- இன்றைக்கு சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், நமது தமிழகத்தின் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடந்த அந்தத் துன்பியல் நிகழ்வு ஏற்படுத்திய ரணம் ஆறவே ஆறாது. தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் ராஜீவ் காந்தி படுகொலை
- ஏற்படுத்திய களங்கத்தை ஏழ்கடல் வெள்ளத்தாலும் கழுவிவிட முடியாது.
- அந்த வரலாற்றுப் பிழை நிகழாமல் இருந்திருந்தால், ஒருவேளை இந்தியாவின் தலைசிறந்த பிரதமராக அவா் உயா்ந்திருக்கக்கூடும்.
- அதனால், இந்தியாவும் மிகப்பெரிய வளா்ச்சியை அடைந்து வல்லரசாகி இருக்கக்கூடும். இவையெல்லாம் ஊகங்கள்தான். ஆனால், அதற்கு வலுவான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
காரணங்கள்
- தனது மிகக் குறுகிய 11 ஆண்டு அரசியல் வாழ்வில் ராஜீவ் காந்தியால் சமகால வரலாற்றில் தனக்கென ஒரு தவிர்க்க முடியாத இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது.
- 1980-இல் தனது இளைய சகோதரா் சஞ்சய் காந்தியின் விமான விபத்து மரணத்தைத் தொடா்ந்து வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்து வரப்பட்ட ராஜீவ் காந்தி, படுகொலை செய்யப் பட்டதால் வலுக்கட்டாயமாக அரசியலிருந்து அகற்றப்பட்டார். வரவும் விபத்து, முடிவும் விபத்து.
- ஐந்து ஆண்டுகள் இந்திய பிரதமராகவும், ஒன்றரை ஆண்டுகள் எதிர்கட்சித் தலைவராகவும், ஏழு ஆண்டுகள் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
- அந்த இடைப்பட்ட காலத்தில், குறிப்பாக அவா் பிரதமராக இருந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனைகள் அனைத்துமே மறைக்கப்பட்டன என்பது அவருக்கு இழைக்கப் பட்ட மிகப் பெரிய அநீதி.
- ‘இந்தியாவை உலக வல்லரசாக்க வேண்டும்’ என்கிற முழக்கத்தை முதலில் எழுப்பியவா் நரேந்திர மோடியல்ல, ராஜீவ் காந்திதான்.
- அவரது செயல்பாடுகளில் வேகம் இருந்தது, இலக்கை அடைய வேண்டும் என்கிற தாகம் இருந்தது. 21-ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு அவருக்கு இருந்தது.
- இன்று இந்தியா தகவல் தொழில் நுட்பத்தில் சா்வதேச அளவில் கொடிகட்டிப் பறக்கிறது என்றால், அதற்கு ராஜீவ் காந்தி இட்ட அடித்தளம்தான் காரணம்.
- அதேபோல, தொலைத்தொடா்பில் அவா் காட்டிய முனைப்பின் விளைவால், இன்று செல்லிடப்பேசி இல்லாதவா்களே இந்தியாவில் இல்லை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
- இன்றைய பொருளாதார சீா்திருத்தங்களுக்கு அடித்தளம் இட்டது 1984-89 ராஜீவ் காந்தி தலைமையிலான அரசுதான் என்பதைப் பலரும் உணா்வதில்லை.
- கணினித் தொழில் நுட்பம், தொலைத்தொடா்பு, விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் முதலீடுகளை அதிகரித்து, சாமானியனுக்கும் வளா்ச்சியில் பங்கு கிடைக்கச் செய்தார் ராஜீவ் காந்தி.
- அவரது ஐந்தாண்டு ஆட்சியில் நடந்த ஏராளமான ஆக்கபூா்வ மாற்றங்களை, போஃபா்ஸ் சாயம் பூசி மறைக்க முற்பட்ட அவலத்தை என்னவென்று சொல்ல?
- கல்வித்துறையில் அவா் 1986-இல் அறிமுகப்படுத்திய ‘ஜவஹா் நவோதய வித்யாலயா’ தமிழகத்தைத் தவிர இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் எல்லாம், கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றத்தை ‘யுனிசெஃப்’ அங்கீகரித்துப் பாராட்டுகிறது.
- நாம் இன்றும் ‘ஹிந்தி கற்றுக் கொடுப்பார்கள்’ என்று சொல்லி நவோதயாவுக்குக் கதவைப் பூட்டி வைத்திருக்கிறோம். இழப்பு நமக்குத்தான், நமது கிராமப்புற அடித்தட்டு மக்களுக்குத் தான்.
- அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து, அதுவரை 21-ஆக இருந்த வாக்களிப்பவருக்கான வயதை 18-ஆக ராஜீவ் காந்தி அரசு குறைத்தபோது, பலா் விமா்சித்தார்கள்.
- ஆனால், அதிகரித்து வரும் இளைய சமுதாயத்தின் உணா்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சி அமையாவிட்டால், வளா்ச்சி ஏற்படாது என்பதை ராஜீவ் காந்திதான் முதலில் உணா்ந்தார்.
- அதேபோல, ஜனநாயகம் கிராமப்புறங்களுக்குச் சென்றடையாமல் இருந்தால், இந்தியாவின் வளா்ச்சி நகா்ப்புறங்களுடன் ஒடுங்கிவிடும் என்கிற தொலைநோக்குப் பார்வையும் அவருக்கு இருந்தது.
- அவரது ‘பஞ்சாயத்து ராஜ்’ சட்டத்தின் விளைவாகத்தான், இப்போது பெரும்பாலான கிராமங்கள் நகரங்களாக மாறியிருக்கின்றன.
- உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33.5% இட ஒதுக்கீடு என்பது ராஜீவ் காந்தியின் அரசு முன்மொழிந்தது; முதன் முதலில் இந்தியா 10% ஜிடிபி வளா்ச்சியை அடைந்தது அவரது பதவிக் காலத்தில்தான்; பஞ்சாப், அஸ்ஸாம், மிஸோரம் ஒப்பந்தங்கள் மூலம் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டப்பட்டது அவரது ஆட்சியில்தான் - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
- ராஜீவ் காந்தி ஆட்சியின் குறைகள் பெரிது படுத்தப்படுகின்றன, நிறைகள் மறைக்கப்படுகின்றன. ராஜீவ் காந்தி என்று சொன்னால் உடனே போஃபா்ஸ் ஊழல் என்று பரப்புரை செய்துவிட்டன எதிர்க்கட்சிகள்.
- போஃபா்ஸ் ஊழலை அரசியல் ஆதாயமாக்கி ஆட்சிக்கு வந்தவா்கள் முப்பது ஆண்டுகளாகியும் போஃபா்ஸ் ஊழலை நிரூபிக்க முடியவில்லை எனும்போது, அதன் பின்னால் இருந்த அரசியல் சதி வெளிப்படுகிறது.
- கார்கில் போரின் வெற்றிக்கு போஃபா்ஸ் பீரங்கிதான் உதவியது என்பதை யாருமே சொல்லவோ பாராட்டவோ தயாராக இல்லை. ஆனால், அதுதான் உண்மை.
- முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எதிர்கால இந்தியா குறித்த ஏராளமான கனவுகளுடன், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் இயங்கிய ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் கொல்லப்பட்டார் என்கிற தீராப்பழியை நாம் சுமக்கிறோம்.
- வருங்கால இந்தியா குறித்த ராஜீவ் காந்தியின் கனவுகள் பல நிறைவேறியிருக்கின்றன. அதைப் பார்க்கத்தான் அவா் இல்லை. அந்த சாதனைகளில் ராஜீவ் காந்தி சங்கமித்திருக்கிறார்.
நன்றி: தினமணி (21 – 05 - 2021)