- மருத்துவத் துறையில் கவனக்குறைவு என்பது ஓர் உலகளாவிய பிரச்சினை. தனிப்பட்ட மருத்துவரின் அல்லது மருத்துவக் குழுவினரின் கவனக்குறைவால் நோயாளிகள் பாதிக்கப்படும் போது, அதை நிரூபிப்பதன் வழியாக, மருத்துவமனை நிர்வாகத்தினரிடமிருந்து நோயாளிகள் இழப்பீடு கோர முடியும். மருத்துவத் துறைக் கவனக்குறைவு பெரும்பாலான நேரம் சிவில் வழக்காகவே பதிவாகிறது.
நீதிமன்றம் என்ன சொல்கிறது?
- மருத்துவர் ஒருவர், நோயாளியைக் காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே சிகிச்சையை வழங்குகிறார். சில சந்தர்ப்ப சூழலில் அந்தச் சிகிச்சை முறையால் நோயாளி பாதிக்கப் படும் போது, மருத்துவர் அதைத் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செய்ததாகக் கருத முடியாது.
- அத்துடன் இந்தக் கவனக்குறைவைக் கிரிமினல் குற்றமாகக் கருதினால், மற்ற மருத்துவர்கள் நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் இக்கட்டான சூழலில் முக்கியமான முடிவுகளை எடுக்காமல் போய்விடலாம் அல்லது சிகிச்சை அளிக்காமல் தவிர்த்துவிடலாம். இந்த அச்சத்தால் அவற்றை சிவில் வழக்குகளாகவே கருத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒரு தீர்ப்பில் வலியுறுத்தியிருக்கிறது.
- இந்தப் பரிந்துரைகளை எல்லாம் மீறி, மருத்துவர்களின் அலட்சியமும் சிகிச்சை முறைகளில் போதாமையும் இருந்து அதனால் மிகத் தீவிர பாதிப்புகள் ஏற்படும்பட்சத்தில், இந்தக் கவனக் குறைவைக் கிரிமினல் குற்றமாகவும் பரிசீலிக்கலாம். ஆனால், அதற்கு முன்பாக நோயாளிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இந்தச் சூழ்நிலைகள் காரணமாக இருந்தனவா என்பதை ஒரு தனிப்பட்ட மருத்துவக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும். விசாரணையின் முடிவை வைத்தே கிரிமினல் வழக்குப் பதிய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய வழிமுறைகள் கூறுகின்றன.
கவனக்குறைவுக்கு என்ன காரணம்?
- மருத்துவர்களின் பற்றாக்குறை, அதீதப் பணிச்சுமை, மருத்துவக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள், சிகிச்சை தொடர்பான பொதுவான வழிகாட்டுதல்கள் இல்லாதது, தனிநபரைச் சார்ந்த சிகிச்சை முறைகள், மருத்துவத் துறைகளுக்கு இடையேயான தகவல் தொடர்பின்மை, வெளிப்படைத்தன்மை இன்மை, நோய்-சிகிச்சை தொடர்பான தகவல்களை நோயாளிகளிடமும் அவர்களின் குடும்பத்தினரிடமும் முறையாகத் தெரிவிக்காதது போன்றவை கவனக்குறைவுக்கான காரணிகளாகச் சொல்லப்படுகின்றன.
- தமிழ்நாடு அரசு மருத்துவமனை களைப் பொறுத்தவரை மருத்துவர்களின் அதீதப் பணிச் சுமை இந்தக் கவனக்குறைவுக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. அரசு மருத்துவ மனைகளின் வெளிப்படைத்தன்மை காரணமாகக் கவனக்குறைவுகள் உடனடியாக ஆனால், வெளிச்சத்துக்கு வந்துவிடுகின்றன. இந்த சம்பவங்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்ல,எல்லா மருத்துவமனைகளிலும் அவ்வப்போது நடப்பதுதான்.
மருத்துவக் கவனக்குறைவை அரசு நிர்வாகம் எப்படி அணுக வேண்டும்?
- தனிப்பட்ட மருத்துவரின் தவறாக இருந்தாலும்கூட, நிர்வாகம் உடனடியாக அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- இதுபோன்ற கொந்தளிப்பான சூழலில், சமூக வலைதளங்கள் கொடுக்கக்கூடிய அழுத்தத்துக்கு அடிபணியாமல், அரசு நிர்வாகம் நிதானமாகவும் பொறுமையாகவும் பிரச்சினையைக் கையாள வேண்டும்.
- மருத்துவர்கள்தான் காரணம் என்றோ நோய்தான் காரணமென்றோ உடனடியாகத் தீர்ப்பு வழங்குவது அந்தப் பிரச்சினையின் தீவிரத்தை அதிகரிக்கவே செய்யும். இதை உணர்ந்து, முறையான விசாரணைக் குழுவை முதலில் அமைக்க வேண்டும். * விசாரணைக் குழுவின் முடிவுகள் வரும்வரை, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் துணையாக அரசு நிற்க வேண்டும்; அவர்களின் வலியை, இழப்பைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும்.
- விசாரணைக் குழுவின் முடிவுகளைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்க வேண்டும். வெளிப்புற அழுத்தங்களுக்குப் பயந்து அரசு எடுக்கும் தன்னிச்சையான முடிவுகள் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். அது அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை மீதான நம்பகத்தன்மையைக் குலைத்துவிடும் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
- அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை தரமற்றதா? - சில அரிதான எதிர்மறைச் சூழல்களைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளின் மீது பொய்ப் பிரச்சாரங்கள் திட்டமிட்டு முன்வைக்கப்படுகின்றன. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தைக் காட்டிலும் மிக வலுவான மருத்துவக் கட்டமைப்பைத் தமிழ்நாடு கொண்டிருக்கிறது. மக்கள் நல்வாழ்வு தொடர்பான பல குறியீடுகளில் தமிழ்நாடு வளர்ந்த நாடுகளுக்குப் போட்டியாக இருக்கிறது.
- மூன்று கிலோமீட்டருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. சிறப்பு நிபுணர்கள் வழங்கும் பெரும்பாலான உயர் சிகிச்சைகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே அளிக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு முழுமையான இலவச மருத்துவ சேவைகள் தமிழ்நாட்டு அரசு மருத்துவமனைகளிலேயே கிடைக்கின்றன.
கவனக்குறைவுகளை எப்படித் தடுப்பது?
- அரசு மருத்துவமனைகளில் மருத்துவ ஊழியர்கள், மருத்துவர்கள் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். * அனைத்து சிகிச்சை முறைகளிலும் அந்தச் சிகிச்சை சார்ந்த பொதுவான ஒழுங்குமுறைகளை (protocols) உருவாக்க வேண்டும். * அனைத்து சிகிச்சைக்கும், சிகிச்சை தொடர்பான பொதுச் செயல்திட்டங்களையும் அதைக் கண்காணிக்கும் வழிமுறைகளையும் (standard treatment guidelines & check list) உருவாக்க வேண்டும்.
- சிகிச்சை முறைகள் என்பவை எப்போதும் தனிநபரை மட்டும் சார்ந்தவையாக இல்லாமல், கூட்டுச் செயல்பாடாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். சிகிச்சையின்போது அதன் படிநிலைகளைப் பலரும் கண்காணிக்கும் வகையில் ஒழுங்குமுறைகளை உருவாக்க வேண்டும். அதற்கான மாநிலம் தழுவிய பயிற்சியைச் சுகாதாரத் துறை ஒருங்கிணைக்க வேண்டும்.
- கடந்த சில ஆண்டுகளாக, சுகாதாரத் துறையில் பணியிடங்கள் ஒப்பந்தப் பணி அடிப்படையிலேயே நிரப்பப்படுகின்றன. ஒப்பந்தப் பணியில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பல்வேறு நெருக்கடிகள் இருக்கும். அதன் விளைவாகக்கூட கவனக்குறைவுகள் அதிகமாக நடக்கலாம். அதனால் அனைத்துப் பணியிடங்களும் முறையாக நிரப்பப்பட வேண்டும்.
- சமீப காலத்தில் காப்பீடு சார்ந்து கொடுக்கப்படும் அழுத்தங்களே தங்கள் மன உளைச்சலுக்கு முக்கியக் காரணம் என அரசு மருத்துவர்கள் புலம்புகிறார்கள். மிகவும் அரிதான, உயரிய, சிக்கலான சிகிச்சைகளுக்கு மட்டுமே காப்பீட்டைப் பயன்படுத்திக்கொண்டு, பெரும்பாலான அரசு மருத்துவ நடைமுறைகளை, சிகிச்சைகளைக் காப்பீட்டைச் சாராமல் மேற்கொள்ள அரசு முயற்சிக்க வேண்டும்.
பாதுகாக்க வேண்டிய கட்டமைப்பு:
- ‘கவனக்குறைவு போன்ற தனிநபர்களின் பலவீனங்களைக் குறைக்க வேண்டுமானால், ஒரு நிறுவனமாக அதற்கான செயல்திட்டங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் மட்டுமல்லாது, பல அடுக்குப் பரிசோதனைகளுக்கான செயல்முறைகளை உருவாக்கி, அதைப் பின்பற்றுவதன் வழியாக இப்படிப்பட்ட கவனக்குறைவுகளைத் தடுக்கலாம்’ என உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருக்கிறது.
- சமீப காலத்தில் நமது பொது சுகாதாரக் கட்டமைப்பு தொடர்ச்சியாகக் குறிவைக்கப்படுகிறது. போதாக்குறைக்கு நாமே நம் கட்டமைப்பை விட்டுக்கொடுத்தாலோ, அதன் குறைகளை நிவர்த்திசெய்யாமல் இருந்தாலோ, அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்களை அலட்சியப்படுத்தினாலோ உறுதியான இந்தப் பொது சுகாதாரக் கட்டமைப்பு வலுவிழந்து உடைவதைக் காண வேண்டியிருக்கும்.
- பிற மாநிலங்களில் அரசு மருத்துவமனைகள் தனியாருக்கு வழங்கப்பட்டுவரும் சூழலில், வலுவான நமது மருத்துவக் கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை, சமூக நீதியைச் சார்ந்த அரசு என்று சொல்லிக்கொள்ளும் இன்றைய தமிழ்நாட்டு அரசு கைவிட்டுவிடக் கூடாது.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 07 – 2023)