- காலநிலை மாற்றம் என்பது அடிப் படையில் ஓர் அறிவியல் பிரச்சினை மட்டுமல்ல; அது ஒரு மொழி சார்ந்த சிக்கலும்கூட. ஒரு பிரச்சினை குறித்த நம்முடைய அணுகுமுறை என்பது, அது பற்றி நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதன் வெளிப்பாடுதான்; அப்பிரச்சினைக்கான தீர்வுகளும் மொழிவழியிலான இந்தச் சிந்தனைச் செயல் பாட்டிலிருந்தே பிறக்கின்றன.
- அந்த வகையில், மனிதகுலம் மட்டுமின்றி புவியின் ஒட்டுமொத்த உயிர் வாழ்வின் இருப்பையே கேள்விக்கு உள்படுத்தும் மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம், மானுட சிந்தனையில் என்னவாக உருக்கொண்டிருக்கிறது என்பது ஆராயப்பட வேண்டும்.
- மனிதச் செயல்பாடுகள் புவியில் ஆதிக்கம் செலுத்தும் இந்தப் புவியியல் சகாப்தத்துக்கு ஆந்த்ரோபொஸீன் (Anthropocene) என்று பெயரிடப்பட்டிருக்கிறது; ஹோலோசீன் (Holocene) என்கிற வெப்பநிலைக் காலகட்டத்தை, சமகாலத்தில் குறிப்பதற்கான சரியான சொல் இதுவே என அறிவியலாளர்கள் பரிந்துரைக்கின்றனர். எனில், ஆந்த்ரோபொஸீன் காலகட்டத்தின் ‘மொழி’ (language of Anthropocene) எது?
- காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் ‘புதிய இயல்’பாக மாறிவிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் தீவிரத்தை மக்களின் சிந்தனையில் உறைக்கவைக்கும் சொல்லாடலுக்கு, மொழியே முதன்மைக் கருவி. அந்தவகையில், தற்காலத் தமிழ் மொழி காலநிலை மாற்றம் குறித்த சொல்லாடலைச் சமூகத்தில் முன்னெடுக்கும் திறனைக் கொண்டிருக்கிறதா என்பது பரிசீலனைக்கு உரியது.
- சமூகத்தின் பல்வேறு தளங்களில், அன்றாடப் பயன்பாட்டில் பொதுவாக நேர்மறையான பொருளில் வழங்கும் ஒரு சொல், ‘மாற்றம்’. ஆனால், காலநிலை ‘மாற்றம்’ என்று சொல்லும்போது அது எப்படிப் பொருள்கொள்ளப்படுகிறது என்பது ஒப்புநோக்கத்தக்கது. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தன்மையை இது முழுமையாக வெளிப்படுத்துகிறதா என்கிற கேள்வியும் உடன் எழுகிறது. காலநிலை ‘மாற்ற’த்துக்குப் பதிலாக நெருக்கடி (crisis), பேரழிவு (catastrophe), முறிவு (breakdown) போன்ற சொற்கள் மேற்கத்திய ஊடகங்களில் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.
- ஆனால், ‘நெருக்கடி’ என்பது இன்றைக்கு மட்டுமானதா அல்லது நீண்ட காலத்துக்கானதா; ‘பேரழிவு’ என்பது பிரச்சினையை எதிர்கொள்வதற்கான ஊக்கத்தை வழங்கக்கூடியதா அல்லது ஒளிந்துகொள்ளும் வழியைத் தேடச் செய்வதா என்பது போன்ற விவாதங்களும் இதையொட்டி எழுகின்றன.
- இந்தப் பின்னணியில், தமிழ்நாடு அரசு ‘கிளைமெட் டிரெண்ட்ஸ்’ என்கிற அமைப்புடன் இணைந்து வெளியிட்டிருக்கும் ‘காலநிலை மாற்றம்: சொற்களஞ்சியம்’ [The Climate Change Glossary (https://bit.ly/ClimateTamil)], ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பு. காலநிலை மாற்றத்தின் உலகளாவியச் சொல்லாடல் முதன்மையாக ஆங்கிலத்தில் நிகழ்கிறது; இந்தியாவில் ஆங்கிலமும் ஓரளவுக்கு இந்தியும் அந்த இடத்தில் உள்ளன. தமிழைப் பொறுத்தவரை, காலநிலை மாற்றம் குறித்த பல சொற்கள் ஏற்கெனவே வட்டார வழக்கில் உள்ளன.
- ஆனால், அவை பேச்சு வழக்குக்கு வரவில்லை. வளர்ந்துவரும் ஆய்வுக்கும் பெருகிவரும் அழிவுக்கும் ஏற்றாற்போல இயல்பான மொழியாகவும் அது இல்லை. தமிழில் காலநிலை மாற்றம் பற்றிய தகவல்களையும் தொழில்நுட்பங்களையும் படித்துப் புரிந்துகொண்டு மக்கள் விழிப்புணர்வு பெறவே இந்தச் சொற்களஞ்சியத்தை உருவாக்கி யிருப்பதாக ‘கிளைமெட் டிரெண்ட்ஸ்’ அமைப்பு கூறுகிறது. காலநிலை மாற்றம் தொடர்பான 264 சொற்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு இதில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
- குறிப்பிடத்தகுந்த ஆவணமாக இது உருவாகியிருந்தாலும், களத்தில் உள்ளவர் களையும் மொழிசார்ந்து இயங்கிக் கொண் டிருக்கும் பலரையும் உள்ளடக்கி சொற்கள் உருவாக்கப்பட்டிருந்தால் மக்களைச் சென்றடையும் நோக்கத்தில் முழுமை கூடியிருக்கும்.
- உலக சுற்றுச்சூழல் நாள் (ஜூன் 5)
நன்றி: தி இந்து (03 – 06 – 2023)