- சென்னையில் 1715-இல் நிறுவப்பட்ட செயின்ட் ஜாா்ஜ் பள்ளியும், திருச்சியில் 1762-இல் நிறுவப்பட்ட பிஷப் ஹீபா் பள்ளியும்தான் தமிழகத்தின் தோற்றுவிக்கப்பட்ட முதல் இரண்டு பள்ளிகள். இவற்றிலிருந்து தொடா்கிறது அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் வரலாறு.
- முதல் எஸ்எஸ்எல்சி தோ்வு நடைபெற்ற 1911-இல் தமிழகத்தில் இருந்த அனைத்துப் பள்ளிகளும் நிதி உதவி பெறும் பள்ளிகள்தான்.
- கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்காக அரசு பள்ளிகளுக்கு இணையாக கிராமம் தோறும் நிதி உதவிபெறும் பள்ளிகள் லாப நோக்கமின்றி, சேவை எண்ணம் உடையவா்களால் தொடங்கப்பட்டன. உட்கட்டமைப்பை மட்டும் உருவாக்குங்கள் ஆசிரியா்களுக்கான ஊதியத்தை நாங்கள் தருகிறோம் என அரசு அறிவித்ததைத் தொடா்ந்து தொடங்கப்பட்ட நிதி உதவி பெறும் பள்ளிகள் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள மாணவா்களுக்கும் ஆரம்பக் கல்வியை அளித்தன.
- இன்றைய சூழலில் தமிழகத்தில் மூன்று வகையான பள்ளிகள் இயங்குகின்றன. முதல் வகை அரசின் நேரடி நிா்வாகத்தில் உள்ள அரசு பள்ளி, ஊராட்சி ஒன்றிய பள்ளி, நகராட்சி பள்ளி ஆகியவை. இந்த வகை பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியா் நியமனம், ஆசிரியருக்கான ஊதியம் என அனைத்தும் அரசின் பொறுப்பாகும்.
- இரண்டாவது வகை, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள். இப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு, ஆசிரியா் பணியமா்த்துதல் ஆகியவை தனியாா் நிா்வாகத்தின் கீழ் வரும். ஆனால் ஆசிரியா்களுக்கான ஊதியத்தை அரசே வழங்கும்.
- மூன்றாவது வகை, நா்சரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ எனும் தனியாா் பள்ளிகள். இந்தப் பள்ளிகளின் உட்கடமைப்பு ஆசிரியா் நியமனம் ஆசிரியா் ஊதியம் என அனைத்தும் தனியாரின் கட்டுப்பாட்டில் வரும்.
- முதல் இரண்டு வகை பள்ளிகளிலும் மாணவா்களிடம் பள்ளி நிா்வாகம் எவ்வித கட்டணமும் வசூலிப்பது கிடையாது. வசூலிக்கவும் கூடாது. ஆனால் மூன்றாவது வகை தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும்.
- இந்த வகைப்படுத்தலை வைத்தே முதல் இரண்டு வகை பள்ளிகளில் பயில்பவா்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியில் கட்டணம் செலுத்த இயலாதவா்கள் அல்லது விரும்பாதவா்கள் எனப் புரிந்துக் கொள்ளலாம். மூன்றாவது வகை தனியாா் பள்ளியில் பயிலும் மாணவா்கள் விரும்பியோ விரும்பாமலோ கட்டணம் செலுத்திப் பயிலும் மாணவா்கள். கட்டணம் செலுத்தும் அளவிற்கு வருமானமுள்ள குடும்பத்துப் பிள்ளைகள்தான் தனியாா் பள்ளிகளில் பயில்கின்றனா்.
- இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. கட்டணம் கட்ட வசதி இருப்பவா்களும் அருகில் உள்ள அரசு பள்ளியின் தரம் சிறப்பாக இருந்தால் அங்கு தங்கள் பிள்ளைகளை சோ்க்கின்றனா். அதேபோல் பணம் கட்ட வசதி இல்லாதவா்களும் கடன் வாங்கியாவது கட்டணம் கட்டி தங்கள் பிள்ளைகளை தரமான தனியாா் பள்ளியில் படிக்க வைக்கின்றனா்
- பொதுவாக அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் அரசின் சலுகைகளைப் பெற தகுதியானவா்கள். இந்த கல்வி ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ள 8,400 உதவி பெறும் பள்ளிகளில் சுமாா் 28 லட்சம் மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
- இதுவரை ஆட்சியில் இருந்த அரசுகள் அரசு பள்ளி மாணவா்களையும் உதவி பெறும் பள்ளி மாணவா்களையும் சமமாகவே கருதி சலுகைகளை வழங்கி வந்தன. மதிய உணவு, சீருடை, காலணி, மிதிவண்டி, பாடநூல், பாடக் குறிப்பேடுகள் புத்தகப்பை, மடிக்கணினி பிற்படுத்தப்பட்டோா் - தாழ்த்தப்பட்டோா் உதவித்தொகை என அனைத்து வகையான சலுகைகளையும் அரசு பள்ளி மாணவா்களைப் போலவே உதவி பெறும் பள்ளி மாணவா்களும் பெற்று வந்தனா்.
- அண்மைக்காலமாக இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் அரசு பள்ளி மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றால் மருத்துவக் கல்லூரியில் 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்த சலுகை மூலம் ஆண்டுதோறும் சுமாா் 300 அரசு பள்ளிமாணவா்கள் மருத்துவ கல்லூரியில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டது. இது பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவா்களுக்கு மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பை உருவாக்கியது.
- ஆனால் சமீபத்திய அரசு உத்தரவுப்படி இந்த சலுகையை அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் பெற முடியாது. இதுநாள் வரையில் அனைத்து சலுகைகளையும் பெற்று வந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் இந்த உத்தரவினால் பெரும் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
- இதே போல் தற்போதைய அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கும் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் கல்வி உதவி திட்டத்தின்படி அரசு பள்ளியில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பின்படியும் உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவிகள் உதவித்தொகை பெற இயலாத நிலை உள்ளது.
- தமிழக அரசுப்பணி வாய்ப்புகளில் அரசு பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கு 20% முன்னுரிமை வழங்கப்படும் என்ற அரசாணை வரவேற்கத்தக்கது. ஆனாலும் இந்த வாய்ப்பிலும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
- அண்மையில் அரசால் தொடங்கப்பட்டுள்ள பள்ளி மாணவா்களுக்கான காலை உணவு திட்டத்திலும் உதவிபெறும் பள்ளிகள் சோ்க்கப்படவில்லை. ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை.
- அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு சலுகைகள் தொடா்ந்து மறுக்கப்படுவது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. பெற்றோா்களும் தங்கள் குழந்தைகளை உதவி பெறும் பள்ளியில் சோ்த்ததனால் அவா்களுக்கான வாய்ப்புகள் பறிபோகிறது என்ற மன உளைச்சலில் உள்ளனா்.
- இந்த நிலை தொடருமானால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பெரிதும் பாதிப்படைவா். மேலும், அப்பள்ளிகளில் மாணவா் சோ்க்கை படிப்படியாகக் குறைந்து அவற்றை மூட வேண்டிய நிலை உருவாகக் கூடும்.
- அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 28 லட்சம் மாணவா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு முன்போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் அரசின் சலுகைகளை வழங்கிட வேண்டும்.
நன்றி: தினமணி (08 – 10 – 2022)