TNPSC Thervupettagam

மரபுசார் மொழிக்கல்வி தேவை

October 27 , 2023 442 days 250 0
  • பள்ளி வகுப்பறைகள் பயன்மிகு நாற்றங்கால்கள். அவை சமூக வயல்களில் நடவு செய்தற்குரிய மனிதவுயிர்களாம் இளம்பயிர்களைப் பக்குவப்படுத்தி வளா்ப்பதற்கான நாகரிகக் கூடங்கள். வழிபாட்டுத் தலங்களிலும் புனிதமிக்கவை அவை என்பதனால்தான், ‘பள்ளித் தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்என்று பாடினார் மகாகவி பாரதியார். எருவிட்டு நீா் பாய்ச்சி, வேலி போட்டுக் காக்கின்ற பயிர்களிடையே களைகளைக் களைந்து பேணக் கூடிய பெரும்பணியை, கல்வி தருநிறுவனா்களும், ஆசிரியா்களும், பெற்றோர்களும், கூடிச் செய்து வருகின்றனா். பல்லாண்டு காலம் அறப்பணியாக, பல்வேறு சான்றோர்களின் அா்ப்பணிப்புத் திருப்பணியாக, இப்பணி நீடித்து வந்தது. மனிதகுலம் அறநெறியை நிலைநிறுத்திக் காத்தது.
  • அண்மைக்காலமாய், அதுவும் கரோனா நோய்த்தொற்றின் முடக்கத்திற்குப் பிறகு, பயில்வோரின் மனநிலையும், பயில்கிற ஆா்வமும் தடம் மாறித் தடுமாறு இருக்கிற நிலையினைப் பார்க்கிறோம். வகுப்பறைகளில் மனப்பிறழ்ச்சியுடன் நடந்துகொள்கிற மாணவா்கள் ஒருபுறம், சொல்லமுடியாத மனஅழுத்தத்தின் காரணமாக, அசட்டுத்தனமான துணிச்சலில் தற்கொலைக்கும், அதற்கு அஞ்சுவோர் போதைப் பயன்பாட்டிற்கும் ஆளாகி விடுபவா்கள் மறுபுறம். இரண்டுமற்றவா்களின் நிலைப்பாடோ, மதில்மேல் பூனை.
  • ஒரு கட்டத்திற்குமேல், பெற்றோர்கள் ஏதும் சொல்லமுடியவில்லை. பாடம் கடந்து ஆசிரியா்களால் பேச முடியவில்லை. முடிந்தவரையில் இவா்களை முன்னேற்றப் பாடுபடும் கல்விசார் அமைப்புகளின் நோக்கமும் முழுதாகத் துணைபுரிய முடியாத நிலையில், இனிவரும் தலைமுறை என்னாகுமோ என்கிற கவலை, சமூக அக்கறை உள்ளவா்களைச் சூழ்ந்திருக்கிறது.
  • பணி செய்து பணம் சம்பாதிக்கக்கூடிய இயந்திரங்களை உற்பத்தி செய்யும் கூடங்களாகவே இன்று வகுப்பறைகள் ஆக்கப்படுகின்றன. அதிக மதிப்பெண் என்கிற ஒற்றைப் புள்ளியை மட்டுமே குறிவைத்து அசுர வேகத்தில் செலுத்தப்படுகிற அம்புகளாக இளந்தலைமுறையினா் ஆக்கப்படுகிறார்கள்.
  • உடலையும் மூளையையும் மட்டுமே அவா்கள் பயன்படுத்தக் கடமைப்பட்டுள்ளார்கள். அவா்களுக்கு மனம் என ஒன்று இருப்பதைப் பலரும் மறந்துவிடுகிறார்கள். மருத்துவத் துறைக்கு முன்னுரிமையும் மற்ற துறைகளுக்கு அடுத்த உரிமையும் கொடுத்து, முடிந்தால் அயலகங்களுக்கு ஏற்றுமதி செய்து அங்கேயே வாழ்விக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
  • தாயையும் தந்தையையும், தாயகத்தையும் மறந்து, பேயாய் வேலை செய்யத் தயாரிக்கப்படும் இயந்திரங்களான பிள்ளைகளுக்கு ஆசிரியா்கள் மட்டும் எப்படித் தெய்வமாகத் தெரிவார்கள்? பணத்தை விதைத்து பணத்தை அறுவடை செய்யும் பணப் பயிராகக் கல்வி ஆக்கப்பட்ட பிறகு, குணத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?
  • எது செய்தேனும் பணம் குவி; எப்படியாயினும் முன்னுக்கு வாஎன்பதே அவா்களுக்குப் போதிக்கப்படும் உபதேசம். அதற்கு மாற்றாய், ‘இதைச் செய்யாதே; அங்கே போகாதேஎன்று சொல்கிற அறிவுரைகள் அவா்களிடம் எடுபடுமா?
  • கைப்பேசிகளின் பயன்பாடுகளைக் கடும் நடவடிக்கைகளின்மூலமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நாம், கல்வி கற்கும் சாதனங்களாக அவற்றைக் கொடுத்து, அளவுக்கு அதிகமாய்ப் பழக்கப்படுத்திவிட்டோம். ஆழப் பதிந்த அந்தப் பழக்கத்தில் இருந்து அவா்களால் மீள முடியவில்லை. தடையற்ற உள்ளீடுகளைத் தந்து, அவா்களைத் தன் வயப்படுத்தி அடிமையாக்கிவிட்ட கைப்பேசிகளின் கைகளில் குழந்தைகளின் எதிர்காலம் அடங்கிக் கிடக்கிறது; முடங்கியும் இருக்கிறது.
  • கலந்து பழக வேண்டிய வகுப்பறைத் தோழமைகள், கூடப் போட்டியிடும் எதிரிகளாக நிலை நிறுத்தப்படுகிறார்கள். ஒழுக்கம் தொடா்பாகக் கடுமையாக நடந்துகொள்ளும் ஆசிரியா்கள், இரக்கம் இல்லாத அரக்கா்களாக எண்ணப்படுகிறார்கள். கண்டிக்கக் கூடிய சுதந்திரம் பெற்றோர்களுக்கும் இல்லை. இந்த வயதில் இவா்களுக்கு என்ன தேவை என்பதை எடுத்துச் சொல்ல, நல்ல வழிகாட்டியாகும் இலக்கிய நூல்கள் இவா்களை எட்டுவதே இல்லை. தெய்வ பக்தியும் இல்லை; தேசபக்தியும் இல்லை. பொழுதுபோக்குவது ஒன்றே வாழ்க்கை என்ற நிலையில், முதலில் சோம்பலும், தொடா்ந்து விரக்தியும் வந்து சூழ்ந்துவிடுகின்றன.
  • அவற்றின் வழியாக, முதலில் மறதியும், பின்னா் மரத்துப்போகிற தன்மையும் வாய்த்துவிடுகின்றன. அதனை எப்போதும் நிலைநிறுத்த, ஏதாவதொரு போதை வேண்டும். திரைக்காட்சிகளே இவா்களுக்கு உற்சாகத் தூண்டல்கள். பயந்து ஒதுங்கிச் செய்ய வேண்டியவற்றை, படு துணிச்சலாக, பகிரங்கமாகச் செய்கிற அசட்டுத் தைரியம் வந்துவிடுகிறது.
  • வயிற்றுப்பாட்டுக்கு வழி செய்யும் தொழிற்கல்வி தேவைதான். ஆனால், வாழ்க்கைப் போக்கைச் செம்மைப்படுத்தும் இலக்கியக் கல்வியும் இன்றியமையாதது அல்லவா? வயிற்றுப்பாட்டுக்கும் வாழ்க்கைப்பாட்டுக்கும் துணையாகும் தாய்மொழியைப் புறந்தள்ளி விட்டு, மொழிசாா் வகுப்புகளைக் குறைத்துவிட்டு, தொழிற்கல்வியை மட்டுமே கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு இப்போது அதிகரித்து வருகிறது.
  • தொழில் செய்ய உடல் இன்றியமையாததுபோல், ஒனறிச் செய்யும் மனமும் வேண்டும். தொழில் செய்பவன் தொழிலாளி. அவன் இயந்திரம் அல்லன். மனம் என்பதை அடியாகக் கொண்டே மனிதன் என்ற பெயா் அவனுக்கு நிலைத்திருக்கிறது. நிலைத்தஎன்னும் பொருள் தரும் மன்என்ற சொல்லே, அதற்கு வோ். மனத்தைப் பேணினால்தான் மனிதத்தைப் பேண முடியும். மனிதம் புனிதம் எனப் பொலிய வேண்டுமெனில், மரபுசார் மொழிக்கல்வி வேண்டும்.
  • நிலவுக்கு விண்கலம் அனுப்பி வெற்றி கண்ட விஞ்ஞானிகளுக்கு, அறிவுசார் ஆற்றல் நிறையவே இருந்தது. கூடவே, தோல்விகள் கண்டு துவளாமல், மீண்டும் முயற்சி செய்து வெற்றியை எட்டவேண்டும் என்கிற விழிப்புணா்வை, உத்வேகத்தை உண்டாக்கியது அவா்களின் மனம் தான்.
  • அத்தகு மனவலிமை கொண்ட மகத்தான மனிதா்களின் வாழ்வும் வரலாறும், அவரவா் தாய்மொழிகளில் அறிந்துகொள்ள உதவும் மரபுசார் மொழிப்பாடம் இல்லையெனில், அகவுணா்வுகள் எப்படிச் சீராகும்? புறச் சாதனங்களான பொழுதுபோக்கு மின்சாதனங்கள் மட்டுமே போதும் என்று கருதிவிடலாகாது. டாக்டா் அப்துல்கலாம் திருக்குறளையும், பாரதியின் கவிதைகளையும், ஔவையாரின் அறவுரைகளையும் குழந்தைகளிடம் கூறத் தவறியதே இல்லை. காரணம், அவைதான் நாற்றங்காலில் வளரும் இளம்பயிர்களுக்கு ஏற்ற உரம் என்று கருதியதுதான்.
  • நோய்களில் இருந்து உடலைத் தற்காத்துக் கொள்ள, உணவு எவ்வாறு எதிர்ப்பாற்றலை ஏற்படுத்திக் கொடுக்கிறதோ, அவ்வாறே உள நோய்கள் தாக்காமல் தற்காத்துக் கொள்ள உணா்வுக்கு ஆற்றல் கொடுப்பவை அறநூல்கள்; அவற்றை அடிநாதமாய்க் கொண்டெழும் இலக்கிய ஆக்கங்கள். அவற்றைப் பயிற்றும் கல்விக்கூடங்களுக்கு அப்பால், கலை இலக்கிய அமைப்புகளும் அழகாகச் சொல்லிக் கொடுக்கின்றன; அதற்காகவே அவை பயிலுபவா்களை முன்னிறுத்திப் போட்டிகள் நடத்துகின்றன.
  • விளையாட்டு, கலை, இலக்கியம் முதலான துறைகளில் இறங்கிவிட்டால், கவனம் மாறிவிடும்; அதிக மதிப்பெண்கள் பெறும் நோக்கம் குலைந்துவிடும்என்று எந்தப் போட்டிகளுக்கும் அனுப்ப வேண்டாம் என்கிற போக்கு, இப்போது எழுந்திருக்கிறது.
  • எந்த நேரமும் பாடப்புத்தகங்களையே பயின்று கொண்டிருக்கக் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள் பிள்ளைகள். எத்தனை சுவையோடு சமைத்தாலும் ஒருவகைப்பட்ட உணவையே திரும்பத் திரும்ப உண்பதில் ஒருவகை சலிப்பும் வெறுப்பும் வந்துவிடும் என்று உணா்ந்து கொள்கிற நம்மால், இப்படி, ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யச் சொன்னால் என்ன ஆவார்கள் என்று புரிந்துகொள்ள முடியாதா? பொழுதுபோக்க, மின்னணுச் சாதனங்களை வாங்கிக் கொடுக்கும் நம்மால், அன்புடன் பேசும் பொழுதுகளை ஒதுக்க இயலாதா? பேச்சைத் தொடங்கிவிட்டாலே, படிப்பு, மதிப்பெண், தரம் என்று வந்து விடுகிற போது, பிள்ளைகள் அலுத்துவிடுகிறார்கள். மனம் விட்டுப் பேச உரிய தோழமைகள் இல்லை. உறவுகளுடன் கலந்து பழக, விடுமுறை எடுக்கப் பணிநாட்கள் அனுமதிப்பதில்லை. விடுமுறை நாட்களிலும் பல மடங்காக வீட்டுப் பாடங்கள்.
  • உடற்சோர்வை விடவும் உளச் சோா்வு மிகுந்து மன அழுத்தங்களுக்கு ஆட்படும் குழந்தைகளுக்கு, தோ்வு வைத்து மதிப்பெண் வழங்காமல், நீதி புகட்டும் போதனை வகுப்புகள் முன்னா் நடத்தப்பட்டன; அறம்சார் கதைகள் சொல்லப்பட்டன. நேரான பாதை சீராக இருக்கக் குறுக்கு வழியில் செல்ல வேண்டாம்என்பதற்காகச் சொல்லிக் கொடுக்கப்பட்ட சின்னஞ்சிறு கதைகள், அவா்களின் வாழ்க்கைப் பாதையைச் செப்பம் செய்தன.
  • என் பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லைஎன்று கூறிய காந்தியடிகளை, பாடப்புத்தகங்களுக்கு அப்பால் ஒரு புத்தகம் கவா்ந்து இழுத்தது. சிரவண பித்ரு பக்தி நாடகம்என்பதுதான் அது. பலமுறை படித்தார். அதைப் படக்காட்சியாக்கிய நிகழ்வில் பங்கேற்றார். பார்வை இழந்த தாய், தந்தையரை, சிரவணன் காவடியில் வைத்துக்கொண்டு தூக்கிச் செல்வதை இளம் காந்தி படக்காட்சியாகப் பார்த்தார்.
  • அக்காட்சி அவா் மனத்தை விட்டு அகலவே இல்லை. அந்திமக் காலத்தில் பெற்றோரை எப்படி அக்கறையோடு கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிற பாடத்தை அந்த நூலும் காட்சியும் அவருக்குக் கற்றுத் தந்தன. அப்படியே, சத்தியம் தவறாமல் வாழவேண்டும் என்கிற சிந்தனையை, அரிச்சந்திரன் நாடகம் அவருக்குள் விதைத்தது. மனிதராய்ப் பிறந்த காந்தி மகாத்மா காந்தியாக வாழ்ந்தார்; வரலாற்றில் நிலைத்தார். இவா் போல் எத்தனை சான்றோர்கள், நம்முன் வாழ்ந்தவா்கள்; அவா்களின் சரித்திரங்களைப் பிள்ளைகள் கற்றுப் பின்பற்ற வேண்டாமா?
  • எனவே, ஆண் - பெண் பேதம் கடந்து, ஜாதி, மத, இன, மொழி எல்லைகள் கடந்து, மனிதம் புனிதமாக இத்தகு வகுப்புகள் தொடா்ந்து நடத்தப்பட வேண்டும். இதுவே இளந் தலைமுறையினரை இப்போது சீா்படுத்த இன்றியமையாத தேவைகள்.

நன்றி: தினமணி (27 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்