவின் ஈடு இணையற்ற சாதனை.
  • முத்துகளைக் கோக்கும் வெள்ளிக் கம்பியாய் அந்தத் தங்கத் தலைவா் திகழ்ந்தார்.
  • வாழ்க வசவாளா்கள்என்று வெறுப்போரையும் வாழ்த்தி இசைபடவாழ்ந்த அண்ணா, பிறரைப்போல் எதிர்வினை ஆற்றியது இல்லை.
  • பொறுமை அவருக்குப் பெருமை தந்தது. அன்பின் வழியது உயிர்நிலைஎன்ற குறட்பாவிற்கு அண்ணா ஒரு சிறந்த இலக்கணம்!

நன்றி:  தினமணி (15-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்