மயன்மார் உள்நாட்டுப் போர் மாறுமா இந்தியாவின் நிலைப்பாடு?
- இந்தியா தனது எல்லையை ஏழு நாடுகளோடு பகிர்ந்துகொள்கிறது. வடக்கே சீனா, பூடான், நேபாளம்; வடமேற்கே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்; கிழக்கே வங்கதேசம், மயன்மார். இவை தவிர கடல் எல்லையைத் தாண்டி, தெற்கே இலங்கையும் மாலத்தீவும். இந்த ஒன்பது நாடுகளிலும் ஆகக் குறைந்த ஊடக கவனம் பெறுவது மயன்மார்.
- இவ்வளவுக்கும் ஒரு காலத்தில் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் செறிவாக வாழ்ந்த நாடு அது. அந்நாளில் அதன் பெயர் பர்மா. இன்றும் தமிழகத்தின் பல ஊர்களில் ‘பர்மா காலனிகள்’ இருக்கின்றன. இப்போதும் சுமார் 10 லட்சம் தமிழர்கள் மயன்மாரில் வாழ்கின்றனர்.
- அங்கே மூன்றாண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதுகாறும் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்; சுமார் 25 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருக்கின்றனர். என்றாலும் மயன்மார் மக்களின் துயரம் பல இந்திய ஊடகங்களில் பேசுபொருளாக இல்லை. நமது அரசு மயன்மாருக்கு வழங்கும் முக்கியத்துவமும் குறைவு.
- மயன்மாரில் ராணுவ ஆட்சி நடைபெறுவதில் எந்தப் புதுமையும் இல்லை. ஆனால், ராணுவ ஆட்சிக்கு எதிராக இப்போது உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. அது புதிது. அதுவே கரிசனம் மிக்க ஓர் அண்டை நாடாக இந்தியாவின் கவனத்தைக் கோருகிறது. அது ஒரு வரலாற்றுத் தேவையாகவும் மாறிவருகிறது.
எழுதிச் செல்லும் ராணுவத்தின் கை:
- மயன்மார் ராணுவம், தனது அரை நூற்றாண்டு கால ஆட்சியை 2012இல் சற்றே இளக்கியது. பல காலம் சிறையிலிருந்த தலைவர் அவுங் சான் சுகி விடுதலையானார். அவரது தலைமையிலான என்.எல்.டி. எதிர்க்கட்சி ஆனது. 2015இல் அதுவே ஆளுங்கட்சியும் ஆனது.
- என்றாலும் ராணுவத்தின் மேலாதிக்கம் தொடர்ந்தது. என்.எல்.டி.யும் ராணுவத்துக்கு இசைவாகத்தான் ஆட்சி நடத்தியது. வெகுமக்களின் ஒரே பற்றுக்கோடாக இருந்த என்.எல்.டி, 2020 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றது. மக்களிடம் என்.எல்.டி.க்கு இருந்த செல்வாக்கு ராணுவத்துக்கு உவப்பாக இல்லை. ஆகவே, அது பிப்ரவரி 2021இல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
- ராணுவ நுகத்தடிக்குப் பழக்கமான மயன்மார் மக்களை அடக்கி ஆண்டுவிடலாம் என்று ராணுவம் கருதியது. ஆனால், அந்தக் கணக்கு பிசகிவிட்டது. பத்தாண்டுகளுக்கும் மேலாக மயன்மாரில் வீசிய அரசியல் - பொருளாதாரச் சுதந்திரக் காற்றை, அது எவ்வளவு குறைவாக இருந்தாலும், இழப்பதற்கு மக்கள் சித்தமாக இல்லை. அவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். தோட்டாக்களையும் தடிகளையும் ஏவியது அரசு. மக்களின் அகிம்சைப் போராட்டங்கள் ஆட்சியாளர்களிடம் எந்தச் சலனத்தையும் உண்டாக்கவில்லை.
விடுதலைக் குழுக்கள்:
- இந்தச் சூழலில்தான் ஒரு புதிய கூட்டணி உருவானது. மயன்மார் பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு. ‘பாமா’ எனப்படும் பெரும்பான்மை பர்மிய சமூகத்தினர் ஐராவதி நதி பாயும் வளமான மையப் பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் வசிக்கிறார்கள். இவர்கள் பௌத்த மதத்தினர். மயன்மாரில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுபான்மை தேசிய இனத்தவர் உள்ளனர். இவர்களில் ஷான், கரீன், ரக்கைன், சின், கச்சின், கைன், மான் ஆகிய ஏழு பிரிவினர் முதன்மையானவர்கள்.
- இவர்களில் பிரிவினை கோரும் பல ஆயுதக் குழுக்களும் உண்டு. தேர்தல் ஜனநாயகத்தைப் பின்பற்றும் கட்சிகளும் உண்டு. பெரும்பான்மை பாமா இனத்தவருக்கும் சிறுபான்மை இனத்தவருக்கும் எப்போதும் இணக்கம் இருந்ததில்லை. எனில், இப்போது முதல் முறையாகப் பொது எதிரியான ராணுவ ஆட்சிக்கு எதிராக இரு சாராரின் அமைப்புகளும் இணைந்திருக்கின்றன. இந்தக் கூட்டணிதான் தேசிய ஐக்கிய முன்னணி (National United Government-NUG). இது மயன்மாருக்கு வெளியே ஓர் அரசாங்கத்தையும் நிறுவியிருக்கிறது. இதன் பல்வேறு விடுதலைப் படைகள் கூட்டாக மக்கள் பாதுகாப்புப் படை (People’s Defense Forces-PDF) என்று அறியப்படுகிறது.
- பி.டி.எஃப்-இன் அங்கமான சிறுபான்மை இனத்தவரின் மூன்று விடுதலைக் குழுக்கள் ஒன்றிணைந்து 2023 அக்டோபர் 27 அன்று அரசப் படைகளை எதிர்கொண்டன. வெற்றியும் பெற்றன. பல ராணுவத் தளங்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றின. இந்தத் ‘தாக்குதல் 1027’ உள்நாட்டுப் போரின் போக்கையே மாற்றிவிட்டது. தொடர்ந்து சிறுபான்மையினர் வசிக்கும் எல்லைப்புற மாநிலங்களில் வெற்றி ஈட்டிய பி.டி.எஃப், இப்போது மையப் பகுதிகளிலும் முன்னேறி வருகிறது. சமீபத்தியத் தரவுகளின்படி நாட்டின் 60% நிலப்பரப்பை பி.டி.எஃப். கைப்பற்றியிருக்கிறது.
- இதன் பொருள் ராணுவ ஆட்சி விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்பதல்ல. இப்போதும் அரசப் படைகளுக்குத்தான் ஆயுத பலம் அதிகம். அதன் விமானப் படையும் வலியது. ராணுவத்துக்குக் கட்டாயமாக ஆளெடுப்பும் நடக்கிறது. கூடவே இந்தியா, சீனா போன்ற நாடுகள் மயன்மார் அரசுக்குத் தாராளமாக ஆயுதங்களை வழங்கிவருகின்றன. சொந்த நாட்டின் மக்களைக் கொல்லவே இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கூடா நட்பு:
- மயன்மார் அரசோடு இந்தியாவுக்கு நல்லுறவு இருக்கிறது. ஆனால், மக்களின் ஆதரவை இழந்துவரும் ஆட்சியாளர்களோடு மட்டும் உறவைப் பேணுவது, ஆட்சி மாற்றம் ஏற்படும்போது எதிர் விளைவுகளை உண்டாக்கும். சமீபத்திய எடுத்துக்காட்டுகள் மாலத்தீவும் வங்கதேசமும்.
- நவம்பர் 2023இல் மாலத்தீவில் தேர்தல் நடந்தது. இந்தியாவோடு இணக்கமாக இருந்த இப்ராகிம் சோலி தோல்வியடைந்தார். இந்தியாவுக்கு எதிராகப் பரப்புரை மேற்கொண்ட முகமது முய்சு மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றார். உடன், மாலத்தீவில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியத் துருப்புகள் வெளியேறுவதற்குக் கெடு விதித்தார். அவரது அமைச்சர்கள் இந்தியாவுக்கு எதிராகப் பேசினர். இப்போது இந்திய அரசின் வெளியுறவுத் துறை நிலைமையைச் சீராக்கப் பெருமுயற்சி எடுத்துவருகிறது.
- போலவே, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவை ஆதரித்தது இந்திய அரசு. அவரது எதேச்சதிகாரம் இந்தியா வழங்கிவந்த ஆதரவுக்குத் தடையாக இல்லை. இப்போது ஹசீனா பதவி இழந்துவிட்டார். வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்திருக்கிறது. அதில் பொறுப்பு வகிக்கும் சிலரே இந்தியாவுக்கு எதிராகப் பேசுகிறார்கள். இனி, புதிய ஆட்சியாளர்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள இந்தியா மெனக்கெட வேண்டும்.
- அதாவது, மாலத்தீவிலும் வங்கதேசத்திலும் செல்வாக்கை இழந்துகொண்டிருந்த ஆளும் வர்க்கத்துடன் இந்திய அரசு நெருக்கமான உறவைப் பேணியது. அதே வேளையில், பிற கட்சிகளுடனும் இயக்கங்களுடனும் உறவை வளர்த்துக்கொள்ளவில்லை. இதனால், ஆளும் கட்சி மாறியவுடன் அதற்கு எதிரான மனப்போக்கு, இந்தியாவுக்கு எதிரான மனப்போக்காக மாறுகிறது. இதே சிக்கல் வருங்காலத்தில் மயன்மாரிலும் வரலாம். அதை எப்படித் தவிர்க்கலாம்?
நான்கு கட்டளைகள்:
- முதலாவதாக, மயன்மாரின் ராணுவ அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தலாம். அடுத்து, இந்த உள்நாட்டுப் போரில் பாதிக்கப்படுவோர் அண்டை மாநிலங்களான மணிப்பூருக்கும் மிசோரமுக்கும் தஞ்சம் நாடி வருகிறார்கள். இந்த அகதிகளிடத்தில் இந்திய அரசு கரிசனத்துடன் நடந்துகொள்ளலாம். இவை இரண்டும் இந்தியாவின் தார்மிக மதிப்பை உயர்த்தும்.
- மூன்றாவதாக, என்.யூ.ஜி. அமைப்புடன் இந்தியா தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். இந்த விஷயத்தில் சீனா கவனமாக இருக்கிறது. மயன்மாரின் ராணுவ ஆட்சிக்குப் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளையும் ராணுவத் தளவாடங்களையும் சீனா வாரி வழங்கியிருக்கிறது. அதே வேளையில், என்.யூ.ஜி.யுடனும் தொடர்பில் இருக்கிறது. சமீபத்தில் ஒரு தற்காலிகப் போர் நிறுத்தத்துக்காக இரண்டு தரப்புகளுக்கும் இடையே சீனாதான் பேச்சுவார்த்தை நடத்தியது. வருங்காலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் புதிய ஆட்சியாளர்களுடன் இணங்கிப்போவது சீனாவுக்கு எளிதாக இருக்கும். இந்தியாவுக்குக் கடினமாக இருக்கும்.
- நான்காவதாக, சீனாவால் செய்ய முடியாத ஒன்றை இந்தியாவால் செய்ய முடியும். தற்போதைய மயன்மார் அரசமைப்பில் பெரும்பான்மை பாமா இனத்தவரிடம்தான் அதிகாரம் குவிந்திருக்கிறது. என்.யூ.ஜி. ஆட்சிக்கு வந்தால் எல்லாச் சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டிவரும். கூட்டாட்சித் தத்துவத்தை அரசமைப்பின் ஆதாரக் கூறுகளில் ஒன்றாகக் கொண்டிருக்கும் இந்தியாவால், புதிய மயன்மாருக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும்.
- இந்த நான்கு கட்டளைகளை இந்திய அரசு பரிசீலித்து, அவற்றைப் படிப்படியாக நடைமுறைப்படுத்தினால், இந்தியாவின் மதிப்பு மயன்மார் மக்களிடத்தில் மட்டுமல்ல, பிற அண்டை நாடுகளிடத்திலும் உயரும். பன்னாட்டளவிலும் இந்தியா கவனம் பெறும். இவை ராஜீயரீதியிலும் பயன் தரும்; அறம் சார்ந்த நடவடிக்கைகளாகவும் அமையும்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 09 – 2024)