TNPSC Thervupettagam

மருத்துவமனை தீ விபத்து: அலட்சியத்தால் விளையும் ஆபத்து

November 22 , 2024 8 hrs 0 min 6 0

மருத்துவமனை தீ விபத்து: அலட்சியத்தால் விளையும் ஆபத்து

  • உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது. கடந்த மே மாதம் டெல்லி தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் ஏழு குழந்தைகள் உயிரிழந்தன. மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட உயிரிழப்புகள் நிகழ்வது மருத்துவமனைகளின் பராமரிப்பிலும் நோயாளிகள் பாதுகாப்பிலும் நிலவும் போதாமைகளை முகத்தில் அறைந்து சொல்கிறது.
  • உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரியின் அங்கமான மருத்துவமனைக்கு நாள்தோறும் சுமார் 5,000 பேர்வரை சிகிச்சைக்கு வந்துசெல்வதாகக் கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 15 அன்று இந்த மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தினால் இதுவரை 12 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
  • இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். விசாரணையில் மின்கசிவே தீ விபத்துக்குக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிர்காக்கும் இயந்திரம் உள்ளிட்ட கருவிகள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டதால் அவை அதிக வெப்பமடைந்ததே மின்கசிவு ஏற்படக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் 18 இன்குபேட்டர் கருவிகள் உள்ள நிலையில் 49 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சில நேரம் 60 குழந்தைகள் வரைகூட அனுமதிக்கப்படும் நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற மருத்துவமனைக் கருவிகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அணைத்துவைக்க வேண்டும் என்பது போன்ற அடிப்படை வழிகாட்டுதல்கள்கூட முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
  • 2024இல் இந்தியாவின் ஒட்டுமொத்த மருத்துவர் நோயாளி விகிதம் 836 பேருக்கு ஒரு மருத்துவர். இந்த விஷயத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் பரிந்துரையைவிட (1:1000) மேம்பட்ட நிலையில் இந்தியா உள்ளது. ஆனால், மருத்துவர்-நோயாளி விகிதத்தில் இந்த மேம்பட்ட நிலை மாநிலங்களுக்கிடையே சீராக இல்லை என்பதை உத்தரப் பிரதேச நிலைக்கும் தேசிய நிலைக்கும் உள்ள வேறுபாட்டிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
  • உத்தரப் பிரதேசத்தில் 2021 கணக்குப்படி சராசரியாக 2,158 பேருக்கு ஒரு மருத்துவர்தான் இருக்கிறார். பின்தங்கிய மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த தேசிய அளவில் திட்டமிடுதல் தேவைப்படுவதை இதுபோன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
  • டெல்லி விவேக் விஹாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மே 25 அன்று மின்கசிவால் நிகழ்ந்த தீ விபத்தில் ஏழு குழந்தைகள் உயிரிழந்தனர். அதே நாளில் குஜராத் ராஜ்கோட்டில் தனியார் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 35 பேர் இறந்தனர். இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்து ஆறு மாதங்களுக்குள் பச்சிளங்குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ள மற்றொரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
  • நம் நாட்டில் மருத்துவமனை உள்ளிட்ட பொது இடங்களில் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் திட்டமிடல், நடைமுறை, கண்காணிப்பு எனப் பல தளங்களில் போதாமைகளும் அசிரத்தையும் நிறைந்திருப்பதன் விளைவாகவே இதைப் பார்க்க வேண்டும். ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் நாடும் அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளின் சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளிலும் திட்டங்களிலும் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.
  • மருத்துவத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு பெருமளவு அதிகரிக்கப்பட வேண்டும். மருத்துவமனைப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் கணிசமான தொகை ஒதுக்கப்பட வேண்டும். இந்த விபத்து நேரக் காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதும் அவசியமானது.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்