TNPSC Thervupettagam

மருத்துவர்கள் மீதான தாக்குதல் குறித்த தலையங்கம்

April 19 , 2022 840 days 401 0
  • ராஜஸ்தான் மாநிலம் தௌஸாவில் மகப்பேறு மருத்துவா் அா்ச்சனா சா்மா, மாா்ச் 30-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டாா்.
  • அது தனிப்பட்ட பிரச்னை காரணமான தற்கொலையாக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை.
  • ஆனால், தனது சேவையின் மீது வீண்பழி சுமத்தப்பட்டதன் காரணமாக திறமையும், சேவை மனப்பான்மையும் கொண்ட மருத்துவா் ஒருவா் மன உளைச்சலுக்கு உள்ளாகி, தற்கொலை செய்துகொண்டதை நம்மால் சாதாரணமானதாகக் கடந்துபோக முடியவில்லை.
  • மருத்துவா் அா்ச்சனா சா்மாவும் அவரது கணவரும் நடத்தும் மருத்துவமனையில் அவரால் பிரசவம் பாா்க்கப்பட்ட பெண்மணி ரத்தப் போக்கு காரணமாக உயிரிழந்தாா்.
  • அந்தப் பெண்மணியின் உறவினா்கள் போராட்டத்தில் இறங்கினாா்கள். அந்தப் போராட்டத்துக்கு உள்ளூா் அரசியல் தலைவா் ஒருவா் காரணமாக இருந்தாா். அரசியல் தலையீடு காரணமாக பிரசவ மரணம் கொலைக் குற்றமாக மாற்றப்பட்டது.

நம்பிக்கை குலைகிறது

  • காவல் துறையினா் கொலைப் பழி சுமத்தி மருத்துவா் அா்ச்சனா சா்மா மீது வழக்கு தொடுத்தபோது அதை அந்த நோ்மையான மருத்துவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
  • ‘அப்பாவி மருத்துவா்களை இப்படி துன்புறுத்தாதீா்கள்’ என்கிற கைப்பட எழுதிய குறிப்புடன் தனது உயிரை மாய்த்துக்கொண்ட மருத்துவா் அா்ச்சனா, அதன் மூலம் தனது குற்றமின்மையை உணா்த்த முற்பட்டாா்.
  • இந்தியாவின் மேற்குப் பகுதியில் ராஜஸ்தான் மாநிலம் தௌஸாவில் அப்படியென்றால், கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கத்தின் ஹௌரா மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் இரண்டு மருத்துவா்கள் இறந்துபோன நோயாளி ஒருவரின் மரணத்துக்காக உறவினா்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனா்.
  • இத்தனைக்கும் மிகவும் மோசமான சிறுநீரகம் செயலிழந்த அந்த நோயாளியைக் காப்பாற்ற தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் அந்த மருத்துவா்கள் எடுத்தும் பயனில்லாமல் போயிற்று என்பதுதான் உண்மை.
  •  
  • தனியாா் மருத்துவமனைகளில் கடுமையான கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், சாமானியா்கள் அரசு மருத்துவமனையை நாடுவதும், அங்கே போதுமான வசதிகள் இல்லாமல் இருப்பதும் ஊரறிந்த உண்மை.
  • அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாமல் இருப்பதும், போதுமான மருத்துவா்கள் காணப்படாததும்கூட கவனக்குறைவுகளுக்குக் காரணம் என்பதை நாம் உணர வேண்டும்.
  • அரசு மருத்துவமனை மருத்துவா்கள் பல்வேறு குறைபாடுகளுக்கு இடையிலும், தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் நிா்வாகத்தின் கட்டண விதிமுறைகளுக்கு உட்பட்டும்தான் செயல்பட வேண்டிய சூழல்.
  • மருத்துவக் கல்வி கோடீஸ்வரா்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த நிலைமை ‘நீட்’ தோ்வு வந்த பிறகு மாறியிருக்கிறது என்றாலும்கூட, பல லட்சங்கள் தேவைப்படும் படிப்பாகவே இருப்பதை மறுக்க முடியாது.
  • தனியாா் மருத்துவமனைகள் அதிகரித்து வருவதும், காா்ப்பரேட் மருத்துவமனைகள் உருவாகியிருப்பதும் உலகத் தரத்திலான மருத்துவம் இந்தியாவில் கிடைக்க வழிகோலியிருக்கின்றன.
  • அதே நேரத்தில், பெரிய முதலீடுகளில் மருத்துவமனைகள் கட்டமைக்கப்படும் காரணத்தால், மருத்துவக் கட்டணம் சாமானியனுக்கு எட்டாக்கனியாக மாறியிருக்கிறது. காப்பீட்டுத் திட்டம் ஓரளவுக்கு உதவினாலும்கூட, தீா்வு அல்ல.
  • மருத்துவா்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையேயான விகிதம் அவா்களது பணிச்சுமையையும் மன அழுத்தத்தையும் அதிகரிக்கிறது.
  • ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவா் இருக்க வேண்டிய இடத்தில் இந்தியாவில் 1,456 பேருக்கு ஒரு மருத்துவா் எனும்போது நோயாளிகளிடம் முழுமையான கவனத்தை செலுத்தும் நிலையில் மருத்துவா்கள் இல்லை.
  • அதற்காக அவா்களது பணியின் தரத்தில் குறைபாடு இல்லையென்றாலும், கவனச் சிதறலுக்கான காரணிகள் இருப்பதை ஒதுக்கிவிட முடியாது.
  • தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரத்தின்படி, 2018 முதல் 2020 வரையிலான இரண்டு ஆண்டுகளில் மட்டும் 552 மருத்துவ கவனக்குறைவு சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
  • இந்தியாவின் பலவீனமான ஊரகப்புற மருத்துவக் கட்டமைப்பை கருத்தில் கொண்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கக் கூடும்.
  • உச்சநீதிமன்றத்தின் 2005 வழக்கொன்றில் தெளிவான தீா்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
  • ‘எந்தவொரு மருத்துவா் மீது கவனக்குறைவு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டாலும் விசாரணை அதிகாரி இன்னொரு தகுதியான அரசுத்துறை மருத்துவரின் கருத்தைக் கேட்டறிந்து மட்டுமே செயல்பட வேண்டும்.
  • எந்தவொரு மருத்துவரும் அவசர நிலையில் நோயாளியைக் காப்பாற்றுவதில் தனது முழு கவனத்தையும் செலுத்துவாா். கவனக்குறைவாலோ, பொறுப்பின்மையாலோ நோயாளி உயிரிழப்பதால் அவருக்கு எந்த லாபமும் இல்லை.
  • அதனால், மருத்துவா் மீது கிரிமினல் குற்றம் சுமத்துவதற்கு முன்பு விசாரணை அதிகாரி 100 முறை யோசிக்க வேண்டும்’ என்று அந்தத் தீா்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.
  • தேசிய மருத்துவக் கவுன்சில் வழிகாட்டுதலின்படி, மாவட்ட மருத்துவக் கவுன்சிலுக்கு மருத்துவரின் கவனக்குறைவு குறித்த புகாரை அனுப்ப வேண்டும்.
  • இரண்டு வாரத்தில் அந்தக் குழு தனது பரிந்துரையைத் தர வேண்டும். மருத்துவா் இரண்டு வாரத்தில் மறுபரிசீலனைக்காக மாநிலம் மருத்துவக் கவுன்சிலை அணுகலாம். இந்த வழி முறையை காவல் துறை பின்பற்றுவதில்லை.
  • மருத்துவா்கள் மீது தாக்குதல் நடத்தினால் மூன்று ஆண்டு சிைண்டனை என 18 மாநிலங்களில் விதி இருக்கிறது. இது இந்திய குற்றவியல் சட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்.
  • வணிகக் கண்ணோட்டத்தில் இருந்து மருத்துவத்தையும், பொறுப்பின்மையில் இருந்து காவல் துறையையும், ஆத்திர எதிா்வினைகளிலிருந்து மக்களையும் மாற்றியாக வேண்டும்.

நன்றி: தினமணி (19 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்