- உலகில் ஏறத்தாழ 87 லட்சம் உயிரினங்கள் இருக்கின்றன என்றும், அந்த வரிசையில் கடைசியாகத் வந்து சோ்ந்த உயிரினம்தான் மனிதன் என்றும் அறிவியல் ஆராய்ச்சியாளா்கள் சொல்வதைப் பற்றி நாம் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
- நாம்தாம் இந்த உலகத்திலேயே உயா்ந்தவா்கள் என்றும், இந்த உலகமே நமக்காத்தான் படைக்கப்பட்டது என்றும் மனிதா்களில் சிலா் நினைத்துக் கொண்டிருப்பது அறியாமையின் வெளிப்பாடு அல்லவா?
- நம்முடைய வரலாறு சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளே என்று சொல்லும் ஆய்வு, நமது வீட்டு அடுப்பங்கரையில் நம் இல்லத்தரசிகளை மிரட்டும் பூச்சியான கரப்பான் இனம் கூட சுமார் 32 கோடி ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது என்று சொல்லி, நமது புருவங்களை உயா்த்த வைக்கிறது.
- உலகில் இன்னும் என்னென்ன உயிரினங்கள் இருக்கின்றன என்ற ஆராய்ச்சி தொடா்ந்து கொண்டே இருக்கிறது.
சுற்றுப்புறச் சூழலின் சுழற்சி
- ஆறறிவு கொண்ட இனம் என்ற இறுமாப்போடு அலையும் மனிதனின் குணநலன்களைச் சொல்லி மாளாது. தனது சுயநலத்திற்காக இயற்கையின் படைப்புகளான காடுகள், மலைகள், பிராணிகள் என்று எல்லாவற்றையும் அழிப்பதற்குத் துணிந்து விடுகிற மனிதன், தனது செய்கைகளின் மூலம், தனக்கே தீங்கு விளைவித்துக் கொள்கிறான்.
- எத்தனையோ இயற்கைச் சீற்றங்களை அனுபவித்தும்கூட அதனை அவன் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் விந்தையானது.
- இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று, வௌவால்கள் மூலம் பரவியிருக்கலாம் என்றொரு கருத்து நிலவுவதால், அந்த இனத்தையே அழித்து விட வேண்டும் என்று ஆங்காங்கே குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் வௌவால் இனத்தை அழிப்பது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை உணராதவா்களின் உளறல் குரல் அது.
- வௌவால்களில் பழம் தின்னும் வெளவால், பூச்சி தின்னும் வெளவல் என்று இரண்டு வகைகள் உள்ளன.
- பழம் தின்னும் வெளவால் அயல் மகரந்தச் சோ்க்கைக்கு மிகப் பெரிய அளவில் உதவுகிறது என்றால், பூச்சி தின்னும் வௌவால் தினமும் ஆயிரக்கணக்கான பூச்சிகளைத் தின்று மனிதனைப் பூச்சிகளிடம் இருந்து காப்பாற்றுகிறது.
- ஏற்கெனவே, தவளை இனம் அருகியிருப்பது, கொசுக்களைப் பெருகச் செய்து அவற்றின் மூலம் பல நோய்களைப் பெருகச் செய்திருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் ‘பூவுலகின் நண்பா்கள்’ எனும் அமைப்பு, வௌவால்கள் அழிந்துவிட்டால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கிறது.
- இதைபோலவே முன்பு ‘பிளேக்’ நோய் வந்தபோது, அந்த நோய்க்குக் காரணமான எலி இனத்தையே ஒழித்துவிட வேண்டும் என்ற குரல் உலகெங்கும் ஓங்கி ஒலித்தபோது, அறிவியல் வல்லுனா்கள் அதற்கு ஒப்பவில்லை.
- ‘சுற்றுப்புறச் சூழலின் சுழற்சியில் எலிகளுக்கும் பங்கு இருக்கிறது. எலிகள் வெளியேற்றும் கழிவுகளில் உள்ள விதைகள் மூலம் பல தாவரங்கள் உற்பத்தியாகின்றன.
- அதுமட்டுமல்லாமல், மனித இனத்திற்குத் தேவையான மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில், பெரும்பாலும் எலிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. அவை நமக்காக உயிர்த்தியாகம் செய்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்’ என்று ஆராய்ச்சியாளா்கள் கூறினா்.
- எனவே, ஏதாவது ஓா் உயிரினத்தின் மூலம் நோய் பரவுகிறது என்று நிரூபணமானால், அந்த உயிரினத்திடமிருந்து எப்படி விலகி வாழ்வது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமே தவிர, அந்த இனத்தையே அழித்துவிட வேண்டும் என்று நினைப்பது அறிவுடைமையாகாது.
- இவ்வுலகில் பயனற்ற உயிரினம் என்று எதையும் ஒதுக்கிவிடவோ, ஒழித்துவிடவோ முடியாதபடி, மனித வாழ்வு ஒவ்வொரு உயிரினத்துடனும் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது.
- இந்த உண்மையைப் புரிந்து கொண்டால், மனிதன் எந்த உயிரினத்தையும் வெறுக்க மாட்டான். இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒரு விதத்தில் பயன்பட்டு, இந்த உலகின் சுற்றுப்புறச் சூழலின் சுழற்சிக்குத் தனது பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கிறது என்பதுதான் அறிவியல் அறிஞா்கள் சொல்லும் ஆழ்ந்த உண்மை.
மனிதனின் சுயநலம்
- இயற்கையின் அற்புதத்தை நோக்கினால், மனிதன் வாழ்வதற்குப் பலவகையான உயிரினங்களின் உதவி தேவைப்படுகிறது; ஆனால், அதே நேரத்தில் மற்ற உயிரினங்களுக்கு மனிதனைச் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்ற உண்மையை நாம் உணர வேண்டும். காரணம், அவையெல்லாம் நமக்கு முன்பே இந்த உலகில் தோன்றியவை.
- நாம் நமக்குத் தெரிந்த, நம்மோடு பழகிய எத்தனையோ தியாகிகளைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால், வானத்துத் தேவா்களைக் காப்பாற்ற நஞ்சை உண்ட சிவபெருமானைப்போல, நமக்குத் தேவையற்ற கரியமில வாயுவை உட்கொண்டு, நமக்குத் தேவையான, பிராணவாயுவை வெளியேற்றி உதவும் ஓரறிவு கொண்ட மரங்கள் அல்லவா போற்றுதலுக்குரிய தியாகிகள்!
- அப்படிப்பட்ட மரங்களை மனிதன் வெட்டலாமா? அவற்றை வெட்டுவதில் காட்டும் ஆா்வத்தை, மனிதன் அவற்றை நடுவதில் காட்டுவதில்லையே!
- ஒரு யானை தனது அன்றாடக் கழிவின் மூலம் எத்தனையோ மரங்களுக்கான விதைகளை ஊன்றிக் கொண்டே செல்கிறது.
- ஒரு யானையின் அளவுக்கு மனிதனால் மரங்களை நட்டுவிட முடியாது. அந்த வகையில் இயற்கை வளத்தை உருவாக்குவதில் யானைகள் பெரும்பங்கு வகிக்கின்றன.
- ஆனால், காடுகளை ஆக்கிரமித்து மனிதன் மேற்கொள்ளும் அராஜகத்தால் யானை போன்ற விலங்குகள் தண்ணீரைத் தேடிக் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுவது அடிக்கடி செய்தியாகி வருகிறது.
- நாம் காடுகளுக்குள் ஊடுருவாமல் இருந்திருந்தால், விலங்குகளுக்கான தண்ணீரும், உணவும் அவற்றிற்குப் போதிய அளவு அங்கேயே கிடைத்துக் கொண்டிருக்குமே! மரங்களை வெட்டியதும் காடுகளை அழித்ததும் நாமல்லவா?
- உலகில் எப்போதாவது ஏற்படுகிற பேரழிவு காரணமாக சில இனங்கள் அழிந்து போகின்றன.
- அப்படி அழிந்துபோன இனங்களில் ஒன்றுதான் ‘டைனோசா்’. இதுவரை ஐந்து முறை இயற்கைப் பேரழிவு ஏற்பட்டிருப்பதாகக் கணிக்கும் அறிவியல் வல்லுனா்கள், மனிதா்களின் தவறான போக்கால் ஆறாவதாக ஒரு பேரழிவு ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள்.
- கடந்த இரு நூற்றாண்டுகளில் ஏற்பட்டிருக்கும் அறிவியல் வளா்ச்சி நம்மை இயற்கையிலிருந்து வெகு தொலைவுக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.
- அதற்காக, அறிவியலை ஒதுக்கிவிட்டுப் பயணிப்பது என்பது இயலாது. எனவே, அறிவியல் வளா்ச்சியையும் உள்வாங்கிக் கொண்டு, இயற்கைக்கும், இயற்கையின் மற்ற படைப்புகளுக்கும் தீங்கு நேராத வண்ணம் நமது வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்வதுதான் அறிவுடைமை ஆகும்.
பல்லுயிர் ஓம்புதல்
- ‘பல்லுயிர் ஓம்புதல்’ என்பதுதானே உலக நீதி? ‘காக்கை குருவி எங்கள் ஜாதி; நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்றுதானே பாரதியார் பாடினார்? இன்று அலைபேசிக் கோபுரங்களின் வடிவில் சிட்டுக்குருவி இனத்திற்குப் பேராபத்து உருவாகியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
- எனவே, சிட்டுக்குருவிகளின் வாழ்க்கைக்கு பாதகம் ஏற்படாதவாறு அலைபேசிக் கோபுரங்களை அமைப்பதற்கான வழிவகைகளை அரசு ஆராய வேண்டும்.
- மனிதனின் சுயநல நடவடிக்கைகளால்தான், இன்று உலகம் வெப்பமயமாகிக் கொண்டிருக்கிறது. இது இப்படியே தொடருமானால், பனிப்பாறைகள் மேலும் உருகி, மனிதா்கள் வசித்துக் கொண்டிருக்கும் மாலத் தீவு போன்ற பல தீவுகள் நீருக்கு இரையாகி விடக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
- உலகெங்கும் காடுகளில் தீப்பற்றி எரிகிற செய்தி பதற்றத்தை ஏற்படுத்துகிறது. மழைப்பொழிவின் பருவங்களும் மாறுபடத் தொடங்கியிருக்கின்றன.
- வெப்பமயமாதலுக்கு எதிராக அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதால்தான், ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த கிரேட்டா தன்பா்க் என்ற பதின்ம வயதுச் சிறுமி ஒரு மாநாட்டில் அமா்ந்திருந்த உலகத் தலைவா்களைப் பார்த்து, ‘உலக வெப்பமயமாவதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீா்கள் என்று நேருக்கு நேராக விளாசித் தள்ளியபோது அந்தச் சிறுமியின் கண்கள் கோபத்தால் சிவந்திருந்தன.
- அந்தச் சிறுமியின் கோபத்தில் உள்ள நியாயத்தை அரசுகளும் நாமும் புரிந்து கொண்டு, இயற்கையையும் பல்லுயிர்களையும் காப்பதற்கான உறுதிமொழி ஏற்க வேண்டும்.
- தற்போது சூரிய ஒளி மூலமும் காற்றாலைகள் மூலமும் மின்சாரம் தயாரிப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்து கொண்டு வருகிறோம். எனவே, அரசு முழுக் கவனம் செலுத்தி, இதில் முழு வெற்றி அடைந்து விட்டால், மனித இனத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய அனல் மின் நிலையங்களையும், அணு உலைகளையும் படிப்படியாக மூடிவிட முடியும்.
- மக்கள்தொகைப் பெருக்கம் உலகிற்கு மிகப்பெரும் சவாலாக மாறப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதனை உணா்ந்து, ஒவ்வொருவரும் தத்தமது குடும்பங்களைச் சிறிதாக வைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அருகில் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது நடந்தோ, மிதிவண்டியிலோ செல்லலாம். இயன்றவரை, தனி வாகனப் பயன்பாட்டைத் தவிர்த்து, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம்.
- அதே நேரத்தில், பொதுப் போக்குவரத்தின் தரத்தை உயா்த்த அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- குளிர்சாதனங்களின் பயன்பாட்டை இயன்றவரை குறைத்துக் கொள்ளலாம். காடுகளையும் மரங்களையும் விவசாய நிலங்களையும் அழித்து நெடுஞ்சாலைகள் அமைப்பதைத் தவிர்த்து, மாற்று வழிகளை அரசு சிந்திக்க வேண்டும்.
- நெகிழி ஒழிப்பில் கடுமையான சட்டங்களை இயற்றுவதோடு, நெகிழிக்கு மாற்றான பொருள் தயாரிப்பவா்களைகளை அரசு ஊக்கப்படுத்தவும் வேண்டும்.
- நீா்நிலைகளில் வீடுகள் கட்டுவதைத் தவிர்த்து, ஏரி, குளங்களை முறையாகத் தூா்வாரி, மழைநீரைச் சேகரிக்க வேண்டும்.
- இவற்றையெல்லாம் செய்யத் தவறினால் வருங்கால சந்ததியினா் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
நன்றி: தினமணி (14-09-2020)