TNPSC Thervupettagam

மனிதர்களால் மரபணுக்களை மாற்ற முடியுமா

December 20 , 2023 365 days 251 0
  • மனிதர்களுக்குத் தாங்கள் விரும்பும் வகையில் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளப் பிடிக்கும். ஒப்பனை செய்கிறோம். பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தோற்றத்தையே மாற்றுகிறோம். ஆனால், மனிதர்களால் தாங்கள் விரும்புவதுபோல் மரபணுக்களில் மாற்றம் செய்ய முடியுமா? விரும்பும் உடல் அமைப்புகளை மரபணுவில் மாற்றம் செய்வதன் மூலம் கொண்டுவர முடியுமா? சாத்தியம்தான் என்கிறது அறிவியல். மரபணுத் திரிபு (Mutation), இயற்கைத் தேர்வு (Natural Selection) இவை இரண்டும்தாம் உலகில் அத்தனை உயிர்களையும் வடிவமைத்துள்ளன. எல்லா உயிரினங்களும் டி.என்.ஏக்களைக் கொண்டிருக்கின்றன. இந்த டி.என்.ஏக்களின் இழைகளைத்தாம் மரபணுக்கள் என்கிறோம். இந்த டி.என்.ஏக்களில்தாம் ஓர் உயிரினத்தின் உருவம், பண்பு எல்லாம் எப்படி அமைய வேண்டும் என்கிற தகவல் இருக்கும்.
  • ஓர் உயிரினம் அடுத்த தலைமுறையை உருவாக்கும்போது மரபணுக்கள் தாயிடம் இருந்து குட்டிகளுக்குக் கடத்தப்படும். அதில்தான் அந்தக் குட்டி எப்படி இருக்க வேண்டும் என்கிற தகவல் இடம்பெறும். ஆனால், இந்த மரபணுக்கள் தாயிடம் இருந்து அப்படியே செல்லாது. அதில் தன்னிச்சையாகச் சில மாறுதல்கள் ஏற்படும். ஒரு நாய் குட்டிப் போடும்போது அதன் மரபணுவில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, குட்டிக்குத் தாயைவிட வால் நீளமாகவோ, நிறம் வேறுபட்டோ இருக்கும். இதைத்தான் மரபணுத் திரிபு என்கிறோம். இந்த மரபணுத் திரிபு தொடர்ந்து பல தலைமுறைகளாக நடைபெறும்போது அது புதிய பண்புகளாக உருவாகி, வேறு ஓர் உயிரினமாகவே பரிணமித்துவிடும். இதுதான் பரிணாம வளர்ச்சி. குரங்கிலிருந்து மனிதன் இப்படித்தான் மாறி வந்தான்.
  • மரபணுத் திரிபு ஏற்படும்போது அதில் எந்தெந்தப் பண்புகள் அந்த உயிரினம் வாழ்வதற்கு உதவுகின்றனவோ அவை மட்டும் பிழைத்திருக்கும். மற்றவை எல்லாம் நீக்கப்படும். மரபணுத் திரிபால் ஒரு பறவை இறக்கை இல்லாமல் பிறந்தால், அது வாழ முடியாமல் இறந்துவிடுகிறது. இதுதான் இயற்கைத் தேர்வு. பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் இவ்வாறுதான் உருவாகி இருக்கின்றன. மனிதர்கள் இயற்கைத் தேர்வை ஓரளவு தம் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். ஏதாவது குறைபாட்டுடன் குழந்தை பிறந்தால் அதைக் காப்பாற்றுவதற்கு மருந்துகளும் கருவிகளும் வந்துவிட்டன. இதனால் இறப்பு குறைவாகவே இருக்கிறது.
  • ஆனாலும் மரபணுத் திரிபை மனிதர்களால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அது தன்னியல்பாகவே நடைபெறக்கூடியதாக இருக்கிறது.அதையும்கட்டுக்குள் கொண்டுவர டி.என்.ஏவின் கோடிக்கணக்கான இழைகளில் வேண்டிய இடத்தில் குறிப்பிட்ட மாற்றத்தைச் செய்வதற்கு ஒரு கருவி தேவைப்பட்டது. 2012ஆம் ஆண்டு அந்தக் கருவி உருவானது. அதன் பெயர் CRISPR (Clustered Regularly Interspaced Short Palindromic Repeats). கிரிஸ்பரை உருவாக்க உதவியது ஒரு பாக்டீரியா. நம்மைப்போல பாக்டீரியாவும் தொடர்ந்து வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும். அதிலிருந்து தப்பிக்கும் பாக்டீரியாக்கள், தங்களைத் தாக்கிய வைரஸின் டி.என்.ஏவைத் தங்களுடைய மரபணுத் தொகுதிகளில் சேகரித்து வைத்துக்கொள்ளும். நாம் ஒரு கோப்பு போட்டு ஆவணங்களை வைத்துக்கொண்டிருப்பதுபோல, அவை வைரஸ் டி.என்.ஏவின் தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கும்.
  • இதுதான் பாக்டீரியாவின் நோய் எதிர்ப்பு மண்டலம். இதனைத்தான் கிரிஸ்பர் என்கிறோம். இந்தத் தகவல்கள் ஆர்.என்.ஏவிற்குப் பிரதி எடுக்கப்பட்டு Cas9 எனும் புரதத்துக்குள் செலுத்தப்படும். இந்தப் புரதம்தான் பாதுகாப்பு வீரன். ஒருவேளை வைரஸ் திரும்பித் தாக்கும்போது, கிரிஸ்பர் அதன் டி.என்.ஏவைத் தன்னிடம் இருக்கும் கோப்புகளுடன் பொருத்திப் பார்த்து, அது பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்று தெரிந்தால் வெட்டிச் சாய்த்துவிடும். கிரிஸ்பர் இதனை அனைத்து வகை செல்களிலும் செய்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் கேஸ்9இல் நமக்கு வேண்டிய டி.என்.ஏக்களின் தகவல்களை மாற்றி வைக்கும்போது, கிரிஸ்பரால் எந்த மரபணு வரிசையையும் வெட்ட முடியும். டி.என்.ஏவின் நுண்ணிய இழையைக்கூட அதனால் பிரித்துவிட முடியும். இதைப் பயன்படுத்தி உயிரினங்களின் டி.என்.ஏவில் மாற்றம் செய்ய விஞ்ஞானிகள் முயன்றனர்.
  • வெட்டப்பட்ட டி.என்.ஏவை செல்கள் தானாகச் சரிசெய்யும்போது அதன் தகவல்கள் மாறுகின்றன. இல்லை என்றால் வெட்டப்பட்ட இடத்தில் வேறு மரபணு தகவல்களை நிரப்பி, புதிய தகவல்களாக மாற்றிவிடவும் முடியும். இதன்மூலம் நமக்கு வேண்டிய தகவல்களை மாற்றி எழுதலாம். ஹெச்.ஐ.வி பாதிப்புக்கு உள்ளாகும் மரபணுக்களை கிரிஸ்பரால் நீக்கமுடியும். நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்கும்படிச் செய்யமுடியும். மனிதர்களுக்கு ஏற்படும் ஆயிரக்கணக்கான நோய்களுக்கு ஒரே ஒரு மரபணுவில் ஏற்படும் திரிபுகள்கூடக் காரணமாக இருக்கின்றன. கிரிஸ்பரைப் பயன்படுத்தி இதனைத் தடுக்க முடியும். நோய்த் தடுப்பு மட்டுமல்ல, கிரிஸ்பரைப் பயன்படுத்தி மனிதர்களை அவர்களுக்கு வேண்டிய வகையில் வடிவமைக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால், இவற்றைக் கரு உருவாக்கத்தின் தொடக்கக் கட்டத்திலேயே செய்ய வேண்டும்.
  • கிரிஸ்பரைப் பயன்படுத்தி OCA2 மரபணுவை மாற்றுவதன் மூலம் குழந்தைக்கு நீல நிறக் கண்களை உருவாக்கலாம். மயோஸ்டேட்டின் (Myostatin) மரபணுவை மாற்றி அமைப்பதன் மூலம் வலிமையான தசைகளை உருவாக்கலாம். இப்படி நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால், கிரிஸ்பரால் மனித மரபணுக்களை மாற்றி, குழந்தைகளை உருவாக்குவது சரியானதா என்கிற கேள்வி எழுகிறது. அவ்வாறு செய்வது இயற்கை விதிகளை மாற்றி அமைப்பது. இத்தகைய செயல்களால் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையையே அசைத்துப் பார்ப்பது சரிதானா என்கிற விமர்சனங்கள் எழுகின்றன. உலக அளவில் கிரிஸ்பர் மூலம் நோய்களுக்கான சிகிச்சைகள் தொடங்கிவிட்டன. ஆனால், இது எதிர்காலத்தில் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கப் போகிறது என்கிற அச்சமும் இருக்கவே செய்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்