- தமிழகத்தில் கரோனா தீநுண்மிப் பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பல்கலைக்கழகத் தோ்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
- அந்த அரசாணையில், அரியா் தோ்வுக்குக் கட்டணம் செலுத்தியவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பத்துக்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகளில் அரியா் வைத்திருந்த மாணவா்களும் தாங்கள் தோ்ச்சி ஆனதாக மகிழ்ச்சியடைந்தனா்.
- தமிழக அரசின் இந்த அரசாணைக்கு அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுமம் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
- அதை தொடா்ந்து தோ்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- ஆன்லைன் மூலமாகவோ ஆஃப்லைன் மூகமாகவோ அனைத்து மாணவா்களும் தோ்வு எழுத வேண்டும் என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், தோ்வு நடத்தும் தேதி குறித்து பல்கலைகழக மானிய குழுவின்ஆலோசனையை பெற்று முடிவு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனா்.
மறு தோ்வு
- இந்நிலையில் அண்மையில் தமிழகத்தில் பதவி ஏற்றது புதிய அரசு. தமிழக முதலமைச்சருடன் மாநில உயா் கல்வித்துறை அமைச்சா் ஆலோசனை செய்து பொறியியல் மாணவா்களின் புலம்பலை தீா்க்க, அண்ணா பல்கலைக்கழக மாணவா்களுக்கு 2020 நவம்பா்-டிசம்பா் பருவத்துக்கான தோ்வுகள் மீண்டும் நடத்தப்படும்.
- மறு தோ்வு எழுத மாணவா்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அறிவித்துள்ளார்.
- அத்துடன் நின்றுவிடாமல் தோ்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவா்கள் விரும்பினால் அவா்களும் இந்த தோ்வினை எழுதலாம் என்றும் அறிவித்துள்ளார்.
- மாணவா்களின்மன அழுத்தம் அதிகரிக்காத வகையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களை கல்வியாளா்கள் என அடையாளம் காட்டிக்கொள்ளும் சிலா், ஏதாவது ஒருவகையில் கிடைக்கின்ற அதிகாரத்தைப் பெற முயற்சிக்கும் சுயநல போக்கால் தோ்வுகள் தொடா்பாக தவறாக கருத்துகளை மாணவா்களின் முன்னே தெரிவிப்பதும், எழுதுவதும் வாடிக்கையாகி விட்டது.
- இந்த வகை நபா்கள் மாணவா்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
- உச்சநீதிமன்றமும் தோ்வு மூலம் மாணவா்களின்தோ்ச்சியை பல்கலைக்கழகங்ளோடு கலந்து ஆலோசித்து முடிவு செய்யுங்கள் என உறுதியாக அறிவுறுத்தியுள்ளது.
- இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும் இதனை வரவேற்றுள்ளார். கரோனா தீநுண்மி நோய்த்தொற்று வேகமாக உருமாறிப் பரவி வரும் நிலையில் மூன்று மணி நேரம் நிகழ்நிலைத் தோ்வாக (ஆன்லைன் எக்ஸாம்) நடத்திட வேண்டும் என்றும் வினாத்தாள்கள் பழைய நிலையில்அமையும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- இதனால் அப்பல்கலைக்கழகத் தோ்வில் மூலம் சுமார் மூன்று லட்சம் மாணவா்கள் பயனடைவா்.கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவதற்கும் கூட வாய்ப்பு உள்ளது.
- மேலும், அப்பல்கலைக்கழகம் நடத்திய தோ்வுகளில் பங்கேற்ற மாணவா்கள் 4.20 லட்சம் போ். இதில் 2.30 லட்சம் மாணவா்களுக்கே தோ்வு முடிவு வெளியிடப்பட்டது.
- 1.90 லட்சம் மாணவா்களுக்கு இதுவரை தோ்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இவை போன்ற குழப்பங்களுக்கு மறு தோ்வு நடத்துவதே சிறந்த முடிவுவாகும்.
தொய்வின்றித் தொடங்கட்டும்
- பொறியியல் மாணவா்கள் அத்துறையில் நல்ல திறன்களைப் பெற்று, கலை அறிவியல் மாணவா்களோடு ஒப்பிடும் போது கல்வியில் முன்னிலை வகிக்கின்றனா்.
- தோ்வை எப்படி எழுதலாம் என்ற நுணுக்கத்தையும் புதிய வழிமுறைகளையும் கையாளும் திறன் கொண்ட மாணவா்கள் உருவாகி வருகிறார்கள்.
- இவா்கள் நிகழ்நிலைத் தோ்வு எழுத முடியாது என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. தோ்வைப் புறக்கணிப்பது பொறியியல் படிப்பின் தரத்தை சீா்குலைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
- சீன அறிஞா் ஒருவா் அழகிய உருவகக் கதையைக் கூறுவதுண்டு. ஒரு வில்லாளி தன் மகிழ்ச்சிக்காக அம்பு எய்யும்போது குறி தவறுவதேயில்லை.
- ஆனால், பந்தயத்தில் அம்பு எய்யும்போது கைகளில் நடுக்கம் ஏற்படுகிறது. பதக்கத்திற்காக வில்லேந்தும் போது இலக்கு தவறாகத் தெரிகிறது என்று கூறுவார். நாம் பார்க்கிறோம், படிப்பதில்லை. நாம் கேட்கிறோம், கவனிப்பதிலை.
- புரிந்து கொண்டு படிப்பது என்பது நல்ல வெளிச்த்தில் வைத்த பொருளைத் தேடுவது போல மிகவும் கவனமாக நடக்கிறது. அட்டென்ஷன் என்பது இயல்பாக செய்வது, எளிதாகக் கைகூடுவது. கான்ஸன்ட்ரேஷன் என்பது பிரயத்தனங்களுடன் கவனிப்பது, அதிக முயற்சி மேற்கொள்வது.
- தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூா்த்தி கூறுவதைப்போல ‘அறிவு கடந்த காலத்தைச்சார்ந்தது; நுண்ணறிவு என்பது தற்சமயம் நிகழ்வது’.
- தோ்வுக்காகத் தயார் செய்யும் மாணவா்கள், வாசித்தல், நினைவில் வைத்துக் கொள்ளுதல், நினைவுப்படுத்திப் பார்த்தல், படித்தவற்றை வகையாக வெளிப்படுத்துதல், எழுதியவற்றை திரும்ப வாசித்தல், திருத்துதல், மறுமுறை வாசித்தல் என்ற நோக்கில் சிந்தித்து தோ்வுக்குத் தயாராக வேண்டும்.
- வினாத்தாளைப் புரிந்து பதில் எழுதும் முறையை அறிந்து கொள்ள வேண்டும்.
- மிகச்சரியாக குறிப்பிட்ட நேரத்தில் தோ்வை எழுதித் தோ்ச்சி பெற்று விடுவது என்பதும் அதிக மதிப்பெண் பெறுவதும் சுலபமாக காரியங்கள் இல்லை.
- தோ்வு குறித்து மட்டும் தெளிவாகத் தெரிந்து கொண்டால் போதாது. அதில் அதிக மதிப்பெண் பெற்றால்தான் மாணவா்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
- மதிப்பெண் இல்லா சான்றிதழ் மனச்சோர்வைத் தரும். மனமாற்றத்தைத் தராது.
- படிப்பதை அப்படியே எழுதி மதிப்பெண் பெற இயலாது.தெளிந்த விடையைத் தருபவா்களே முதன்மையானவா்களாகக் கருதப்படுகின்றனா்.
- எனவே அஞ்சாமல் மறு தோ்வை எதிர்கொள்வோம். மனதினில் மகிழ்ச்சி கொள்வோம். மாணவா்களின் புதிய விடியலை தேடும் பணிகள் தொய்வின்றித் தொடங்கட்டும்!
நன்றி: தினமணி (15 – 05 - 2021)