TNPSC Thervupettagam

மன்த்லி ரிவ்யு: சோசலிசத்துக்கான சுயாதீன இதழ்

May 30 , 2023 404 days 252 0
  • மார்க்சியத்தின் மீதும் சோசலிசத்தின் மீதும் பற்றுக்கொண்டோருக்கு வழித்துணையாக விளங்கும் மாத இதழ் ‘மன்த்லி ரிவ்யு’ [Monthly Review (https://monthlyreview.org/)]. 1949ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய இவ்விதழின் பயணம், தற்போது 75ஆம் ஆண்டைத் தொட்டிருக்கிறது. முதலாளிய ஆற்றல்களின் தலைமைப் பீடமாக விளங்கும் அமெரிக்காவிலிருந்து அதற்கு எதிரானசோசலிசச் சிந்தனைகளை வளர்த்தெடுத்துவரும் இவ்விதழின் பங்களிப்பு அளப்பரியது.
  • ‘மன்த்லி ரிவ்யு’க்கு முன்பும் பின்பும் பல நூற்றுக்கணக்கான சோசலிச ஏடுகள் தொடங்கி பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டுவிட்டன. அவற்றுள் பலவும் ஏதேனும் ஓர் அரசியல் இயக்கம் அல்லது நிலைப்பாட்டின் பின்புலத்தில் வெளிவந்தவை. ஆனால், ‘மன்த்லி ரிவ்யு’ தொடங்கப்பட்டது முதலே அத்தகைய சார்பு ஏதுமின்றி சோசலிசச் சிந்தனையை வளப்படுத்தும் ‘சுயாதீன இதழாக’ தன்னை அறிவித்து வெளிவந்துகொண்டிருக்கிறது.

ஐன்ஸ்டைன் முதல் சேகுவேரா வரை:

  • ‘மன்த்லி ரிவ்யு’வின் முதல் இதழ், புகழ்பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டைனின் ‘Why Socialism?’ எனும் கட்டுரையுடன் வெளிவந்தது. அறிவியலாளரான ஐன்ஸ்டைனின் சோசலிச ஆர்வத்தை அக்கட்டுரை வெளிப்படுத்தியது. தன்னைப் பொறுத்தவரை, ‘இன்றைய முதலாளியச் சமூகத்தின் பொருளாதார அராஜகம்தான் தீமைக்கான உண்மையான காரணம்’ என அக்கட்டுரையில் அவர் கருத்துரைத்தார்.
  • சமூக இலக்குகளை நோக்கிய கல்வி அமைப்புடன் சோசலிசப் பொருளாதாரத்தை நிறுவுவதே இத்தீமையை அகற்றுவதற்கான ஒரே வழி என ஐன்ஸ்டைன் அக்கட்டுரையில் முன்வைத்த வாதம், அன்றைக்கு சோசலிசச் சிந்தனைகளுக்கான சமூகத் தேவையின் முக்கியத்துவத்தை விளக்குவதாய் இருக்கிறது.
  • அத்தேவையை நிறைவுசெய்யும் வகையில் ‘மன்த்லி ரிவ்யு’ இதழின் பங்களிப்பு அன்று தொடங்கி இன்று வரை தொய்வில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது. அரசியல் பொருளாதார அறிஞரும் மார்க்சியருமான பால்.எம்.ஸ்விஸீ, வரலாற்றாசிரியரும் சோசலிஸ்ட் இதழாளருமான லியோ ஹியுமர்மேன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இவ்விதழின் பயணத்தில் சேகுவேரா, சார்த்தர் போன்ற புகழ்பெற்ற ஆளுமைகளின் கட்டுரைகளும் இடம்பெற்றன.

மூன்றாம் உலக நாடுகளின் தோழன்:

  • 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதி உலகெங்கிலும் சமூக இயக்கங்களின் எழுச்சிமிக்க காலமாக இருந்தது. குறிப்பாக, பின்தங்கிய மூன்றாம் உலக நாடுகளின் காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள், தேசிய விடுதலைப் போராட்டங்கள், சோசலிசப் புரட்சிகள் என அனைத்திலும் போராடுகிற நாடுகளின் தோழனாக ‘மன்த்லி ரிவ்யு’ நின்றிருக்கிறது.
  • அமெரிக்க ஆக்கிரமிப்பு வியட்நாம் போர் என்றாலும் சரி, சோவியத் ரஷ்யாவின் ஹங்கேரி மீதான படையெடுப்பானாலும் சரி, ஆக்கிரமிப்புப் போர்களுக்குப் பின்னுள்ள வளர்ந்த நாடுகளின் அரசியல் பொருளாதார நலன்களை ஆய்வுபூர்வமாக விமர்சனத்துக்கு உள்படுத்தி வந்துள்ளது.
  • 1970களில் தீவிரமடைந்த வியட்நாம் போருக்கு எதிரான மனநிலையை அமெரிக்க மக்களிடையே கொண்டுசேர்த்தது முதற்கொண்டு கியூபா, சிலே ஆகிய தென் அமெரிக்க நாடுகளின் புரட்சிகளுக்கு எதிரான அமெரிக்காவின் தலையீடுகளை விமர்சிக்கும் கட்டுரைகளுக்கும் இடமளித்துவந்துள்ளது.
  • முதலாளித்துவ நாடுகளின் நிதிமூலதன மேலாதிக்கம், ரஷ்யா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சோசலிசக் கட்டுமானத்தில் ஏற்பட்டசிக்கல்கள் முதலியவற்றைப் பற்றிய ஆய்வுகளுக்கான ஆய்வுக் கருவூலமாகத் திகழ்பவை இவ்விதழின் கட்டுரைகள். நூற்றாண்டைத் தாண்டிய சோசலிசக் கட்டுமான முயற்சிகளைத் தொகுத்து அறிந்துகொள்ள உதவும் ‘மன்த்லி ரிவ்யு’ இதழின் பங்களிப்பு சோசலிசத்தின் வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கக்கூடியது.

21ஆம் நூற்றாண்டிற்கான சோசலிசம்:

  • சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின், 1990களில் உலகளவில் இடதுசாரி இயக்கங்களுக்கும் சோசலிசச் சிந்தனைகளுக்கும் ஏற்பட்ட பின்னடைவிலும் நம்பிக்கையற்ற சூழலிலும்கூட ‘மன்த்லி ரிவ்யு’ பெரிய சவால்களை எதிர்கொண்டு தொடர்ந்து இயங்கிவந்திருக்கிறது.
  • நம்பிக்கையூட்டும் விதமாக, வெனிசுலா போன்ற தென் அமெரிக்க நாடுகளில் மேற்கொள்ளப் பட்ட புதிய சோசலிச முயற்சிகள் சார்ந்த கருத்துகளுக்கு இவ்விதழ் இடமளித்தது. மார்த்தா ஹார்னேக்கர், அண்மையில் மறைந்தமைக்கெல் லெபோவிட்ஸ் ஆகியோர் முன்வைத்த,சமூகத்தின் பன்மைத்துவச் சூழல்களைக் கணக்கில் கொள்ளும் 21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசக் கருத்துகள் இவ்விதழில் இடம்பெற்றன.

மார்க்சியமும் சூழலியலும்:

  • நமது சமகாலம் எதிர்கொண்டிருக்கும் சவால்களில் இன்று முதன்மையாகியிருப்பது சூழலியல் நெருக்கடி ஆகும். புவியின் இருப்பு கேள்விக்குள்ளாயிருக்கும் இன்றைய சூழலில், மார்க்சியத்துக்கும் சூழலியல் சிந்தனைகளுக்கும் உள்ள தொடர்பை வெளிக்கொணர்வதிலும் சூழலியல் நெருக்கடிகளுக்குப் பின்னுள்ள முதலாளியச் சமூக உற்பத்தி முறையின் பங்கை விளக்குவதிலும் ஜான் பெல்லாமி ஃபாஸ்டரை (John Bellamy Foster) ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இன்றைய ‘மன்த்லி ரிவ்யு’ இதழ்கள் சீரிய கவனம் செலுத்துகின்றன.
  • தனித்துவம் மிக்க இந்த மாத இதழ் 75ஆம் ஆண்டைத் தொட்டிருக்கும் இன்றைய சூழலில், இவ்விதழின் கருத்துகள் தமிழ்ச் சூழலில் விரிவாக விவாதிக்கப்படுவதும், சமூகம் சார்ந்த புதிய கருத்துகள் சார்ந்து விவாதங்கள் எழுவதும் ஆய்வுச் சூழலையும் சமூகத்தையும் ஒருங்கே வளப்படுத்தும்.

நன்றி: தி இந்து (30 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்