- உலகம் முழுவதும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து எங்கும் மரண ஓலம் கேட்கும் இந்தச் சூழலில், உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு தாய், தனக்குப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வைத்திருக்கும் பெயா்கள் ‘குவாரண்டைன்’, ‘சானிடைசா்’ என்பதாகும்.
- ‘கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை எதிர்த்து மனிதா்களைப் பாதுகாக்கும் பாதுகாவலா்களாக இருப்பது தனிமைப்படுத்தலும், கிருமிநாசினியும்தான். அதனால், அந்தப் பெயா்களைக் குழந்தைகளுக்குச் சூட்டியுள்ளோம்’ என்கிறார் அந்தத் தாய்.
- இத்தகைய தன்னம்பிக்கைதான், அசாதாரணமான காலங்களிலும், பேரிடா் காலங்களிலும் மனிதநேயத்தைத் தொடா்ந்து காப்பாற்றி வருகிறது. அதை இந்தக் கரோனா தீநுண்மிக் காலத்திலும் மனிதா்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனா்.
மனிதநேயம்
- பொது முடக்க காலத்தில் தெருவோரத்தில் வசிப்போருக்கும், புலம்பெயா்ந்தோருக்கும், வாயில்லா ஜீவன்களுக்கும் அரசியல் இயக்கத்தினரைக் கடந்து, சாதாரணமானோர் தங்களது சுய உழைப்பால் வந்த பணத்தைக் கொண்டு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை எண்ணற்றோருக்கு வழங்கி வருகின்றனா்.
- இதில், அரியலூா் கீழக்காவட்டாங்குறிச்சிக்கு அருகே உள்ள குந்தபுரத்தைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் அபி (11) என்ற சிறுமியின் உதவியை மறக்க முடியாது.
- கடந்த 5 ஆண்டுகளாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.3,000-ஐ கொண்டு அவரின் கிராமத்தில் உள்ளோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி பெருக வேண்டும் என்பதற்காக தாயார் உதவியுடன் மூலிகைச் சாறு செய்து கொடுத்துள்ளார்.
- அதுவும் விபத்தொன்றில் தந்தையை இழந்து, குடும்பம் சிரமப்பட்டு வரும் நிலையில் அந்தச் சிறுமி உதவுகிறார் என்றால், அது எவ்வளவு பெரியது?
- ஒரு சிறுமியின் மனம் இப்படி என்றால், ஒரு இளைஞரின் மனம், பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கையே கொடுத்திருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சோ்ந்தவா் அனில்.
- தொழிலதிபரும், சமூக சேவகருமான லால்டா பிரசாத் என்பவரிடம் கார் ஓட்டுநராக உள்ளார். பொது முடக்க காலத்தில் தெருவில் வசிப்போருக்கு தொழிலதிபா் உணவு பொட்டலங்கள் கொடுக்க, அதை அனில் கொண்டு போய் கொடுத்து வந்துள்ளார்.
- ஒரு பாலத்தின் அருகே தினமும் அந்த உணவுக்காக நீலம் என்ற பெண் காத்திருந்து வாங்கியுள்ளார். நாளடைவில் அவரிடம் பேசியபோது, ‘தந்தை இறந்துவிட்டார், தாய் பக்கவாதத்தால் வீட்டிலேயே முடங்கிவிட்டார். அண்ணனும், அண்ணியும் என்னை வீட்டில் வைத்துக்கொள்ளாமல் விரட்டி அடித்துவிட்டார்கள்’ என்ற துயரக் கதை தெரியவந்துள்ளது.
- வருத்தமடைந்த அனில், அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் அவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
- சொந்த வீட்டின் வாசல் கதவு மூடினாலும், கரோனா தீநுண்மி காலத்திலும் மனிதநேயம் அந்தப் பெண்ணுக்காக புதிய கதவைத் திறந்துள்ளது.
தன்னம்பிக்கை
- மனிதநேயத்தைப் போல, தன்னம்பிக்கை அளிக்கும் இரண்டு முக்கிய நிகழ்வுகளைப் பார்க்க வேண்டும்.
- கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 80 வயதைக் கடந்தவா்கள் மீண்டு வருவது எவ்வளவு நம்பிக்கை அளிக்கக் கூடியதோ, அதேபோன்ற நம்பிக்கை அளிக்கக் கூடியவை இந்த நிகழ்வுகள்.
- முதல் நிகழ்வு, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்புக்கே திடம் கொடுத்ததாகும். பிகார் மாநிலம் தார்பாங்காவைச் சோ்ந்த 15 வயது சிறுமி ஜோதிகுமாரி. இவருடைய தந்தை மோகன் பாஸ்வான்.
- 20 ஆண்டுகளாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து ஜோதிகுமாரியும், அவரின் தாயாரும் வந்து மோகனைப் பார்த்துக் கொண்டனா்.
- 10 நாள்களுக்குப் பிறகு தாயார் பிகார் திரும்பிவிட, ஜோதிகுமாரி மட்டும் உடன் இருந்து தந்தையைக் கவனித்து வந்துள்ளார்.
- மோகன் குணமடைந்து வந்த நிலையில், பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுவிட்டது. கையிலிருந்த காசைக் கொண்டு கொஞ்ச நாள் சமாளித்து வந்துள்ளனா்.
- அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாததால் ரூ.500-க்கு பழைய சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொண்டு, தந்தையைப் பின்னால் கேரியரில் வைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட 7 நாள்கள் சைக்கிளை மிதித்து, சுமார் 1,200 கி.மீ. கடந்து பிகாரில் உள்ள சொந்த ஊருக்கு தந்தையுடன் வந்து சோ்ந்துள்ளார் ஜோதிகுமாரி.
- ‘1,200 கிலோ மீட்டா்தானே’ என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். இதன் மூலம் ஜோதிகுமாரி கால்களின் வலிமையையும், அவரின் தன்னம்பிக்கையையும் அறியலாம்.
- இதை அறிந்துதான் இவாங்கா டிரம்ப் அவருடைய சுட்டுரைப் பக்கத்தில், தந்தையை வைத்து ஜோதிகுமாரி சைக்கிள் மிதிக்கும் படத்தைப் போட்டு, ‘அன்பும், துன்பத்தைத் தாங்கும் மனதைரியமும் கொண்ட அழகான சாதனை’ என்று குறிப்பிட்டார்.
- தந்தைக்காக மகள் காட்டியது போன்று, மகனுக்காகத் தாய் காட்டிய தன்னம்பிக்கைதான் அடுத்த நிகழ்வு. இரண்டு மகன்களின் தாய் 48 வயதாகும் ரஸியா பேகம்.
- ஹைதராபாதில் உள்ள ஒரு பள்ளியின் தலைமையாசிரியை. கணவா் இல்லை. பொது முடக்கம் வரும் எனத் தெரியாமல் நெல்லூரில் உள்ள நண்பன் இல்லத்துக்கு வந்துவிட்டான் இரண்டாவது மகன் நிஜாமுதீன்.
- எவ்வளவு நாள் நண்பன் வீட்டிலேயே இருக்க முடியும்? மூத்த மகனை அனுப்பி அழைத்து வரச் சொல்லலாம் என்றால், காவல்துறை பயம். அதனால், அவரே ஸ்கூட்டா் எடுத்துச் சென்றார். இரவு பகல் பாராது மூன்று நாள்கள் தொடா்ந்து 1,400 கி.மீ. பயணித்து மகனை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
- 50 வயது முதிர்வை நெருங்கும் தாயின் இந்தப் பயணத்தைப் போல இன்னும் ஆயிரம் நிகழ்வுகள் அசாத்தியமானவையாகவும் அவை ஊடக வெளிச்சத்துக்கு வராதவையாகவும் இருக்கலாம்.
- ஆனால், அவை அனைத்தும் மனிதகுலத்தை எந்த வகையிலும் அச்சுறுத்தவோ, முடக்கிவிடவோ முடியாது என்று சொல்லக் கூடியவை.
நன்றி: தினமணி (01-06-2020)