TNPSC Thervupettagam

மன்மோகன் சிங் அரசியலுக்கு வந்தது எப்படி?

December 29 , 2024 15 days 60 0

மன்மோகன் சிங் அரசியலுக்கு வந்தது எப்படி?

  • முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (92) உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வியாழக்கிழமை இரவு 8.06 மணிக்கு அனுமதிக்கப்பட்டவர் நினைவு இழந்ததையடுத்து, 9.51 மணிக்கு உயிரிழந்ததாக அந்த மருத்துவமனை தெரிவித்தது.
  • மன்மோகன் சிங் மறைந்த செய்தி அறிந்தவுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி அவரது மகள் பிரியங்கா காந்தி ஆகியோா் மருத்துவமனைக்கு விரைந்தனா்.

வாழ்க்கை பயணம் :

  • நாட்டின் பொருளாதார சீா்திருத்தவாதிகளில் ஒருவராக அறியப்படும் மன்மோகன் சிங் ஒருங்கிணைந்த பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 1932, செப்டம்பா் 26 ஆம் தேதி பிறந்தாா். 1947 - இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கு இடம் பெயர்ந்தார்.
  • 1948- ஆம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உயா்நிலைக் கல்வியை நிறைவு செய்த அவா், 1957 இல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை ஹானர்ஸ் படிப்பை முடித்தாா். அதைத் தொடர்ந்து 1962 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நஃப்ஃபீல்ட் கல்லூரியில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
  • "இந்தியாவின் ஏற்றுமதிப் போக்கு மற்றும் தன்னிறைவான வளர்ச்சிக்கான வாய்ப்புகள்" (கிளாரென்டண் பிரஸ், ஆக்ஸ்போர்டு, 1964) என்ற அவருடைய புத்தகம், இன்றளவும் இந்தியாவின் உள்நோக்கு அடிப்படையிலான வர்த்தகக் கொள்கை குறித்து அலசி ஆராய்கிறது.
  • மன்மோகன் சிங்கின் சிறந்த கல்வி அறிவு, அவரை பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் பெருமைமிகு தில்லி பொருளாதாரப் பள்ளியில் பேராசிரியராக இருக்க உதவியது. இந்த காலத்தில் அவர் யூஎன்சிடிஏடி செயலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார். இதனால் 1987 மற்றும் 1990 ஆம் ஆண்டில், ஜெனீவாவில் உள்ள சௌத் கமிஷனின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்திய அரசில் இணைந்த மன்மோகன் சிங்

  • 1971 இல் இந்திய அரசில் இணைந்த மன்மோகன் சிங், வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 1972 இல் மத்திய நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும், மத்திய நிதியமைச்சகத்தின் செயலாளராகவும், 1982 - 1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் பதவி வகித்தார். அப்போது தான் வங்கித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்களை அவா் மேற்கொண்டு வந்தார். ரிசா்வ் வங்கி சட்டத்தில் புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்தியதோடு, நகா்ப்புற வங்கிகள் துறையையும் அவா் உருவாக்கினாா். பின்னர் இந்திய பொருளாதார கூட்டமைப்பின் தலைவராகவும், 1985 - 1987 வரை இந்திய திட்டக்குழுவின் துணைத் தலைவராகவும், 1987 முதல் 1990 வரை ஜெனீவாவில் உள்ள தெற்கு ஆணையத்தின் செயலராகவும், பின்னர் பிரதமரின் ஆலோசகராகவும், 1991 இல் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் என பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்தார்.

மாநிலங்களவை - நிதியமைச்சர்- பிரதமர்

  • 1991 2019 வரை அசாமில் இருந்தும், 2019 - 2024 வரை ராஜஸ்தானில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஒருமுறை கூட மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டவில்லை.
  • 1991 - 1996 வரை பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மத்திய நிதியமைச்சராகவும், 1998 முதல் 2004 வரை வாஜ்பாய் ஆட்சியின் போது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும், 2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து மே மாதம் 22 ஆம் தேதி பிரதமராக பொறுப்பேற்றார். அதன்பின்னர் 2009 மே 22 இல் இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றவர் 2014 வரை நாட்டின் 14 ஆவது பிரதமராக தனது பதவியை நிறைவு செய்தார்.
  • 2024 ஏப்.3 இல் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து நிகழாண்டு ஏப்ரல் முதல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
  • இந்தியாவின் 14 ஆவது பிரதமரான மன்மோகன் சிங், சிறந்த சிந்தனையாளராகவும், அறிஞராகவும் கருதப்பட்டார். பணிகளில் மிக சிரத்தையாகவும், தன்னுடைய கல்வியறிவைப் முழுமையாக பயன்படுத்துபவராகவும் விளங்கினார். அதேசமயம் அவரை எளிமையாக அணுகக் கூடிய மனிதராகவும், அவரது நடந்து கொள்ளும் முறையும் மிக எளிதாக இருந்தது.

இந்தியாவின் பொருளாதாரத்தில் திருப்புமுனை

  • இந்தியாவின் பொருளாதார வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனை காலமாக 1991 முதல் 1996 வரை மன்மோகன் சிங் மத்திய நிதியமைச்சராக இருந்ததுதான்.
  • அப்போது அவர் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள், இன்று உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளதுடன் அந்த தனிநபர் செய்த சாதனைகள் இன்றளவும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.
  • அவருடைய முதல் பிரதமர் பதவி காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (100 நாள் வேலை திட்டம்), தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாவது பிரதமர் பதவி காலத்தில் மானிய விலையில் உணவு தானியங்களை வழங்கும் நோக்கில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

முத்தாய்ப்பான திட்டங்கள்

  • அவரது பதவி காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், மகளிருக்கு எதிரான வன்செயல்கள் தடுப்புச் சட்டம், தகவல் அறியும் உரிமைச்சட்டம், வன உரிமைகள் அங்கீகரிப்புச் சட்டம், அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டம், 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 8 புதிய ஐஐடி-கள், 7 ஐஐஎம்-கள், 30 மத்திய பல்கலைக்கழகங்களைக் கொண்டுவரும் திட்டம், 2008 அக்டோபர் 22-இல் சந்திரயான்-1 விண்ணில் செலுத்தப்பட்டது, ஆக்கபூர்வமான பணிகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்த அமெரிக்காவுடனான ஒப்பந்தம், கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் விதமாக 100 நாள் வேலை திட்டத்தை (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம்) கொண்டு வந்தது, லண்டன் புனித ஜான் கல்லுாரி, மன்மோகன் சிங் பெயரில், பி.எச்டி., படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது போன்றவை முத்தாய்ப்பான திட்டங்கள்.
  • மேலும் 2006 - 2007 இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 10.08 சதவிகிதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

அரசியலுக்கு வந்தது எப்படி?

  • 2005 இல் செய்தியாளர் மார்க் டுல்லியிடம் அரசியலுக்கு வந்தது குறித்து மன்மோகன் சிங் கூறுகையில், கடந்த 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நரசிம்ம ராவ் பிரதமராக பதவியேற்றபாது, என்னை நிதியமைச்சராக தேர்வு செய்துள்ளார். இதுகுறித்த தகவலை எனக்கு தெரிவிப்பதற்காக முதன்மைச் செயலாளரை அனுப்பியிருந்தார். ஆனால் அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
  • பின்னர், மறுநாள் காலை பிரதமர் நரசிம்ம ராவே என்னை தொலைபேசியில் தொடர்புக் கொண்டார். அப்போது "நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள். உங்களிடம் முதன்மைச் செயலாளர் எதுவும் கூறவில்லையா?" என்று கேள்விகளை எழுப்பினார். அதற்கு, அவர் கூறினார். ஆனால் நான்தான் அவர் கூறியதை நம்பவில்லை என்று கூறினேன். பின்னர், நல்ல உடை அணிந்து, உடனே குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருமாறு கூறினார். இதையடுத்து யுசிஜி அலுவலகத்தில் இருந்து, வீட்டிற்குச் வந்து புதிய ஆடை அணிந்து கொண்டு பதவியேற்பு விழாவில், மற்ற அமைச்சர்களுடன் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன். இப்படித்தான் நான் அரசியலுக்கு வந்தேன் என மன்மோகன் சிங் தெரிவித்தார். இதனையே அவரது மகள் தமன் சிங்கும் பின்னாளில் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
  • மேலும் பதவிப் பிரமாணம் செய்ய அணிவகுத்து நிற்கும் புதிய அமைச்சரவை அணியில் மன்மோகன் சிங்கை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்க சில மணிநேரங்கள் மட்டுமே தனக்கு யோசிக்க நேரம் இருந்ததாகவும், இந்தப் பொறுப்பை ஏற்க தனது குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை என்பதையும் அவர் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வரலாறு என்மீது கருணையோடு இருக்கும்

  • 2014 இல் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன், செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், நான் பலவீனமான பிரதமராக இருந்தேன் என்று நான் நம்பவில்லை. எதிர்க்கட்சியினர், சமகால ஊடகங்களை காட்டிலும் வரலாறு என்மீது கருணையோடு இருக்கும் என்று நம்புகிறேன்.
  • நேர்மையாக இருந்தேன் என்பதை நான் நம்புகிறேன். சூழ்நிலைக்கேற்ப என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். நான் என்ன செய்தேன், என்ன செய்ய வில்லை என்பதை வரலாறு தீர்மானிக்கும். அடுத்த பிரதமர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து வருவார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனது பிரதமர் பதவி காலத்தில் பதவி விலகுமாறு என்னை யாரும் வற்புறுத்தவில்லை என அவர் கூறினார்.

பொருளாதார புரட்சியின் 'கிங்'

  • இரண்டு முறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங், தனது அறிவாற்றலாலும், தலைமைத்துவத்தாலும் 'அமைதி புயலாக' பல பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
  • 1991 இல் நிதியமைச்சராக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, பொருளாதாரத்தில் தாராளமயமாக்கலை கொண்டு வந்தது, அந்திய முதலீட்டை அதிகப்படுத்தியது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கியது போன்ற சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு திருப்புமுனையாக அமைந்தது.
  • மேலும் அடிப்படைக் கட்டமைப்புகளுக்கான முதலீடுகளை அதிகரித்தது, வணிக முறைகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தியது, வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியது, தொழில்துறை சார்ந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியது என மன்மோகன்சிங்கின் அதிரடிகள் தொடர்ந்தன. இவற்றின் விளைவாக 1991 இல் ரூ. 127 கோடியாக இருந்த அந்நிய முதலீடு 1996 இல் சுமார் ரூ.340 கோடியாக அதிகரித்தது. 1991 இல் 16 சதவிகிதமாக இருந்த பணவீக்கம் 1996 இல் 9 சதவிகிதமாகக் குறைந்தது. குறைந்த வளர்ச்சி பொருளாதாரத்தில் இருந்து இன்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியது.
  • பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுடன் சேர்ந்து பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்த சிங், தனது முதல் பதவிக்காலத்தில் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கினார். அதேநேரம், 34 தொழில்களில் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதித்தார். பொதுத்துறை நிறுவனங்களில் தனியாரின் பங்களிப்பை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
  • சீக்கிய மதத்தை சேர்ந்த முதல் பிரதமரான சிங், நேருவுக்கு பின் ஐந்தாண்டுகள் முழுமையாக பதவி வகித்து, இரண்டாவது முறையாக பிரதமரானவர். மாநிலங்களை உறுப்பினராக இருந்து பத்து ஆண்டுகள் பிரதமரானவர் எனற சிறப்பையும் பெற்றார். நீண்டகால பல உயரிய பதவிகளை வகித்தாலும் வாழ்க்கையில் எளிமையை கடைபிடித்த தவறியதில்லை.
  • தன்னுடைய செயல்களில் விமர்சனங்களை பொருட்படுத்தாமல், தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்ற மன்மோகன் சிங், சவால்கள் நிறைந்த சூழலில் இந்தியப் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கமாக மாற்றினார். அவரது கடின உழைப்பு மற்றும் அவரது பணிவு, தொலைநோக்கு பார்வை, மென்மையான நடத்தை, சில முக்கியமான முடிவுகளே இந்திய பொருளாதாரத்தின் போக்கையே மாற்றியமைத்து நாட்டை ஒரு பொருளாதார சக்தியாக ஆக்குவதற்கும் வழிவகுத்து நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்பதே நிதர்சனம்.
  • சர்வதேச மாநாடுகள், சர்வதேச அமைப்புகளின் கூட்டங்களிலும் பங்கேற்றவர், 1993 இல் சிப்ரசில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியக் குழுவினருடன் கலந்து கொண்டார். மேலும் அதே ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற உலக மனித உரிமைகள் மாநாட்டிலும் அவர் பங்கேற்றார்.
  • பொருளாதார நிபுணராக இருந்து, அரசியலுக்கு வந்த மன்மோகன் சிங்குக்கு 2002 இல் சிறந்த பார்லிமென்டேரியன் விருது அளிக்கப்பட்டது. 2005 இல் அமெரிக்காவின் 'டைம்' இதழின் 'டாப் - 100 செல்வாக்கு மிக்க தலைவர்கள்' பட்டியலில் இடம் பெற்றார்.

பொருளாதார மாற்றத்தின் தலைமைச் சிற்பி - ஒபாமா

  • அமெரிக்க அதிபராக பதவிவகித்த பராக் ஒபாமா. தனது அரசியல் வாழ்க்கையின் நினைவுகள் தொகுப்பான 'எ பிராமிஸ்டு லேண்ட்' என்ற புத்தகத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில் "இந்தியப் பொருளாதார மாற்றத்தின் தலைமைச் சிற்பி மன்மோகன் சிங்". அவர் முன்னேற்றத்தின் சின்னம். அடிக்கடி துன்புறுத்தல்களுக்கு ஆளான சீக்கிய மதச் சிறுபான்மை சமூகத்தில் இருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். அவர் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, ஊழலற்ற மனிதர் என மக்களிடம் நல்ல பெயரைச் சம்பாதித்தவர்.
  • மன்மோகன் சிங், தனது சொந்த பிரபலத்தால் பிரதமராக தேர்வு செய்யப்படவில்லை என்றும், அவர் தனது பதவிக் காலத்தில், தொலைநோக்குப் பார்வை கொண்டவர், கண்ணியமான தலைவர், நாகரிகமான மனிதர், சிறந்த அறிவாளி. இந்திய-அமெரிக்க உறவை எச்சரிக்கையுடன் கையாண்டார்" என அதில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது, தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்செயலாக வந்த பிரதமர் பதவி

  • அரசியல் பின்புலம் எதுவும் இல்லாத மன்மோகன் சிங், கடந்த 1999 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர், காங்கிரஸ் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதேதான் 2004 ஆம் ஆண்டும் நடந்தது.
  • அதாவது, 2004 இல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது இத்தாலிய வம்சாவளி என்ற பிம்பம் மீதான விமர்சனங்களில் இருந்து கட்சியைப் பாதுகாப்பதற்காக பிரதமர் பதவியை நிராகரித்தபோது மன்மோகன் சிங் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
  • இருப்பினும், பிரதமராக மன்மோகன் சிங் இருந்தாலும் சோனியா தான் உண்மையான அதிகார மையம் எனவும், பிரதமர் சிங் உண்மையான பொறுப்பில் இல்லை என்று பல விமர்சனங்கள் எழுந்தது. அவற்றையெல்லாம் தனது செயல்கள் உடைத்தெறிந்து உயர்ந்தார்.

விருதுகள்

  • பொது வாழ்க்கையில் பல்வேறு விருதுகளையும், பெருமைகளையும் பெற்றுள்ள மன்மோகன் சிங், 1987 இல் இந்தியக் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண், 1995 இல் இந்திய அறிவியல் மாநாட்டில் ஜவஹர்லால் நேரு நூற்றாண்டு பிறந்த நாள் விருது, 1996 இல் தில்லி பல்கலைக் கழகம் வழங்கி கௌரவ டாக்டர் பட்டம், 1993 - 1994 இல் சிறந்த நிதியமைச்சராக இருந்ததற்காக ஆசியச் செலாவணி விருது, 1993 இல் சிறந்த நிதியமைச்சருக்கான யூரோ செலாவணி விருது, 1956 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆடம் ஸ்மித் பரிசு, 1955 இல் கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் சிறந்த மாணவருக்கான ரைட்ஸ் விருதுகளை பெற்றுள்ளார். இவைத்தவிர ஜப்பானின் நிஹான் கெய்ஜாய் ஷிம்புன் உள்ளிட்ட பல்வேறு உயரிய சங்கங்களின் கௌரவங்களையும் பெற்றுள்ளார். கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களின் கௌரவப் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
  • மோடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பை சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழலாக இருக்கலாம் என்று பொருளாதார மாற்றத்தின் தலைமைச் சிற்பி மன்மோகன் சிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி (29 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்