TNPSC Thervupettagam

மயிலாடுதுறை மாவட்டம்:கால் நூற்றாண்டுக் கனவு!

March 26 , 2020 1752 days 891 0
  • · உலகமே கரோனா பீதியில் உறைந்துகிடக்கும் இக்கட்டான நேரத்தில் மயிலாடுதுறை கோட்டப் பகுதியில் வசிக்கும் சுமார் 12 லட்சம் பேருக்குத் தனி மாவட்டம் என்ற இனிப்பான செய்தியைத் தமிழக அரசு தந்திருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் கேட்டு ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அதற்குக் காரணம், தமிழகத்தில் எந்தப் பகுதி மக்களுக்கும் இல்லாத துயரம் மயிலாடுதுறை கோட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இருந்தது.
  • · கொள்ளிடத்தில் ஆரம்பித்து சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், செம்பனார்கோவில், பூம்புகார் உள்ளிட்ட பகுதி மக்கள் நாள்தோறும் இந்தத் துயரத்தை அனுபவித்தார்கள். ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால் வழியாக நுழைவு வரி செலுத்தியோ அல்லது வேறொரு மாவட்டமான திருவாரூர் வழியாகவோதான் மாவட்டத் தலைநகரான நாகப்பட்டினத்துக்கு அவர்களால் செல்ல முடிந்தது.

இரு முறையும் புறக்கணிப்பு

  • · ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மன்னராட்சியிலும் சரி, பிறகு வந்த ஆங்கிலேயர் ஆட்சியிலும் சரி; தஞ்சாவூருக்கு அடுத்ததாக வரலாறு, புவியியல், பண்பாட்டு அம்சங்கள் கொண்ட நகரமாக மயிலாடுதுறை விளங்கியது. எனினும், மயிலாடுதுறையை ஒதுக்கிவிட்டே இரண்டு முறை புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1991-ல் தஞ்சை முதன்முறையாகப் பிரிக்கப்பட்டபோதே தனி மாவட்டமாகி இருக்க வேண்டிய மயிலாடுதுறை புறக்கணிக்கப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டம் உருவானது. அடுத்த முறை 1997-ல் நிகழ்ந்த மாவட்டப் பிரிவினையிலும் நாகையிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள திருவாரூர் மயிலாடுதுறையை முந்திக்கொண்டது.
  • · எப்போதுமே புவியியலை மையப்படுத்தி, மக்களின் வசதியை மனதில் கொண்டே மாவட்டங்களைப் பிரிப்பார்கள். ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தை இரு முறை பிரித்தபோதும் புவியியல் அமைப்பைக் கவனிக்கவில்லை. மயிலாடுதுறை பெற்றிருந்த மக்களவைத் தொகுதியின் தலைமையிடம் என்ற கூடுதல் தகுதியும்கூட கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதனால் தான், இப்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் நிலப்பரப்புரீதியாக இரண்டு துண்டுகளானது.

 

நிர்வாகச் சிக்கல்கள்

  • · தமிழ்நாட்டில் எவ்வளவோ மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஏன் மயிலாடுதுறை மாவட்ட உருவாக்கத்தை மாநில அளவில் விவாதிக்க வேண்டியிருக்கிறது என்றால், இத்தகு மாவட்டப் பிரிவினைகளின்போது புவியியல் அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் வழி எவ்வளவு மக்களின் அலைக்கழிப்பைத் தவிர்க்க முடியும் என்பதை அரசு நிர்வாகிகள் உணர வேண்டும் என்பதனால்தான்! நாகப்பட்டினத்திலிருந்து சற்றேறக்குறைய 100 கிமீ தூரத்தில் இருக்கும் கொள்ளிடக்கரை வரையிலும் நீண்டிருக்கும் மயிலாடுதுறைப் பிராந்தியத்தை நிர்வகிப்பது என்பது மிகக் கடினமானது. வருவாய்த் துறை, காவல் துறை, நீதித் துறை என எல்லாத் துறைகளிலுமே நிர்வாகச் சிக்கல்கள் இருந்தன. ஆட்சியரைப் பார்க்கப்போவதோ, அரசு அலுவலங்களுக்குச் செல்வதோ மிகப் பெரிய சுமையாக மக்களை அழுத்தியது. கிராம நிர்வாக அலுவலர்கள் முதல் கோட்டாட்சியர் வரை கூடுதல் பணிச் சுமைக்கு ஆளானார்கள். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் துறையினரும் அவதிப்பட்டார்கள். அதிலும் காவிரி, வெண்ணாறு என இரண்டு வடிநிலக் கோட்டங்கள் அடங்கியிருப்பதால் பேரிடர் காலங்களில் சொல்லொணாத் துயரம் நிலவியது. மொத்தத்தில், மக்களோடு சேர்ந்து அரசு நிர்வாகமும் பாதிக்கப்பட்டது.
  • · இதனால், மயிலாடுதுறையை மாவட்ட மாக்குவதற்கான கோப்புகள் 2004, 2010 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டன. ஆனால், அதுகுறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வணிகர் சங்கங்கள், சேவை அமைப்புகள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எனப் பல தரப்பினரும் பேரணி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை முன்னெடுத்தனர். கடந்த ஆண்டில், கேட்காத ஊர்களையெல்லாம் தமிழக அரசு அடுத்தடுத்து மாவட்டங்களாக்கியபோது மயிலாடுதுறை மாவட்டத்துக்கான போராட்டம் தீவிரமானது. கடைசியில், தமிழக அரசு இப்போது செவிசாய்த்திருக்கிறது.
  • · காமராஜர் காலத்தில் 2 ஏக்கர் இடத்தில், 12 பேருந்துகள் மட்டும் வந்துசெல்வதற்காகக் கட்டப்பட்ட மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இப்போது 400 பேருந்துகள் மூச்சுத்திணறியபடி நாள்தோறும் 2,000 முறை வந்துசெல்கின்றன. அரை நூற்றாண்டாக மயிலாடுதுறை எந்த அளவுக்குப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதன் அடையாளச் சின்னமாக உள்ள பேருந்து நிலையம் இனியாவது மாறும். நாகப்பட்டினத்திலிருந்து எட்டாத தூரத்தில் இருந்ததால், பெரிய அளவிலான அரசுத் திட்டங்கள் வந்தடையாத மயிலாடுதுறை கோட்டத்திலுள்ள ஊர்களுக்கு இனி அவையெல்லாம் கிடைக்கும்.

என்னென்ன நன்மைகள்?

  • · மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய 4 வட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கான மயிலாடுதுறை அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக மாறும். விபத்து, மாரடைப்பு போன்ற அவசரக் காலங்களில் தஞ்சாவூர் அல்லது திருவாரூர் கொண்டுசெல்லும் வழியில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் உயிரிழப்புகள் தடுத்து நிறுத்தப்படும். காவிரி கடைமடைப் பாசனப் பகுதியான மயிலாடுதுறை விவசாயிகளின் பிரச்சினைகளுக்குக் காதுகொடுத்துக் கேட்பதற்கு இங்கேயே அதிகாரிகள் இருப்பார்கள். விவசாயிகளுக்காக அரசுகள் வழங்கும் மானியங்கள், சலுகைகள் போன்றவை மயிலாடுதுறை பகுதிக்கு உடனடியாகக் கிடைக்கும். விவசாயத்துக்கு அடுத்தபடியாக மீன் வளம் நிறைந்த பகுதியாக இருப்பதால் அதை மையமாக வைத்து தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும். ஒருகாலத்தில், மயிலாடுதுறை கோட்டப் பகுதியில் நடந்த கிரைண்டர் உருவாக்கம், பட்டுப்புடவை நெய்தல், சீவல், கடலை மிட்டாய் தயாரிப்பு போன்ற சிறு, குறு தொழில்களை மீட்டெடுத்து வளர்த்தெடுக்க முடியும்.
  • · மயிலாடுதுறை கோட்டப் பகுதியில் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகியிருக்கும் அளவுக்கு அரசுக் கல்வி நிறுவனங்கள் இல்லை. அரசு ஆண்கள் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேளாண் கல்லூரி, பல்கலைக்கழகம் போன்றவை உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இதன் மூலம் ஏழை, நடுத்தரக் குடும்பத்து மாணவர்கள் பயனடைவார்கள். 150 ஆண்டுகளுக்கு முன்பே ரயில் ஓடிய மயிலாடுதுறையில் இன்னமும் அடிப்படை வசதிகள் இல்லாத ரயில் சந்திப்பு என்ற நிலை இனியாவது மாறும். 2011-ல் தொடங்கப்பட்ட மயிலாடுதுறை சுற்றுவட்டச் சாலைத் திட்டம் நடைமுறைக்கு வரும்.

சுற்றுலா முக்கியத்துவம்

  • · நவகிரகக் கோயில்களும், அறுபதாம் கல்யாணத்துக்குப் பெயர் பெற்ற திருக்கடையூர், திருமணஞ்சேரி போன்ற முக்கியமான சைவ, வைணவத் தலங்களும் மயிலாடுதுறையை மையப்படுத்தியே இருக்கின்றன. கங்கையைவிடப் புனிதமானதுஎனப்படும் காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் நடக்கும் மயிலாடுதுறை துலா உற்சவம் இந்திய அளவில் புகழ் பெற்றது. சீர்காழியில் நடக்கும் முலைப்பால் திருவிழாவிலும் ஏராளமானோர் பங்கேற்கின்றனர். இதனால், ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியூர்களிலிருந்து மயிலாடுதுறை கோட்டப் பகுதியிலுள்ள ஊர்களுக்கு வந்துசெல்கின்றனர்.
  • · பக்கத்திலேயே பூம்புகார், தரங்கம்பாடி போன்ற ஒட்டுமொத்த தமிழர் வரலாற்றிலும் சிறப்புமிக்க இடங்கள் இருக்கின்றன. இவற்றை வைத்து மயிலாடுதுறையைப் பெரிய சுற்றுலா மையமாக்கலாம். தற்போது தனி மாவட்டமாகிவிட்டதால், இதற்கென சிறப்புத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தலாம். அதற்கேற்ப தங்குமிடங்கள், உணவகங்கள் என உள்ளூர் தொழில்களும் விரிவடையும். சுற்றியிருக்கிற ஊர்களும் அதனதன் அளவில் வளர்ச்சி பெறும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்ற மேதைகள் நீதி பரிபாலனம் செய்த மயிலாடுதுறை நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றமாகிவிடும். நீதியைப் பெறுவதற்குக்கூட நீண்ட தூரம் பயணித்து நாகப்பட்டினம் போக வேண்டும் என்ற நிலை இப்போது மாறிவிட்டது. இதுவும் ஒரு நீதிதான்!

நன்றி: தி இந்து (26-03-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்