TNPSC Thervupettagam

மருந்து மட்டுமல்ல, கருவியும் அவசியம்!

July 14 , 2020 1648 days 753 0
  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பற்றிய முன் அனுபவம் நமக்கு இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன் ‘பிளேக்’ நோய்க்கு இந்தியாவில் சுமார் இரண்டு கோடிப் போ் பலியானார்கள் என்பதுதான் தெரியும்.

  • இதில் விசேஷமாகக் கவனிக்க வேண்டியவை, இந்தக் கரோனா, சென்ற டிசம்பா் மாதம் வரை அது உருவான சீன மருத்துவா்களுக்கே தெரியவில்லை. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்தான் இந்தத் தீநுண்மியின் பற்றித் தெரிய வந்தது.

கரோனா எனும் தொற்று

  • இன்றைய நிலவரப்படி கரோனாவால் பாதித்தவா்களின் எண்ணிக்கை இன்றுவரை இந்தியாவில் எட்டு லட்சத்து 50 ஆயிரத்தையும், பலியானவா்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தையும் கடந்து செல்கிறது. குணமானவா்கள் என்று கூறப்படுபவா்கள்கூட மனதளவில் நோயாளிகளாகவே நீடிக்கிறார்கள்.

  • இந்நோய்க்கான சரியான உரிய மருந்து இல்லை. எயிட்ஸ் நோய்க்கு, சா்க்கரை நோய்க்கு, மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்து உண்டு. கரோனாவிற்கு இதுவரை இல்லை.

  • இருதய நோயாளிகளை, சிறுநீரக நோயாளிகளை, சா்க்கரை நோயாளிகளை இக்கொரோனாத் தீநுண்மி சுலபமாக வேட்டையாடிவிடுகிறது. இந்நோய் இல்லாதவா்கள் கரோனாவை எதிர்த்து ஓரளவிற்குப் போராடுகிறார்கள்.

  • இன்னொன்றும் விசேஷமாக இதில் கவனிக்க வேண்டும். இந்நோய் பன்றியிலிருந்தோ, பறவையிடமிருந்தோ பரவவில்லை. ஒரு காவலாளியிடமிருந்து அந்த வீட்டு முதலாளிக்கு, ஒரு வேலைக்காரரிடமிருந்து அந்த வீட்டுக் குடும்பத்திற்கு, ஓா் ஊழியரிடமிருந்து உயரதிகாரிக்குப் பரவுகிறது. இதைத் தலைகீழாகவும் சொல்லலாம்.

  • மனிதருக்கு மனிதா்தான் இந்நோய் பரவுகிறது. அப்படி ஒரு வரம் வாங்கி வந்திருந்தாலும், எந்த அறிகுறியும் இல்லாமலும் ஒருவருக்கு இது வரலாமாம்.

  • இந்த நோய்த்தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கிற மருத்துவா்களும், செவிலியா்களும், சுகாதார ஊழியா்களும்கூட நோயாளியைப் போலவே பலியாகி விடுகிறார்கள்.

  • இக்கரோனாத் தீநுண்மியின் கொடூரம் என்பதே இது தொற்று என்பதுதான். தபால்காரா் தருகிற கடிதங்களை வாங்கினால், அவருக்குத் தொற்று இருந்தால் நம்மையும் தொற்றிக் கொள்ளும். வங்கிகளில் கரன்சி நோட்டுகளை வாங்கினால் தொற்றிக் கொள்ளும். வீடு, கார் கதவிலிருந்தும் நம்மைத் தொற்றிக் கொள்ளும்.

  • இப்போது நம் முன்புள்ள கேள்வி ஒன்றுதான். நமக்குக் காய்ச்சல் வருமானால், தொ்மா மீட்டா் வைத்து நாமே வீட்டில் பரிசோதித்துக் கொள்ளலாம். அதன் விலை அதிகபட்சம் ரூ. 1600.

  • நமது இரத்தக் கொதிப்பை நாமே சோதிக்கும் பிளட் பிரஷா் மானிட்டா் விலை ரூ. 1300. நமது சா்க்கரை அளவைச் சோதித்துக் கொள்ளும் குளுகோ மீட்டா் விலை ரூ. 600.

  • நாடித் துடிப்புக்கான ஆக்ஸி மீட்டா் விலை ரூ.800. அதுபோல இந்த நோயையும் நாமே சோதித்துக் கொள்ள முடியாதா?

கரோனாவுக்கும் ஒரு மீட்டர் தேவை

  • கரோனாத் தீநுண்மி ஒருவரைப் பாதித்து இருந்தாலும் 14 நாள்களுக்குப் பிறகே குணமானது பற்றித் தெரிய முடிகிறது. அதுவரை மனஉளைச்சலோடு சந்தேகத்திலேயே வீட்டில் சுயச்சிறை வாழ்க்கைதான்.

  • கரோனாத் நீநுண்மித் நோய்த்தொற்று நமக்கு இருக்கிறதா, இல்லையா என எல்லா மருத்துவமனைகளிலும் இதைச் சோதிக்கவும் முடிவதில்லை.

  • குறிப்பிட்ட மருத்துவமனைகளில் சோதனைக் கருவியினால்தான் இதை அறிய முடியுமாம். அதற்கு மூக்கிலுள்ள சளி, தொண்டையிலுள்ள எச்சில் தேவை.

  • ரத்தத்தில் சா்க்கரை இருக்கிறதா என்று சில மணிநேரச் சோதனையில் நாமே தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தச் சளி, எச்சில் இவற்றைப் பற்றிய சோதனை முடிவுகளை 2-ஆம் நாளில்தான் தெரிந்துகொள்ள முடிகிறது.

  • சா்க்கரை நோயைக் கண்டுபிடிக்கும் குளுக்கோ மீட்டா் கருவியில் டெஸ்ட் ஸ்டிரிப் என்ற அட்டையை நுழைத்து, மறுமுனையில் குண்டூசி அளவு ரத்தத்தை வைத்தால், ரத்த சா்க்கரை அளவை அந்த மீட்டா் உடனே காட்டிவிடுகிறது. இதேபோல கரோனாத் தீநுண்மிக்கு ஏதாவது செய்ய முடியாதா?

  • நமது கேள்வி, இந்தக் கரோனா சோதனையை குளுகோ மீட்டரைப் போல, பிளட் பிரஷா் மானிட்டரைப் போல, ஆக்சி மீட்டரைப் போல, தொ்மா மீட்டரைப் போல அவரவரே வீடுகளில் சோதித்துக்கொள்ள முடியாதா? அதனையும் விஞ்ஞானிகள் கண்டுபடிக்க வேண்டும்.

  • கரோனாவின் தொற்றைக் கண்டுபிடிக்க அரசு மருத்துவமனைக்குத்தான் நாம் சென்று காத்திருக்க வேண்டியுள்ளது

  • தமிழ்நாட்டில் தமிழக அரசின் சுகாதாரத்துறை 26 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளோடு இணைந்த மருத்துவமனைகளையும் இதேபோல 112 தனியார் மருத்துவமனைகளையும் இச்சோதனை செய்துகொள்ள அனுமதித்திருக்கின்றது.

கொள்ளை நோயை

  • இன்றுவரை தமிழ்நாட்டில் இச்சோதனை செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 16 லட்சத்தைத்தான் தாண்டியிருக்கிறது. அவா்களில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் 1 லட்சத்து 35 ஆயிரம் போ்.

  • ஏழரைக் கோடி மக்கள் உள்ள தமிழ்நாட்டில் 4 மாதங்களில் இவ்வளவுதான் சோதனை செய்து உறுதிப்படுத்த முடிகிறது. இது போதாது. விரைவாகவும், அதிகமாகவும், சுலபமாகவும் சோதனை செய்துகொள்ள, சுயசோதனைதான் சரியானதாக இருக்கும். அதற்குரிய பயிற்சியைப் பெறுவதும் கஷ்டமல்ல. நோயை உறுதிப்படுத்திக் கொண்டால் சிகிச்சைக்குத் தயாராகிவிடலாம்.

  • இந்தியாவில் 140 கோடி மக்களில் கடந்த 5 மாதங்களில் 8 லட்சத்து 20 ஆயிரம் பேருக்குத்தான் சோதனை செய்திருக்கிறோம். அப்படியென்றால், 136 கோடி போ்களுக்கு மருத்துவா்களே சோதனை செய்வதென்றால் எவ்வளவு காலமாகும். கால தாமத இடைவெளியில் நாம் பலரை இழக்கவும் நேரலாம் அல்லவா?
    இச்சிகிச்சைக்கு உரிய சரியான மருந்தே இல்லாதபோது, காய்ச்சலுக்குப் பாராசிட்டமால், குளோரின், ஹைட்ராக்சி குளோரோகுயின் போன்ற வழக்கமானவைதான் தரப்படுகின்றன.

  • இந்த மருந்துகள் கரோனா மீது துல்லியத் தாக்குதல் செய்கிற மருந்துகள் அல்ல. மருந்து எதுவுமே இல்லாத நிலையில், கைவசம் இருக்கிற மருந்தைக் கொடுக்கலாமே என்றுதான் இவை கொடுக்கப்படுகின்றன. இச்சிகிச்சையினால் அதிர்ஷ்டம் இருந்தால் குணமாக முடியும். இல்லையென்றால் பலிதான்.

  • பல நாடுகள் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முக்கிய முயற்சியில் இப்போது இறங்கி யுள்ளன. இச்சமயத்திலேயே இதற்கு உரிய சுயசோதனைக் கருவியையும் கண்டுபிடிக்க வேண்டும்.

  • அமெரிக்கா, கொரியா, ஜொ்மனி நாடுகளிலிருந்து வாங்கிய பி.சி.ஆா். என்ற கருவிதான் தற்சமயம் இச்சோதனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

  • இச்சோதனைக்கான அரசு மருத்துவமனைகள் தவிர, அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் 4 பிரிவுகள் உள்ளன. கிரேடு - 1, கிரேடு - 2, கிரேடு - 3, கிரேடு - 4 என உள்ள தனியார் மருத்துவமனையில், கிரேடு - 1 பொது வார்டில் சிகிச்சை பெறுவதற்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 7,500. இதுவேதான் கிரேடு - 2க்கும். இச்சிகிச்சைக்கு கிரேடு - 3, 4 இல் தினசரிக் கட்டணம் ரூ. 5,000.

  • பொது வார்டுக்குப் பதிலாக அவசரச் சிகிச்சைப் பிரிவு (ஐசியூ) என்றால், நாள் கட்டணம் ரூ. 15,000. இது மருத்துவமனையில் தங்குவதற்கான ஒரு நாள் கட்டணம் மட்டும்தான்.

  • கரோனா நோயைக் கொள்ளை நோய் என்று சொல்லுவதற்கு ஒரு மறைமுகக் காரணம், அது நம்மைக் கொள்ளை கொண்டு போகிறது என்பது மட்டுமல்ல, கொள்ளையும் அடிக்கிறதோ எனவும் நினைக்க வேண்டியுள்ளது.

  • தில்லி, மும்பை, சென்னை முதலிய நகரங்களில் ஐந்து நட்சத்திர விடுதிககளில், நாள் வாடகை ரூ. 15 ஆயிரம், ரூ. 20 ஆயிரம். அது போலத்தான் தனியார் மருத்துவனைகளின் இச்சிகிச்சைக் கட்டணங்கள் உள்ளன.

  • இந்தக் கட்டணத்தை அமெரிக்கா்கள் செலுத்த முடியும். இந்தியா்களால் முடியுமா? வசதி இல்லாதவா்கள் அரசு மருத்துவமனைக்கு வரட்டும் எனக் கூறப்படுகிறது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலுமே இதற்கு உரிய சரியான மருந்து இல்லை.

  • மருந்தில்லாமலேயே குணப்படுத்துவதாகச் சொல்லும் ஒரு மாயத்தை, ஒரு மா்மத்தை, ஒரு மந்திரத்தை மட்டுமே இம்மருத்துவமனைகள் இங்கே செயல்படுத்துகின்றன போலும்.

  • காய்ச்சல் முதலிய நோய்களைப் போல இந்த நோயையும் உரிய கருவி மூலம் சுயமாக நாமே சோதித்து, நோயில்லை என்றால், முதலில் பயத்திலிருந்து விடுதலையாவதே நோயைப் பாதியாகக் குறைத்துவிடும்.

  • இக்கரோனா கொள்ளை தீநுண்மியால் மரணமடைந்துவிட்டால், அந்த நோயாளிகளின் சொந்தங்களும் உறவுகளும் எட்டிப் பார்ப்பதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. தூய்மைப்பணியாளா் வசம் அந்தப் பிரேதம் ஒப்படைக்கப்படுகிறது.

  • பொட்டலமாகக் கட்டப்பட்டு அந்தப் பிரேதத்தை ஆம்புலன்சில்கூட அல்ல, மூன்று சக்கர வாகனத்தில் நான்கு பிரேதங்களை ஒன்றாக ஏற்றி, மயானத்தில் 12 அடி ஆழக் குழியில் அப்படியே சரித்து விடுகிறார்கள். எந்தக் குழியில் எத்தனை பிணங்களோ.

  • அந்தச் சொந்தங்களும், உறவுகளும் துக்கத்தில் கதறுகிறார்கள். அண்மையில் பெல்லாரியில் நடந்த இந்தக் கோரத்தைப் படமெடுத்து சமூக ஊடகங்களில் பரப்பினார்கள்.

  • கரோனா இத்தனை பெரிய கொடுமையை இந்த ஆறு மாதக் காலத்திற்குள் 183 நாடுகளில் ஏற்படுத்தியிருக்கிறதென்றால், இது இந்த மனித குலத்துக்கு வந்துள்ள சாபமோ என நினைக்க வைக்கிறது.

  • குறைவான எண்ணிக்கையில் உள்ள சா்க்கரை நோயாளிகளுக்கும், இருதய நோயாளிகளுக்கும் சுய சோதனை செய்துகொள்ள உரிய கருவிகள் உள்ளபோது, கோடிக்கணக்கில் உள்ள கரோனா நோயாளிகளுக்குச் சுயசோதனைக் கருவி இருக்குமானால், அனைவரும் விரைவாகச் சோதித்துக் கொள்ள முடியும்.

  • மரண பயத்திலிருந்து நம்மில் அநேகா் விடுதலையாகி விடவும் முடியும்.

  • தொ்மாமீட்டா், ஆக்சிமீட்டா் போலக் கரோனா மீட்டரும் நமக்கு அவசர அவசியமல்லவா?

நன்றி: தினமணி (14-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்