TNPSC Thervupettagam

மறைந்து தாக்கும் காசநோய்: இந்தியாவுக்குப் புதிய சவால்

April 7 , 2021 1387 days 639 0
  • தினமும் 198 நாடுகளில் 4,000 பேர் காசநோயால் இறக்கின்றனர்; 28,000 பேர் புதிதாக இதன் பிடியில் சிக்குகின்றனர். உலக காசநோயாளிகளில் 30% பேர் இந்தியர்கள்.
  • 2020-ல் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி 27 லட்சம் இந்தியர்கள் காசநோயாளிகள்; அவர்களில் தினமும் 1,200 பேர் இறப்பதாகக் கணக்கிட்டுள்ளனர்.
  • இந்தச் சூழலில் 2025-ம் ஆண்டு ‘காசநோய் இல்லாத இந்தியா’ எனும் இலக்கை நோக்கி ஒன்றிய அரசு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
  • உலக இலக்கு 2030-க்குள் காசநோயை ஒழிப்பது. ‘நேரம் நெருங்குகிறது, காசநோயை ஒழிக்க!’ எனும் கருதுகோளுடன், மார்ச் 24-ல் ‘உலக காசநோய் தினம்’ கொண்டாடப்பட்டது. அந்த விழிப்புணர்வு கோஷம் ஏழை, எளிய மக்களுக்கு எட்டியதா? சந்தேகம்தான்.

சவால்கள் என்னென்ன?

  • உலக நாடுகளில் நீரிழிவு நோயாளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்திலும், ‘ஹெச்ஐவி’ தொற்றாளர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திலும் இந்தியா உள்ளது.
  • இந்த இரண்டும் காசநோயைத் துணைக்கு அழைத்துக்கொள்ளும் தன்மையுடையவை. தவிரவும், புகைபிடிப்போர் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம்பிடித்துள்ளது.
  • காசநோயாளிகள் இந்தியாவில் அதிகரிக்க இந்த மூன்றும் ஆகப் பெரிய காரணங்களாக அமைகின்றன.
  • காசநோயாளிகள் 6 முதல் 9 மாதங்கள் வரை மருந்து சாப்பிட்டால், நோயை முற்றிலும் குணப்படுத்திவிடலாம்.
  • இந்த நோய்க்கான சிகிச்சை சர்வதேசத் தரத்தில் இந்தியாவில் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைக்கிறது.
  • ஆனால், நம் சமூகத்தின் பெரும் பகுதி மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு இல்லை என்பதால், காசநோயாளிகளில் கால்வாசிப் பேர் பரிசோதனைக்கோ சிகிச்சைக்கோ வருவதில்லை.
  • காசநோய்க்குச் சிகிச்சை தொடங்கிய இரண்டு மாதங்களில் நோயின் அறிகுறிகள் மறைந்துவிடுவதால், நோய் குணமாகிவிட்டது எனக் கருதிப் பெரும்பாலான நோயாளிகள் மருந்துகளைப் பாதி சிகிச்சையில் நிறுத்திவிடுகின்றனர்.
  • காசநோய்க்கான முழுமையான சிகிச்சைக்குப் பொருளாதாரரீதியிலான ஆதரவும் போதிய ஊட்டச்சத்தும் தேவைப்படுவதைக் கள ஆய்வுகள் சுட்டுகின்றன.
  • அவை கிடைக்காமல் இருக்கும் கிராமப்புற ஏழைகள் மற்றும் நகர்ப்புற நெரிசலில் வாழும் சாமானியர்கள் இந்த நோயின் பிடியிலிருந்து மீள்வதற்குச் சிரமப்படுகின்றனர்.
  • இவர்களின் புரத உணவுத் தேவைக்கு மாதம் 500 ரூபாய் ‘நேரடிப் பயனீட்டாளர் பரிமாற்ற’த்தில் ஒன்றிய அரசு வழங்குகிறது. இந்தத் தொகை மிகவும் குறைவு எனும் குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க, பல கிராமப்புற ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்பதும் இத்திட்டத்துக்குச் சிரமம் தருகிறது.
  • இதன் விளைவாக, நாட்டில் நான்கு காசநோயாளிகளில் ஒருவர், தனது மருத்துவ சிகிச்சைக்காகச் சொத்துகளை விற்கவோ, பணம் கடன் வாங்கவோ செய்கிறார் என்கிறது ஒரு தேசிய ஆய்வு. இப்படி சிகிச்சையை நிறுத்திவிடும்போது, ‘மருந்துக்குக் கட்டுப்படாத காசநோ’யாக அது மாறிவிடுகிறது. இதனால் காசநோயை அகற்றும் செயல்திட்டங்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றன.

புதிய சவால் எது?

  • இந்தியாவில் 33-40% மக்களுக்குக் காசநோய்த் தொற்று இருக்கிறது. குறிப்பாக, 5 வயதுக்கு உட்பட்ட மூன்றரை லட்சம் குழந்தைகளுக்குக் காசம் தொற்றியிருக்கிறது. ஆனால், அது அறிகுறிகள் இல்லாத தொற்றாக உடலில் மறைந்திருக்கிறது; காசநோயாக மாறுவதற்குக் காத்துக்கொண்டிருக்கிறது. அதை ‘உள்ளுறைக் காசம்’ (லேட்டன்ட் டிபி) என்கிறோம்.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, இவர்களில் 10% பேருக்கு முழுமையான காசநோய் ஏற்பட்டுவிடும். அப்போது காசநோய்ப் பரவல் இன்னும் தீவிரமாகும்.
  • காசநோய் அகற்றும் திட்டத்துக்கு ஏற்பட்டுள்ள இந்தப் புதிய சவாலை இந்தியா முனைப்புடன் எதிர்கொள்ள இப்போதே தயாராக வேண்டும் என்கிறது, உலக சுகாதார நிறுவனம்.
  • இத்தனைக்கும் ‘டிஎஸ்டி’ (Tuberculin Skin Test) எனும் சாதாரணத் தோல் பரிசோதனையிலும், ‘ஐஜிஆர்ஏ’ (Interferon Gamma Release Assay) எனும் எளிதான ரத்தப் பரிசோதனையிலும் இந்தத் தொற்று இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். அரசு மருத்துவமனைகளில் இவை இலவசம்.

யாருக்குத் தேவை?

  • காசநோயாளி வீட்டில் உள்ளவர்கள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், நாட்பட்ட சிறுநீரக நோயாளிகள், ‘ஹெச்ஐவி’ தொற்றாளர்கள், சுகாதாரத் துறையினர், புகைபிடிப்பவர்கள், மது மற்றும் போதை மாத்திரை சாப்பிடுபவர்கள், உணவூட்டம் குறைந்தவர்கள், சிலிக்கான் தொழிலாளிகள், அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள், வீடற்றவர்கள், சிறைவாசிகள் ஆகியோருக்கு இந்தப் பரிசோதனைகள் தேவை.
  • இவர்களுக்குக் காசநோய்த் தொற்று இருப்பது உறுதியானால், ‘ஐசோநியசிட்’ மற்றும் ‘ரிஃபாபென்டின்’ மாத்திரைகளை வாரம் ஒன்று வீதம் 3 மாதங்களுக்கு அல்லது ‘ரிஃபாம்பின்’ மாத்திரையை தினம் ஒன்று வீதம் 4 மாதங்களுக்குச் சாப்பிட்டால், காசநோய் ஏற்படாது.
  • இந்த நவீன மருத்துவத்தில் மருந்துகளும் குறைவு. அவை எடுக்கப்பட வேண்டிய காலமும் குறைவு. நோய்க்கு ஆகும் சிகிச்சை செலவை ஒப்பிடும்போது தொற்றுக்கான சிகிச்சை செலவு மிகக் குறைவு. அதேநேரம் காசநோய் விலகுவது உறுதி.
  • ஆகவே, இவர்களுக்கான நலத்திட்டத்தையும் நடப்புத் திட்டத்தில் ஒன்றிய அரசு இணைக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு.

வழிகாட்டும் சிங்கப்பூர்

  • ஒன்றிய அரசின் நடப்புத் திட்டத்தில் காசநோய் கட்டுப்படுகிறது என்றாலும், ‘உள்ளுறைக் காசம்’ உள்ளவர்கள் அடுத்தடுத்துக் காசநோயாளிகளாக மாறிவருவதால், இதற்கான நிதிச் சுமை அதிகரிக்கிறது; நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
  • இம்மாதிரியான சூழலைச் சமாளிப்பதற்கும், காசநோயை முழுவதுமாக ஒழிப்பதற்கும் காசநோயாளிகளுக்கான சிகிச்சை வழிமுறைகளோடு, ‘உள்ளுறைக் காசம்’ உள்ளவர்களை இனம் கண்டு சிகிச்சை கொடுக்க வேண்டியதும் முக்கியம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
  • ஆசியாவில் இந்த வழிமுறையில் சிங்கப்பூரும் தைவானும் காசநோயைக் கட்டுப்படுத்துகின்றன. அவற்றைத் தொடர்ந்து 44 ஆப்பிரிக்க நாடுகள் இம்மாதிரியான திட்டங்களை முன்னெடுத்துள்ளன.
  • இந்த வழிமுறையை இந்தியாவும் பின்பற்ற வேண்டும். அரசின் முனைப்புடன், மக்களின் விழிப்புணர்வும் சிகிச்சைக்கான ஒத்துழைப்பும் கூடினால் ‘காசநோய் இல்லாத இந்தியா’ எனும் இலக்கு கைகூடும்.

நன்றி: இந்து தமிழ் திசை (07 - 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்