- இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி), ‘Eminent Speaker Lecture Series’ என்கிற நிகழ்வைத் தொடர்ச்சியாக நடத்திவருகிறது. மருத்துவ உலகில் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாற்றி வருகின்றனர்.
- சென்னை மியூசிக் அகாடமியில் கடந்த வியாழக்கிழமை ( ஜூன். 18) அன்று நடைபெற்ற நிகழ்வில் 2012ஆம் ஆண்டு வேதியியல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் பிரையன் கோபில்கா (Brian Kobilka) கலந்துகொண்டு உரையாற்றினார்.
- செல்களில் உள்ள ஜி புரோட்டின்- இணை ஏற்பிகளின் (GPCR- G protein-coupled receptors) அமைப்பு, அதன் செயல்பாடு குறித்த ஆராய்ச்சிக்காக கோபில்காவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கோபில்கா கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
- தனது ஆராய்ச்சிப் பயணம் பற்றி மாணவர்களுடன் பகிர்ந்துகொண்ட கோபில்கா, மருத்துவமும் ஆராய்ச்சியும் சந்திக்கும் புள்ளி பற்றியும் ஆராய்ச்சித் துறையில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது குறித்தும் கலந்துரையாடினார்.
- பேராசிரியர் பிரையன் கோபில்கா பேசும்போது, “ஆய்வகங்களில் ஆராய்ச்சியில் ஈடுபடுவது எனக்கு விருப்பான ஒன்று. எனது ஆராய்ச்சிக்குப் பல வருடங்கள் எடுத்துக்கொண்டேன். அப்போதெல்லாம் எனது ஆராய்ச்சிகளை முடிவில்லாத, நிச்சயமற்ற நிலை கொண்டவையாகவே உணர்ந்தேன்.
- எனினும் சவால்கள் என்னைத் தொடர்ந்து செயல்படத் தூண்டின. சிறு முன்னேற்றம்கூடப் பெரிய அளவிலான நம்பிக்கையை அளிக்கும். ஆராய்ச்சியில், நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே செல்ல வேண்டும். ஓர் ஆராய்ச்சிக்காக 20 ஆண்டுகளை நீங்கள் செலவிடும்போது உங்கள் குழுவின் பங்களிப்பும் முக்கியமானது” என்றார்.
- மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா பின்தங்கியிருப்பது குறித்த கேள்விக்கு, “ஆராய்ச்சிக்கான நிதியுதவிகள் அமெரிக்காவில் கிடைக்கின்றன; இந்தியாவில் அவை எளிதாகக் கிடைப்பதில்லை. இதன் காரணமாக இந்தியா மருத்துவ ஆய்வில் பின்தங்கியிருப்பதாகக் கருதுகிறேன். எனினும் இந்தச் சூழல் எதிர்காலத்தில் நிச்சயம் மாறும் என நம்புகிறேன்” என கோபில்கா தெரிவித்தார்.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 07 – 2024)