TNPSC Thervupettagam

மராத்தா இடஒதுக்கீடு: அடிப்படை உரிமைகளில் தெளிவின்மை கூடாது

May 7 , 2021 1358 days 544 0
  • மஹாராஷ்டிரத்தின் மராத்தா சமூகத்துக்குக் கொடுக்கப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இது தொடர்பிலான விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் மேலும் தெளிவின்மைகளை உருவாக்கியுள்ளது துரதிர்ஷ்டவசமானது.
  • ஏற்கெனவே தாம் அளித்த தீர்ப்புகளின்படி ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பு 50% என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ள அதே நேரத்தில், அந்த உச்ச வரம்பானது பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டையும் உள்ளடக்கியதா, இல்லையா என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தவில்லை.
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அறிமுகப் படுத்தப்பட்டுள்ள கேரளத்தில் இத்தீர்ப்பின் விளைவாகப் பெரும் குழப்பங்கள் விளைந்துள்ளன.
  • சமூக அடிப்படையில் 50% இடஒதுக்கீடும் பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடும் அம்மாநிலத்தில் அளிக்கப்பட்டுவருகிறது. எனவே, பொருளாதார அளவில் நலிவடைந்த உயர் சாதியினருக்கான இடஒதுக்கீட்டை இந்தத் தீர்ப்பு பாதிக்கக்கூடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
  • பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதை முடிவுசெய்வதில் மாநிலங்களுக்கான உரிமைகளை மறுத்து ஒன்றிய அரசே அதைத் தனது கைகளில் எடுத்துக்கொள்வதை வெறும் சட்டரீதியான சிக்கலாகவே உச்ச நீதிமன்றம் அணுகியுள்ளது.
  • அரசமைப்புச் சட்டத்துக்குப் பொருள்விளக்கம் அளிக்கும் அதிகாரம் பெற்றுள்ள உச்ச நீதிமன்றம், சட்டத்தின் பொருந்தும் தன்மையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் இவ்விஷயத்தில் மாநிலங்களுடன் கலந்தே ஒன்றிய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதற்குக் கடமைப்பட்டுள்ளது.
  • மராத்தாக்களுக்கான இடஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத நிலையில், மாநில அரசின் சார்பில் நீதிபதி தலைமையிலான ஆணையம் நியமிக்கப்பட்டு அதன் அறிக்கையின் பெயரிலேயே மீண்டும் இடஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்றப்பட்டது.
  • அதன் பிறகும், ஒன்றிய அரசின் முடிவுகள்தான் மாநில அரசைக் கட்டுப்படுத்தும் எனில், அடிப்படை உரிமைகளைக் குறித்து முடிவெடுப்பதில் மாநில அரசின் அதிகாரம் முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்படுவதாகவே பொருள்கொள்ளப்பட வேண்டும்.
  • இடஒதுக்கீட்டை 50%-க்கும் மேல் உயர்த்துவதற்கு அசாதாரணமான சூழல்களைக் காரணம்காட்ட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
  • ஆனால், அத்தகைய அசாதாரண சூழல்கள் எதுவென்று முடிவுசெய்வதில் சட்டப்படி மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றான சமூக நீதியை மட்டுமல்ல, கூட்டாட்சி அமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளையும் கூட கேள்விக்குட்படுத்திவிடுகிறது.
  • தசாப்தங்கள் தோறும் நிகழ்ந்துவரும் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் இடஒதுக்கீட்டில் மறுவரையறைகளை வேண்டிநிற்கின்றன. நிலவுடைமைச் சமூகமாக மராத்தாக்களைக் கருதி அவர்களுக்கான இடஒதுக்கீட்டை மறுக்கும்போது, விவசாயத் துறை கடந்த சில காலமாக அடைந்துவரும் வீழ்ச்சிகளையும் சேர்த்துக் கணக்கில் கொள்ளத் தவறிவிடுகிறோம்.
  • இந்தக் காலமாற்றத்தின் விளைவுகளை இந்தியா முழுவதும் உள்ள பல வகுப்பினர் தற்போது எதிர்கொண்டுள்ளனர். 50% என்ற உச்ச வரம்பு, பிற்படுத்தப்பட்டோரை முடிவு செய்யும் அதிகாரம் என்ற இத்தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இரண்டுமே தொடர் விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கின்றன.   

நன்றி: இந்து தமிழ் திசை (07 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்