மரண தண்டனை அல்ல, மனநிலை மாற்றமே தீர்வு!
- பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளின் தொடர்ச்சியாக, பாலியல் வல்லுறவுக் குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை மேற்கு வங்க அரசு நிறைவேற்றியிருக்கிறது. பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளைத் தீர்வாக முன்வைக்கும் வழக்கமான அணுகுமுறையையே இச்சட்டம் வெளிப்படுத்துவதாக விமர்சனமும் எழுந்திருக்கிறது.
- கடந்த மாதம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிவந்த பெண் ஒருவர் மருத்துவமனை வளாகத்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையைக் கண்டித்து கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
- திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு இந்தச் சம்பவம் அவப்பெயரைப் பெற்றுத்தந்துள்ளது. மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, இந்தப் பிரச்சினையை முன்வைத்து திரிணமூல் அரசுக்கு அரசியல்ரீதியான நெருக்கடியைக் கொடுத்துவருகிறது. உச்ச நீதிமன்றமும் மேற்கு வங்க அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
- இத்தகைய அழுத்தங்களுக்கு நடுவில் அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் (மேற்கு வங்கக் குற்றவியல் சட்டங்கள் திருத்தம்) மசோதா 2024-ஐ மேற்கு வங்க அரசு சட்டமன்றத்தில் செப்டம்பர் 3 அன்று நிறைவேற்றியது. இந்த மசோதா, இந்திய தண்டனைச் சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கானது.
- பாலியல் வல்லுறவு, காவல் துறை அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களால் நிகழ்த்தப்படும் பாலியல் வல்லுறவு, பாதிக்கப்பட்டவருக்கு மரணம் அல்லது நிரந்தர உடல் செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய பாலியல் வல்லுறவு, கூட்டுப் பாலியல் வல்லுறவு, ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாலியல் வல்லுறவில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு எஞ்சிய வாழ்நாள் முழுமைக்குமான கடுங்காவல் தண்டனை அல்லது மரண தண்டனை விதிப்பதற்கானவையே அந்தத் திருத்தங்கள்.
- பாலியல் குற்றங்கள் பெரும் சர்ச்சையாக எழும்போதெல்லாம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று குரல்கள் எழுவது வழக்கம். 2012இல் நாடு முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்திய நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி ஜே.எஸ்.வர்மா கமிட்டி, பாலியல் வல்லுறவுக்கான சிறைத் தண்டனைக் காலத்தை அதிகரித்த அதே நேரத்தில், மரண தண்டனையைப் பரிந்துரைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
- ஆனால், கொடிய குற்றங்களுக்கு எதிரான மக்கள் எழுச்சியைத் தணிக்கத் தண்டனைகளைக் கடுமையாக்கும் சட்டங்களை நிறைவேற்றுவது ஆளும் கட்சிகள் கைக்கொள்ளும் வழிமுறை. முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் அரசும் அதே வழிமுறையை நாடியுள்ளதாகக் கருத இடம் உள்ளது.
- கொல்கத்தா சம்பவத்தில் அரசு மருத்துவமனையில் இப்படி ஒரு குற்றம் நடந்ததை மறைக்கவும் குற்றவாளிகளைத் தப்பவைப்பதற்குமான முயற்சிகள் நடந்துள்ளன. பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் பெரும் சர்ச்சையாகும்போதுதான் தொடர்புடைய இது போன்ற பிரச்சினைகள் கவனத்துக்கு வருகின்றன. பொதுமக்கள் கவனத்தை ஈர்க்காத எத்தனையோ வல்லுறவு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் அரசுகள் இதே முனைப்பைக் காண்பிக்கின்றனவா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
- பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது அவசியம்தான். ஆனால் தண்டனைகள் இருந்தாலும் பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் நடந்துகொண்டே இருப்பது பெண்களைத் தங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியவர்களாகக் கருதும் ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடுதான். இந்த மனநிலையை அடியோடு மாற்றுவதும் ஆண்-பெண் சமத்துவத்தைச் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் சாத்தியப்படுத்துவதுமே பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் களைவதற்கான நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 09 – 2024)