- மக்கள்தொகை அதிகமுள்ள இந்த சமூகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைப்பட்டவர்கள். அட இப்படியும் மனிதார்களா என்று வியக்கும் அளவுக்கும், வெறுக்கும் அளவுக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். மனிதம் இல்லாத இவர்களெல்லாம் மனிதர்களா என்று மனது வருந்தும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுபோன்றவர்களை பார்க்கும்போதுதான் எங்கே தொலைந்தது மனிதம்? மனிதம் வாழ்வது எப்போது? மனிதம் மரத்துப் போய்விட்டதா? என பல கேள்விகள் எழுகின்றன.
- சமீபத்தில் சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த கீர்த்தி, தனது 10 வயது மகள் லியோராஸ்ரீயைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது தண்ணீர் லாரி மோதி, லாரியின் சக்கரத்தில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே லியோராஸ்ரீ பலியானார்.
- குழந்தையை தூக்கி உதவக்கூட யாரும் முன் வரவில்லை. சாலையில் போவோர் வருவோர் எல்லாம் அவரவர் வேலையைப் பார்க்கிறார்களே தவிர எங்களுக்கு உதவவில்லை என்று குழந்தையின் தாய் கண்ணீருடன் குறிப்பிடுகிறார்.
- மனிதர்களுக்கு மதம் பிடித்தால் என்ன நடக்கும் என்பதற்கு மே மாதம் தொடங்கிய மணிப்பூர் இனக் கலவரங்களே உதாரணம். பெண்ணை, சகோதரியை, மனைவியை அவமானப்படுத்தி உயிரோடு எரிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இரண்டு பக்கத்திலும் தீயை அணைக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ள அரசுகள், கொழுந்துவிட்டு எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றி அரசியல் செய்து வருகின்றன. இந்தப் பிரச்னையில் அரசியலை விட்டுவிடுவோம். ஏனெனில், பெரும்பாலான பிரச்னைகளுக்கு அரசியல் கண்ணோட்டத்தில் தீர்வு கிடைக்கும் என்பது நிச்சயமில்லை.
- கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் காவலர் ஒருவர் தனது மனைவிக்கு 150 முறை போன் செய்து ம் எடுக்காததால் கோபமடைந்து, 230 கி.மீ. பயணம் செய்து மாமியார் வீட்டில் இருந்த மனைவியை கொன்றதுடன், தான் வைத்திருந்த விஷத்தைக் குடித்து தற்கொலைக்கும் முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது.
- கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுரங்கம் மற்றும் நில ஆய்வியல் துறையின் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த நேர்மையான அதிகாரியான பிரதிமாவை, ஒழுங்கீனத்துக்காகப் பணி நீக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர் கிரண் கொலை செய்தது மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
- தெலங்கானா மாநிலம், மார்கண்டேய பகுதியைச் சேர்ந்த பிரவீன்-லலிதா தம்பதியினருக்கான குடும்ப பிரச்னையில் கூலி ஆள்களை வைத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது பாம்பை விட்டுக் கடிக்க வைத்துக் கொலை செய்துள்ளார் மனைவி. இவர்களது 3 குழந்தைகளின் எதிர்காலம்?
- தூங்கிக் கொண்டிருந்த மாமனார் மீது ஆத்திரப்பட்ட மருமகள், பேப்பரில் தீ வைத்து அவர் மீது வீசியது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வு எங்கே, யார், எப்போது நடைபெற்றது என்ற விவரங்கள் எதுவும் தெரியவரவில்லை. எனினும் இந்த விடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வுக்குக் காரணம் என்ன என்று ம் தெரியவில்லை.
- ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் குடும்பத்தினரோடு வசித்து வந்த 5 வயது சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மர்மநபர் ஒருவர் சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவார் என அஞ்சிய அவர் அங்கிருந்த கத்தியை எடுத்து சிறுமியின் கழுத்தை அறுத்து கொலையும் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
- மனிதன் மனிதத்தன்மையை இழந்துகொண்டே இருக்கிறான். மனிதாபிமானமே இல்லாத இந்த மனிதர்கள் மத்தியில் மனிதம் வாழ்வது எப்போது?
- தேசத்தின், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்து வரும் கொலைகளும், மதம் சார்ந்த தாக்குதல்களும் மக்களின் சகிப்புத்தன்மை மீது கேள்வி எழுப்பி வருகின்றன.
- காஸாவில் இஸ்ரேல் படையினா் கடந்த 33 நாள்களாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 10,328-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா். அவா்களில் 4,324 போ் சிறுவா்கள். இந்தத் தாக்குதல்களில் 2,550 பேரைக் காணவில்லை; 26,475 போ் காயமடைந்துள்ளனா். ஆயிரக்கணக்கான மனிதர்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறி வருகிறார்கள்.
- உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் - உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன. உலக சமுதாயம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. இவைதான் செய்ய முடியாமா?
- அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினரான பிலிப் மேத்யூ - மெரின் ஜாய் தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களுக்குள்ளும் விரிசல் ஏற்பட மெரின் ஜாய், கணவரை பிரிந்து வாழ முடிவு செய்துள்ளார். இதனை ஏற்காத கணவர் மிகுந்த கோபம் கொண்டு விவகாரத்து கொடுக்க முடியாது என்றும் மறுத்துள்ளார்.
- இந்த சூழலில் கடும் மன உளைச்சலில் இருந்த கணவர் பிலிப், மனைவி பணியாற்றும் மருத்துவமனைக்கே சென்று 17 முறை கத்தியால் கொடூரமாகக் குத்தியும் ஆத்திரம் அடங்காததால் மனைவி மீது பல முறை காரை ஏற்றி இறக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்த ஜாய், தனது இந்த நிலைக்கு காரணம் தனது கணவர் என்று மரண வாக்குமூலம் அளித்த பின்னரே உயிரிழந்தார். இவர்களது ஒரு குழந்தையின் நிலை?
- இப்படி நாளுக்கு நாள், உள்ளூரில், மாநிலத்தில், நாட்டில், உலக நாடுகளில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, விபத்து சம்பவங்களை பார்க்கும்போது எங்கே தொலைந்தது மனிதம்? குடும்பங்களிடையேயும், மக்களிடையேயும் காணப்பட்ட ஒற்றுமை, வரலாற்றின் எந்தப் புள்ளியில் காணாமல் போனது? யாதும் ஊரே யாவரும் கேளிர், உலகமே ஒரு குடும்பம் போன்றவையெல்லாம் பேச்சிலும் ஏடுகளுக்குள்ளேயே சிறைப்பட்டுவிட்டனவா? அவை மக்களின் மனதில் குடியேறவில்லையா? சமத்துவத்தில் உதிர்ந்த மனிதம் இன்னும் உயிர்த்தெழவில்லையா? என்ற கேள்விகள் எழுகின்றன.
- இத்தனைக்கும் இடையே உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு, இப்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளது என செய்திகள் படிக்கிறோம்.
- அதாவது, 2008-இல் திருப்போரூா் பகுதியில் சாலை விபத்தில் இறந்த ஹிதேந்திரன் என்கிற மாணவரின் உறுப்புகளை அவரது பெற்றோா் தானமாக வழங்கினா். அதுமுதல் தமிழகத்தில் பெரும் விழிப்புணா்வு ஏற்பட்டு, உறுப்பு தானம் செய்யப்பட்டு வருகிறது. அப்போது மூளைச் சாவு அடைந்தோரின் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தமிழக அரசின் சாா்பில் தொடங்கப்பட்டது. அது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறது. அந்தத் திட்டம் தற்போது தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையமாக மாற்றப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் தற்போது 40 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளிலும், 120 தனியாா் மருத்துவமனைகளிலும் உறுப்பு தானம் பெறுவதற்கான உரிமம் உள்ளது.
- தம் உறுப்புகளை ஈந்து பல உயிா்களைக் காப்போரின் தியாகத்தைப் போற்றும் வகையில், இறக்கும் முன்பு உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விழிப்புணர்ச்சி அறிவிப்புக்குப் பின் உறுப்பு தான விருப்பப் பதிவுகள் அதிகரித்துள்ளன என்ற செய்தி, தேய்ந்தாலும் மனிதம் வாழ்ந்துகொண்டிருக்கிறது, அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
- கள்வர்களின் எண்ணிக்கை அதிகம். காவலர்களின் எண்ணிக்கை குறைவு அதுபோன்று தான் நல்ல உணர்வுகள் மங்கி வருகின்றன. இதனை மீட்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதற்கு ஒரே வழி மக்களின் மனிதத்தை மீட்டெடுப்பதே. மனம்தான் கடிவாளம். எது யோசிக்கிறதோ, எது புரிந்துகொள்கிறதோ, எது ஆசைப்படுகிறதோ, எது இயக்குகிறதோ அதுதான் மனம். எல்லா பிரச்னைகளையும் தீர்த்து வைக்க நமக்கு மனம்தான் வேண்டும்.
- மனம் என்பது மைக்ரோஸ்கோப் போன்றது. சிலநேரம் சின்னதாக இருக்கிறதைப் பெரியதாக காட்டும். பெரியதாக இருப்பதைச் சின்னதாகவும் காட்டும், சில நேரங்களில் காட்டாமலும் விட்டுவிடும்.
- இதைதான் கீதை சொல்கிறது: எவன் ஒருவன் மனதை கட்டுபடுத்துகிறானோ அவனுக்கு மனம் நண்பன். எவன் ஒருவன் மனதை கட்டுப்படுத்த முடியாமல் போகிறோனோ அவனுக்கு மனம் எதிரி என்கிறது. எனவே பஞ்சபூதங்கள் கொண்ட நம்முடைய மனதை நண்பனாக்கிக் கொண்டால் வாழ்க்கை செழிக்கும். விரோதியாக்கிக் கொண்டால் வாழ்க்கை வசந்தத்தை இழக்கும்.
- மனம் இருந்தால் பறவைக் கூட்டிலும் மான்கள் வாழலாம் என்பார்கள். மனித மனம் சுருங்கியிருக்கிறது. உலகம் விரிந்திருக்கிறது. மனதை குப்பைகளை கொட்டும் தொட்டியாக மாற்றாமல் இறைவன் குடியிருக்கும் இல்லமாக மாற்றுவோம். மனம் விரிந்தால் உலகம் மகிழ்ச்சியாக மாறும்.
நன்றி: தினமணி (13 – 11 – 2023)