TNPSC Thervupettagam

மருத்துவக் கல்விச் சிக்கல்கள்: தீர்வை நோக்கிய பயணம்

May 19 , 2023 599 days 326 0
  • மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வை, இந்த ஆண்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். ஆனால், நாடு முழுவதும் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 91,927 மட்டும்தான். இதனால், நீட் தேர்வுக்குத் தயாராவதில் இருக்கும் சிக்கல்களுடன், இப்படியான கடும் போட்டிச் சூழலையும் மாணவர்கள் - குறிப்பாக கிராமப்புற, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்கின்றனர். வெறுமனே விமர்சனம் மட்டும் செய்துகொண்டிருக்காமல், இந்தப் பிரச்சினைக்கான தீர்வு என்ன என ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

சில நன்மைகள் - பல பாதகங்கள்:

  • நீட் தேர்வால் சில நன்மைகள் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. ஏராளமான மருத்துவ நுழைவுத் தேர்வுகளை எழுதுவதால் ஏற்படும் செலவு, அலைச்சல், உடல்-உள பாதிப்புகள் போன்ற பிரச்சினைகளிலிருந்து மாணவர்களை நீட் தேர்வு விடுவித்திருப்பது உண்மைதான்.
  • மேலும், மாணவர் சேர்க்கை முறைகேடுகளையும் நீட் தேர்வு குறைத்துள்ளது. ரூ.2 கோடி செலுத்தி எம்பிபிஎஸ் முதல் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு வரை தொடர்ச்சியாகப் படித்து, பட்டங்களைப் பெறும் ‘பேக்கேஜ்’ முறைக்கும் இத்தேர்வு முடிவுகட்டியுள்ளது.
  • எனினும், நீட் தேர்வு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளின் பட்டியல்தான் நீளமானது. மாநில உரிமைகளைப் பறித்துவிட்ட இந்தத் தேர்வு, அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு எதிராக உள்ளது.
  • நீட் தேர்வுக்கு முன்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் 0.7% பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர். நீட்-க்குப் பிறகு அது 0.1% ஆகக் குறைந்துவிட்டது. 2017-18இல் 3 பேர், 2018-19இல் 5 பேர், 2019-20இல் 6 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர்.
  • தமிழ் வழியிலும், மாநிலப் பாடத் திட்டத்திலும் படிப்போருக்கு நீட் எதிராக இருக்கிறது. முதல் தலைமுறை மாணவர்களும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களும், தரமான நீட் பயிற்சியை மேற்கொள்ள முடியாதவர்களும், கிராமப்புற மாணவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். வசதியான பொருளாதாரப் பின்புலம் கொண்ட, பல முறை நீட் தேர்வு எழுத வாய்ப்பு உள்ளவர்களுக்குத்தான் இந்தத் தேர்வு வரப்பிரசாதமாக இருக்கிறது.

அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப்பு:

  • நீட் தேர்வு காரணமாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது, சமூக ரீதியிலான பாதிப்பாக நீள்கிறது. 85% அரசுப் பள்ளிகள் கிராமப்புறங்களில் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள மொத்தப் பள்ளிகளில் 73% அரசுப் பள்ளிகள்தான்.
  • இவற்றில் படிக்கும் மாணவர்களின் தந்தையரில் 83% பேர் கூலித் தொழிலாளர்கள். இவர்களின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.42 ஆயிரத்துக்கும் குறைவு. பொருளாதாரரீதியாகவும், சாதிரீதியாகவும் மிகவும் அடித்தட்டில் உள்ளவர்கள் அதிகமாகப் படிப்பது இப்பள்ளிகளில்தான். அரசு - அரசு உதவிபெறும் பள்ளிகளில், 70%க்கும் மேற்பட்டோர் தமிழ் வழியில் பயில்கின்றனர்.
  • எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது, இயல்பாகவே ஏழை, அடித்தட்டு சமூகப் பிரிவு மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், தமிழ் வழியில், மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள், முதல் தலைமுறை மாணவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் பாதிப்பாகவும் அமைகிறது. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும், அதைப் பயன்படுத்தி இம்மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.
  • இடஒதுக்கீட்டின் தேவை: மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு இல்லாத 2006 முதல் 2016 வரை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 29,925 மருத்துவ இடங்களில், 213 இடங்களில் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்களால் சேர முடிந்தது. நீட்-க்குப் பின்னர் தமிழ்நாட்டில் எழுந்த எதிர்க்குரல்களின் விளைவாக, முந்தைய அதிமுக ஆட்சியில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது இந்நிலையை மாற்றியிருக்கிறது. கடந்த ஆண்டு 569 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது.
  • எனினும், ஒட்டுமொத்த பிளஸ் 2 மாணவர்களில், அரசுப் பள்ளிகளில் பயில்வோர் எண்ணிக்கை 41%க்கும் மேல் எனும் நிலையில், 7.5% இடஒதுக்கீடு போதாது. எனவே, நீதிபதி பி.கலையரசன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இதை 10% ஆக அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டின் மாணவர்களில் 17% பேர் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கிறார்கள். இம்மாணவர்களும் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியவில்லை. எனவே, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மத்திய / மாநில அரசுகள் செய்ய வேண்டியவை:

  • இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கையின்போது, கட்-ஆஃப் மதிப்பெண்ணைக் குறைக்கக் கூடாது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்கக் கூடாது. தமது கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமே கடைசி இடம்வரை மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
  • நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை நியாயமாக நிர்ணயித்து, ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அரசுகளே ஏற்க வேண்டும். இதன் மூலம் தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை முழுமையாக உறுதிப்படுத்த முடியும். முறைகேடுகளையும், கட்டாய நன்கொடைகளையும் தடுத்திட முடியும்.
  • தனியார் பயிற்சி மையங்களை முறைப்படுத்தி, கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும். வயது வரம்பு இல்லாததால், வசதி படைத்த - மூத்த மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர்கின்றனர். மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான உச்சபட்ச வயது வரம்பை 25ஆக நிர்ணயிக்க வேண்டும். நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலை முழுமையாக, மாநில வாரியாகத் தரவரிசையுடன் வெளியிடுவது அவசியம்.

தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியவை:

  • மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கும், மாணவர் சேர்க்கையை மத்திய அரசே நடத்திட முயல்வதைத் தடுத்திட வேண்டும். தமிழ் வழியில் படித்தோருக்கு 20% இடஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பில் வழங்க வேண்டும். ஏழை மாணவர்களுக்காக, வட்டாரம் தோறும் இலவச உணவு, தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும்.
  • ஒருவேளை நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற்றுவிட்டாலும் இப்பயிற்சியைத் தொடர வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள் எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்கள், அகில இந்தியத் தொகுப்பில் உள்ள இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ், கால்நடை மருத்துவம், செவிலியர் பட்டப்படிப்பு போன்ற இடங்களிலும் சேர முடியும்.
  • நீட் தேர்வில் ஏராளமானோர் வெற்றி பெற்றிருந்தபோதிலும், தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2021-22இல் 238 பிடிஎஸ் இடங்களும், 2022-23இல் 547 பிடிஎஸ், 571 ஆயுஷ் இடங்களும் காலியாக இருந்தன. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் தனியார் நிறுவனங்களில் 744 எம்பிபிஎஸ் இடங்களும், 9,783 முதுநிலை மருத்துவ இடங்களும் காலியாக இருந்தன.
  • மிக அதிகமான கட்டணம், இத்துறைகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பது, மருத்துவம் வணிகமயமாதல், தனியார்மயமாதல் போன்றவை இதற்குக் காரணங்களாகும்; இவற்றுக்கும் சேர்த்தே தீர்வு காண வேண்டும்.

நன்றி: தி இந்து (19 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்