TNPSC Thervupettagam

மபி என்ன செய்வார் மாமாஜி

November 28 , 2023 411 days 255 0
  • பல வகைகளிலும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது 2024 மக்களவைத் தேர்தல். அதற்கு முந்தைய கடைசித் தேர்தலான மிஸோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா - ஐந்து மாநிலத் தேர்தலை அரசியல் ஆர்வமுடைய எவரும் கவனிப்பது அவசியம்.
  • பத்தாண்டுகளில் பிரதமர் மோடியும், பாஜகவும் எத்தகைய மாற்றங்களைத் தேர்தல் களத்திலும் சமூகத்திலும் உருவாக்கியுள்ளனர் என்பதை மிக நெருக்கமாகக் காட்டும் தேர்தல் இது. அரிதாக, பாஜகவுக்கு இணையாகவோ, பாஜகவைக் காட்டிலும் பலமாகவோ காங்கிரஸ் உள்ள மாநிலங்கள் இவை.
  • 2014 மக்களவைத் தேர்தல் சமயத்தில் நாடு தழுவிப் பயணித்து, ‘இந்தியாவின் வண்ணங்கள்’ தொடரை எழுதிய சமஸ், 2024 மக்களவைத் தேர்தலை ஒட்டிய பயணத்துக்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தலை ஒட்டிப் பயணித்தார். தேர்தல் மாநிலங்களின் வரலாற்று - சமூக - அரசியல் பின்னணியுடன் அந்தந்த மாநிலத்தவர்களுடனான உரையாடலின் அடிப்படையில் 5 மாநிலங்களின் சூழலையும் இங்கே தருகிறார்.
  • முன்னதாக ‘தினமலர்’ இதழில் வெளியான கட்டுரைகளின் முழு வடிவம் இப்போது ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகிறது.
  • போபால் ரயில் நிலையத்தில் இறங்கியதுமே, மத்திய பிரதேசத்தின் அரசியல் வாடையைக் காற்றில் உணர முடிந்தது. “நல்ல டீ குடிக்க வேண்டும்” என்று கார் ஓட்டுநரிடம் சொன்னேன். சும்மா சொல்லக் கூடாது. ஏலக்காய் மிதமாய் மணக்கும் பிரமாதமான மசாலா டீ கிடைக்கும் கடையாகப் போய் நிறுத்தினார்.
  • உரையாடல் அங்கேயே ஆரம்பித்துவிட்டது. “எங்களுக்கு மாற்றம் தேவைப்படுகிறது” என்று சொன்னார் சன்னி பரூலியா. டீக்கடை தன்னுடைய குடும்பத்தினருடையது என்றும், அவர் பொறியியல் படித்திருப்பதாகவும் கூறினார். “நானெல்லாம் பிறந்ததிலிருந்து மாமாஜீயை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.
  • முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுடைய செல்லப் பெயர் அது. மத்திய பிரதேசத்தின் நெடுநாள் முதல்வரான சௌகான் 2005இல் நாற்காலியில் அமர்ந்தார். இடையில் 2018 தேர்தலில் காங்கிரஸிடம் ஆட்சியை இழந்தாலும், 2020இல் காங்கிரஸில் ஜோதிராதித்ய சிந்தியா உண்டாக்கிய பிளவு மீண்டும் சௌகானை ஆட்சியில் அமர்த்தியது. “பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் நான். எங்கள் சமூகத்தினர் பெருமளவில் இங்கே பாஜக ஆதரவாளர்கள். என் குடும்பமும்கூட. இளைய தலைமுறை மாற்றம் வேண்டும் என்று எண்ணுகிறோம்!” என்றார் பரூலியா.
  • திரும்பிய பக்கம் எல்லாம் இத்தகு குரல்களைக் கேட்க முடிந்தது. பாஜகவின் தேசிய தலைமைக்கு இது நன்றாகவே தெரிகிறது. இந்த முறை மாநிலத்தில் அதன் முகம் சௌகான் அல்ல; மோடியே முன்னிறுத்தப்படுகிறார். மத்திய அமைச்சர்கள் மூவர் உள்பட ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய பெயர்களை வேட்பாளர் பட்டியலில் பாஜக அறிவித்தபோதே சௌகானுக்கு விஷயம் துல்லியமாக உணர்த்தப்பட்டுவிட்டது. என்றாலும், மாநிலத்தில் அவர் அளவுக்குச் செல்வாக்கான ஒரு முகம் இல்லை.

மபி சமூகப் பின்னணி

  • இந்தியாவின் மைய நிலமான மத்திய பிரதேசம் பல்வேறு முரண்பட்ட வாழ்க்கையைக் கொண்ட சமூகங்களின் சேர்க்கை. சத்தீஸ்கர் பிரிவினைக்குப் பிறகும்கூட ராஜஸ்தானுக்கு அடுத்து நாட்டின் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட மாநிலம் அது; தமிழ்நாட்டைப் போன்று இரண்டு மடங்குக்கும் மேலான நிலப்பரப்பைக் கொண்டது; மக்கள்தொகையில் தமிழ்நாட்டைப் போன்று 8 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டது. கிட்டத்தட்ட மாநிலத்தின் மூன்றில் ஒரு பகுதியை வனமாகக் கொண்ட மத்திய பிரதேசத்தில் பழங்குடிகளின் மக்கள்தொகை அதிகம் (21%). அதேபோன்று தலித்துகள் (15%), பிற்படுத்தப்பட்டவர்களும் (41%) கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். ஆனால், மத்திய பிரதேசத்தின் அரசியல் அதிகாரம் இதற்கேற்ப அமையவில்லை.
  • நாடு சுதந்திரம் அடையும்போது, பிற்பாடு மத்திய பிரதேசம் என்றாக்கப்பட்ட பிராந்தியத்துக்குள் 70 சமஸ்தானங்கள் இருந்தன. இந்த ராஜ்ஜியங்களில் எல்லாம் முன்னுரிமை பெற்றிருந்த முற்பட்ட சாதிகளுடைய செல்வாக்கு ஜனநாயகத்திலும் தொடர்ந்தது. குவாலியர் அரசக் குடும்பக் கதையை எடுத்துக்கொள்வோம். சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக்கொண்ட சமஸ்தானங்களில் பெரிய, செல்வம் மிக்க சமஸ்தானங்களில் ஒன்று இது. அதன் கடைசி மன்னர் ஜீவாஜிராவ் சிந்தியா வாரிசுகள் இன்னமும் அரசியலில் கோலோச்சுகிறார்கள். மனைவி விஜய ராஜே சிந்தியா தனித்து நின்றபோதும் வென்றார்; காங்கிரஸில் நின்றபோதும் வென்றார்; சுதந்திரா கட்சியில் நின்றபோதும் வென்றார்; பாஜகவில் நின்றபோதும் வென்றார். எப்போதுமே அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஊர் ‘குவாலியர் ராஜ மாதா’ என்றது. மகன் மாதவராவ் சிந்தியா காங்கிரஸின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் ஒன்றிய அமைச்சராகவும் இருந்தவர்; மகள் வசுந்தரா பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவர்; ராஜஸ்தான் மாநிலத்தின் இருமுறை முதல்வர். இருவருடைய மகன்களும் பாஜகவில் இன்று இளந்தலைவர்கள்.
  • மண்டல் அரசியல் என்று பிற்படுத்தப்பட்டோர் தலையெடுத்த 1990களில்கூட, முற்பட்ட சமூகமான ராஜபுத்திரப் பின்னணி கொண்ட திக்விஜய் சிங் கைகளிலேயே மாநில காங்கிரஸ் இருந்தது. இன்னமும் அவரை ‘ராஜா’ என்று அழைப்போர் இருக்கின்றனர்; ரகோகர் சமஸ்தானத்தின் சிற்றரசராக இருந்த பல்பத்ரா சிங்கின் புதல்வர் அவர் என்பதே காரணம். அவர் கோலோச்சிய காலகட்டத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளில் பாதிக்கும் மேல் முற்பட்ட சாதியினராக இருந்தார்கள் என்கிறார்கள். காங்கிரஸின் இப்போதைய முகம் கமல்நாத் ஒரு பிராமணர். காங்கிரஸ் நிலையே இப்படி என்றால், ‘பிராமண – பனியா கட்சி’ என்றழைக்கப்பட்ட பாஜகவின் நிலையை விவரிக்க வேண்டியது இல்லை. பத்தாண்டுகள் (1993-2003) முதல்வராக இருந்த திக்விஜய் சிங்கின் காங்கிரஸுக்கு அடி கொடுக்கப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்து பாஜகவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் சௌகான்.

சௌகானின் எழுச்சி

  • செஹோர் பிராந்தியத்தின் ஜெய்ட் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சௌகான். கிரார் சமூகத்தைச் சார்ந்தவர். இளவயதிலேயே ஆர்எஸ்எஸ் சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர். மாணவப் பருவத்திலேயே அரசியலுக்குள் அடியெடுத்துவைத்தவர். நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் சில காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர் சௌகான். 1990இல் புத்னி தொகுதி வழியே சட்டமன்றத்துக்குள் நுழைந்துவிட்டாலும், அதற்குப் பின் டெல்லி அரசியல் நோக்கியே அவரை பாஜக வளர்த்தது. மூன்று முறை விதிஷா தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திடீரென்றுதான் மாநிலத்தை நோக்கி அவரை பாஜக நகர்த்தியது. மத்திய பிரதேசத்தின் முதல்வர் பதவி தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டபோது, டெல்லியில் அவர் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்ததாகவும், அதுகுறித்து ஆச்சரியம் அடைந்ததாகவும் ஒருமுறை தெரிவித்தார் சௌகான்.
  • ஆச்சரியமூட்டும் அளவுக்கு கட்சியையும் ஆட்சியையும் அவர் தக்கவைத்தார். பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய மாநிலமான மத்திய பிரதேசத்தை முன்னகர்த்துவதில் அவராலான முயற்சிகளை எடுத்தார். மத்திய பிரதேசத்தின் சமூக நலத் திட்ட அமலாக்கப் பயணத்தில் தன்னுடைய ஆட்சிக் காலத்தை முக்கியமானதாக அவர் மாற்றினார். வேளாண் கட்டமைப்பையும் மின் கட்டமைப்பையும் அவர் பலப்படுத்தினார். வேளாண் வளர்ச்சியில் மத்திய பிரதேசம் தேசிய அளவில் முன்னிலைக்குச் சென்றது ‘பாஜகவின் சிறந்த முதல்வர்’ என்று பத்தாண்டுகளுக்கு முன் மோடிக்குப் போட்டியாக அத்வானியால் பாராட்டப்பட்டபோது சௌகானுடைய செல்வாக்கு உச்சம் தொட்டிருந்தது.

சரியும் பெயர்

  • ஊழல் புகார்கள் ஆட்சி மீது மெல்ல அதிகரிக்கலானதோடு, ‘கிச்சன் கேபினட் நடக்கிறது; மனைவி பாதி முதல்வராக இருக்கிறார்’ என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது சௌகானுடைய பெயர் சேதம் அடையலானது. வியாபம் ஊழல் குற்றச்சாட்டுகளும், அதைத் தொடர்ந்து நடந்த விசிலூதிகளின் மர்மச் சாவுகளும் சௌகானுடைய ‘எல்லோருக்கும் இனியவர்’ பிம்பத்தை நொறுக்கின. இரு தசாப்த அதிகாரம் கட்சி நிர்வாகத்திலும் உறைவை உண்டாக்கிவிட்டதாக தேசிய தலைமை நினைக்கிறது.
  • சௌகானும் விடுவதாக இல்லை. வழக்கம்போல ஓடிக்கொண்டிருக்கிறார். இந்தத் தேர்தலில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்தான் அதிகம்; 165 பேரணிகளில் அவர் பங்கேற்றார். கூட்டங்களில் ‘மாமாஜீ மீண்டும் முதல்வராக வேண்டுமா, இல்லையா?’ என்று கேட்டுவிட்டு, அடுத்து ‘மோடிஜீ மீண்டும் பிரதமராக வேண்டுமா, இல்லையா?’ என்று கேட்பது இரட்டை அர்த்த செய்திகளைக் கொண்டது என்று சிரித்தார்கள் உள்ளூர் பத்திரிகையாளர்கள்.

காங்கிரஸின் எழுச்சி

  • ஐந்து மாநிலத் தேர்தல் களத்தில் காங்கிரஸ் பெரும் உற்சாகத்தோடு உள்ள களம் இதுதான். கட்சியின் முன்னணித் தலைவர்கள் ராகுல், கார்கே தொடங்கி கே.சி.வேணுகோபால், ரந்தீப் சிங் சுர்கேவாலா வரை களம் இறக்கி 350 பேரணிகளை அது நடத்தியது. மாநிலத்தின் முதல்வர் முகமாக அறிவிக்கப்பட்டிருக்கிற கமல்நாத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறபோதும், பிரியங்காவும் தீவிரமாகச் செயலாற்றுகிறார். இறுதிக் கட்ட குவாலியர் பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் ஆட்சியை உடைத்த சிந்தியாவைத் துரோகி என்று குறிப்பிட்டு பேசிய காட்டமான பேச்சு பலரையும் புருவத்தை உயர்த்திட வைத்தது.
  • பாஜக விடாபிடியாக மோதுகிறது. மோடி, அமித் ஷா தொடங்கி யோகி, பிஸ்வா உள்பட முக்கியத் தலைவர்கள் அத்தனை பேரையுமே களம் இறக்கிய பாஜக 634 பேரணிகளை இங்கே நடத்தியது. ராகுல் – பிரியங்கா இருவரும் பங்கேற்ற கூட்டங்கள் 11 என்றால், மோடி மட்டுமே 15 கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார். மோடியின் நிகழ்ச்சிகளுக்குப் பழைய கூட்டமோ, மக்களிடம் பழைய உற்சாகமோ இல்லை என்றாலும், இன்னமும் மக்களிடம் அவர் மீதான மதிப்பு உயரத்திலேயே இருப்பதைக் காண முடிகிறது. உள்ளூர் சௌகான் அரசைத் திட்டுபவர்களும்கூட மத்திய அரசு மீது பெரிய அதிருப்தியை வெளிப்படுத்துவதில்லை.
  • காங்கிரஸ் அது அறிவித்திருக்கிற மக்கள் நலத் திட்ட வாக்குறுதிகளையும் பாஜக மோடி அரசின் பணிகளையும் பெரிதும் பேசுகின்றன. பாஜக கொடி கட்டிய ஆட்டோ ஸ்பீக்கர்கள்கூட ராமர் கோயில் கட்டுமானப் பணியைக் குறிப்பிடத் தவறுவதில்லை. காங்கிரஸும் அதே தொனியில் பதில் பேசுகிறது. ‘நானே வாழ்நாள் சனாதனி’ என்று சொல்லும் கமல்நாத் ‘ராமர் கோயிலை முதன்முதலில் திறந்துவிட்டது ராஜீவ் என்பதை மறந்துவிடாதீர்கள்’ என்கிறார். மோடி காலத்து இந்துத்துவ அலையை எப்படி எதிர்கொள்வது என்பதில் காங்கிரஸில் இன்று இரட்டைப் போக்குகள் நிலவுகின்றன. கர்நாடகத்தில் பாஜகவின் இந்துத்துவ வியூகங்களை விமர்சித்து அடித்தாடுகிறார்கள் என்றால், மத்திய பிரதேசத்தில் இந்துக்களை அறிவிப்புகளால் ஈர்ப்பதில் பாஜகவுக்கே சவால் விடுகிறார்கள். பாஜக மிகத் தீவிரமான அடித்தளக் கட்டமைப்பைக் கொண்ட மாநிலம் மத்திய பிரதேசம்; இந்துத்துவத்தின் வீச்சு அதிகம். ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூருக்கும் மத்திய பிரதேச தலைநகரான போபாலுக்கும் இடையே 352 கி.மீ. தொலைவுதான். அதாவது, மஹாராஷ்டிர தலைநகர் மும்பைக்கு நாக்பூரிலிருந்து செல்ல இதுபோல இரண்டு மடங்கு தூரம் பயணிக்க வேண்டும். ஆகையால், ஊருக்கேற்ற வியூகம் என்கிறார்கள் காங்கிரஸார்.
  • பாஜகவின் இரட்டையாட்சி பலம், நீண்ட அதிகார இடைவெளி உண்டாக்கும் சோர்வு, தேசிய அளவிலான பின்னடைவுகள் இவ்வளவையும் தாண்டியும் பாஜக அஞ்சும்படியான எதிர்ப்பை உருவாக்க முடிந்தது காங்கிரஸாரிடம் உற்சாகமாக வெளிப்படுகிறது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இரண்டுக்கும் இங்கே சில இடங்களில் செல்வாக்கு உண்டு என்பதால், இரு கட்சிகள் சார்ந்த தொகுதிகளைக் கொஞ்சம் அச்சத்தோடு அணுகுகிறார்கள். நாட்டிலேயே மிக வலுவான கட்சி கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது மாநிலம் எனும் தைரியம் பாஜகவினருக்கு உத்வேகத்தைக் கொடுக்கிறது. பிஹார் சாதிவாரிக் கணக்கெடுப்பு உண்டாக்கியிருக்கும் சலனங்கள் இரு கட்சிகளிலுமே சன்னமாக வெளிப்படுகின்றன. இந்திய அரசியலில் 63 வயது நிறைவுக்கானது அல்ல; அடுத்து சௌகான் என்ன செய்வார் என்ற கேள்வி மொத்த மாநிலத்திலும் பேசப்படுகிறது.

பாய்ச்சலுக்கான காலம்

  • செல்லும் இடம் எல்லாம் மக்களிடம் அடுத்தகட்ட தாவலுக்கான ஏக்கம் படர்ந்திருப்பதை உணர முடிகிறது. அதேசமயம், பாஜக மீது வெறுப்பாக அது வெளிப்படாததையும் காண முடிகிறது.
  • விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த இளைஞரான அனுராக் என்னிடம் கேட்டார், “நீங்கள் ஹபிப்கஞ்ச் ரயில் நிலையத்தைப் பார்த்திருப்பீர்கள்தானே? அப்படித்தான் வாழ்க்கை மாற வேண்டும் என்று நினைக்கிறோம்!” அரசு – தனியார் கூட்டில் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் தனியார் ரயில் நிலையம் அது. பார்க்க விமான நிலையம் போன்று இருக்கும்.
  • மக்கள் வேறொரு காலத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்!

நன்றி: அருஞ்சொல் (28 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்