TNPSC Thervupettagam

மரணம் ஒரு கலைதான்

June 17 , 2024 208 days 187 0
  • உலகத்தில் இறந்த முதல் மனிதர் ஆபேல். இவர் ஆதாமின் இரண்டாவது மகன். தர்க்கப்படி முதலில் பிறந்த ஆதாம்தானே முதலில் மரித்திருக்க வேண்டும்! ஆபேலின் மரணம் இயற்கையானதில்லை, அது கொலை. மனித இறப்புக்குப் பெரும்பான்மைக் காரணமாய் அமைவது முதுமை. ஆனால், மரணங்கள் பல வகைகளில் நிகழ்கின்றன. ‘மரணம் ஒரு கலை’யல்லவா!

நீர் மரணம்:

  • கோட் பாக்கெட்டுகளில் அதிக எடையுள்ள கற்களை நிரப்பிக்கொண்டு, நதியில் மூழ்கி இறந்துபோனார் அறிவியல் தெரிந்த 59 வயது எழுத்தாளர் வர்ஜினியா வுல்ஃப். இறங்கிய நிலையத்தில் ஏறாமல் துங்கபத்திரை ஆற்றில் கரைந்து காணாமல் போனார் டெல்லியில்இருந்து தமிழகம் திரும்பிக்கொண்டுஇருந்த எழுத்தாளர் ஆதவன். 1960களில் புகழ்பெற்று விளங்கிய இந்திய ஆட்சிப் பணி அலுவலர் வி.கே.சி.நடராஜன், நீச்சல் குளத்து நீரில் மண்டை உடைந்து மரணித்தது அப்போது பேரதிர்ச்சி தந்த சம்பவம். இவர்களாவது மனிதர்கள்! கடவுளான ஸ்ரீராமனே ஓடும் சரயூ ஆற்றில் இறங்கித் தன்னையே மாய்த்துக்கொண்டான். நல்லதங்காள் தன்னோடு தன் குழந்தைகளையும் கிணற்று நீரில் இழந்தது, தமிழ்நாடு பல காலம் கண்ணீர் விட்டு அழுத சம்பவம். இவையெல்லாம் ‘அம்’பால் (தண்ணீரால்) நேர்ந்த மரணங்கள் என்றால், அம்பு வழியாகவே  கிருஷ்ணரின் மரணம் நிகழ்ந்தது.

தீ மரணம்:

  • நெருப்பால் நேர்ந்த மரணங்களும் அனாதி. நாத்திகரான புருனோ உயிருடன் எரிக்கப்பட்டது வெளிநாட்டில். இந்தியாவில் சதி என்ற பெயரில் பெண்கள் கணவனின் சிதையில் ஏற்றப்பட்டதும் தீ மரணங்கள்தான். மரணம் என்பதை ஒரு கலை என்று இலக்கியத்தில் பதிவுசெய்த சில்வியா பிளாத், எரியும் அடுப்பில் தன்னை இணைத்துக்கொண்டு வெந்துபோனார். இன்றுவரை நாம் நம்ப மறுக்கும் வடலூர் வள்ளல் ஜோதி இராமலிங்கம் மரணமும் தீயால் திகழ்ந்ததுதானே! ‘நெருப்பு சோடா’ என்ற மரண வழி ஒன்று இருந்தது. நெருப்பு என்று குறிக்கப்பட்டாலும் அது நெருப்பு அல்ல, ஒருவகை நஞ்சாம்.

விஷ மரணம்:

  •  நஞ்சால் நிகழ்ந்த இறப்புகளுக்கும் வரலாற்றில் பஞ்சமில்லை. கிரேக்கத்தில் சாக்ரடீஸ், ஹேம் லாக் என்ற தாவர நஞ்சு ஊட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு நஞ்சூட்டியது அதிகார வர்க்கம். ஆனால், நண்பர்களாலும் விஷம் தரப்படுவது வரலாற்றுக் கால வழக்கம்போல, ‘நஞ்சுண்டு அமைந்தனர் நனி நாகரிகர்’. புத்தரும் கெட்டுப்போன உணவை உண்டுதானே உலகைவிட்டுப் போனார். விஷம் தரும் மரணங்கள் கவனத்தால் தவிர்க்கக்கூடியவை. மன்னர்கள் ‘ஆபத்து உதவிக’ளால் அவ்வகை மரணங்களைத் தடுத்தனர்.

நோய் மரணம்:

  • விவேகானந்தர் மாரடைப்பால் காலமானார். கலிலியோ சிறை தந்த வலி பொறுக்க முடியாமல் மரணத்தைத் தழுவினார். நோய் தருகிற மரணங்களும் தவிர்க்க முடிபவை. ‘நீரினால் மரணம்’ என்று ‘பாழ்நிலம்’ கவிதையின் நான்காம் பகுதிக்குப் பெயர் சூட்டிய டி.எஸ்.எலியட், நுரையீரல் நோயால் இறந்தார். ‘நூறு வயது வாழ்வது எப்படி?’ என்று நூல் எழுதிய பலரும் 80 வயதைத் தாண்டாமல் இறப்பைத் தொட்டனர். பசியால் சாதலும் பிணிகளால் மரிப்பதுமாகத் தோன்றி அழிவது, வாழ்க்கை என்பது காலத்திடம் நாம் கற்ற பாடம். பாரதி இதைக் கண்டெல்லாம் அஞ்சியிருக்கிறார். அதனால்தான் ‘அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி’ வாழ ‘ஓம் சக்தி’ பாடலில் இறையிடம் வேண்டுகிறார்.
  • விலங்குகளாலும் மனிதர்கள் இறந்தனர். பாரதியின் இறப்புச் சான்றிதழ் குறிக்கும் காரணம் வேறாக இருப்பினும், அவரது மறைவில் யானையின் தாக்கம் இருந்திருக்கும்தானே! யானை மட்டுமல்ல, திருவல்லிக்கேணியில் குதிரையிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 1906 ஏப்ரல் 11 ஆம் தேதியன்று திருவல்லிக்கேணி திருவிழாவின்போது ஒரு குதிரையால் தாக்கப்பட்டுக் கீழே விழுந்தார் எழுத்தாளர் ச.ம.நடேச சாஸ்திரி. அவரை வீட்டுக்கு எடுத்துச் சென்றதும் இறந்துவிட்டார்.
  • உலகத்துக்காக உழைத்த ஆளுமைகள் பலரும் குண்டடிபட்டும் சிலுவையில் சாய்த்துமே கொல்லப்பட்டுள்ளனர். சிலுவையில் தலை மேலாகவும் கால் கீழாகவும் வைத்து இயேசு கொல்லப்பட்டார். அவரது சீடர் பீட்டரோ கால் மேலாகவும் தலைகீழாகவும் தன்னைச் சிலுவையில் அறைய வேண்டுகோள் வைத்து, இயேசுவுக்கு மரியாதை செய்தார்; கொலையையும் ஒரு கலையாக்கினார். காந்தி, லிங்கன், கென்னடி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி எனப் படுகொலைசெய்யப்பட்டோர் பட்டியல் தொடர்ந்தது. காணாமல் போய்விடுபவர்களை எந்த வகை மரணக் கணக்கில் சேர்ப்பது? பிரேதத்தைக் காணும்வரை சட்டப்படி அவர்கள் இறந்தவர்கள் அல்ல. கூட்டத்துக்குப் போன எழுத்தாளர் மா.சு.சம்பந்தன் வீடு திரும்பவே இல்லை. எழுத்தாளர் நகுலனின் தம்பி தலையைச் சுவரில் முட்டிக்கொண்டு தன்னை மாய்த்துக்கொண்டதை மனநிலைப் பிறழ்வு மரணம் எனலாம். ஆனால் எழுத்தாளர்கள் கோபிகிருஷ்ணன், ஆத்மாநாம் மரணங்களைத் தற்கொலைகளாக எப்படிக் கணக்கில் எடுப்பது? பல முயற்சியிலும் தோல்வி அடைந்த நகுலனை முதுமை வழியாக மரணம் தன்னோடு அழைத்துக்கொண்டது.
  • மரணம் ஒரு கலை. அதனால்தான் திரைப்படங்களில் அது விதவிதமாகச் சித்தரிக்கப்படுகிறது. ரோஜாக்களில் வழிந்த ரத்தத் துளிகள் உட்பட பாரதிராஜா படங்களில் நிகழ்ந்த மரணங்களை நினைத்துப் பாருங்கள். மகேந்திரனின் ‘உதிரிப்பூக்க’ளில் மரணம் மனதைப் பிசையும் வகையில் படமாக்கப்பட்டிருக்கும். மகனுக்குத் தாயே விஷம் வைத்த உணவை ஊட்டிக் கொல்லும் காட்சி, பாலாவின் ‘நந்தா’ படத்தில் வரவில்லையா? சில இயக்குநர்களின் மனநிலையையே சந்தேகிக்க வைக்கும் அளவு அவர்கள் வைத்த மரணக் காட்சிகள் பீதி தந்தன. இப்போது வரும் படங்களில் இடம்பெறும் வன்முறை பற்றி தனியே எழுத வேண்டும்.
  • கதைகளில் எழுதப்படும் மரணங்களும் பல. ஆ.மாதவன் எழுதிய சாலைக் கதை ஒன்றில், கிடங்கில் அடுக்கி வைத்த மூட்டைகளைச் சரிய வைத்து ஒரு கொலை அரங்கேறியிருக்கும். படித்தால் அதிர்ந்துபோவீர்கள்.
  • நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்த மானஸ்தர்களைக் கண்ட நாடு இது. ‘நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துவிடுவேன்; ஆனால் கை எச்சிலாய்ப் போகுமென்று பார்க்கிறேன்’ என்று சொன்ன சுகாதாரம் பேணும் நவீன மானஸ்தர் ஒருவரைச் சுட்டியிருப்பார் பெரியார் (‘குடிஅரசு’, 1932).

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்