TNPSC Thervupettagam

மனிதவியலில் தமிழ் அறிவுத் தோற்றவியல்!

October 31 , 2024 71 days 84 0

மனிதவியலில் தமிழ் அறிவுத் தோற்றவியல்!

  • சமூக அறிவியலிலும், மனிதவியல் புலங்​களிலும் இந்திய, தமிழக அறிவுசார் மரபுகள் உரிய இடத்தைப் பெறுவ​தில்லை. பொதுவாக வரலாறு, தொல்லியல் உள்ளிட்ட பாடங்​களில் மேலைநாட்டுக் கோட்பாடு​களும், அறிவுசார் அணுகு​முறை​களும் மட்டுமே முக்கி​யத்துவம் பெறுகின்றன. இந்திய, தமிழக, அறிவுசார் மரபுகளைப் பெரும்​பாலான அறிஞர்கள் கவனிப்​ப​தில்லை. காலனி​யா​திக்க காலப் பார்வை​யும், அணுகு​முறை​களும், தமிழியல் மீதான புரிதல்​இன்மையும் இதற்குக் காரணம் எனலாம்.
  • இதன் அடிப்​படையில் பண்பாட்டு வரலாற்று வளர்ச்சியை விளக்க சி.ஜே.​தாம்​சனின் முக்காலக் கொள்கையும் தொல்காப்பியரின் திணைக் கோட்பாடு மாதிரியும் எவ்வாறு பொருத்தமாக உள்ளன என்பதைப் பார்ப்​போம்.

மனிதவியலில் தமிழ் அறிவுத் தோற்ற​வியல்:

  • நவீனக் காலக் கருத்து​களுக்கான முன்னோடிக் கருத்துகள் பழங்காலத்தில் நிலவின. படிநிலை வளர்ச்சிக் கொள்கையை நினைவூட்டும் கருத்​தாக்கம் இடைக்​காலத் தமிழ் இலக்கி​யத்தில் உண்டு. மாணிக்​கவாசகரின் ‘திரு​வாசக’த்தில் சூழலியல் வகைப்​பாட்டை உணர்த்தும் வரிகள் (புல்​லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி...) உண்டு.
  • இப்பாடல் வரிகள் உயிரினங்களை ஒரு வரிசைப்​படுத்தி, அவற்றை வெவ்வேறு பிறப்புகள் எனக் கூறுகிறது. ஒரே உயிர் பல நிலைகளை அடையக்​கூடிய வளர்ச்சி நிலையைக் கூறுவதாக உள்ளது இப்பாடல். இங்கு வகைப்​படுத்தல், விளக்கம் அளித்தல் என்ற அணுகு​முறைகள் பின்பற்​றப்​பட்​டுஉள்ளன. ஆனால், இதை முழுவதுமான படிநிலை வளர்ச்சிக் கொள்கை என்று கருத முடியாது. பழங்காலத்தில் உயிர்களை ஆறாக வகைப்​படுத்​தினர் என்பதைத் தொல்காப்​பியம் நமக்குத் தெளிவுபடுத்து​கிறது.
  • இத்தகைய வகைப்​பாடுகள் உயிர்கள் அனைத்​துக்கும் உள்ள தொடர்​பு​களையும் உறவுகளை​யும், சிக்கலான பிணைப்​பையும் (Entanglement theory, Hodder 2012) விளக்கு​கின்றன. இத்தகைய அறிவுத் தோற்ற​வியல் கருத்துகளை நாம் மனிதவியல் கோட்பாட்டு ஆய்வில் கவனிப்பது அவசிய​மாகிறது.

முக்காலக் கோட்பாடும் திணைக் கோட்பாடும்:

  • தொல்லியல் ஓர் அறிவியல் புலமாகத் தோன்று​வதற்கு முன்னரே மனிதர்​களின் தோற்றம் குறித்த கருத்துகள் உருவாகி​யிருந்தன. தொடக்கக் காலத் தொல்லியல் ஆய்வில் கிரேக்​க-ரோ​மானிய வரலாற்று வரைவியலுக்​கும், கருத்​தாக்​கங்​களுக்கும் மட்டுமே முக்கி​யத்துவம் அளிக்​கப்​பட்டு​வந்தது. 1830களில் டேனிஷ் தேசிய அருங்​காட்​சி​யகத்தின் சி.ஜே.​தாம்சன் முக்காலக் கொள்கையை (Three Age system) உருவாக்​கினார்.
  • இக்கொள்கை தொல்லியல் வரலாற்றில் ஒரு முக்கியமான கருத்​தாக்​க​மாகக் கருதப்​படு​கிறது. இந்த அருங்​காட்​சி​யகத்தின் தொல்பொருள்களை, கற்காலம் (Stone Age), வெண்கலக் காலம் (Bronze Age), இரும்புக் காலம் (Iron Age) என மனித வரலாற்றின் மூன்று நிலைகளாகப் பிரித்​தார்.
  • தொல்லியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான திருப்பு​முனை​யாகக் கருதப்​படு​கிறது. இக்கோட்பாடு ஓரளவுக்கு உண்மை எனினும், மனிதப் பண்பாட்டு வளர்ச்​சியின் ஒட்டுமொத்த நிலையை ஓரளவு மட்டுமே பிரதிபலிக்​கிறது. பண்பாட்டு வளர்ச்​சியின் ஒட்டுமொத்த நிலையைப் பிரதிபலித்​தா​லும், பண்பாட்டு வளர்ச்​சியின் சிக்கலான நிலைகளை இது வெளிப்​படுத்​தவில்லை.
  • சி.ஜே.​தாம்​சனும் இப்பண்​பாட்டு வளர்ச்​சியின் சிக்கலான வளர்ச்சி நிலைகளை உணர்ந்​திருந்​தார். இதற்குக் காரணம் என்னவெனில் உலகெங்கும் பண்பாடுகள் ஒரே நிலையில், ஒரே வரிசையில் வளரவில்லை. பண்பாடுகள் சூழ்நிலைக்கு ஏற்பவும், மனித விருப்​பத்​துக்கு ஏற்பவும், முயற்சிக்கு ஏற்பவும் வேறுபட்டன. இவற்றை நமக்குப் புரிய​வைப்பது சங்க இலக்கி​யங்களே. இதைத் தொல்லியல் அறிஞர்கள் நன்கு புரிந்து வைத்திருந்​தா​லும், மாணவர்கள், பொது ஆர்வலர்​களிடையே சி.ஜே.​தாம்​சனின் எளிமையான முக்காலக் கொள்கை தொடர்பான கருத்தே வலுவாக உள்ளது.
  • உலகின் பல பகுதிகள் புதிய கற்காலத்​தை​யும், செம்புக் காலத்​தை​யும், இரும்புக் காலத்​தையும் அடையவில்லை. தமிழ்நாட்டிலும் தென்னிந்தியா​விலும் தெளிவான செம்புக் காலம் இல்லை. எனவே, பண்பாடு ஒரே வரிசையில் வளரும் என நாம் உறுதிகூற முடியாது. ஆகையால், சி.ஜே.​தாம்​சனின் எளிமையான முக்காலக் கொள்கை ஒட்டுமொத்த மனித குல வளர்ச்​சியின் பரந்துபட்ட போக்குகளை விளக்குவதாக மட்டுமே உள்ளது. ஆனால், பண்பாட்டு வளர்ச்​சியின் சமனற்ற வளர்ச்சி, சூழலுக்கு ஏற்ப வாழும் நிலை ஆகியவற்றை விளக்குவதாக இல்லை.
  • மேலும், இக்கொள்கை நெடுங்​கோட்டு வளர்ச்சி நிலை (Linear progressive development) என்ற கருத்​தாக்​கத்தை மையப்​படுத்து​கிறது. இதன் காரணமாகப் பழமையான (primitive) என்கிற பின்தங்கிய நிலையும், வளர்ச்​சி​அடைந்த நிலையும் உருவாக்​கப்​படு​கின்றன. இங்கு தொல்காப்​பியரின் திணைக்​கோட்பாடு பண்பாட்டு வளர்ச்​சியின் வேறுபட்ட வளர்ச்சி, சுற்றுச்​சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்தல், பண்பாட்டை உருவாக்​குதல் என்ற நிலைகளைத் தெளிவாக விளக்குவதாக உள்ளது.

ஐந்திணைக் கோட்பாடு:

  • தொல்காப்​பி​யத்தின் திணைக் கோட்பாடு, வரலாற்றின் தொடக்கக் காலத்தில் ஐந்திணைகள் - அதாவது, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என்கிற சூழலியல் நிலப்​பரப்பில் வாழும் மக்களின் வேறுபட்ட பண்பாட்டுச் சூழலை விளக்குவதாக உள்ளது. சமகாலத்தில் வாழும் மக்கள் அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்றவாறும், அவர்களுடைய பண்பாட்டு அணுகு​முறை​களுக்கு ஏற்றவாறும் வாழ்ந்​தனர். உலகில் பல பண்பாடு​களும் இவ்வாறான சூழல்​களில்தான் உருப்​பெற்றுத் தனித்துவம் பெறுகின்றன.
  • மலைப்​பாங்கான குறிஞ்சி நிலத்தில் வேட்டை​யாடும் மக்கள் குழுக்​களும், காட்டெரிப்பு வேளாண்மை செய்யும் மக்களும் வாழ்கின்​றனர். நுண்கற்​காலத்தில் கற்கருவி​களைப் பயன்படுத்தி வாழ்ந்த வேட்டை​யாடும் சமூகங்​களுடன் இவர்களை ஒப்பிடலாம். இத்தகைய சமூகங்கள் வரலாற்றுக் காலத்​திலும் இன்றும் தொடர்ந்து வாழ்ந்​து​வரு​கின்றன.
  • நெய்தல் நில மக்கள் மீன் பிடித்தல், உப்புக் காய்ச்​சுதல், வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டு, நெய்தல் வாழ்க்கையில் ஈடுபட்​டனர். இவர்களையும் நுண்கற்​காலத்தில் கற்கருவி​களைப் பயன்படுத்தி வாழ்ந்த வேட்டை​யாடும் சமூகங்​களுடன் ஓரளவு ஒப்பிடலாம். மருத நில மக்கள் நெல் வேளாண்மை செய்கின்​றனர். இங்குள்ள சூழல் பிற பகுதி​களில்​இருந்து வேறுபட்டு விளங்​கு​கிறது. இத்தகைய சமூகங்கள் தமிழகத்தின் இரும்புக் காலத்தில் நன்கு உருப்​பெற்றன.
  • மேற்கண்ட அனைத்துப் பண்பாட்டுக் குழுக்​களும் ஒரே காலத்தில் வாழ்ந்தன. எனவே, வேட்டை​யாடும் அனைத்துச் சமூகங்​களும் புதிய கற்கால முல்லை நில ஆயர்களாக வேண்டிய அவசியமில்லை. இவர்கள் புதிய கற்கால நிலையை அடையாமலே வேளாண் நிலையை அடைய இயலும். ஆகையால், பண்பாடு​களின் வளர்ச்சியை நாம் நேர்க்​கோட்டில் நிறுத்த இயலாது. மக்களின், சூழலின் போக்குக்கு ஏற்ப அவை வளரும், தொடரும்.
  • தொல்காப்​பியரின் திணைக் கோட்பாடு பழந்தமிழகத்தில் சூழலுக்கு ஏற்றவாறு நிலவிய பண்பாட்டு வேறுபாடு​களின் அடிப்​படையில் உருவாக்​கப்​பட்டது. இக்கோட்பாடு ஒரே காலக்​கட்​டத்தில் வாழும் அனைத்துப் பண்பாடு​களும் ஒரேமா​திரியாக இருப்​ப​தில்லை என்பதை உணர்த்து​கிறது. மனிதப் பண்பாடு புதிய கற்காலம், வெண்கலக் காலம் என வளர்ச்​சி​யடைந்து பல வடிவங்​களைப் பெற்ற நிலையில், இரும்புக் காலத்​துக்குப் பின்னர் கிடைமட்ட இடச்சூழலில் வேறுபட்டு வளரத் தொடங்கின.
  • எனவே, முக்காலக் கோட்பாடு என்ற சி.ஜே.​தாம்​சனின் எளிய வகைப்பாடு long duree எனப்படும் பொதுவான நீண்ட​காலப் போக்கு​களைச் சுட்டி​னாலும், கிடைமட்டச் சுற்றுச்​சூழல் வேறுபாடு, பண்பாட்டுக் கூறுகளின் அடிப்​படை​யில், பண்பாடுகள் பல வடிவங்கள், பழக்கவழக்​கங்​களைப் பெற்றுத் தனித்துவம் பெற்று விளங்​கு​கின்றன என்கிற நுட்பத்தை விளக்கத் தவறுகிறது. எனவே, சி.ஜே.​தாம்​சனின் கோட்பாட்டுக்கு திணைக் கோட்பாடு மாற்று என்பதைவிட மதிப்​புக்​கூட்டும், பண்பாட்டு வளர்ச்சி, வேறுபாடுகளை நுட்பமாக விளக்கும் ஒரு செறிவுள்ள பண்பாட்டுச் ஸ்ரீழலியல் கோட்பாடாக விளங்​கு​கிறது என்றே சொல்லலாம்.

தமிழ்​நாட்டுத் தொல்லியல் கண்டறிதல்:

  • தமிழ்​நாட்டின் தொல்லியல் கண்டறிதல்​களை​யும், இந்திய அளவிலான பண்பாட்டு வளர்ச்​சி​யையும் விளக்கத் தொல்காப்​பியர் விவரிக்கும் திணைக் கோட்பாடு உதவுகிறது. அண்மைக் காலமாக, தமிழ்​நாட்டில் இரும்பின் காலம் பொ.ஆ.மு 2000க்கும் முன்னர் எடுத்​துச்​செல்​லப்​பட்டுள்ளது.
  • அதற்கு முன்னரும் செல்லக்​கூடும் என்று கா.இராசன் கருதுகிறார். புதிய கற்காலச் சான்றுகள் பொ.ஆ.மு. (கி.மு.) 1600-1400 என்கிற அளவில் கிடைக்​கின்றன. எனவே, முக்காலக் கொள்கையின் வரிசையான வளர்ச்சியை விடுத்து, தொல்காப்​பியர் கூறும் திணை சார்ந்த வளர்ச்சியை பொருத்தமான மாதிரியாக எடுத்​துக்​கொள்ள வேண்டி​உள்ளது.
  • மேலும், தொல்லிய​லா​ளர்கள் முன்பு பயன்படுத்திய கண்மூடித்​தனமான பண்பாட்டு நேர்க்​கோட்டு வரிசையான பழங்கற்​காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்கக் காலம் என்கிற பெட்டகக் கட்டமைப்பு​களில் உள்ள சிக்கலையும் திணைக் கோட்பாடு உடைக்​கிறது. பொருளை மட்டுமோ, ஆவணங்களை மட்டுமோ ஆராய்வது வரலாறு சார்ந்தும் தொல்லியல் சார்ந்தும் நல்ல புரிதலை உருவாக்​காது.
  • மேலைநாட்டு ஆய்வு​முறைகளை மட்டும் நோக்காமல், தமிழ் இலக்கி​யங்கள், மானுட​வியல், இனவரை​வியல், நாட்டுப்பு​ற​வியல் போன்ற புலங்​களின்வழி வாழும் உலகியலைப் புரிந்​து​கொள்​வதும், தமிழ், இந்திய அறிவுத்​தோற்​ற​வியலை நோக்கு​வதும் வரலாற்று​ஆய்​வாளர்​களுக்கும் தொல்லிய​லா​ளர்​களுக்​கும், மனிதவியல், சமூக அறிவியல் ஆய்வாளர்​களுக்கும் மிகவும் அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்