மருந்தக கட்டுப்பாடு: ஏழைகளுக்கான வாய்ப்பை மறுக்கக் கூடாது!
- ரசீது இல்லாமல் மருந்து விற்பனையில் ஈடுபட்ட 266 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளிவந்துள்ளது. மருத்துவர் பரிந்துரையின்றி கருத்தடை மாத்திரை, தூக்க மாத்திரைகளை விற்ற 31 மருந்தகங்களின் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே புகாரின்பேரில் 56 மொத்த விற்பனை மையங்களின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகள் விற்கப்படும் புகார் நீண்டகாலமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் 40 ஆயிரம் மருந்தகங்கள் உட்பட, நாடு முழுவதும் 15 லட்சம் மருந்தகங்கள் இயங்கி வருகின்றன. சாதாரண, ஏழை, எளிய மக்கள் தங்களது சிறு உபாதைகளுக்கு மருந்தகங்களை அணுகி மாத்திரைகளை வாங்கி நிவாரணம் பெற்று வருகின்றனர். மருந்தகங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், சாதாரண மக்கள் இதுபோன்று மருந்துகளை வாங்குவதற்கான தடையை உருவாக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
- மருத்துவர் பரிந்துரையின்றி சில மருந்துகளை பலசரக்கு கடைகள், ஆன்லைன் விற்பனை தளங்கள் மூலம் விற்க அனுமதிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. எந்தெந்த மாத்திரைகளை அப்படி அனுமதிக்கலாம் என்று பட்டியல் தயாரிக்க, மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (டிடிஏபி) சார்பில் துணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
- இதனிடையே, உரிமம் பெற்ற மருந்தகங்கள் தவிர, கடைகளில் மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அகில இந்திய மருந்தாளுநர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகளில் மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகள் மற்றும் வெளியில் விற்கக்கூடிய மருந்துகளின் பட்டியல் தனித்தனியாக உள்ளது.
- இந்தியாவில் டிரக்ஸ் அண்டு காஸ்மெடிக்ஸ் சட்டம் 1940 மற்றும் டிரக்ஸ் அண்டு காஸ்மெடிக்ஸ் விதி 1945 ஆகிய இரண்டுமே மருத்துவர் பரிந்துரையின்றி விற்பனை செய்ய உகந்த மருந்துகளை விவரிக்கவில்லை. இந்தியாவில் மருத்துவர் பரிந்துரையின்றி விற்கப்படும் மருந்து பொருட்களின் வணிகம் ரூ.63 ஆயிரம் கோடி அளவுக்கு இருப்பதால் அதன் மீது அனைத்து தரப்பினரின் கவனமும் விழுந்துள்ளது.
- தற்போது சாதாரண மக்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என்றால், அவருக்கு கட்டணமாக ரூ.500 முதல் ரூ.1,000 வரை செலுத்த வேண்டியுள்ளது. அவர் எழுதி தரும் மாத்திரை, மருந்துகளை வாங்க ரூ.1,000 வரை செலவாகிறது.
- தலைவலி, காய்ச்சல், வயிற்றுவலி, உடல்வலி, இருமல் போன்ற சிறு உபாதைகளுக்கு நிவாரணம் பெற விரும்பும் ஏழை, எளிய மக்கள் ரூ.2,000 வரை செலவழிப்பது சிரமமான காரியம். அவர்கள் நேரடியாக மருந்தகங்களுக்கு சென்று தங்கள் பிரச்சினைகளை சொல்லி மாத்திரைகளை வாங்கி குறைந்த செலவில் நிவாரணம் பெறுகின்றனர். மத்திய, மாநில அரசுகள் உருவாக்கும் புதிய நடைமுறைகள் இதுபோன்ற எளிய மக்களின் கதவுகளை அடைத்து விடக்கூடாது. அவர்களது நிலையையும் மனதில் கொண்டு விதிகளை வகுக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 12 – 2024)